காலை செய்தித் தொகுப்பு

காலை செய்தித் தொகுப்பு: புதிய துறைமுக வரைவு மசோதா, ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு நெருக்கடி உள்ளிட்ட 9 செய்திகள்

1) தனியார் நிறுவனங்கள் மூலம் மருத்துவர்கள் நியமிக்கத் தடை

அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் தனியார் ஏஜென்சிகள் மூலம் டாக்டர் நியமனம் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மதுரை வளர்நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 

தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மக்கள், தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையைச் சார்ந்தே உள்ளனர். தற்போதைய கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவர்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. இந்த கொரோனா காலகட்டத்தில் சிகிச்சையளிக்க ஏதுவாக கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை கடந்த ஜூலை 3-ல் வெளியானது. 

இதன்படி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தம், 2 தனியார் ஏஜென்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏஜென்சிகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் மூலம் அவுட் சோர்சிங் முறையில் டாக்டர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். இனிமேல் வேறு யாரையும் நியமிக்கக்கூடாது என உத்தரவிட்டு, மனுவிற்கு தமிழக சுகாதாரத்துறை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

2) பாஜக ஆட்சிக்கு நெருக்கடி

ஹரியனாவில் பாஜக – ஜேஜேக கூட்டணி ஆடசி நடைபெற்று வருகிறது.

பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டர் முதல்வராகவும், ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் உள்ளனர்.

தற்போது ஜேஜேபி கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ராம்குமார் கவுதம், ‘மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மாநில சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்று விவசாயிகள் மத்தியில் பேசியுள்ளார். இன்னும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு பேசி வருகின்றனர். இதனால் அங்கு பாஜக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

3) தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

மொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 96 ஆயிரத்து 475  ஆகும்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 307 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 10,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4) துறைமுக வரைவு மசோதா

துறைமுக வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து  அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908-க்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு மசோதாவை  http://shipmin.gov.in/sites/default/files/IPAbill.pdf என்ற இணைப்பில் காணலாம் என்றும், இந்த வரைவு மசோதா குறித்து மக்கள் தங்கள் ஆலோசனைகளை sagar.mala@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு டிசம்பர் 24-ம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5) அவதூறு வழக்கு ரத்து

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்ததாக திமுக எம்பிக்கள் கனிமொழி, எஸ்.ஆா்.பாா்த்திபன், திமுக எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, மைதீன் கான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், முன்னாள் அமைச்சா் செல்வகணபதி ஆகியோருக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, முதல்வரை தனிப்பட்ட முறையில் விமா்சனம் செய்தவா்களுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்குத் தொடர முடியாது என்று கூறி 9 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

6) சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் நிறுவனர் சுப்ரமணியம்  காலமானார்; தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 1972-ம் ஆண்டு ஒரு லேத் இயந்திரத்தை மட்டுமே மூலதனமாக வைத்து தொழில் துவங்கினார். 

ஆரம்ப காலத்தில் ஜவுளி நிறுவனங்களுக்கு இயந்திர உதிரி பாகங்களை அளித்தவர், பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தார். 

கடந்த 1996-ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பைத் துவக்கினார்.

இதன் மூலம் உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க், இலவச மின்மயானம் போன்றவற்றை லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார். உணவகத்தில் ரூ.20-க்கு சாப்பாடு உள்ளிட்ட மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

7) புராதன சின்னங்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை தண்டராம்பட்டு வட்டம் கீழ்ராவந்தவாடி கிராமத்தில் சிற்பகுளம் உள்ளது. 16-ம் நூற்றாண்டின் நாயக்கர் மன்னர்கள் காலத்தைச் சார்ந்ததாக இருந்திருக்கும் என கருத்தப்படுகிறது. நாயக்கர் மன்னர்கள் காலத்தில் குளத்தில் சிற்பங்களை செதுக்கி வைக்கும் முறை நடைமுறையில் இருந்துள்ளது. அரியலூர் அழகர்மலை கிராமத்தில் உள்ள யானை சிற்பம் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8) புதிய மருத்துவ இடங்களை உருவாக்க முடியுமா? நீதிமன்றம் கேள்வி

7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் என தமிழக அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி  அறிவித்தது. இதற்கிடையே கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை முன்தேதியிட்டு அமல்படுத்த கடலூர் மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில், அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின்னும் மீதமுள்ள 160 இடங்களில், 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்கள் கிடைக்கும் என்றும், சில மருத்துவக் கல்லூரிகள் மூலம் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து முதல் கலந்தாய்வில் பங்கேற்று தனியார் கல்லூரியில் இடம்பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, 51 மாணவர்களுக்கும் இடங்கள் கிடைக்க தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? என்று தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

9) இரண்டு மாதத்திற்கு மாஸ்க்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். இன்றைய தேதியில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் சோதனைகள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 25 லட்சம் கொரோனா சோதனைகள் என்ற இலக்கை சென்னை மாநகராட்சி அடைய இருக்கிறது.

கொரோனா தடுப்பூசியினை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்க பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாத காலத்திற்கு மாஸ்க் கட்டாயம் பொதுமக்கள் அணியவேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *