கேரளா உள்ளாட்சி தேர்தல்

காலை செய்தித் தொகுப்பு: கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி, விவசாயிகளுக்காக சீக்கிய மதகுரு தற்கொலை உள்ளிட்ட 8 செய்திகள்

1) மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். இதனால் 400-க்கும் மேற்பட்ட பெரிய படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரையும் இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள், ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

2) 74 நாட்களில் ரூ.6.96 கோடி, 7.232 கிலோ தங்கம், 9.843 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் கடந்த 14-ம் தேதி வரை அதாவது 74 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பட்டு வாரிய அலுவலகங்கள், பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், போக்குவரத்து சுங்கச்சாவடிகள், டாஸ்மாக் கடைகள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்கள், வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் என 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அதிகபட்சமாக அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதி நடந்த சோதனையில் வேலூர் மண்டல மாசுகட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.33,73,000, வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.3.25 கோடி ரொக்கம், 450 சவரன் தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

அதேபோல், பதிவுத்துறை டிஐஜி-ன் சென்னை கிழக்கு அண்ணா நகர் வீட்டில் இருந்து ரூ.63 லட்சத்து 70 ஆயிரம் பணம், 7 வங்கிக் கணக்கில் உள்ள ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 66 ஆயிரத்து 880 பணம், 117 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதற்கு அடுத்தப்படியாக கடந்த 14ம் தேதி நடந்த சோதனையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் பாண்டியன் அலுவலகத்தில் இருந்து ரூ.88 ஆயிரத்து 500 பணம், அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக ரூ.1.37 கோடி ரொக்கம், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.37 லட்சம் பணம், பல்வேறு வங்கியில் உள்ள ரூ.38 லட்சத்து 66 ஆயிரத்து 220 பணம், 18 இடங்களில் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என ரூ.10.40 கோடி மதிப்புள்ள சொதுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 74 நாட்களில் நடந்த சோதனையில் அதிகபட்சமாக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யதுள்ளனர். அரசு அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனைகள் தொடரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உட்பட 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3) ஊராட்சிகளுக்கு நிதி வழங்க வழக்கு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, வி.புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் குப்புசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதி 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சொத்து வரி உள்ளிட்டவற்றின் மூலம் போதுமான அளவுக்கு வருமானம் இல்லாததால், ஊராட்சிகளின் வளர்ச்சிப்பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சுகாதாரப் பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. 

நிதி நெருக்கடியால் ஊராட்சியின் செயல்பாடே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே ஊராட்சிகளின் நலன் கருதி கடந்த ஆண்டு வழங்கியதைப் போல இந்த ஆண்டுக்கும் தேவையான நிதியை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

4) குழந்தைத் திருமணம் பீகார் முதலிடம்

இந்தியாவில் ஆந்திரா, அசாம், பீகார், திரிபுரா, மேற்கு வங்காள மாநிலங்களில் 15 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் திருமணமாகி குழந்தைக்கு தாயாகியுள்ளனர் அல்லது கர்ப்பிணியாக உள்ளனர். பீகார், திரிபுரா, மேற்கு வங்காளத்தில்தான் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெறுகிறது. 

இந்தப் பட்டியலில் 40.8 சதவீதம் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதாக, பீகார்  முதலிடத்தில் உள்ளது.

அசாம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும், தத்ரா- நாகர் ஹவேலி, டாமன்- டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சிறுவயது திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. 

பெண்களுடன் ஒப்பிடும்போது, ஆண்கள் சட்டப்பூர்வ திருமண வயதான 21-க்கு முன்பு திருமணம் செய்வது எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் குறைவாக இருக்கிறது. ஆண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் நடப்பது நாட்டிலேயே அசாமில்தான் (21.8 சதவீதம்) அதிகம். இந்தப் பட்டியலில், பீகார், குஜராத், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும், லடாக் யூனியன் பிரதேசமும் அடுத்த இடங்களில் வருகின்றன.

5) தமிழ்நாட்டில் கொரோனா

தமிழகத்தில் நேற்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,02,342 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,931 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 344 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,20,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6) பவுண்டரி உற்பத்தியாளர்கள் போராட்டம்

மூலப்பொருட்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது: மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் பவுண்டரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் பங்கேற்றுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை சார்ந்துள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

7) விவசாயிகளுக்கு ஆதரவாக மதகுரு தற்கொலை

டிசம்பர் 17-ஆம் தேதி 65 வயதான சீக்கிய மதகுருவான பாபா ராம் சிங், சிங்கு பகுதி எல்லையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் கர்னல் மாவட்டத்தின் நிசிங் பகுதியில் உள்ள சிங்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்த் பாபா ராம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக விட்டுச்சென்ற குறிப்பில் “விவசாயிகளின் வலியை” தாங்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக சாலைகளில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் நீதி வழங்கவில்லை, இது மிகக் கொடுமை. துன்புறுத்தலை சகித்துக்கொள்வது பாவம், ஒடுக்குவது ஒரு பாவம். சிலர் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் கொடுமைக்கு எதிராகவும் நிற்கின்றனர். சிலர் விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர். அரசின் கொடுமைக்கு எதிராக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இது கொடுமைக்கு எதிரான குரல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான குரல்” என்று அந்த தற்கொலை குறிப்பில் எழுதியுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவித்துள்ளது.

8) கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திரிச்சூர், கோழிக்கோடு ஆகிய மாநகராட்சிகளை இடதுசாரி கூட்டணி கைப்பற்றியது; கண்ணூர் மாநகராட்சி மட்டும் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது பாரதிய ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது.

86 நகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான அணி 45-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுமுன்னணி 35 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. இதர கட்சிகள் 4 நகராட்சிகளையும், பாஜக 2 நகராட்சி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஆளும் இடது முன்னணி 10-லும் காங்கிரஸ் அணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன பாஜக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *