1. இருமொழிக் கொள்கையே நிலைப்பாடு – செங்கோட்டையன்
”இருமொழிக் கொள்கை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இதுபற்றி மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் சாா்பில் ஒருங்கிணைந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதுகுறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் கொரோனா
நேற்று டிசம்பர் 6 அன்று தமிழகத்தில்,
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் – 1,320
சென்னையில் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டவர்கள் – 346 பேர்
தமிழகத்தில் கொரோனா மரணம் – 16
தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்கள் – 10,788
3. கமல் உண்மை தெரியாமல் பேசுகிறார்
சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் கமலஹாசன் பேசிக்கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பழகன் விமர்சித்துள்ளார். மேலும் அரசு மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காகவே கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
4. அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு மாலையிட வந்தபோது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் அர்ஜூன் சம்பத் அம்பேத்கருக்கு மாலை அணிவிக்காமல் இடத்தை விட்டு திரும்பிச் சென்றார்.
5. மத்தியக் குழு ஆய்வு
நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமையில்7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
சென்னை வந்த மத்திய குழுவினர் எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய குழுவினர் நேற்று 2 குழுக்களாக பிரிந்து தங்களது ஆய்வைத் தொடங்கினர்.
அந்த வகையில் அசுவகோஷ் அக்னிகோத்ரி, ரணன் ஜெய்சிங், பால்பாண்டியன், மனோகரன் ஆகியோர் உள்ளடங்கிய அதிகாரிகள் குழுவினர் வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை சதுப்பு நில வனப்பகுதி, ரேடியல் சாலை, செம்மஞ்சேரியில் உள்ள சுனாமி குடியிருப்பு மற்றும் நூக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வில் ஈடுபட்டனர். அதிகாரிகள் குழுவினருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலசுப்பிரமணியம் தொடர்பு அதிகாரியாக இருந்து சேத விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து தாம்பரம் முடிச்சூர் பகுதிக்குச் சென்றனர். முடிச்சூர் சீனிவாச நகரில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமுதம் நகரில் உள்ள அடையாறு ஆற்றுப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் அடையாறு ஆற்றில் எவ்வளவு நீர் செல்கிறது? கரை அகலப்படுத்தியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கினர்.
6. விவசாயிகளுக்கு ஆதரவு
விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன. அந்த சட்டங்கள் விவசாயத்தை அழிக்கக்கூடியவை. அந்தச் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும் நடைமுறையை ஒழித்து விவசாயத்தையும், வேளாண் சந்தைகளையும் பெரு நிறுவனங்களிடம் அடமானம் வைக்க அடித்தளமிட்டுள்ளன. எனவே அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கும், அவா்களின் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்ட அழைப்புக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம்.
ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்டோா் கையெழுத்திட்டுள்ளனா்.
7. கழிவறை இல்லாததால் மாற்றுத் திறனாளி மரணம்
அரசு அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் நேர்ந்த துயரம். செப்டிக் டேங்க்கில் தவறி விழுந்து உயிரிழந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியர். காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண்துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு கழிவறைக்கு சென்ற 24 வயதான பெண் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் சரண்யா என்கிற மாற்றுத்திறனாளி பெண், கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வந்தார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாத காரணத்தினால் சரண்யா, அலுவலகத்துக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் கழிவறைக்குச் சென்றுள்ளார். தொடர் மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த ஓட்டின் மீது சரண்யா கால்வைக்கும் போது ஓடு உடைந்து செப்டிக் டேங்க் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்துள்ளார்.
8. பாஜக-வின் கூட்டணி கட்சி விவசாயிகளுக்கு ஆதரவு
ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக-வின் கூட்டணி கட்சியான ஆர்.எல்.பி கட்சி விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் முன்னெடுக்கும் “பாரத் பந்த்” என்ற அழைப்பை ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி ஆதரிக்கிறது. பண்ணை சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும். டிசம்பர் 8-க்குப் பிறகு ஆர்.எல்.பி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம் என்றும், மேலும் டிசம்பர் 8-ம் தேதி அவசரக் கூட்டத்திற்கு நாங்கள் அழைப்பு கொடுத்திருக்கிறோம். தேவைப்பட்டால் விவசாயிகளின் உரிமைகளுக்காக டெல்லி நோக்கி அணிவகுத்துச் செல்வோம்.” என்று அந்த கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
9. பாஜக மருத்துவக் காப்பீட்டில் ஊழல்
இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தில் மக்களை ஏமாற்றி பாஜக நூதனமாக பணம் பறித்து ஊழலில் ஈடுபட்டு வருவதாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்தியுள்ளார்.
10. மத்திய அரசு தலித்துகளுக்கு துரோகம் செய்கிறது – மல்லிகார்ஜுன கார்கே
ஆம்பேத்கர் நினைவுநாளை ஒட்டி வீடியோ பதிவை வெளியிட்ட மல்லிகார்ஜூன் கார்கே அதில், மத்திய அரசு எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பு அந்தஸ்தை நீக்க முயற்சி செய்து வருகிறது. அம்பேத்கரை அவரது பிறந்த நாள், நினைவு நாள், அரசியல் சாசன நிறுவன நாள் ஆகிய நிகழ்ச்சிகளில் மட்டுமே நினைவு கூர்ந்தால் போதாது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் அம்பேத்கரின் சிந்தனைகளில் தீர்வு அடங்கியுள்ளது. நாடாளுமன்றத்திலும் அம்பேத்கரின் கொள்கைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவரது கொள்கைகளை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
நமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் சமீப காலமாக சிலருக்கு மட்டுமே சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. சமத்துவம், சுதந்திரம், கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு வந்துள்ளது. சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு அம்பேத்கர் சிறப்பு அந்தஸ்து வழங்கினார். அந்த சிறப்பு அந்தஸ்துக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அதை நீக்க முயற்சி செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.