டி.என்.பி.எஸ்.சி

காலை செய்தித் தொகுப்பு: அரசுப்பணிகளில் 20% தமிழ்வழி மசோதா திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 10 செய்திகள்

1) ஆளுநர் ஒப்புதல்

அரசுப் பணிகளுக்கான TNPSC தேர்வில் 20% தமிழ் வழி இடஒதுக்கீடு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவிற்கு கடந்த 8 மாதமாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்த நிலையில் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

தி.மு.க ஆட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை அளித்து சட்டம் இயற்றப்பட்டது. தற்போது அந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவர சில மாதங்களுக்கு முன் முடிவுசெய்தது. அதன்படி அரசுப் பணிகளில் குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி மட்டும் அல்லாமல் 1-ம் வகுப்பிலிருந்தே முழுவதும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற முடியும்.

இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பணிகளில் இனி வரும் காலங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு முறை பொருந்தும். தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநருக்கு சட்டத் திருத்தம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த வாரம் ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் 8 மாதங்கள் கழித்து இப்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

2) எட்டுவழிச் சாலை தீர்ப்பு ஸ்டாலின் கருத்து

எட்டுவழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ”விவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, விவசாயிகள் மற்றும் இயற்கை – சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

3) தமிழகத்தில் கொரோனா 

தமிழகத்தில் மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,92,788-ஆக உயர்ந்துள்ளதாக என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 1,330 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,822 ஆக உயர்ந்துள்ளது.

4) மக்கள் பணத்திற்கு ஆபத்து

”வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் போன வாராக் கடன்களில் 90% கார்ப்பரேட்களுடையது. DHFL போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மக்களின் கோடிக்கணக்கான முதலீடுகளைச் சுருட்டி திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கூட வங்கி நடத்தலாம் என விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பணத்துக்கு ஆபத்து” என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

5) வெள்ளத்தில் பயிர் 

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே உள்ள கிராமங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. புத்தாகரம், காரைத்திடல், குமட்டிதிடல், நொச்சியூர் கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமடைந்தது.

6) இரண்டாம் சுதந்திரப் போர்

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ”வேளாண் சட்டத்தை எதிர்த்து 13 நாட்களாக டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை மிருகங்களை காப்பதுபோல் பள்ளம் தோண்டி, இரும்புகள் கொண்டு அடக்குகிறது அரசு. விவசாயிகள், மாநில அரசுகளுடன் கலந்து பேசி விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில விவசாயிகள், அரசியல் கட்சியினர், சட்டவல்லுநர்களுடன் இணைந்து பேசினாரா? மத்திய அரசு வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக நிறைவேற்றாவிட்டால் மறு சுதந்திரப் போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

7) இரயில் அனுமதி இல்லாதால் மாணவர்களுக்கு சிரமம்

எட்டு மாதங்களுக்குப் பிறகு, இறுதி ஆண்டு மாணவா்களுக்காக கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கடந்த திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பணியாளா்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் செல்வதற்கு மாணவா்கள் ரயில் நிலையங்களுக்கு வருகை தந்தனா். ஆனால் அவா்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் கல்லூரிகளுக்குச் செல்ல முடியவில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களின் கல்விக்காக சென்னைக்கு வந்து செல்வதாக அதிகாரப்பூா்வ தகவல் தெரிவிக்கிறது. பெரும்பாலானவா்கள் புறநகா் ரயில்கள் மூலமாக வந்து செல்கின்றனா். அண்டை மாவட்டங்களில் சுமாா் 50 கி.மீ. முதல் 80 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் மாற்று போக்குவரத்து முறை இல்லாததால் புறநகா் ரயில்களையே முழுமையாக நம்பி உள்ளனா். 

இது தொடா்பாக திருவள்ளூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் சிலா் கூறியது: தோ்வுகள் இருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்று ரயில்வே தரப்பில் கூறப்பட்டது. தோ்வுக்குச் செல்ல வேண்டுமெனில், ஹால் டிக்கெட்டை சமா்ப்பிக்க வேண்டும். அல்லது வேலைக்கான நோ்காணல் என்றால் அழைப்பை சமா்ப்பிக்க வேண்டும். எனவே, குறைந்தபட்சம் வழக்கமான ரயில் சேவை மீண்டும் தொடங்கும் வரை சிறப்பு ரயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.

8) நிலங்களை திருப்பிக் கொடுக்க திருமா கோரிக்கை

8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

மேலும் 8 வழிச்சாலை உள்ளிட்ட எந்தவொரு திட்டத்திற்கும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அவர்களுடைய நிலத்தை மத்திய அரசு அபகரிப்பதற்குத் தமிழக அரசு துணைபோகக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

9) வங்கி ஊழியர்களுக்கு முன்னுரிமை வேண்டும்

வங்கி தொழிற்சங்கங்கள் கோவிட் தொற்றுநோய் காலகட்டம் முழுவதும் வங்கியாளர்கள் சிறந்த சேவையை வழங்கியுள்ளனர். அதனால் அவர்களுக்கு  முன்னுரிமை கோரிக்கை வைத்துள்ளனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு செவ்வாயன்று, நான்கு வங்கி தொழிற்சங்கங்கள் எழுதிய கடிதத்தில், வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சுகாதார ஊழியர்களை தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தப் பணிகளை அரசாங்கம் செய்து வரும் நேரத்தில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

10) சந்திரசேகர் ஆசாத் கைது

பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்க்கிழமை உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “உங்கள் காவல்துறையினர் எங்கள் எலும்புகளை உடைக்க முடியும், ஆனால் எங்கள் ஆவியை உடைக்க முடியாது. நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன் நிற்போம்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *