sanskrit imposition

காலை செய்தித் தொகுப்பு: தென் தமிழகத்தில் புயல், சமஸ்கிருதத் திணிப்பு, பலவீனமாகும் பாஜக கூட்டணி, 9 இதர செய்திகள்

1. பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத் திணிப்பு – சு.வெங்கடேசன் எம்.பி

மத்திய அரசால் நடத்தப்படும் பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கென நேரம் ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி, “தமிழகத்தில் 1000 பேர் கூட சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கிடையாது; வலுக்கட்டாயமாக ஹிந்தி, சமஸ்கிருதம் திணிப்பை ஆட்சியின் அடையாளமாக மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

2. எதற்காக சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டில் நேரம் ஒதுக்க வேண்டும்? திருமாவளவன் எம்.பி


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியா முழுவதுமே 24 ஆயிரம் பேர்தான் சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 803 பேர் மட்டுமே உள்ளனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. ஏழரை கோடி தமிழர்கள் இருக்கும் இந்த மாநிலத்தில் 803 பேருக்காக செய்தி அறிக்கை வெளியிட வேண்டுமென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இதே அளவுகோலின்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தமிழ் செய்தி அறிக்கைக்காக 15 நிமிடங்களை மத்திய அரசு ஒதுக்க முன்வருமா ? அவ்வாறு செய்யாத போது எதற்காக சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புக்கு தமிழ்நாட்டில் நேரம் ஒதுக்க வேண்டும்?

இந்த ஆணை, சங்பரிவார்களின் செயல்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கே என்பது தெரிகிறது. அத்துடன் இது தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிரானது மட்டுமல்ல; அனைத்துப் பிற மொழிகளுக்கும் பிறமொழி பேசும் மக்களுக்கும் எதிரானதாகும். என்று குற்றம் சாட்டியுள்ளார்.

3. பலவீனமாகும் பாஜக கூட்டணி


விவசாய சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்றால் கூட்டணியில் தொடர முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஜஸ்தானைச் சேர்ந்த ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி (ஆர்.எல்.பி கட்சி) தலைவரும், மக்களவை உறுப்பினருமான அனுமன் பனேவல் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.


மேலும் ”ஹரியானா உள்ளிட்ட அருகிலுள்ள மாநிலங்களின் அரசாங்கங்கள் விவசாயிகளுக்கு எதிராக எந்த அடக்குமுறை கொள்கையையும் பின்பற்றக்கூடாது, காவல்துறையும் அரசாங்கங்களும் விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறை ஏவினால், ஆர்.எல்.பி விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜஸ்தான் உட்பட நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும்” என்றும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

4. பொறியாளர்களின் ஊதியக் குறைப்பைக் கைவிட வேண்டும்

கடந்த 18.11.2020 அன்று தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்களுடைய அடிப்படை ஊதியத்தை 15,600/- ரூபாயிலிருந்து 9,300/- ரூபாயாக குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

5. மூன்றாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்


ராஜஸ்தானின் 21 மாவட்டங்களில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 57.91 லட்சம் வாக்காளர்கள் 7,964 வாக்குச் சாவடிகளில் காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பார்கள் என்று மாநில தேர்தல் ஆணையர் பி எஸ் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

6. சகாயத்திற்கான பாதுகாப்பை தொடர வேண்டும்


சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை தமிழக அரசு அண்மையில் திரும்பப் பெற்றது. அவருக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐ.ஏ.எஸ்-க்கு காவல்துறை பாதுகாப்பு தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் கிரானைட் முறைகேடு விசாரணையில் பங்கேற்ற தற்போதைய மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ஊரடங்கு தளர்வுகளும் கட்டுப்பாடுகளும்


வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப 14.12.2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

சுற்றுலா தளங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களிலிருந்து தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை) 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விடுதிகளும் செயல்படும்.

அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 1 முதல் 31 வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

8. தென் தமிழகத்தில் புயல்


தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது இன்று நள்ளிரவு காற்றழுத்தமாகவும், அதன் பின்பும் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோர பகுதியை டிசம்பர் 2ம் தேதி நெருங்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா மற்றும் மாகி, ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோர பகுதி, ஆகிய பகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்.

தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதியில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2-ம் தேதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

9. செம்பரம்பாக்கம் ஏரியில் வீணாகும் தண்ணீர்; துரைமுருகன் கண்டனம்

இன்று தி.மு.க பொதுச்செயளாலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர் புயலை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீரை வெளியேற்ற திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3 ஆவது மதகுகள் மூட முடியாமல் இப்போது 400 கன அடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் புயலின் சேதம் குறைந்து விட்டது என்று போட்டி போட்டுக் கொண்டு அமைச்சர்களும், தாமும் பேட்டி கொடுத்து, பத்திரிகைகளையும் எழுத வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏன் மதகு பராமரிப்பில் இப்படி கோட்டை விட்டார்? பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் செய்த பணிதான் என்ன?

செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்று பார்த்த அவர், ஏன் இதுகுறித்தெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவில்லை? ஊடகங்கள் புடைசூழ அங்கு சென்றாரே எதற்கு? எல்லாமே வெற்று விளம்பரத்திற்காகத் தானா? ஏரி மதகுகளைக் கூட பராமரிக்கும் நிர்வாகத் திறமை இன்றி முதலமைச்சராக இருந்து இந்த தமிழ்நாட்டை இப்படிப் பாழ்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *