மூன்று மாதத்திற்கு முன்பு வரை தமிழ்நாட்டு அரசியல்-சமூக தளத்தில் தீவிரமாக பேசப்பட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர் சிக்கல் தற்போது பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.
தேர்தல் அரசியலை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினரால், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்ட- ஒழுங்கு நடவடிக்கைகள் ‘திட்டமிட்ட வடக்கன் பிரச்சார அரசியலுக்கு’ தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
வடக்கன் எனும் வெறுப்புப் பிரச்சார அரசியல் வழியாக வடமாநிலத்தவருக்கு அதரவு சக்தியாக தமிழ்நாட்டிலும், வடமாநிலங்களிலும் அரசியல் ஆதாயம் தேட நினைத்த பாஜகவின் சதி அரசியல் அம்பலப்பட்டு போனது. இதையடுத்து பாஜகவின் திட்டமிட்ட- ஒருங்கிணைந்த அரசியல் பிரச்சாரத்திற்கான ஊதுகுழலாக விளங்கிய குறிப்பிட்ட ஊடகங்கள், யூடியூப் சேனல்களின் ‘வடக்கன் வெறுப்புப் பிரச்சார செய்திகள்’ மறைந்து போயிருப்பதைப் பார்க்க முடிகிறது. சாவி கொடுத்தவர் நிறுத்திக் கொண்டதால், ஆடியவர்களும் நிறுத்திக் கொண்டார்கள்.
இந்த சூழலில் வடமாநிலத்தவர் தொடர்பான அடிப்படை சிக்கலை விவாதமாக்காமல், அரசியல் உள்நோக்கத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்ட வடமாநிலத்தவர் தொடர்பான வெறுப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை உற்று நோக்கக்கூடிய இடம் உருவாகியுள்ளது; உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.
வடமாநிலத்தவர் தொடர்பாக உருவாக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தின் பல்வேறு புள்ளிகளில் முக்கியமான ஒரு புள்ளி, ‘தமிழ்நாட்டினரின் வேலையை வடமாநிலத்தவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்’ என்பதும், ‘தமிழ்நாட்டினுடைய தொழிலாளர் தரப்பு உழைக்கத் தயாராக இல்லை’ என்பதும் ஆகும்.
இந்த விடயத்தின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள இரு நாட்களுக்கு முன் செய்திதாள்களில் இடம்பெற்ற வடமாநிலத்தவர் தொடர்பான செய்தி நமக்கு பயன்படக்கூடும்.
கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் (ஹோலி பண்டிகையையொட்டி) கோவையிலிருந்து தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிய வடமாநிலத் தொழிலாளர்களில் 40 சதவீதத்தினர் மீண்டும் வேலைக்காக கோவைக்கு திரும்பவில்லை.
இதன் காரணமாக அனைத்து தொழிற்துறையிலும் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் தங்களது உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
கோவை குடிசை, சிறு தொழில் நிறுவனங்களினுடைய சங்கத் தலைவரான ஜேம்ஸ், ”சற்றேக்குறைய 40 சதவீத வடமாநிலத் தொழிலாளர்கள் கோவைக்கு மீண்டும் திரும்பவில்லை” என்கிறார்.
அதேபோல கோவை சிறு குறு உலோக வார்ப்பகத் தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவ சண்முகம், “ஊருக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களில் 50-60 சதவீதத்தினர் மட்டுமே மீண்டும் வந்திருக்கிறார்கள். திரும்ப வராமல் போன 50-40 சதவீத வடமாநிலத் தொழிலாளர்களால் எங்கள் முழு விகித உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இந்திய கட்டுமான நிறுவனங்களின் முன்னாள் துணைத் தலைவர் கே.விஸ்வநாதன், ”முன்னர் இங்கு பணியாற்றிய வடமாநிலத் தொழிலாளர்கள் திரும்ப வராததால் கட்டுமானத் தொழிலில் 20 சதவீத தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்.
தமிழ்நாட்டின் தொழில் உற்பத்தியில் வடமாநிலத் தொழிலாளர்களது உழைப்பின் பங்களிப்பு தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
தமிழ்நாட்டின் தொழிலாளர்களது உழைப்புப் பங்களிப்பைக் கடந்து, இந்த அளவிற்கான கூடுதல் வடமாநிலத் தொழிலாளர்களது பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு தேவையாக இருக்கிறதா? அல்லது ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விட குறைந்த கூலிக்கு உழைப்பதாலும், கூடுதல் நேரம் உழைப்பதாலும் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தவிர்த்து தமிழ்நாட்டின் தொழிலுற்பத்தி வடமாநிலத் தொழிலாளர்களை சார்ந்திருக்கிறதா என்பது மேலதிகமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய இடமாகும்.
அத்தகைய ஆய்வு முடிவுகளும், அதன் மீதான விவாதமும் நிகழ்கின்ற பொழுது தான் ’வடமாநிலத் தொழிலாளர் தேவையை தமிழ்நாடு எந்தளவிற்கு சார்ந்திருக்கிறது’ என்பதையும், ‘குறைவான கூலியும், கூடுதல் உழைப்பு நேரமும்’ தான் வடமாநிலத் தொழிலாளர் சார்புநிலைக்கு காரணமென்றால் அதை எப்படி ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவது’ என்பதையும் நோக்கி வடமாநிலத் தொழிலாளர் சிக்கல் நகரும்.
ஆனால் திரும்ப வந்திருக்க வேண்டியவர்கள் வரவில்லை என்று தமிழ்நாட்டுத் தொழில் உற்பத்தியாளர்கள் வடமாநிலத் தொழிலாளர்களை எதிர்நோக்குகிற நிலையில், அப்படி வருபவர்களை நோக்கி ‘சென்ட்ரலில் குவியும் வடக்கன்கள்’ என ஊடகங்கள் வெறுப்பு அரசியல் நோக்கிலிருந்து குறிவைப்பதும், அதை விவாதமாகக் கொண்டு சேர்ப்பதும் இந்த பிரச்சினையில் என்ன பயனைத் தரும்?
வடமாநிலத் தொழிலாளர்கள் திரும்ப தமிழ்நாட்டிற்கு வராததற்கான முக்கியக் காரணமாக பாஜக பரப்பிய வதந்திகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. வதந்தி ஒரு காரணம் என்றபோதும், புலம்பெயர் தொழிலாளர் ஒருவருக்கு ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டிய சமூக பாதுகாப்பு அம்சங்கள், குறிப்பாக சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்திருந்தால் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு தொடர்பாக எழுந்திருக்கிற அச்சத்திற்கும் வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
வேலைத் தேவையுள்ள வடமாநிலத் தொழிலாளர்களையும், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களைக் கடந்து கூடுதல் தொழிலாளர் தேவையுள்ள தமிழ்நாட்டு தொழில் உற்பத்தியாளர்களையும் இணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தொழிலாளர் மனிதவள முகமையை உருவாக்கி புலம்பெயர்த் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை, சமூகநலத் திட்டங்களை செயற்படுத்துவது அவசியமாகும்.
உருவாக்கத் தேவையுள்ள இம்முகமையானது தொழிலாளர் என்றளவிலே மட்டும் அதற்குரிய அடையாள அட்டையுடன் தமிழ்நாட்டிற்குள் வடமாநிலத்தவரை அனுமதிக்கும் பொழுது, வடமாநிலத் தொழிலாளர்களது வருகையை தமிழ்நாட்டின் மீதான குடியேற்றமாக முன் வைத்து தமிழ்நாட்டினருக்கிடையே உருவாக்கப்படும் ‘பாதுகாப்பற்ற உணர்வும்’ களையப்படும்.
இத்தகைய புள்ளிகளை நோக்கியான உரையாடல்களுக்கு முதன்மையானது ‘வடக்கன்கள்’ என்பதாக மூன்று மாதத்திற்கு முன்பு வரை நம்மை ஆக்கிரமித்திருந்த ஊடக, யூ ட்யூப் செய்திகளின் யதார்த்த நிலை இன்று என்ன என்பதை புரிந்துகொள்வது மட்டுமே ஆகும்.
– பாலாஜி தியாகராஜன்