ஆர்.கே.சண்முகனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், உலக வங்கி உருவாகக் காரணமானவர்களில் ஒருவருமான ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் பிறந்த நாள் இன்று.
கோவையில் ஆர்.கந்தசாமி செட்டியார் – ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு 1892-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி மகனாகப் பிறந்தார்.
கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியை பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய நாட்களே வழக்குரைஞராகப் பணியாற்றி பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.
நீதிக் கட்சியில் இருந்த அவர், 1920-ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார். பிறகு சுயராஜ்ஜியக் கட்சியில் சேர்ந்தார். 1924-ல் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரானார்.
சுயமரியாதை இயக்க மாநாட்டின் தலைவராக
1930-ம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தவர் ஆர்.கே.எஸ் ஆவார். வரவேற்புக் குழுவின் தலைவர் என்கிற முறையில் அவர் ஆற்றிய உரையில் மின்னித் தெறித்தவை – அவரின் கொள்கைச் சான்றாண்மைக்கான ஆவணமாகும்.
”சுயமரியாதை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பெரும் சொத்து. சுயமரியாதை இயக்கம்தான் மக்களின் சிந்தனா சக்தியை வளர்த்திருக்கிறது. மந்திரங்களையும், பாராயணத்தையும், ஜபமாலையை உருட்டுவதையும் விட்டு விட்டு, கதவுகள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் கோயிலின் மூலையில் அமர்ந்து யாரைத் துதிக்கிறாய்?
கண்களைத் திற! உனது கடவுள் உனக்கு முன்னால் இல்லை என்பதைப் பார்! என்று கூறிய ரவீந்திரநாத் தாகூர் நாத்திகரா?” என்று பேசியவர் சண்முகனார்
1931-ம் ஆண்டில் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை வகித்தவரும் சண்முகனாரே ஆவார்.
சர்வதேச அவைகளில்
1929-ல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன (International Labour Organisation – ILO) மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆகிய ஆண்டுகளிலும், தலைவராக 1933-34 ஆகிய ஆண்டுகளிலும் பதவி வகித்தார்.
1938-ம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார்.
1944-ம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945-ம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.
இந்திய விடுதலையின்போது “உலக நிகழ்வுகளின் முதன்மை காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக் கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக
1941-ல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளை தோற்றுவிக்க நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்களிப்பு செய்தவர்
1947-ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தமிழிசை இயக்கப் பணிகள்
தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவாரப் பண் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் நடத்தி தேவாரப் பண்ணிசை இராகங்களை முறைப்படுத்தினார்.
சிதம்பரம் அண்ணாமலை செட்டியார் தமிழிசை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து தமிழில் பாடல்களைப் பாடுவதற்காக ராஜா அண்ணாமலை மன்றத்தை சென்னையில் உருவாக்கியபோது அவருடன் இருந்தார் ஆர்கேஎஸ்.
தில்லித் தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றை தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர்.
சென்னை, கோவை தொழில் நகரங்களாக மாறியதில் இவரின் பங்கு
1950-ல் அன்றைய சென்னை மாகாணத்தை தொழில் மையமாக்க உருவாக்கப்பட்ட சென்னை தொழில் முதலீட்டுக் கழகம் எனப்படும் இன்றைய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார்.
கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும், கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் சண்முகம் செட்டியாரின் பங்கு முக்கியமானது.
“இன்றைய தினமும் நமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டாலும் ஏறக்குறைய 4 கோடி ஜனங்களுக்குள் விஷயங்களைப் பாகுபடுத்தி மக்களுக்கு நன்றாய் விளங்கும்படி செய்யவும், விவகார ஞானத்துடன் விவகரிக்கவும், எதிரிகளின் சூழ்ச்சிகளை அறியவும் தக்க யோக்கியதை உடையவர்கள் எந்த வகுப்பிலிருக்கின்றார்கள் என்றால் பார்ப்பனரல்லாதார் வகுப்பில்தான் இருக்கிறார்கள். அவர்களில் சிறந்தவர்கள் என்று சொல்லத்தக்கவர்கள் யார் என்று பார்த்தால் நமது ஸ்ரீமான்கள் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்களையும், சென்னை ஸ்ரீமான் ஏ.ராமசாமி முதலியார் அவர்களையுமே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இருவரும் பிரகாசிக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் என்னவென்று யோசித்தால் நமது பார்ப்பனப் பத்திரிகைகளின் விஷமமேயல்லாமல் வேறல்ல.” என்று 19.09.1926 அன்றைய குடியரசில் சண்முகனார் குறித்து பெரியார் எழுதியிருப்பார்.
பேரறிஞர் அண்ணாவால் “திராவிட மணி’, “தென்னாட்டு தாகூர்’ என்று புழகபட்டவர் ஆர்.கே. எஸ். புகழுக்குரிய சண்முகம் செட்டியார் மே 5, 1953 அன்று கோவையில் இயற்கை எய்தினார்.