சி.பா.ஆதித்தனார்

”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று முதலில் முழங்கிய சி.பா.ஆதித்தனார்

சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் சிவந்தி ஆதித்தன் மற்றும் கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பாலசுப்ரமணியன் என்கிற சி.பா.ஆதித்தனார். 

திருவைகுண்டத்தில் ஆரம்பக் கல்வியும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பும் படித்தவர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார். பாரிஸ்டர் பட்டம் பெற 1928-ல் இங்கிலாந்துக்கு  சென்று படித்தார். லண்டனில் படிக்கும்போதே இதழியல் துறையில் பகுதிநேர வேலைகள் செய்தார். அங்கிருந்தே சுதேசமித்ரன் உள்ளிட்ட தமிழக பத்திரிகைகளுக்கும், தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளுக்கும் கூட இங்கிலாந்து செய்திகளை அனுப்பினார்.

எதிர்கால செயல்படுகளுக்கு நிதி திரட்ட சிங்கப்பூர் சென்ற அவர், அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1933-ம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவியின் பெயர் கோவிந்தம்மாள். அந்த காலகட்டத்தில் பெரியாரின் குடியரசு பத்திரிக்கையில் அரசியல் கட்டுரைகள் எழுதினார்.

தமிழ்நாட்டில் 1938-ம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வந்தது. அதற்கு ஆதரவாக சிங்கப்பூர் தமிழர்களும், அங்கு போராட்டங்கள் நடத்தினர். சிராங்கூன் சாலையில் தமிழ் வேள் என்று புகழப்படும்  கோ.சாரங்கபாணி தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆதித்தனார் ”தனித்தமிழ்நாடு வேண்டும்” என்று பேசினார். 

மதுரையில் தொடங்கிய இதழியல் பயணம்

1942-ம் ஆண்டு தமிழ்நாடு திரும்பியதும் தனது நீண்டகாலக் கனவான  பத்திரிக்கைப் பணியைத் துவங்கினார். மதுரையில் மதுரை முரசு என்ற பத்திரிக்கையை முதலில் ஆரம்பித்தவர், அடுத்ததாக தமிழன் எனும் வாரஇதழ் ஒன்றையும் துவங்கினார். தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் மேடைகளில் முழங்கப்படும் புகழ்பெற்ற முழக்கமான “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்ற முழக்கமானது ஆதித்தனாரால் அவ்விதழில்தான் முதன்முறையாக வெளியிடப்பட்டது. 

தினத்தந்தி, மாலை மலர் நாளேடுகள்

இன்று தமிழின் முன்னணி நாளேடான ‘தினதந்தி’ பத்திரிக்கையினை 1.11.1942-ல் ஆதித்தனார் தொடங்கினார். அதனை ‘முத்தமிழ்க் காவலர் ‘ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் திறந்து வைத்தார். தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் எனும் மாலை பத்திரிக்கையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947-ம் ஆண்டில் தினத்தாள், தினதூது என்று இவரது பணி இன்னும் விரிவடைந்தது.   

பத்திரிக்கையை மொழிநடையை எளிமையாக்கினார்

அன்றைய காலகட்டத்தில் பத்திரிக்கைகள் உயர்சாதியினர் மட்டுமே வாசிக்கும் வகையிலான மொழி நடையைக் கொண்டிருந்தன. ஆதித்தனார் அதனைத் தவிர்த்து தமிழக உழைக்கும் மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார்.

அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில், செய்திகளை வாசிக்கும் போக்கு வளர்ந்ததில் ஆதித்தனாரின் இதழியல் பணி முக்கியமான ஒன்றாகும். 

தமிழர் சமுதாயம் மொழியால் ஒன்றுபட நாம் தமிழர் இயக்கம்

ஆதித்தனார் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே சாதியால் பிரிந்து கிடந்த ‘தமிழர் சமுதாயம்’ மொழியால் ஒன்றுபட வேண்டுமென பெரிதும் விரும்பினார். அந்த குறிக்கோளில் தமிழ் பேரரசு இயக்கத்தினை உருவாக்கினார்.

1943-ல் மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் “தமிழ்நாடு இளந்தமிழர் இயக்க மாநாடு” நடத்தி தனது தமிழ் பேரரசு இயக்கத்தின் கொள்கை அறிக்கையினை வெளியிட்டார். 

1958-ல் புதிய இயக்கத்தை உருவாக்கினார். அப்போது அயர்லாந்து விடுதலை இயக்கத்தின் (We are Irish) தாக்கத்தில் இருந்த ஆதித்தனார், ‘நாம் தமிழர் இயக்கம்’ என்ற பெயரில் புதிய இயக்கத்தைத் தொடங்கி தமிழ்நாடு விடுதலைக்கான பரப்புரையினை மேற்கொண்டார். 

தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் அற்விப்பு

6.7.1958-ல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மன்னார்குடியில் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ மாநாடு நடத்தினார். மாநாட்டில் பேசிய பெரியார்,

”தமிழ்நாடு விடுதலைக் கிளர்ச்சியில் ஆதித்தனாருக்கு இருக்கிற ஆர்வமும், ஊக்கமும் நம்மையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படி செய்து விட்டது”

என்றார்.

இந்த மாநாட்டில் ’தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப் போராட்டம்’ நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த போராட்டத்தில் பெரியாரும் பங்கேற்க ஒப்புக் கொண்டார். 5.6.1960-ல் நடைபெற்ற வரைபட எரிப்புப் போராட்டத்திற்கு முன்னரே ஆதித்தனாரும், பெரியாரும் கைது செய்யப்பட்டனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை

அதேபோல 1958-ம் ஆண்டு இந்தியை திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு ’கருப்புக் கொடி’ போராட்டத்தை ஆதித்தனார் அறிவித்தார். அந்த போரட்டத்தைத் தடுக்கும் வண்ணம் முன் கூட்டியே அவர் கைது செய்யப்பட்டார்.

1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததால்  1965 அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டப்பேரவையில் வகித்த பதவிகள்

1947 முதல் 1953-ம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964-ல் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967-ம் ஆண்டு சட்டப் பேரவையின் அவைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1969-ம் ஆண்டு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழக சட்டமன்ற செயல்பாடுகளில் பல தமிழ் சொற்களை அறிமுகப்படுத்தியவர் ஆதித்தனார். இதற்கு முன் அமைச்சர்களை ’கனம்’ என்ற அடைமொழியோடு அழைத்து வந்தார்கள். ஆதித்தனார் காலத்தில்தான் அது ’மாண்புமிகு’ என்று மாறியது.

”அடக்கி ஒடுக்கப்பட்ட சமயத்திலிருந்து தான் உன்னதமான மனிதர்கள் தோன்றுவார்கள் என்று மூதறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். வைரம் என்பது நீண்ட காலத்திற்கு முன்பு நிலத்தின் அழுத்தத்தால் கீழே அடங்கி ஒடுங்கி கிடந்த கரிதான். அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைரமணிகளில் ஒருவர் ஆதித்தனார்” என்று அண்ணா ஆதித்தனார் குறித்து கூறினார்.

தமிழர் தந்தை என்று புகழப்படும் சி.பா.ஆதித்தனார் 21.5.1981 அன்று தமது 76-வது வயதில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *