மாட்டு வண்டி போராட்டம்

விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்க மாட்டு வண்டிகளை ஆயுதமாக்கி போராடிய நாராயணசாமி நாயுடு

நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் செங்காளிப்பாளையம் அருகில் உள்ள  வையம்பாளையம் என்ற சிற்றூரில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார் நாராயணசாமி. பெற்றோர் சின்னம்ம நாயுடு – அரங்கநாயகி. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணசாமி, அதன் பிறகு தன்னை முழுமையாக உழவுத் தொழிலில் ஈடுபடுத்திக் கொண்டார்.

விவசாய சங்கங்ககளை உருவாக்கினார்

1957 முதலே விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொள்ளத் துவங்கினார். விவசாயிகள் தனித்து இருப்பதாலேயே தங்கள் கோரிக்கையில் வெற்றி பெற முடிவதில்லை என்பதை உணர்ந்து விவசாய சங்கங்களை கட்டமைப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

1968-ல் கோவை வட்ட உழவர் இயக்கம் 1969-ல் கோவை மாவட்ட உழவர் இயக்கம், 1970-ல் தமிழக உழவர் இயக்கம் என உழவர் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கட்டமைத்தார்.

நாராயணசாமி நாயுடு

கோவையில் விவசாய மின்சாரத்திற்கான மாட்டுவண்டிப் போராட்டம்

காங்கிரஸ் ஆட்சியில் விவசாயத்திற்கு 16 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. 1950-களின் தொடக்கத்தில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது. 1957-ல் இதை எதிர்த்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவை பகுதியில் போராடினார் நாயுடு.

மேடையில் அமர்ந்திருக்கும் நாராயணசாமி நாயுடு

தமிழ்நாட்டு  விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றி மீண்டும் விவசாயத்திற்கு 16 மணிநேர மின்சாரத்தைப் பெற்றுத் தந்தது.

இன்று டெல்லியை முற்றுகையிட்டு நிற்கும் பஞ்சாப் விவசாயிகள் டிராக்டரில் அணிவகுத்துச் செல்வதை நம் கண் முன்னால் பார்த்து கொண்டிருக்கிறோம்.  இதற்கு முன்னோடியாக தமிழ்நாட்டில் மாட்டுவண்டிப் போராட்டம் நடைபெற்றது.  

1970-களில் அன்றைய தமிழக அரசு, மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர்  மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970-ம் ஆண்டு மே 9-ல் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகள் கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள்.

விவசாயிகள் நடத்திய மாட்டு வண்டி போராட்டம்

உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெறாவிட்டால், ஜூன் 15-ல் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டமும், ஜூன் 19-ல் பந்த்-தும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகள்

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்குமுறையை ஏவி, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் விவசாயிகள் இராமசாமி, மாரப்பன், ஆயிக்கவுண்டர் ஆகியோர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். அதனால் ஏற்பட்ட தீவிரப் போராட்டம் அரசைப் பணியவைத்தது. மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. 

விவசாயிகளைத் தாக்கும் காவல்துறையினர்

காய்கறிகளையும், பாலையும் நகரங்களுக்கு நிறுத்தி போராடிய விவசாயிகள்

இதன் காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு, மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் போராட்டத்தைத் துவங்கினர். 1972 மார்ச் மாதத்தில் 12 கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினர் விவசாயிகள். 15.04.1972-ம் தேதிக்குள் நிறைவேற்ற கெடு விதித்தனர்.

மே 9-ல் மறியல் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் வாங்கும் காய்கறிகளையும் பாலையும், விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர்.

விவசாயிகளின் பாட்டன் டாங்குகளாய் மாறிய மாட்டுவண்டிகள்

இதற்கும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், கோயம்புத்தூரின் பிரதான  சாலைகளிலும், தெருக்களிலும், அரசு அலுவலகங்களுக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூர்  நகரமே  ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் விவசாயிகள் போராட்டம் குறித்து, ‘மாட்டு வண்டிகள், இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்’ என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், டாக்டர் சிவசாமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

போராட்டத்தின் வீரியத்தை  உணர்ந்த அரசு, பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.

விவசாயிகள் உரிமைக்காக போராடி, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 60 விவசாயிகள்

நாராயணசாமி நாயுடுவை தலைவராகக் கொண்டு 13 நவம்பர் 1973 அன்று தமிழக விவசாயிகள் சங்கம் துவங்கப்பட்டது.

1980-களில் நாராயண‌சாமி நாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. வேடசந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர். அதே ஆண்டு அன்றைய திருநெல்வேலி மாவட்டம்  குறிஞ்சாங்குளத்தில் டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற விவசாயப் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய   துப்பாக்கி சூட்டில் 8 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

1972-லிருந்து 1992 வரை தமிழக காவல்துறையால் 60 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட விவசாய தியாகிகளின் நினைவாய் எழுப்பப்பட்ட நினைவுத் தூண்

விவசாயிகளிடம் வரிவசூல் செய்வதற்கு எதிரான போராட்டம்

1982-ல் விவசாயிகளிடம் வரி வசூல் செய்வது என்றும், அதைக் கட்ட முடியாதவர்களிடம் ஜப்தி செய்வது என்றும் கொடுமைகள் நடந்தேறிய காலகட்டம் அது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தமிழகம் முழுவதும் காவல்துறையால் தாக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல இடங்களில் பொய் வழக்குகள் போடப்பட்டன. 

உழவர் கட்சி தொடக்கம்

தமிழகத்தில் விவசாயிகள் ஒன்றுபட்டால் ஆட்சியைக் கைப்பற்றலாம். அதன் வழியாகவே இந்த ஒடுக்கு முறையில் இருந்து மீளலாம் என்று எண்ணி, 1982 மே மாதம் 20 முதல் 22-ம் தேதி வரை விவசாயத் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதித்தார்கள். 

விவாதத்தின் அடிப்படையில் 7.7.1982-ல் இந்திய உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சி என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது. இந்த கட்சி, 1982 செப்டம்பரில் நடந்த பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும், 1984-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு பெரும் தோல்வியடைந்தது.

நாராயணசாமி நாயுடு கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்த நிலையில் 21.12.1984-ல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

1989-ல் விவசாயிகளுக்கான மின்கட்டணம் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டு இலவசமாக்கப்பட்டது. விவசாயிகளின் கடன்களும் ரத்துசெய்யப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை விவசாயிகள் தங்கள் பாசனத்துக்கு இலவச மின்சாரம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கியமான காரணம் நாராயணசாமி நாயுடுதான்.

அப்படி போராடிப் பெற்ற உரிமைகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் கொண்டிருக்கிறது

இந்திய அளவிலான விவசாய சங்கங்களுக்கு முன்னோடியாய் இருந்த நாராயணசாமி நாயுடு

நாராயணனசாமி நாயுடு முயற்சியின் விளைவாகதான் இந்தியாவிலேயே விவசாய இயக்கங்கள் வலுப்பெற்று அகில இந்திய அளவில், விவசாயத் தலைவர்கள் தோன்றினார்கள்.

உத்திரப்பிரதேசத்தில் திக்காயத் தலைமையிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் ஜோசி தலைமையிலும், கர்நாடகத்தில் நஞ்சுண்டசாமி தலைமையிலும், ஆந்திரத்தில் வெங்காள் ரெட்டி தலைமையிலும் விவசாயிகளுக்காக அந்தந்த வட்டாரங்களில் குரல் எழுப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் நாராயணசாமி. இன்று அவரது நினைவு நாளாகும்

தகவல்கள் 

1.தமிழக விவசாயிகள் போராட்டத்தில் சி. நாராயணசாமி நாயுடுவின் பங்கு நூல் 

2.வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *