அரசமைப்பு நிர்ணயப் பேரவையில் நடந்த அனல் பறக்கும் வாதங்களில் ஆளுநர் பதவி குறித்த பொருண்மையும் முதன்மையானது.
ஆளுநரை நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்கள் தேர்ந்தெடுப்பது அல்லது ஒன்றிய அரசால் நியமிப்பது என்பதாகவே அவ்வாதத்தின் பெரும்பகுதி அமைந்திருந்தது. மிகச்சிறிய அளவேயாயினும் காலனிய நீட்சியாகத் தொடரும் ஆளுநர் பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு எதிரானதும் சனநாயக அமைப்புக்குப் பகையானதுமாகும் என்ற குரல்கள் அரசமைப்பு நிர்ணயப் பேரவையில் இருந்தன.

வெள்ளையராட்சி இருந்தபோது அவர்களுடைய கட்டுக்கோப்பில் மாகாணங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அமைச்சரவையைக் கட்டுப்படுத்தவும் ஆளுநருக்கு வரம்பற்ற உளத்தேர்வு (Discretion Powers) அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
வெள்ளையராட்சியை ஒழித்து நமக்கென ஒரு தன்னுரிமை அரசமைப்பை உருவாக்கும் திசையில் ஆளுநர் அமைச்சரவையின் கருத்தின் அடிப்படையிலும் உதவியின் அடிப்படையிலும் செயல்படக்கூடியவர் என மாற்றம் பெற்றது. எனினும் அரசமைப்பில் சில அதிகாரங்கள் ஆளுநருக்கு வழங்கப்பட்டது . அவையெல்லாம் அரசமைப்புக்குட்பட்ட அதிகாரங்களே என அரசமைப்பு நிர்ணயப் பேரவையின் தலைவர் அண்ணல் அம்பேத்கரால் விளக்கமும் அளிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு வழங்கப்படாத திரும்பப் பெறும் அதிகாரம்
குடியரசுத் தலைவர் தவறிழைக்கும் போது ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரைத் திரும்பப் பெறுவதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது போல ஆளுநர்களைக் கட்டுபடுத்தும் அதிகாரம் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அரசமைப்பில் வழங்கப்படவில்லை.
மாநிலங்களை எப்போதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் , குற்றவாளிகளைப் போல கண்காணிப்பதற்கும் ஆளுநர்கள் எனும் கங்காணிப் பதவி ஒன்றிய அரசியலைத் தீர்மானித்த அரசியல் -பொருளியல் வகுப்பினருக்குத் தேவைப்பட்டது. ஆளுநர் பதவியின் அதிகாரங்கள், வரம்புகள் குறித்த அரசமைப்புப் பிரிவுகள் குழப்பங்களுக்கு வழிவகுக்கவும், வழக்குகளுக்கு வழிவகுக்கவும் செய்தன.
ஒன்றிய ஆளுங்கட்சியின் அலுவலகமா ஆளுநர் மாளிகை?
இவை பின்னால் மாநில ஆளுநர் அலுவலகத்தை ஒன்றியத்தின் ஆளுங்கட்சியின் அலுவலமாக பயன்படுத்தும் போக்கும், மாநிலங்களை ஒன்றிய அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப ஆட்டுவிக்கவும், கலைக்கவுமான குடியாட்சி பகை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் காரணமாக அமைந்தன.
அரசமைப்பின் நிறுவனர்கள் கருதியது போல் அல்லாமல் ஆளுநர் அதிகாரங்கள் தவறுதலாக பயன்படுத்தப்பட்டன.
அதுவும் குறிப்பாக ஒன்றியத்தின் சனநாயக அரசியல் வரைவை முற்றிலும் ஒற்றைத்துவமாக்கி அதிகாரங்களை ஒன்றியத்தில் குவிக்கும் கொள்கையைக் கொண்டிருக்கிற பாஜக ஆளுநர் பதவியை பெருமளவு தவறாக பயன்படுத்தவும் ஒன்றியத்தின் கைப்பாவை அமைப்பாகவும் மாற்றியிருக்கிறது.
ஆளுநர் விரும்பும் வரைதான் அமைச்சரவை தொடர முடியுமா?

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசமைப்பின் கூறுகளை தனது விருப்பத்திற்கு விளக்கமளித்து அரசமைப்பு கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்குமளவுக்கு ஆளுநரின் தற்போதைய செயல்கள் அமைந்திருக்கிறது.
எனவே தான் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் உதவியின் அடிப்படையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற அரசமைப்பு உறுப்பு 163 (1) ஐ விடுத்து 164(1) ல் குறிப்பிட்டுள்ள ஆளுநர் விரும்பும் வரையிலே அமைச்சரவை தொடர முடியும் என்ற பிரிவை தனது விருப்பத்திற்கு விளக்கமளிக்கும் நோக்கில் ஆர்.என்.ரவி அறிவிப்பு செய்திருக்கிறார்.
மக்களவையின் முன்னாள் செயலரும் , சட்டவல்லுநருமான பிடிடி ஆச்சாரி அரசமைப்பு உறுப்புகளின் படி ஆளுநருக்கு அமைச்சரவையின் மீதுள்ள விருப்பு அதிகாரம் என்பது அரசியல் சட்டத்திற்குட்பட்டது என அரசமைப்பின் கூறுகளில் இருந்தே தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இழக்குமெனில் அப்போது மட்டுமே அமைச்சரவையை நீக்க ஆளுநரின் விருப்ப அதிகாரம் செயல்பாட்டுக்கு வருகிறது என்கிறார்.
பிரிட்டீசு அரசின் முந்தைய முடியாட்சி அரசியல் கட்டத்தில் அமைச்சரவையை நீக்கும் விருப்ப அதிகாரம் ஆளுநருக்கு இருந்தது எனவும் நாடாளுமன்ற முறை செயலுக்கு வந்த பிறகு அத்தகைய முடியாட்சி அதிகாரத்தின் விருப்புரிமையும் காலாவதியாகிவிட்டது என்கிறார். இது இந்திய ஒன்றியத்திற்கும் பொருந்தும்.
காமன்வெல்த் நாடுகளின் சட்டங்களில் உள்ள ஆளுநருக்குள்ள விருப்புரிமை (Pleasure) அரசியல் சட்டத்திற்கு மேலான எந்த பொருள் விளக்கமும் அற்றது என்ற பொருளிலேயே அரசமைப்பில் இடம்பெற்றிருப்பதாக அண்ணல் அம்பேத்கரும் அரசமைப்பில் உள்ள ஆளுநரின் விருப்புரிமை குறித்து விளக்கியுள்ளார்.
அரசமைப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையங்கள்
இவை போதுமானது அல்ல என்பதை நடைமுறை அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன. அரசமைப்பு குறித்து மேலாய்வு செய்ய அமைக்கப்பட்ட இராசமன்னார் ஆணையம், வெங்கடாச்சலம் ஆணையம் , சர்க்காரியா ஆணையம், ஒன்றிய -மாநில உறவுகள் குறித்த மீளாய்வுக் குழு ஆகியவை குறிப்பிட்டுள்ளதைப் போல ஆளுநர் பதவியை ஒழிப்பது; ஆளுநருடைய அதிகாரங்களை வெட்டிக் குறுக்குவது; என்ற நிலையை நோக்கி நாம் நகர வேண்டியதையே ஒன்றிய பாஜக அரசின் ஆளுநர்களின் நடத்தைகள் நமக்கு உணர்த்துகின்றன.
குறிப்பு : தொடர்ந்து அரசமைப்பு குறித்து அரிய பல கருத்துகளை விளக்கி வரும் பிடிடி ஆச்சாரி அவர்களுக்கு நன்றி!
– குமரன்

குமரன் அவர்கள் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் முக்கியமான செயல்பாட்டாளர் ஆவார். நிகழ்கால அரசியல் குறித்த பல்வேறு உரையாடல்களை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருபவர்