உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 19 வகையான உயர் சிறப்பு படிப்புகளில் 334 இடங்கள் உள்ளன. 2017-ம் ஆண்டு வரை தமிழக அரசே மாணவர் சேர்க்கை நடத்திவந்த போது, மருத்துவர்களுக்கு அதில் 50 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் 2017-ம் ஆண்டிற்குப் பிறகு உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டதால் அந்த உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் உயர் சிறப்பு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில், 50 சதவீத இடங்களை அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடம் ஒதுக்குவதில் ஒன்றிய அரசுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். மாநில அரசின் வழகிறிஞர் அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நவம்பர் 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடினார். அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
எனவே இந்த படிப்புகளுக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாதென்று தெரவித்தார். ஒன்றிய அரசின் வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிற்கும், இந்த வழக்கிற்கும் எந்த தொடர்புமில்லை என்று வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 7-ம் தேதி அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து அரசு மருத்துவர்களுக்கான 50% உள்ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோல் உள்ஒதுக்கீட்டுக்கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதனை மேற்கோள் காட்டி இந்த உள்ஒதுக்கீட்டினை உடனே அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.