நான் ஒரு விவசாயி என்று பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு வயல்களில் நின்று பேட்டி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விளைந்த நெல்களை சாலையில் போட்டு காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மேட்டுர் அணை நிரம்பியதால் சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டுர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் குறுவை நடவு 3.870 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவேரி சிக்கலுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்டாவில் குறுவை சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 58,948 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் இதுவரை 47,000 ஹெக்டேர் வரை அறுவடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 12,000-க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் அறுவடை செய்ய வேண்டியுள்ளது. இதுவும் ஒரு வாரத்தில் நிறைவடையும்.
விவசாயிகளின் நெல்லில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொள்முதல்
ஆனால் அரசு கொள்முதல் நிலையங்களில் உள்ள இடப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் நிலையப் பணியாளா்களால் வாங்க முடியாவில்லை. ஆயிரக்கணக்கான மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவரும் நிலையில் 200 – 300 மூட்டைகளே கொள்முதல் செய்யப்படுகின்றன.
நாள்தோறும் 10,000 முதல் 12,000 டன்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில், தற்போது 3,000 முதல் 4,000 டன்கள்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் கொண்டுவரும் நெல்லில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாலைகளில் நெல் குவிக்கப்பட்டு கிடக்கிறது.
நெல்லை குவித்து வைத்து காத்து கிடக்கும் விவசாயிகள்
இதன் காரணமாக ஒவ்வொரு நிலையத்தின் முன்பும், ஏராளமான விவசாயிகள் நெல்லை குவியல் குவியல்களாக குவித்து வைத்து, விவசாயிகள் இரவு பகலாக காத்துக் கிடக்கின்றனா். மழை பெய்தால் நனையும் நிலை உள்ளதால், அச்சத்தில் உள்ள விவசாயிகள் தனியார் தரகர்களிடம் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யாமல் விலை நிர்ணயம் மட்டும் செய்வதால் எந்த பலனும் இல்லை என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது.
புதிய விவசாய சட்டமும், விவசாயிகளின் பரிதாப நிலையும்
புதிய விவசாய சட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டு தனியார் கொள்முதலுக்கு எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விற்கலாம் என்று குறிப்பிடுவதை பெரிய சாதனை போல சொல்கிறார்கள். ஆனால் அரசு கொள்முதல் செய்யாத நெல்லை வைப்பதற்கே இடம் இல்லாமல் சாலைகளில் போட்டு வைக்கும் நிலையில் தான் விவசாயிகள் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இவர்களால் நெல்லை எங்கு சேமித்து வைத்து எங்கு விற்பனை செய்யப் போகிறார்கள்?
நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட பிறகும், திறந்தவெளியில் கிடப்பதால் வெயிலிலும் மழையிலும் ஏற்படும் இழப்புகளுக்கு நிலையப் பணியாளா்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் நிலையப் பணியாளா்களும் ஒரு பயத்தில் இருக்கின்றனா்.
தீக்குளிக்க முயன்ற எம்.எல்.ஏ
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ ஆடலரசன் அவரது வயலில் விளைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது நெல்லில் அதிக ஈரப்பதம் இருப்பதாகக் கூறி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் பணியாளர்கள் இழுத்தடித்ததால் கையில் பெட்ரோல் கேனுடன் சென்று தீக்குளிக்க முயன்று போராட்டம் செய்த பின் அவரது நெல்லை கொள்முதல் செய்துள்ளனர். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இதுதான் நிலை. ஆனால் அமைச்சர் காமராஜ் ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் அதிகரித்த நெல் உற்பத்தியை ஏடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனையாகக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகம் என்பது ஜூன் மாத்திலேயே தெரிந்தும் கொள்முதலுக்கு எந்த திட்டமிடலும் செய்யாமல், தன்னை விவசாயியின் மகன் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டும் காட்டி வருகிறார்.
புகைப்படங்கள்: பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் வரும் நெடுஞ்சாலை