17-வது நாளாக தொடர்ந்து வரும் புதிய விவசாய விரோத சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இப்போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு சம்யுக்ட் கிசான் மோர்ச்சா எனும் பொதுப் பெயரின் கீழ் ஒன்றிய அரசை எதிர்த்து போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகள் ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுடனான டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டுள்ள நிலையில் கடந்த வாரத்தில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
இந்த வார தொடக்கத்தில் ஒன்றிய அரசுடனான பேச்சுவார்த்தையில், சட்டங்களில் சில விதிகளை மட்டுமே திருத்துவதற்கான ஒன்றிய அரசின் பரிந்துரையை விவசாயிகள் நிராகரித்து போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
“அரசாங்கம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் செல்வோம். இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, நாங்கள் மற்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கத் போவதில்லை” என்று கிசான் சங்கர்ஷ் குழுவின் தலைவர் கன்வல்பிரீத் சிங் பன்னு ‘ தி இந்து’ செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் நாளை(14/12/20) விவசாய சங்கத் தலைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
சுங்கச்சாவடி முற்றுகை
பஞ்சாபில் கடந்த அக்டோபர் மாதம் சட்டம் இயற்றியதற்கு பின்பிருந்தே சுங்கச்சாவடிகளில் பணமில்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. இதே போன்ற நாடு முழுவதுமுள்ள அதானி மற்றும் அம்பானிகளுக்கு சொந்தமான சுங்கச் சாவடிகளை நேற்று சனிக்கிழமை(13/12/2020) முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதன்படி நாடு முழுவதும் சுமார் 165 சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் கடக்கும் விதமாக முற்றுகையிட்டதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
சண்டிகர்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகள், ஆந்திராவில் 31 சுங்கச்சாவடிகளில் போராட்டங்கள் நடந்தன. தெலுங்கானாவில் உள்ள 18 சுங்கச்சாவடிகளில் விவசாயிகள் சுங்கவரி வசூலை நிறுத்தினர். மேலும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
நொய்டாவிலுள்ள சில்லா எல்லையில் விவசாயிகள் வாகனங்களை நிறுத்தி பயணிகளுக்கு சிறிய அளவிலான பருப்பு மற்றும் அரிசிகளை வழங்கினர்.
பதக்கங்களை திருப்பி வழங்கும் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள்
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவத்தினர் தாங்கள் பெற்ற பதக்கங்களை கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் சேகரிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 5,000 பதக்கங்களை அரசிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் 25,000 பதக்கங்களை சேகரித்து திருப்பி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக இராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
ரன் சிங் கலான் கிராமத்தைச் சேர்ந்த பிரீதிந்தர்பால் சிங் என்பவர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடியிடம் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் விருதினைப் பெற்றார். தற்போது விருதுடன் ரொக்கப்பரிசையும் அரசிடம் திரும்ப அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பஞ்சாபைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ராஷ்டிரபதி பவனை நோக்கி அணிவகுத்து 35 தேசிய விளையாட்டு விருதுகளை திருப்பி அளித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற விஜேந்தர் சிங் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசிய அளவில் பெற்ற பதக்கங்கள் மற்றும் விருதுகளை திருப்பி அளிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பதவி விலகிய துணை ஆய்வாளர்
சண்டிகர் சிறைத்துறை துணை ஆய்வாளரான 56 வயதான லக்மிந்தர் சிங் ஜாகர் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் ரிலையன்ஸ் குழுமத்திற்க்கு எதிராக பெட்ரோல் பங்குகள் மற்றும் வணிக வளாகங்களை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் “ஜியோ-வை புறக்கணிப்போம்” , ” ரிலையன்ஸ் கடைகளை புறக்கணிப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட கைம்பெண்கள்
பஞ்சாப் மாநிலத்தில் தவறான விவசாயக் கொள்கை காரணங்களால் பலர் கடனாளியாகத் தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இறந்த விவசாயிகளின் இணையர்கள் டெல்லியில் உள்ள திக்ரி எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் படும் துயரத்தை முன்னிறுத்தி போராடினர்.
ஒன்றிய அரசு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளம்
தங்கள் உரிமைக்காக போராடும் விவசாயிகளை நாட்டுக்கு எதிரானவர்கள், தீவிரவாதிகள், காலிஸ்தானியர்கள் என குற்றம்சாட்டி பொய் பரப்புரைகளில் ஈடுபடும் ஒன்றிய அரசு உடனடியாக மணிப்பு கேட்கவேண்டும் என சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுடன் முரண்படுபவர்கள் அனைவரையும் பிரிவினைவாதிகள் அல்லது தேசத்துரோகிகள் என ஒன்றிய அரசு குற்றம் சாட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சிரோமணி அகாலி தளம் பாஜக-வுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியாகும். இக்கட்சியிலிருந்து ஒன்றிய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் விவசாய சட்டங்களை எதிர்த்து பதவி விலகினார். விவசாய சட்டங்களை எதிர்த்து சிரோமணி அகாலி தளமும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளிலும் பெருகும் ஆதரவு
அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த வாரம் ஓக்லாந்தில் இருந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை நடைபெற்ற ‘கிசான் ஒற்றுமை பேரணியில்’ நூற்றுக்கணக்கான கொடி அசைக்கும் வாகனங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்றன. மேலும் நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் இருக்கும் இந்திய தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து
மத்திய லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக பிரிட்டிஷ்-சீக்கிய தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தன்மஞ்சீத் சிங் தேசி தலைமையில் 36 பிரிட்டிஷ் எம்.பி.க்கள் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுதுறையிடம் பரிந்துரைக்குமாறு இங்கிலாந்து வெளியுறவு செயலாளருக்கு கடிதம் எழுதினர்.
ஆஸ்திரேலியா
மெல்போர்ன், சிட்னியில் உள்ள குவாக்கர்ஸ், பிரிஸ்பேன் மற்றும் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக போராட்டம் நடைபெற்றது
கனடா
கனடா நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ருடியு ஏற்கனவே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் கேன்பெறா, சாஸ்கடூன், ஹாலிஃபாக்ஸ், டொராண்டோ, வான்கூவர் ஆகிய இடங்களில் இருக்கும் இந்திய தூதரகங்களின் முன்பாக பேரணி மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன.