இயற்கைக்கு அடுத்தபடியாக மனித உழைப்பு தான் இந்த பூமியில் உருவான அனைத்து செல்வங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது. இன்னும் கூர்ந்து நோக்கினால் மனிதனை உருவாக்கியதே மனித உழைப்புதான். இன்று மனிதன் அடைந்துள்ள அனைத்து வளர்ச்சிகளுக்கும் அடிப்படையானது மனித உழைப்பு என்ற மகத்தான உண்மையை இந்த உலகிற்கு முதன்முதலாய் சொன்னவர் மார்க்சிய அறிஞர் பிரெடரிக் எங்கெல்ஸ்.
மனித உருவாக்கத்தில் உழைப்பின் பங்கு என்ன என்பது குறித்து இயற்கையின் இயக்கவியல் என்ற அவரது நூலில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாளை போற்றும் விதமாக அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தை பார்போம்.
கை உழைப்பிற்கான உறுப்பு மட்டுமல்ல உழைப்பின் பயனும் அதுவே
மனிதக் குரங்குகள் அவர்களுடைய வாழ்க்கை முறையில் தட்டையான நிலத்தின் மீது நிலை பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது படிப்படியாக கைகளை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிட்டு நிமிர்ந்து நடக்கத் துவங்கினார்கள். மனிதன் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய மாற்றத்தில் இது நிர்ணயமானது.
முதன்முதலாக மனிதன் தனது கைகளால் கருங்கற்களை கருவிகளாக மற்றும் தருணத்தில் இருந்துதான் மனித வரலாறு துவங்குகிறது. அதற்கு முந்தைய லட்சக்கணக்கான ஆண்டுகள் அர்த்தம் இழக்கப்பட்டது. உழைப்பின் பயனே கைகள். எங்கெல்ஸ் வார்த்தைகளில் சொன்னால் ”கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல உழைப்பின் பயனும் அதுவே”.
உழைப்புக்கு ஏற்றார்போல் தசைகளும் எலும்புகளும் வலுப்பெறுகின்றன. இது உடனடியாக நடந்துவிடவில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகள் தொடர் இயக்கத்தால் நிறைவேறியது. இந்த வளர்ச்சி உடல் முழுவதையும் புதிய நோக்கிற்கு எடுத்துச் சென்றது. பின் உழைப்பு இற்கையின் மீது ஆளுகை கொள்ளத் துவங்குகிறது.
ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதக் குரங்கின் அறிவு விரிவடைந்தது. இயற்கை பொருட்களில் அதுவரை அறியப்படாத புதிய பண்புகளை அறிந்து கொண்டது. அதனூடாக கூடடு செயல்கள் உருவானது. அந்த கூட்டு செயல்கள் மேலும் மேலும் அவர்களை ஒன்று சேர்த்து சமூகமாக மாற்றியது. சமூக உறுப்பினர்கள் நெருங்கி கூடிவர உழைப்பின் வளர்ச்சி அவசியமாகவே உதவியது.
மனித பரிணாமத்தில் மொழியும் மூளையும்
சமூகமாக உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளதால் குரல்வளை மெது மெதுவாக கூடுதலான வளர்ச்சி பெற ஆரம்பித்தது. பின் உச்சரிக்கக் கற்றுக் கொண்டது. முதலில் உழைப்பு அதன் பின்னர் பேச்சு, இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுதலினால் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாக மாறியது.
மூளையின் வளர்ச்சியுடன் கைகோர்த்துக்கொண்டு அதனுடைய உடனடியான கருவிகளான புலன்கள் வளர்ச்சியடைந்தது. மூளையின் வளர்ச்சியைத் தொடர்ந்து எல்லா புலன்களும் செம்மை அடைந்தன. மூளை பணியாற்ற, புலன்கள் மேலும் மேலும் தெளிவு பெறும் பகுத்தறிவு உள்ள திறன் வளர்ச்சியடைந்தது. உழைப்பு, பேச்சு, பகுத்தறிவு இவற்றின் கூடுதலான வளர்ச்சி திரும்பத் திரும்ப வளர்ச்சிக்கு தூண்டுதல் அளித்தது.
மனித பரிணாமத்தில் உணவின் பங்களிப்பு
மனிதக் குரங்கிலிருந்து வேறுபட்டவனாக மனிதன் மாறியவுடன் இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விடவில்லை. அது கூடுதலான வலுமிக்க முன்னேற்றத்தைப் பெற்றது. இது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மக்களிடையே அளவிலும், திசைகளிலும் மாறுபட்டது.
மனிதக் குரங்குகளின் புத்திக்கூர்மையும், சூழ்நிலைகளுக்கு பொருந்திய பகுத்தறிவும், மிருகங்களிடம் இருக்கும் சூறையாடும் பொருளாதாரம் அதாவது எதிர்காலம் குறித்து எந்தவித ஏற்பாடும் இல்லாமல் தற்போதைய தேவைக்காக அனைத்தையும் சூறையாடி உண்ணும் போக்கைக் கைவிடச் செய்தது.
உணவாக உபயோகப்படுத்தப்பட்ட செடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பரிணமித்தது. இது மேலும் மேலும் கூடுதலாக உண்ணப்படுவதற்கு இட்டுச் சென்றது. உணவு மேலும் மேலும் பல வகையாகப் பெருகியது. உடலுக்குள் செல்லும் பொருட்கள், சத்துக்களின் வகைகளும் பெருகியது. இவையே மனிதனாக மாறுவதற்கான ரசாயனமாக ஆதாரங்களாக அமைந்தது.
வேட்டையாடுதல் மீன்பிடித்தல் என்று, தாவர உணவை மட்டும் உட்கொள்வது என்பது மாறி இறைச்சியையும் உபயோகிக்கிற நிலை ஏற்பட்டது. மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் போக்கில் இது மற்றொரு முக்கியமான படிநிலை. இறைச்சி உணவு ஜீரணத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும், இரசாயன மாற்றத்திற்கு பெரும் பங்காற்றியது
பரிணாமத்தின் உச்ச வளர்ச்சி
இறைச்சி உணவு நிர்ணயமான முக்கியத்துவம் உடைய இரண்டு புதிய முன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது.
- நெருப்பை பயன்படுத்துதல்,
- மிருகங்களை அடக்குதல்.
படிப்பபடியாக இது பெரிய மாற்றத்தை நோக்கி நகர்த்தியது. மனிதர்கள் நிலையான இடத்தில் தங்கி விவசாயத்தை நோக்கி நகர்ந்தனர். அதைத்தொடர்ந்து நூற்பு, நெசவு, உலோக வேலைகள், மண்பாண்டங்கள் செய்தல், கடற்பயணம், வாணிபம், தொழில் போன்றவை உருவானது. இவற்றுடன் இறுதியாக கலைகளும் விஞ்ஞானமும் தோன்றின.
குலங்கள், தேசங்கள், அரசுகள் என வளர்ந்தன. சட்டமும் அரசியலும் உருவானது. அவற்றோடு மனிதனுடைய உள்ளத்தில் மனித வாழ்வில் அந்த விநோதமான பிரமிப்பான மதம் எழுந்தது.
மனித பரிணாமத்தில் கருத்து முதல்வாதத்தின் தோற்றம்
சமுதாய வளர்ச்சியில் மிக ஆரம்ப கட்டத்திலேயே, உழைப்புக்கு திட்டம் வகுத்த தன்னுடைய கைகளை தவிர்த்து மற்றவரின் கைகளால் திட்டமிடப்பட்ட உழைப்பை நிறைவேற்றிக்கொள்ள சாத்தியமாக்கியது. அந்த போக்கு மேலும் மேலும் கூடுதலாகவே நிகழ்ந்தது. தன்னுடைய சிறப்பான வளர்ச்சியின் பெருமை முழுவதும் மூளைக்கு வழங்கப்பட்டது.
தங்களுடைய தேவைகள் கருத்துக்களிலிருந்து எழுகின்றன என்று தங்களுடைய செயல்களை விளக்க மனிதர்கள் வழக்கப்படுத்திக் கொண்டனர். எனவே காலப்போக்கில் மனிதர்களின் மனதில் மேலாதிக்கமாக கருத்து முதல்வாத உலகக் கண்ணோட்டம் எழுந்தது.
ஒரு மிருகம் தனது இயற்கையையும் சுற்றுச்சூழலையும் எந்தவித திட்டமும் இன்றி பயன்படுத்துகிறது. தனது இருத்தலால் மட்டுமே இதில் மாற்றங்களை உண்டாக்குகிறது. ஆனால் மனிதன் தனது மாற்றங்களால் தனது குறிக்கோள்களுக்கு இயற்கையை ஊழியம் புரியச் செய்கின்றான். அதற்கு எஜமானன் ஆகிறான். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள சாராம்சமான வித்தியாசம் இதுவே. இந்த வித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பு மட்டுமே.