தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கியதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் பலரால் உருவாக்கபட்டு பரப்பப்படுகிறது.
‘இது கடவுளுக்கு செய்யும் துரோகம், கடவுளை மந்திரம் சொல்லி வெளியே எடுத்துச் சென்று விடுவோம்’ என்பது போன்ற பல அவற்றில் அடக்கம்.
நம்மில் பலருக்கு ஆகமம் குறித்த முழுமையான பல விடையங்கள் தெரியாததிலிருந்தே இந்த குழப்பங்கள் எற்படுத்தப்படுகிறது.
ஆகமங்கள்
ஆகமம் என்பது என்ன? அது எப்போது உருவாகியது? என்பதிலிருந்து தொடங்குவதே இங்கு சரியானதாக இருக்கும்.
“தமிழர்களின் வழிபாட்டில் இந்த ஆகமங்கள் ஆதியில் இருந்து வந்தது இல்லை. கி.பி ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்க காலகட்டத்தில் சைவ வைணவ எழுச்சி மற்றும் பேரரசுகளின் ஆதரவில் பெருங்கோவில்கள் உருவாகிய போது உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆகமங்கள் என்றும், இது முதலில் தமிழில்தான் இருந்தது என்றும், பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் உருவ வழிபாட்டிற்கு மாறி, ஆகமங்களை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்து கோவில் வழிபாட்டு தலைமைகளை கைப்பற்றிக் கொண்டனர்.” என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.
பக்தி இயக்க காலக்கட்டத்திற்கு முன் உருவான சைவ இலக்கியமான திருமந்திரம் ஆகமம் பற்றி அதிகமாகப் பேசுகிறது. திருமந்திரத்தில்தான் வைதீக எதிர்ப்பு அப்பரின் பாடலைக் காட்டிலும் அதிகம். பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்ய எதிர்ப்பினையும் தெரிவித்திருக்கிறது.
” பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை அர்ச்சிக்கில்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமா மென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே”.
என்ற திருமூலர் வாக்கு இதற்கு சாட்சியாக இருக்கிறது.
ஆகமங்கள் எனப்படுவது கோவில் கட்டுவது, அங்கு அமைக்கப்படும் சிலைகளின் அமைப்பு முறை, கோவில் பூசை மற்றும் திருவிழாக்கள் நடத்துவது மற்றும் மந்திரங்கள் அடங்கிய தொகுப்பாகும்.
சைவ ஆகமங்கள் 28. அவற்றிலிருந்து பிறந்த உபாகமங்கள் 207. மேலும் எல்லா ஆகமங்களும் அச்சிட்டு வெளியாகவும் இல்லை; ஆட்சியிலும் இல்லை. எனினும் ஆகமங்கள் 28 என்ற போதிலும் தமிழ்நாட்டுக் கோயில்களில் நடைமுறைகளில் இன்று இருப்பவை மிகச் சில. அவை; காமிகம், காரணம், மகுடம், வாதுளம், சுப்ர பேதம் ஆகும்.
இவற்றுள்ளும் காமிகம், காரணம் இரண்டுமே மிகுதியான பயன்பாட்டில் உள்ளன. வைணவருக்கு உரிய ஆகமங்கள் வைகானசம் மற்றும் பாஞ்சராத்திரம் ஆகும்.
ஆகமம் தமிழருடையது
“ஆகம முறை தமிழர் முறை. அம்முறைப்படி தமிழில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்கு பூசை என்ற சொல்லே சான்று” என்கிறார் பெருஞ்சித்திரனார்.
“தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”
என்பது திருநாவுக்கரசர் வாக்கு.
அப்பர் மட்டுமல்ல திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய பதிகங்களிலும் மலர் வழிபாடும்,உருவ வழிபாடும் பேசப்பட்டுள்ளது. பிற்காலத்தில் தோன்றிய சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரிநாதர் முதலியோரும் பூவினால் செய்யும் பூசையைக் குறிப்பிடுகிறார்கள்.
அதாவது ஆகம வழிபாட்டில் உருவ வணக்கம் (அது குறியீடாகவோ, படிமமாகவோ எப்படியும் இருக்கலாம்) கட்டாயமானது. ஆனால் வேத சடங்குகளில் உருவத்திற்கு இடமில்லை. எல்லா கடவுளுக்கும் நெருப்புதான் இடைத்தரகர். ஆகம முறைகளில் நெருப்புக்கு அதாவது தீய்க்கு வேலையில்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருட்களை படையலிட்டு (காட்டிவிட்டு) எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் வேதமானது படைக்கும் பொருட்களை வேள்வித் தீயில் இட வேண்டும் எனக் கூறுகிறது. வேத பார்ப்பனர் என்னும் ஸ்மார்த்தர்கள் இன்றுவரை உருவ வழிபாட்டை ஏற்காதவர்கள்தான். ஆனால் ஆமகமங்களோ சிலைகளை எவ்வாறு உருவாக்க வேண்டும்? எங்கு வைக்க வேண்டும்? என்பதுவரை கூறுகிறது.
மேலும் ஆரிய வேத நெறிப்படி வருணங்கள் நான்கு. நான்காவதான சூத்திர வருணத்தவர் வேதம், வேதாந்தம் பயிலக்கூடாது. இதனால் வருண முறை உருவானது. சன்னியாசம் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது. சன்னியாசத்தின் பின்னரே முக்தி கிட்டும். ஆகப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வீடு பேறு பெறும் உரிமை உண்டு.
ஆனால் ஆகமக் கொள்கை இதற்கு மாறானது. சண்டாளன் உட்பட யாரும் வழிபடலாம். வழிபாட்டின் வழியாகவே முக்தி பெற முடியும். இதற்கு சான்றாக “சூத்திரனுக்கு சம்ஸ்காரங்கள் உரியவையல்ல; எனவே வேதம் படிக்கவும் கேட்கவும் கூடாது”, என்கிறது பாதராயரின் வேதாந்த சூத்திரம். ஆகம விதிப்படி சன்னியாசியாக வேண்டியதில்லை. பக்தி அனைவருக்குமே பொதுவானது.
அதேபோல ஆகமங்களின் படி ‘தீட்சை’ பெரும் அனைவரும் இறைவனுக்கு பூசை செய்யலாம். எந்த சாதியைச் சேர்ந்தவரும் இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்து பக்தியின் மூலம் முக்தி அடையலாம் என்று கண்ணப்ப நாயனார் கதை மூலம் உறுதி பெருகிறது.
மிக முக்கியமாக ‘ஆகம விதிப்படி கோவிலுக்குள் செல்வதற்கும் வழிபடுவதற்கும் சாதி,வர்ணம்,வகுப்பு இவற்றைப்பற்றி கவனிக்க வேண்டியதில்லை. கடவுள் சந்நிதானத்தில் சாதி இந்துக்களும், சாதி இந்துக்கள் அல்லாதவர்களும் ஒன்றுதான். இதுதான் ஆகமங்களின் முடிந்த முடிபு’, என கூறுவார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.
மேற்கூறிய வேறுபாடுகளிலிருந்து
“ஆகம மரபானது ஆரியருடைய தன்று; அது திராவிட பாரம்பரியம் சார்ந்ததே,வேதமும் ஆகமமும் எதிர் எதிரானது”, என்பது விளங்கும். ஆதிசங்கரர் போன்ற பார்ப்பனர்கள் ஆகமங்களை மிக இழிவாகவே மதித்துள்ளனர்.
ஆகமவழி கோவில்கள் தெனிந்தியாவில் மட்டுமே உள்ளன. ஆகம வழி பூசை என்பதும் தெனிந்தியாவில்தான் உள்ளது. மேலும் பி.டி.சீனிவாச ஐயங்கார் ஸ்ருமிதிகளின் உற்பத்தி வேதமாகும், ஆகமங்களின் உற்பத்தி திராவிடமாகும் என்கிறார்.
பிற்காலங்களில்தான் கோவில்களில் பார்ப்பனர்களின் அதிகாரம் உச்சத்தை அடைந்த பின்னரே வேதம் ஆகமம் என அனைத்தையும் கலந்துவிட்டு,ஒட்டுமொத்தமாக வழிபாட்டு தலைமையை பார்ப்பனர்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
ஆகமங்களை அடிப்படையாகக் கொண்ட சைவத் திருமுறைகள் தமிழ் மொழியை சிவனோடு நெருக்கமாகத் தொடர்புப்படுத்துகின்றன.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” (திருமந்திரம்-81)
என்று திருமூலர் பாடுகிறார். ஆனால் வேத பார்ப்பனர்கள் தமிழை நீசபாசை என்கிறார்கள்.
ஆகமங்களில் இடைச் செருகல்கள்
ஆகம ஏட்டுச் சுவடிகள் யாவும் பல காலத்துக்கு முன்னரே உருவாகிவிட்டது. சுவடிகள் சிதிலமடிகிற போது அதனை பார்த்து எழுதி தொடர்சியாக அடுத்தடுத்து வந்துள்ளது. இவற்றைப் பெரும்பாலும் சிவாச்சாரியர்களே வைத்திருந்தார்கள். ஒருவர் அதைப் பார்த்து மற்றொன்றை எழுதி வைத்துக் கொண்டபோது, தன் கருத்துக்களை புதிதாக எழுதிச் சேர்த்துக் கொண்டனர். ஒரே ஆகமங்கள் வேறு வேறு பிரதிகளில் வேறு வேறு கருத்துக்களை கொண்டிருப்பதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. மேலும் ஆகமங்கள் உருவான காலத்தில் தமிழ் நிலத்தில் நால்வகை வருணக் கோட்பாடு நிலை பெற்றிருக்கவில்லை. ஆனால் சிலவற்றை சனாதான தன்மையுடன் பார்ப்பனர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்நாட்டின் கிராமங்களில் உள்ள ‘மாரியம்மன்’ எனும் தாய் தெய்வம் நாட்டர் வழிபாட்டு தெய்வம். இத்தெய்வம் கிராமங்களின் காவல் தெய்வமாகும். ஊரின் வெளியெல்லையில்தான் இதற்கு கோவில் உள்ளது. எந்த சிவன் கோவிலிலும் மாரியம்மன் சிலை வைப்பதில்லை.
ஆனால் சிவ வழிபாட்டை சொல்லுகின்ற விரிவான ஒரு நூலாகிய காரணாகமத்தில் ஒரு பிரதியில் “மாரிப் பிரதிட்டா விதி” என்ற ஒரு அத்தியாயம் உள்ளது. மாரிப் பிரதிட்டை சிவாகமத்தில் சொல்ல வேண்டிய பொருளல்ல. ஆயினும் பிற்காலத்தில் ஒரு சிவாச்சாரியார் தம் கைச்சுவடியில் இதை எழுதி வைத்துக்கொள்ள இதுவும் காரணாகமத்தில் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது. இப்படி பல இடைசெருகல்கள் இந்த ஆகமங்களில் உள்ளது.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது
தமிழ்நாட்டு கோயில்களில் அர்ச்சகர் நியமன முறை பற்றி ஆராய்வதற்காக வல்லுநர் குழு ஒன்றை தமிழக அரசு 24.9.1979 தேதியிட்ட அரசாணை எண் 1573 வழியாக அமைத்தது. அக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான எஸ். மகாராஜன் ஆவார். அக்குழுவின் உறுப்பினர்களாக திரு.எஸ்.மகாராஜன்,என்.ரெங்கராஜபட்டர்,வி. விசுவநாத சிவாச்சாரியர் ,கோ.மு.முத்துசுவாமி பிள்ளை,டி.எஸ். சாம்பமூர்த்தி சிவாச்சாரியார்,அ.வெ.ந. கிருஷ்ணசாமி ரெட்டியார்,மு. அருணாசலம்,எஸ். சுந்தரராஜ பட்டாச்சாரியர்,சி. சுவாமிநாதகுருக்கள்,யு.சுப்ரமணியன் ,இரா.அர்ஜூனன் உள்ளிடவர்கள் இருந்தார்கள்.இந்த வல்லுநர் குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கை 27.8.1982 தேதியிட்ட அரசாணை எண் 1001 வழியாக அரசிதழில் வெளியானது. பல ஆகம விதிமுறை மீறல்களை அது தெளிவாக காட்டியுள்ளது.
சிறப்பான பல சிவாலயங்களில் சிவாச்சாரியர் அல்லாத சுமார்த்த பிராமணர் பூசை நடைபெறுகிறது. உதாரணம்: சிதம்பரம், இராமேசுவரம், திருவிழிமிழலை, கன்னியாகுமரி, திருவானைக்காவல், திருச்செந்தூர். ஆதலால் சிவாச்சாரியர் மட்டுமே பூசை செய்யவேண்டும் என்ற விதிக்கு மாறான நிலை ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறது.
இதற்கு முன்னரே பல சாதியைச் சேர்ந்தவர்கள் பூசை செய்த கோயில்களில் இக்காலத்தில் சிவாச்சாரியர் ஆகம பூசை நடத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் முதலியவை.
ஆகம விதிமீறல்கள்
பூசகர் ஊதியம் பெறுவது கூடாது. அதனால் தேவலகத்துவதோஷம் வரும். ஆலயத்தின் புனிதம் கெடும் என்று ஆகமங்கள் விதித்திருக்க்கிறது.(காரணாகமம், பூர்வ பாவம், புண்ணியாபிஷேக விதிப்படலம், பக்கம் 309)
மனைவியில்லாதவர் (அபத்திகன்) , பிரம்மச்சாரி ஆகியோர் நைமித்திகம் முதலான பூசை செய்யக்கூடாது என்பது ஆகமவிதி. ஆனால் இவர்கள் இன்று பல கோயில்களில் நித்திய, நைமித்திக பூசை ஆகிய இரண்டும் செய்கிறார்கள். ஆகம விதிக்கு முரணான உடல் குறைபாடு உடையவர்களும் பூசை செய்கிறார்கள்.
ஸ்மார்த்தப் பிராமணர் பூசை செய்யும்போது அவர்கள் வைதீகப் பூசை செய்கிறார்கள். அதாவது தாங்கள் போதாயன சூத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம் ஆகியவற்றின்படி பூசை செய்து வருவதாகச் சொல்கிறார்கள். அந்த கோவில்களில் பிரதிட்டை முதலான கிரியைகள் ஆகமப்படி நடந்திருக்கும் போது, வைதீக சூத்திரங்களின்படி பூசை செய்வது ஆகம விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. இங்கெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட தவறு பழக்கவழக்கமாக மாறியிருக்கிறது.
திருமாலுக்கு பட்டாச்சாரியர் பூசை செய்வதே முறை. ஆனால் காஞ்சி ஏகாம்பரேச்வரர் கோயிலின் உட்பிராகாரத்தில் அமைந்துள்ள, மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றாகிய நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதியில் சிவாச்சாரியரே பூசை செய்கின்றார்.
அதே போல நீதி அரசர் ஏ.கே.ராஜன் தலைமயிலான குழுவும் ஆலயங்களில் ஆகமவிதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.
அவற்றில் முக்கியமானது இராமானுஜர் மக்களுக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திவ்யஷேத்திரமான திருகோஷ்டியூர் பெருமாள் கோயிலினுள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கு வைணவ அர்ச்சகர்களே பூசை செய்து வந்தார்கள். சமீப காலமாகத்தான் சைவ அர்ச்சகர்கள் பூசை செய்கிறார்கள்.
வைணவ திவ்ய ஷேத்திரங்கள் 108-ல் ஒன்றான ‘கள்ளர்’ சந்நிதி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலிலேயே உள்ளது. அதற்குத் தொன்றுதொட்டு இன்றுவரை சைவ அர்ச்சர்கள்தான் பூசை செய்கிறார்கள். எனவே ஆங்காங்கே வைணவக் கோயில்களில் சைவர்களும், சைவக் கோயில்களில் வைணவர்களும் காலங் காலமாகப் பூசை செய்து வருகிறார்கள்.
கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் நான்கு பேருக்கு மட்டுமே அனைத்துப் பூசை முறைகளும் தெரியும். மற்ற 37 அர்ச்சகர்களுக்கும் அஷ்டோத்திரம் போன்ற குறிப்பான சில மந்திரங்களும், நாமாவளிகளும் மட்டுமே தெரியும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 116 அர்ச்சகர்களுள் ஆகமம் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத்தொளிப் பயிற்சி பெற்றவர்கள் 22 நபர்கள். மற்ற 66 நபர்கள் ஆகமத்தை தந்தை வழி பயின்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தம் தந்தையார் பூசை செய்கின்றபோது அவருடன் இருந்து, அவர் செய்கின்ற பூசையைப் பார்த்து அறிந்து கொண்டவர்கள். இதைத்தவிர, இவர்கள் முறைப்படி ஆகம அறிவைப் (அனுஷ்டானம்) பெற்றுள்ளார்கள் என்று முடிவு செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.
இது மட்டும் இல்லாமல் சிவ ஆமங்களின்படி கட்டப்பட்ட பல கோவில்களில் வேறு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக தில்லை நடராஜர் கோவிலில் வைக்கபட்ட கோவிந்தராஜர் சிலை ஒரு முக்கியமான ஆகம மீறல் என்கிறார் அறிஞர் சக்திவேல் முருகனார்.மேலும் இங்கு பல நாட்டார் தெய்வங்களுக்கு வேதம் ஓதி பார்ப்பனர்கள் பூசை செய்வதும் கூட ஆகமங்களுக்கு எதிரானது தான்.
மேலும் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதா ஸ்மார்த்த பார்ப்பனரான சங்கராச்சாரியார் குடமுழுக்குகளுக்கு நாள் குறிப்பது, முன்நின்று நடத்துவது எல்லாமும் ஆகம மீறல்கள்தான். அப்படி ஆகமம் என்பது காலங்காலமாகவே, அதற்கு எதிரான வைதீக திணிப்பிருக்கு உள்ளாகியே வந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற நியமனமானது, ஒருவகையில் ஆகம மீட்பே ஆகும்.
துணை நின்றவை:
1.சக்திவேல் முருகனார் உரைகள்,
2.சிகரம் செந்தில்நாதன் கட்டுரைகள்
3.பேராசிரியர் நெடுஞ்செழியன் கட்டுரைகள்
4.பேராசிரியர் தொ.ப கட்டுரைகள்.
– எரிசினக் கொற்றவை