அறிஞர் அண்ணா

அண்ணா கேட்டது திராவிட நாடா? தமிழ்நாடா?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு 2 – Madras Radicals   

அண்ணா திராவிட நாடு கேட்டார், திராவிட நாடு கேட்ட அண்ணா தட்சணப் பிரதேசத்தை ஏன் எதிர்த்தார்? அண்ணாவின் திராவிட நாடு என்பது நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. திராவிட நாடு என்று அண்ணா வரையறுத்தது நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தபோதும் தட்சணப் பிரதேசத்தை அண்ணா ஏன் எதிர்த்தார் என்ற கேள்வியை சிலர் எழுப்புவார்கள். ராஜாஜியும் காங்கிரஸ்காரர்களுமே அதைச் சொன்னார்கள். அதை அண்ணா உடனடியாக மறுத்தார்.

”நாங்கள் கேட்கும் திராவிட நாடு வீட்டில் தாய்மார்கள் சாப்பிட கொடுக்கும் இட்லி போன்றது. அவர்கள் சொல்லும் தட்சணப் பிரதேசம் குழந்தைகள் விளையாடும் போது மண்ணை அள்ளி நீரில் பிசைந்து இட்லி என்று சொல்வார்களே, அந்த மண் இட்லி போன்றது”

என்று கூறி மறுத்தார் அண்ணா. தட்சணப் பிரதேசத்தை எதிர்த்ததில் முக்கியக் காரணம் அண்ணா மொழிவழி தேசியத்தையும் கொள்கையாகக் கொண்டவர்.

அண்ணா மட்டுமல்ல திமுகவின் கொள்கையாகவும் மொழிவழி தேசிய இன அரசை நிறுவுவது என்பதாகவே இருந்தது. இன வழி இணைந்த திராவிடக் கூட்டாட்சி என்பதை அவர் முன்வைத்தார். 

1945-ம் ஆண்டு திராவிடர் கழக முதல் மாநில மாநாட்டில் அண்ணா, இந்தியா ஒரு நாடு அல்ல என்பதையும் இங்குள்ள பல்வேறு தேசிய இன நிலங்களைப் பற்றியும் அவற்றின் தன்னுரிமை பற்றியும், அவர்களின் தாயக வாரியாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு ஆதாரங்களுடன் ஆற்றிய பேருரை தமிழ்த்தேசிய இன வரலாற்று சுவடுகளில் என்றும் நிலைத்திருக்கும் என்று ’இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த்தேசியமும்’ என்ற புத்தகத்தில் கு.ச.ஆனந்தன் குறிப்பிட்டிருப்பார்

தமிழர் மறுமலர்ச்சி பற்றி அண்ணா

1948-ம் ஆண்டு தமிழர் மறுமலர்ச்சி கட்டுரையை எழுதிய அண்ணா அவர்கள், தமிழிசையை எதிர்ப்பவர்களை நோக்கி, “தமிழிசை பற்றி பேசும்பொழுது சொத்தை காரணங்களை அறிஞர்கள் கூறுகின்றனர். அது நமக்குப் பிடிக்கவில்லை. அறிவு படைத்த யாருக்கும் பிடிக்காது. தமிழிசை என்று ஆரம்பிக்கும் தமிழன், வேறு எங்குமே தமிழ் ஆட்சிதான் தேவை என்றல்லவா கூறத் தொடங்குவான். அது நமக்கே ஆபத்தாக முடியும். ஆகவே முளையிலேயே கிள்ளி தமிழ் உணர்ச்சியை தலைதூக்க ஒட்டாது அடிப்போம் என்பதே ஆரியரின் நோக்கம். தமிழகத்தின் தமிழுணர்ச்சி, தமிழர் என்ற உணர்ச்சியையும் தமிழ்நாடு என்ற உணர்ச்சியையும் வளர்த்து விடும் என்ற அச்சம் ஆரியரைப் பிடித்துக் கொண்டது” என்று எழுதினார்.

தமிழிசையும், தமிழ் உணர்வும் தமிழ்நாட்டினை தனிநாடு கேட்கச் செல்லும் என்று அண்ணா எழுதுகிறார்.

மொழிவழி பிரிந்த இனவழி இணைந்த திராவிடக் குடியரசு கூட்டாட்சி

1955-ம் ஆண்டு திமுக உருவாகிய நாளான செப்டம்பர் 17 முதல் 23 வரை திராவிட நாடு பிரிவினை வாரம் கடைபிடிக்க, கற்றவர்களுக்கு அழைப்பு விடுத்த அறிக்கையில் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன், மொழிவழி பிரிந்து இனவழி இணைந்த திராவிடக் குடியரசு கூட்டாட்சியைத் தான் தாம் அடையப்போவதாகக் கூறினார்.

“பிரிந்து போகும் தனி உரிமையோடு கூடிய தமிழகம் – ஆந்திரம் – கர்நாடகம் (துளுவும் உள்பட) – கேரளம் ஆகிய பகுதிகள் மொழிவழியும், தேவையான மாநில உரிமைகள் வழியும் தனித்து பிரிந்து வெளிநாட்டு – வடநாட்டு சுரண்டல் தடுப்பு, வடநாட்டு அரசியல் ஆதிக்கத் தடுப்பு, வடநாட்டு இந்தி ஏகாதிபத்திய தடுப்பு, வாணிபம், போக்குவரத்து பற்றுக் கோடுகள், தபால் – தந்தி, உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை, நாணயச் செலாவணி இன்னபிற வழிகளில் குறைந்த அளவு திட்டத்தில் ஒன்றுபட்ட சுதந்திர சமதர்ம திராவிட குடியரசுக் கூட்டாட்சியை அடைய நாம் அனைவரும் பாடுபடுவோமாக” என்று பேசினார்.

மொழிவழி மாநில சீரமைப்புக் குழுவின் பரிந்துரை மீதான் கருத்து

மொழிவழி தேசியத்திற்கு திமுக எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதைத் தெரிந்துகொள்ள மொழிவழி மாநில சீரமைப்புக் குழுவின் பரிந்துரை மீது திமுக-வின் கருத்து மிக முக்கியமானதாகும். பசல் அலி குழுவின் பரிந்துரையின் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் என்.வி.நடராஜனும் ஏ.வி.பி.ஆசைத்தம்பியும் கீழ்காணும் இந்த கருத்தை பதிவு செய்தார்கள். 

வெள்ளைக்காரர்களின் ஆட்சியின்கீழ் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுக் கிடந்ததால் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று எல்லோராலும் விரும்பப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். மேலும், ”இந்தியத் துணைக் கண்டம் என்பது வலிந்து திணிக்கப்பட்ட பல நிர்வாகப் பகுதிகளின் தொகுப்பாகத் தான் இருக்கிறது. இதனை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஆயுதமாக இருந்தது அறிவல்ல அதிகாரமே” என்று குற்றம் சாட்டினர். ”மொழிவழிப் பிரிவினை என்பது பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களது தாயகத்தை பெறவும், அறிவால் ஆற்றலால் அதை சீராக்கி செம்மைப்படுத்தவும் விரும்பும் இதய எழுச்சியாகும்” என்று குறிப்பிட்டார்கள். இதை வெறும் நிர்வாகப் பிரிவுகள் மூலம் தர முடியாது என்றும், அப்படிப் பிரிப்பது தங்களது தேசிய உணர்வுக்கு அடிக்கப்படும் சாவுமணி என்றும், மொழிவழிப் பிரிவினை தங்கள் நீண்ட நெடிய பயணத்தில் முதல் படி என்றும், வெளிப்படையாகவே அதை தங்கள் வெற்றியாகவே திமுக-வினர் கொண்டாடினார்கள். 

திராவிட நாடு குறித்த குற்றச்சாட்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் அளித்த பதில்

திராவிட நாடு கோரிக்கையை மிகத்தீவிரமாக அண்ணாவும், திராவிட முன்னேற்றக் கழகமும் வைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இந்திய தேசியவாதிகள் திராவிட நாடு என்பது தெலுங்கர்களையும், கன்னடர்களையும், மலையாளிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தமிழர்கள் ஆட்சி செய்வதற்காக அதிகாரம் செலுத்துவதற்காக நடத்தப்படும் என்று குற்றச்சாட்டுக்கள் வைத்தார்கள். இதற்கான பதிலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கர்நாடக மாநில மாநாட்டிற்கு தலைமை தாங்கிய சத்தியவாணி முத்து அம்மையார் தெள்ளத் தெளிவாக கூறினார்.

”ஒன்றுபட்ட இந்தியாவில் தென்னகம் என்றுமே வேறுபட்டுதான் இருந்திருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் தென்னகம் நான்கு வெவ்வேறு மொழிகளைக் கொண்டிருந்தாலும், கலாச்சார ஒற்றுமையாலும், இன ஒற்றுமையாலும், பண்பாட்டின் ஒற்றுமையாலும் இணைந்தே வாழ்ந்து வந்திருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி சுதந்திரம் வேண்டும் என்று வாதாடும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நான்கு மாநிலங்களையும் ஒரு மொழியின் கீழ், ஒரு ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை. அது கழகத்தின் கொள்கையுமல்ல; விடுதலை அடிப்படையில் எழுந்த தி.மு.கழகம் அதனை நிச்சயம் விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் கூறுகிற திராவிடக் கூட்டாட்சி, ஒரே அரசின் கீழ் கட்டிப்போடும் அடிமைப் பிணைப்பு அல்ல. தமிழ், ஆந்திரம், கன்னடம், கேரளம் – இந்த நான்கு நாடுகளும் மொழிவழி பிரிந்து, இனவழி ஒன்றுபட வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்ததுதான் திராவிட நாடு; ஆந்திரம் தமிழகத்தை சுரண்டி வாழாது; கேரளம் கன்னடத்தை அடக்கியாளாது; தமிழகம் கன்னடத்தில் ஆதிக்க பலத்தை நிலை நாட்டாது.” 

என்று பேசினார். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட நாடு என்பது மொழிவழி பிரிந்த தேசிய அரசுகள், இனவழி இணைந்த கூட்டாட்சி என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

வினோபா கேட்ட கேள்வி

1956-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி திராவிட நாடு இதழில் காந்தியின் சீடரும், ஆன்மீகவாதியுமான வினோபா பாவே அண்ணாவை சந்தித்து உரையாடினார். திராவிட நாடு என்றால் தனிநாடா என்று கேட்ட வினோபாவின் கேள்விக்கு அண்ணா தனது பதிலாக, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அரசு அமைந்த பிறகு உருவாகும் கூட்டாட்சி திராவிட நாடு” என்று கூறினார். 

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் ”நான் திராவிட நாட்டில் இருந்து வருகிறேன்” என்ற வரலாற்று சிறப்பு மிக்க உரிமை முழக்கத்தில், ”எங்களது  திராவிட கலாச்சாரம் வேறு” என்று பேசுகிற அண்ணா திராவிடப் பிரிவினையும், சுயநிர்ணய உரிமையும் கேட்கிறபோதே, ”நான் ஒரு தேசிய கொள்கைக்காக வாதாடுகிறேன்” என்று அழுத்தமாகவே பேசினார்.

தமிழ்நாடு பெயர் சூட்டல் விவாதம்

1963-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க அண்ணா கூறிய பொழுது, சென்னையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகிற மக்கள் இருக்கிறார்கள் என்று குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினரைப் பார்த்து, இவையெல்லாம் ஏற்கனவே தவிடுபொடி ஆக்கப்பட்ட விவாதம் என்று பதில் அளித்தார் அண்ணா. தமிழ்நாடு என்பது இன்றைக்கு நாங்கள் கேட்பதில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் உள்ளது என்று பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார் அண்ணா. அந்த பாடல்களையும் உதாரணத்திற்கு சொல்கிறார். 

பரிபாடலில் ”தண்டமிழ் வேலி தமிழ் நாட்டு அகமெல்லாம்”, பதிற்றுப்பத்தில் ”இமில் கடல் வெளி தமிழகம் என்றும்”, சிலப்பதிகாரத்தில் ”தென் தமிழ் நன்னாடு” என்று வர்ணித்துள்ளதையும் எடுத்துக்காட்டி தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று கேட்டார். 

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சூட்டக் கோரி நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், சட்டமன்றத்தில் ஆட்சி கிடைத்ததும் தமிழ்நாடு எனும் பெயரினை சூட்டினார். அதைத் தனது வெற்றியாக மட்டுமல்லாமல் தமிழின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி, தமிழ் வராலாற்றின் வெற்றி என்றும் கூறினார்.

பிரிவினைவாதத் தடைச் சட்டம் வந்தபிறகு பிரிவினை கோரிக்கையை கொள்கையளவில் கைவிட்டதாக சொன்னபின்னும் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது அடிப்படையில் மொழிவழி தேசிய எழுச்சியாகத் தான் இருந்தது.

திராவிட இயக்கத்தினருக்கு மொழிவழி தேசியம் குறித்த புரிதல் இல்லாமல் திராவிட நாடு தமிழ்நாடு என்று மாற்றி மாற்றி குழப்பிக்கொண்டார்கள் என்று ஒரு மாயையை உருவாக்கி, அதுவே விமர்சனமாகவும் வைக்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை கூறித்தான் ஆகவேண்டும்.

உதவிய நூல்கள்:
1, திமுக வரலாறு – க.திருநாவுக்கரசு
2. ஆட்சி மன்றங்களில் பேரறிஞர் அண்ணாவின் விவாத மென்மை – தமிழ் நிலையம்
3. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும் – கு.ச.ஆனந்தன்
4. திராவிடம் தமிழ் தேசியம் ஒரு கலந்துரையாடல் – தமிழவன்
5. பேரறிஞர் அணணவின் கட்டுரைகள் பூம்புகார் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *