ஆர்.எஸ்.எஸ்

PM CARES நிதியை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துகிறதா?

பல்வேறு நடைமுறை சிக்கல்களில் உழன்றுகொண்டிருந்த நம்மை கொரோனா ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டது. வாழ்க்கை குறித்தான அனைத்து தர்க்கங்களையும் புறம்தள்ளிவிட்டு உயிருடன் இருத்தல் மட்டுமே பெரும்பேறு என்ற மனநிலைக்கு நம்மைத் தள்ளியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மனநிலையில் இருந்து இன்னும் நம்மால் முழுமையாக வெளிவர முடியவில்லை. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து இதுபோன்று முடங்கி கிடந்ததற்கான வாய்ப்பில்லை. ஊரடங்கு காலகட்டத்தில் நாம் ஏதோ ஒரு இடத்தில் நமது உடமைகளுடன் நம்மை தற்காத்துக் கொண்டிருந்தோம். அந்த நாட்கள் மிக கனமானது. பெரும்பாலான நேரம் செய்தி ஊடகத்தில் நம்மை புதைத்துக் கொண்ட காலம். கொரோனா குறித்தான செய்திகளும் அதிலிருந்து நாம் எப்படி தப்பிப்போம் என்ற பரபரப்பும் நம் அனைவருக்குள்ளும் இருந்தது. 

இந்தியாவில் 2020 மார்ச் 28-ம் தேதி இந்தியப் பிரதமர் மோடி ஊரடங்கைப் பிறப்பித்தார். பேருந்து, ரயில், கார், பைக் போன்ற எந்த நடமாட்டமும் இல்லாத வாழ்வின் புது பரிணாமத்திற்குள் இந்தியா  சென்றது. ஊடகம் சமூக வளைதளம் போன்ற விர்ச்சுவல் சமூகத்துடன் ஐக்கியமாகிய அந்த நாட்களில் ஊடகத்தில் அரசு என்ன செய்திகளை வெளியிடும் என்று பல எதிர்பார்ப்பு இருந்தது. நாட்டின் பிரதமர் என்ன சொல்லப்போகிறார், மாநில முதல்வர்கள் நம்மைக் காக்க என்ன திட்டம் வைத்துள்ளனர் போன்ற பல்வேறு தகவல்களுக்காக எதிர்பாத்திருந்த காலம். 

பிரதமர் வேண்டுகோள் விடுத்த PM CARES நிதி

மார்ச் 28-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டார். அதில் இதுபோன்ற அவசர காலத்திற்கு உதவி செய்ய மக்கள் மனமுவந்து தாராளமாக அரசுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு ”பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி” Prime Minister’s Citizen Assistance and Relief Fund in Emergency Situations என்று சிறப்பான பெயரும் சூட்டப்பட்டிருந்தது. இருந்தும் ஊடகங்கள் செல்லமாக PM Cares Fund என்று அழைத்தனர். 

எந்த விவரமும் தரவில்லை

இந்த PM Cares நிதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு தனிநபர்கள், நிறுவனங்கள் என நன்கொடை கொடுத்து வருகின்றனர். அந்த நன்கொடை எங்கிருந்து வந்தது? யார் யார் தந்தார்கள்? எவ்வளவு கொடுத்தார்கள்? எப்படி செலவு செய்யப்பட்டுள்ளது? மீதம் எவ்வளவு இருக்கிறது? போன்ற பல்வேறு அடிப்படையான விடயங்களை தெரிந்து கொள்வதற்கு நமக்கு உரிமை இல்லை என்று பிரதமர் அலுவலம் செல்லும்போது அதிர்ச்சியாக உள்ளது. 

”PM Cares நிதி  இந்திய ஒன்றிய அரசுக்குச் சொந்தமானது இல்லை. நன்கொடையாக வசூலிக்கப்பட்ட அந்த தொகை ஒன்றிய அரசின் நிதியத்துக்குச் செல்லவில்லை” என்று PM Cares நிதியத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வரும் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி கூறிய பிறகு இங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. PM Cares நிதி மீதான சர்ச்சை இன்று நேற்று துவங்கவில்லை. கொரோனா தொற்று துவங்கி மூன்று மாதத்திலேயே இந்த பிரச்சனை துவங்கிவிட்டது. கொரோனாவைப் போல ஒரு  முடிவில்லாத விடயமாக இந்த PM Cares நிதி சர்ச்சை தொடர்கிறது.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆய்வு

தனிநபர், அரசு ஊழியர், அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என அனைத்து மக்களும் இந்த நிதிக்கு நன்கொடை அளித்தனர். ஊரடங்கு பிறப்பித்து ஏறத்தாழ இரண்டு மாதத்திற்குப் பிறகு இதுவரை பிரதமர் நிவாரண நிதிக்கு 10,600 கோடி நன்கொடை வந்துள்ளது என்று Times of India பத்திரிக்கை 19 மே 2020 அன்று செய்தி வெளியிட்டது. இது அதிகாரப்பூர்வமான அரசு தகவல் கிடையாது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை தான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சேகரித்து வெளியிட்ட தகவல். மிகக் குறைந்த நாட்களில் இவ்வளவு பெரிய தொகையை பிரதமர் கேட்டவுடன் மனமுவந்து இந்திய மக்கள் கொடுத்துள்ளதைப் பார்க்கும்போது கொரோனா குறித்து மக்கள் மிக விழிப்புடன் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது. 

Times of India அறிக்கையில் நன்கொடை கொடுத்தவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டது. அதில் தனியார் நிறுவனங்கள் ரூ.5,565 கோடியை நன்கொடையாக அளித்துள்ள விடயம் தெரியவருகிறது. அத்துடன் பொதுத்துறை நிறுவனங்கன் தங்கள் சமூகப் பொறுப்புக்கான நிதியிலிருந்து (corporate social responsibility) 3,249 கோடி ரூபாய் PM Cares நிதிக்கு அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து ரூ.1,191.4 கோடியை நன்கொடையாக தந்துள்ளனர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.413 கோடி PM Cares நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு தரப்புகளில் இருந்து நன்கொடைகள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி குவிந்தது. முழுமனதுடன் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களும், பாஜகவுடன் ஏதாவது ஆதாயம் அடைய நினைக்கும் கார்ப்பரேட்டுகளும் நன்கொடை வழங்கியுள்ளனர். 

பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த நிதி

ஊரடங்கு பிறப்பித்து மூன்று மாதத்திற்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை PM Cares நிதிக்கு வந்த நன்கொடை பற்றிய தரவுகளை தெரிந்து கொள்ள 55 பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த நன்கொடை பற்றிய தரவைக் கேட்டு ஆர்டிஐ விண்ணப்பங்களை தாக்கல் செய்தது. அதில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் பதிலளித்தது. அவற்றில் பத்து நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளது. குறிப்பாக ONGC என்றழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அதிகபட்ச தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது.  இதில் கவனிக்கபட வேண்டிய விடயம் என்னவென்றால் பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் CSR பட்ஜெட்டை விட அதிக பணத்தை PM Cares நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, 2020-21க்கான The Power Finance Corporation நிறுவனத்தின் CSR பட்ஜெட் Rs 150 கோடி. ஆனால் அதன் பட்ஜெட் தொகையை விட ஏறத்தாழ 50 கோடி அதிகமாக PM Cares நிதிக்கு அளித்ததாகத் தெரிகிறது. 2019-20ம் நித ஆண்டில் The Power Finance Corporation நிறுவனம் தன் CSR நிதியை மக்களுக்கு பல்வேறு வழிகளில் நேரடியாக செலவு செய்துள்ளது. குறிப்பாக பழங்குடி மக்களின் சுகாதாரம், கிராமப்புற குழந்தை பராமரிப்பு மையங்கள், அரசு பள்ளிகளை மேம்படுத்துதல், பழங்குடி பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட 29 திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளது. ஆனால் 2020-21 ம் ஆண்டுக்கான  ஒட்டு மொத்த CSR நிதியும் PM Cares நிதிக்கு சென்றுள்ளது. மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள்  CSR பட்ஜெட்டை இரண்டு தவணைகளாக பிரித்து PM Cares நிதிக்கு அளித்துள்ளனர். 

பவர் கிரிட் (Power Grid) மொத்தமாக ரூ.200 கோடி பங்களித்துள்ளது அதில் முதல் பங்களிப்பாக ரூ.130 கோடியும் இரண்டாம் பங்களிப்பாக ரூ.70 கோடியும் தந்துள்ளது. Oil India Limited நிறுவனம் தனது பங்களிப்பான ரூ.38 கோடியை ரூ.25 மற்றும் ரூ.13 கோடியாக பிரித்து  இரண்டு தவணையாகத் தந்துள்ளது. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Rural Electrification Corporation Ltd)  நிறுவனம் ரூ.100 கோடி மற்றும் ரூ 50 கோடி என இரண்டு தவணைகளாக பங்களித்துள்ளது. 

ராணுவ வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் நிதி

இது இத்துடன் நிற்கவில்லை. இந்திய இராணுவ வீரர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து 203.67 கோடி ரூபாயை PM CARES நிதிக்கு வழங்கியுள்ளனர் என்று 18 டிசம்பர் 2020 இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இந்திய விமானப்படை ரூ.29.18 கோடி பங்களித்துள்ளனர். இந்திய கடற்படையின் பங்களிப்பு ரூ.12.41 கோடியாகும். இந்திய ரயில்வே ஊழியர்கள் ரூ.146.72 கோடி பங்களித்தனர். இதுபோன்று பெருந்தொற்று காலகட்டத்தை மனதில்கொண்டு சமூகத்தின் மீதும் மக்களின் மீதும் பெரும் அக்கறையுடன்  அரசு ஊழியர்களால் கொடுக்கப்பட்டதுதான் இந்த நிதிகள். 

லட்சக்கணக்கானவர்களின் உழைப்பு மட்டுமல்ல அவர்களின் ஒட்டுமொத்த உணர்வும் ஒன்றுகூட்டப்பட்ட விடயம்தான் இந்த PM Cares நிதி. இது வெறும் பணத்தை வசூல் செய்யும் காரியம் மட்டுமல்ல. மக்களின் அடி மனதில் பதிந்திருக்கும் மனசாட்சியையும் நம்பிக்கையும் ஒன்று திரட்டும் காரியம். தேசப்பற்றையும் தாண்டி உயிர்களின் மீதான பெரும் அக்கறையை தனக்குத்தானே மனிதர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தருணமாக இருந்தது. அதனால்தான் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை PM Cares நிதிக்கு வழங்கியபோது பெற்றோர்கள் பெருமிதம் கொண்டார்கள். சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல தொழிலார்கள் PM Cares நிதிக்கு நன்கொடையாக கொடுத்தனர். இது கூட்டு வாழ்க்கையை உறுதிபடுத்தும் ஒரு பலமான வழிமுறை. ஆனால் இதை இந்த அரசு உணர்ந்ததா என்றால் இல்லை?

பொது அதிகாரம் அல்ல என்று பதில் அளித்த அரசு

ஊரடங்கு பிறப்பித்து ஏறத்தாழ மூன்று மாதங்களை நெருங்கும் சமயத்தில் அதாவது 18 ஜூன் 2020 அன்று சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் PM CARES நிதி தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகலையும் கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் தாக்கல் செய்தார். அதற்கு இந்தியப் பிரதமர் அலுவலகம் கொடுத்த விளக்கம்தான் இந்தியாவின் மனசாட்சியையே புரட்டிப்போட்டது. 

அந்த விண்ணம் அனுப்பி எட்டு நாட்களுக்குப் பிறகு பிரதமர் அலுவலகம் பதிலளித்தது. ”RTI சட்டம் 2005 பிரிவு 2 (h) இன் கீழ் PM CARES Fund என்பது பொது அதிகாரம் அல்ல” என்று பதிலளித்தது. அதாவது PM CARES நிதி கணக்கில் வரும் நிதிகுறித்து பொதுமக்களுக்கு எந்தவித விளக்கமும் கூறத் தேவையில்லை ஏனென்றால் இது அரசு நிதியல்ல என்னும் தொனியில் பதிலளித்தது. மேலும் PM Cares நிதி குறித்து சில தகவல்கள் pmcares.gov.in என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தது.

ஓய்வுபெற்ற அதிகாரிகளின் கடிதம்

மேலும் ஆறு மாதத்திற்குப் பிறகு 19 ஜனவரி 2021 அன்று, 100 ஓய்வுபெற்ற அதிகாரிகள் பிரதமருக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதினர். அதில் PM CARES நிதியில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது தங்களுக்கு கவலையளிக்கிறது. எனவே அதில் வேளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். அதற்கு “ PM CARES is not a  Public Authority under Section 2(h) of the RTI Act, 2005” என்று  சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ்க்கு என்ன பதில் கிடைத்தததோ அதுதான் இவர்களுக்கும் கிடைத்தது. 

யாருக்கு சொந்தமானது PM CARES நிதி?

இந்த  PM CARES நிதி ஒரு அரசு நிதியில்லை என்றால் பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் எப்படி இந்த நிதியின் உத்தியோகபூர்வ அறங்காவலர்களாக (Trustees) இருக்கமுடியும் என்ற அடிப்படை கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் என்ற அரசு பதவியைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வசூலிக்கப்பட்ட நிதி எப்படி அரசு பொறுப்பிற்கு உட்பட்டதல்ல என்று வரையறுக்க முடியும்? சரி  ஒன்றிய அரசுக்கு சொந்தமானதும் அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல, அதனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வராது’ என்றும் சொல்கிறார்கள். அரசுக்குச் சொந்தமானதும் அல்ல, அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல என்றால் அது தனியாருக்குச் சொந்தமானது ஆகும். அந்தத் தனியார் யார் என்பதுதான் கேள்வி?

மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் முட்டாள்கள் என்று ஏன் பிரதமர் அலுவலகம் நினைக்கிறது என்று தெரியவில்லை. பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் வேண்டுமானால் அது எவ்வளவு  அசிங்கமானது என்று தெரியாமல் இருக்கலாம். பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் IAS படித்த அதிகாரிகளுக்குக் கூடவா தெரியவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டம் PM CARES நிதிகுறித்து அறிந்துகொள்ள பொருந்தாது, இது அரசு நிதியல்ல என்று இந்தியாவின் அதிஉயர் அதிகாரவர்க்கம் எப்படி சொல்கிறது என்று புரியவில்லை.

2019-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இவற்றில் போதுமான அளவு அரசு நிதியை நன்கொடையாகப் பெற்றிருந்தால், அது அரச பொது அதிகாரத்திற்கு உட்பட்டதாக கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு சிவில் மற்றும் ராணுவ ஊழியர்களின் சம்பளத்தில் நிரம்பிக் கிடக்கும் இந்த PM CARES நிதியை ஏன் பொது அதிகாரமாகப் பார்க்கக்கூடாது? என்று பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு அதிகாரிக்குக் கூடவா தெரியவில்லை?

சி.எஸ்.ஆர் நிதி

PM CARES நிதியம் அமைக்கப்பட்டு ஒரு நாளுக்குப் பிறகு அதாவது 28 மார்ச் 2020  அன்று ஒன்றிய அரசின் பெருநிறுவன விவகார அமைச்சகம் (corporate affairs ) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் பின்வருமாறு தெரிவித்தது.

“The PM-CARES Fund has been set up to provide relief to those affected by any kind of emergency or distress situation. Accordingly, it is clarified that any contribution made to the PM CARES Fund shall qualify as CSR expenditure under the Companies Act 2013.”

பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு செய்யப்படும் பங்களிப்பும் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் CSR என்றழைக்கப்படும் சமூக பொறுப்பின் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் செலவுகளாக கருதப்படும் என்று தெரிவித்தது.

நிறுவனங்கள் சட்டம் 2013-ஐ தனக்கு ஏதுவாக பாஜக அரசு திருத்தி, அதனுடாக தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பொதுத்துறை நிறுவனங்கள் செய்யும் சில சமூகப் பொறுப்புணர்வு செலவுகளை வசூல் செய்துள்ளது. இவ்வனைத்தும் அலுவலக ரீதியாகவே நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து கணக்கு கேட்கும்போது, இது அரசு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதல்ல என்று சொல்கிறது. 

.gov Domain

இங்கு பிரதமர் நிதிவசூல் செய்வதற்கு விளம்பரம் கொடுக்கிறார். பொது வெளியில் மக்களிடம் ஊடகத்தில் வேண்டுகோள் விடுக்கிறார், அந்த நிதியை வசூல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வங்கி கணக்கிற்கு பிரதரின் அலுவலக முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. PM CARES நிதியின் வலைத்தளம் அரசாங்க வலைத்தளத்திற்கு பன்படுத்தப்படம் .gov என்ற டொமைனைக் கொண்டுள்ளது. அந்த இணையதளத்தை திறந்தால் அசோக சக்கரம் ஜொலிக்கிறது. இந்த அனைத்தையும் பயன்படுத்தி வசூல் செய்த நிதி எப்படி அரசு பொறுப்பிற்குள் வராது என்று கூறினார்கள் என்ற அடிப்படை கேள்விதான் மக்களிடம் எழுகிறது. அதேபோல் இது அரசு நிதி இல்லை என்றால் இதை நிர்வகிக்கும் பொறுப்பை பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளராக இருந்த பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவா எப்படி ஏற்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய தணிக்கை நிறுவனம்

அரசின் பெயரால் மக்களிடம் இருந்தும் நன்கொடையாகப் பெறப்பட்ட கணக்குகளை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்தான் தணிக்கை செய்ய வேண்டும். ஆனால் SARC & அசோசியேட்ஸ் என்ற ஒரு ஆலோசனை நிறுவனம் PM CARES நிதியின் “சுயாதீன தணிக்கையாளராக” நியமிக்கப்பட்டது எப்படி? இதற்கு அரசு விளக்கம் தருமா?  

இந்த SARC & அசோசியேட்ஸின் தலைவரான சுனில் குமார் குப்தா மோடி அரசுடன் மிக நெருங்கிய நட்பு கொண்டவர். இந்த சுனில் குமார் குப்தா மேக் இன் இந்தியா என்ற தலைப்பில் புத்தகம் எழுதியவர். அவருக்கு ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா போன்ற பல்வேறு பாஜக தலைவர்களுடன் நெருங்கிய உறவுடையவர். இவர் எழுதிய புத்தகங்களை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் அவர் இணையதளத்தைப் பார்த்தாலே கிடைக்கும். 

பிரதமர் மோடியுடன் சுனில் குமார் குப்தா

மேலும் அவரது புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல், பாராளுமன்ற பாஜக உறுப்பினர் ராகேஷ் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் மேக்வால் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அவர் இந்தியப் பிரதமர் மோடியுடன் நெருங்கி நடப்பு கொண்டவர் என்று தெரியவந்துள்ளது.

சுனில் குமார் குப்தாவின் மேக் இன் இந்தியா புத்தகம்

SARC & அசோசியேட்ஸ் நிறுவனம் 2019-20 நிதியாண்டுக்கான PM CARES நிதியின் தணிக்கை அறிக்கையை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 28 மார்ச் 2020 அன்று உருவாக்கப்பட்டதிலிருந்து, 31 மார்ச் 2020 வரை அதாவது நான்கு நாட்கள் மட்டுமே உள்ளடக்கிய அறிக்கை மட்டுமே வெளிவந்துள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தனியார் நிறுவனம்கூட PM CARES நிதி குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளிப்படையாக கொடுக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-ன் உலக இந்து காங்கிரஸ் மாநாடு 

SARC & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் குமார் குப்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். சில பத்திரிக்கை செய்திகள் அடிப்படையில் பார்த்தால் இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு பினாமி அமைப்புகள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புகள் கடந்த 2018-ம் ஆண்டு சிகாகோவில் உலக இந்து காங்கிரஸ் கூட்டத்தைக் கூட்டியது. அதில் இந்தியாவில் இருந்து மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டை துவங்கிவைத்து பேசியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். அவருடன் அந்த கூட்டத்தில் சுனில் குமார் குப்தாவும் கலந்துகொண்டார். அவரும் அந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயம். 

மேலும் இந்த வெளிநாட்டு இந்துத்துவா அமைப்புகள் சர்வதேச மட்டத்தில் இருந்து பெரும் நிதியை இந்தியாவிற்குள் கொண்டுவருகிறது. அந்த நிதிகள் இந்தியாவில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதிகள் மத வன்முறைக்கும் இந்துத்துவா உணர்ச்சிகளை தூண்டுவதற்கும், வெறுப்புப் பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளது. 

மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் 736 சங்பரிவார் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு நிதிபெறும் தகுதி வழங்கப்பட்டது. அந்த அமைப்புகள் அரசிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுடன் சேர்ந்து வேலை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட PM CARES நிதி பல்வேறு மக்கள் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் கூறுகிறது. அதே நேரத்தில் 736 சங்பரிவார் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு நிதிபெறும் தகுதி வழங்கப்படுகிறது. அதேபோல் PM CARES நிதியை தணிக்கை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருக்கமாக இருக்கும் சுனில் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஒன்றிய அரசு  PM CARES நிதி குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்து கொள்கிறது. இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து பார்த்தால் இயல்பாகவே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

PM CARES நிதியில் நடந்த முறைகேடுகள் 

PM CARES நிதி பயன்பாடு குறித்து ஏதாவது ஆக்கப்பூர்வமான செய்தி வந்துள்ளதா என்று பார்த்தால் 13 மே 2020 அன்று, press information bureau ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. PM CARES நிதியில் இருந்து மொத்தம் ரூ.3,100 கோடி பன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் புதிய வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.2,000 கோடி. மீதமுள்ள நிதியில் 1,000 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காகவும், 100 கோடி தடுப்பூசிகள் உற்பத்திக்கும் செலவிடப்படும் என்று தெரிவித்தது. இந்த நிதியாவது முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்து பார்த்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

அஞ்சலி பரத்வாஜ் என்பவர் 2020 ஆகஸ்ட் மாதம் ஒரு தகவல் அறியும் விண்ணப்பத்தை தாக்கல் செய்து இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சகம் 58,850 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களை ஆறு வெவ்வேறு நிறுவனங்களுக்கு அளித்ததாகக் கூறியது. இதில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தைத் தவிர மீதம் உள்ள அனைத்தும் தனியார் நிறுவனங்கள். அவர்கள் இதுவரை வென்டிலேட்டர் செய்வதில் அனுபவம் இல்லாதவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரியாது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 2,332.22 கோடி. 

இவ்வளவு பணம் செலவு செய்து தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களின் தரம் குறித்தும் பயன்பாடு குறித்தும் தெரிந்து கொள்ள பல்வேறு முயற்சிகள் நடத்தப்பட்டது. அவையனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளது. 7 செப்டம்பர் 2020 அன்று சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நாயரின் ஆர்.டி.ஐ விண்ணப்பத்தில் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதில் கிடைத்த தகவலின்படி தயாரிக்கப்படும் வென்டிலேட்டர்களை சோதிப்பதற்காக சுகாதாரத்துறை சார்பாக ஒரு “கூட்டு தொழில்நுட்பக் குழு” அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சில நிறுவனங்கள் தயாரித்த வேன்டிலேட்டர்களை ஆய்வு  செய்தது. சில நிறுவனங்கள் அந்த ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. இதுகுறித்தான விளக்கம் கேட்டபோது ஆய்வு குறித்தான அனைத்து அறிக்கைகளும்  “கூட்டு தொழில்நுட்பக் குழுவிடம் உள்ளது என்று சொல்லிவிட்டனர். இங்கு நிதி குறித்து மட்டுமல்ல அதன் பயன்பாடு குறித்து கேட்கப்படும் எந்த கேள்விக்கும் இதுவரை முழுமையாக பதில் வரவில்லை. 

18 ஜூன் 2020 அன்று பரத்வாஜ் என்ற சமூக செயல்பாட்டாளரின் ஆர்.டி.ஐ விண்ணப்பத்திற்கு சுகாதார அமைச்சகம் பதிலளித்தது. அதில் 58,850 வென்டிலேட்டர்கள் ஐந்து வெவ்வேறு உற்பத்தியாளர்களுக்கு டெண்டர் விடப்பட்டது. அதை “கூட்டு தொழில்நுட்பக் குழு”  மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தில் Bharat Electronics Limited, Agva Health Car and Allied என்ற மூன்று உற்பத்தியாளர்களின் இயந்திரங்கள் மட்டுமே நன்றாக  உள்ளது என்று தெரிவித்தது. AMTZ மற்றும் Jyoti CNC என்ற இரு நிறுவணங்களின் தயாரிப்புகள் மறுக்கப்பட்டது. இதனால் வென்டிலேட்டடர்கள் உற்பத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. வென்டிலேட்டர்கள் தயாரிப்பதில் எந்தவித முன் அனுவமும் இல்லாத நிறுவனங்களுக்கு டென்டர்களை கொடுத்ததன் விளைவாக 18500 வென்டிலேட்டர்கள் மொத்த உற்பத்தியில் இருந்து சரிந்தது. அதற்குப் பிறகுதான் PM CARES நிதியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வெண்டிலேட்டர்களின் தரம் குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டது. 

PM CARES நிதி 58,850 வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதில் 29,882 வென்டிலேட்டர்கள் மட்டும்தான் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து 2020 செப்டம்பர் மாதம் விண்ணப்பித்த ஆர்.டி.ஐ தரவுகளில் இருந்து கிடைத்தது. வெண்டிலேட்டர் உற்பத்தியில் நடந்த குழுப்பத்தினால் ஏற்பட்ட தட்டுபாடுதான் கொரோனா இரண்டாம் அலையின்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதன் பாதிப்பை நாம் அனைவரும் பார்த்தோம். இதில் இன்னும் மோசமான விடயம் என்னவென்றால் தயாரித்து கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து வெண்டிலேட்டர்களும் நல்ல நிலைலில் இல்லை. அதில் பல்வேறு குறைபாடுகள் இருந்தால் அதைப் பயன்படுத்த முடியாமல் போனது. 

2021 ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில உள்ள Mathuradas Mathur மருத்துவமனையில் வென்டிலேட்டர்களின் தரம் குறித்து ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதற்கு  ஒரு மருத்துவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். 

“We installed some ventilators, but they were not able to maintain the pressure required. We had high hopes from the BEL ventilators. But the ventilators of BEL would suddenly stop functioning. There is an issue in starting them too. Two out of five will not start even after you try to start them. Even if started, no one can say when they will stop. Another big problem is the accessories of these ventilators. We do not have a single adapter or supply pipe in spare, so when any accessories get damaged, the ventilator has to be switched off.”

5 ஏப்ரல் 2021, அறிக்கையின்படி PM CARES நிதியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒதுக்கப்ட்ட 1,900 வென்டிலேட்டர்களில், 592 வேலை செய்யவில்லை. 215 வென்டிலேட்டர்கள் இதுவரை பொருத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. 11 வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படவில்லை, ஏனெனில் அவற்றின் சில பாகங்கள் கிடைக்கவில்லை. 366 வென்டிலேட்டர்களில் pressure drop, compressor failure and sensor failure போன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. 

தி இந்து பத்திரிக்கை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி பஞ்சாப் மாநிலத்திற்கு PM CARES நிதியில் இருந்து 320 வென்டிலேட்டர்கள் கொடுக்கப்பட்டது. அதில 237 பயன்படுத்த முடியவில்லை. குறிப்பாக பாட்டியாலா மருத்துவக் கல்லூரியில் பெறப்பட்ட 98 வென்டிலேட்டர்களில்  50 குறைபாடானது பயன்படுத்த முடியவில்லை. அமிர்தசரஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 109 வென்டிலேட்டர்களில் 12 மட்டுமே வேலை செய்கின்றன. இதில் இன்னும் மோசமான விடயம் என்னவென்றால் சண்டிகர் பகுதியில் உள்ள Post Graduate Institute of Medical Education & Research என்ற PGIMER நிறுவணம் 2020 ஜுலை 25-ம் தேதி ஒரு செய்தி வெளியிட்டது. அதில் PM CARES நிதியில் இருந்து வரும் எந்த வெண்டிலேட்டர்களையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை என்ற கூறியது.

இது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான். இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் PM CARES நிதியில் தயாரிக்கப்ட்ட வென்டிலேட்டர்கள் தரமாக இல்லை என்று பல செய்திகள் பத்திரிக்கைகளில் பதியப்பட்டுள்ளது. இது குறித்தும் வென்டிலேட்டர்கள் தயாரித்ததில் நடந்த பல குழுப்பங்கள் குறித்து மிக விரிவாக THE CARAVAN பத்திரிக்கை ஆய்வு செய்துள்ளது. (https://caravanmagazine.in/government/why-pm-cares-fund-investigated)

2020 மார்ச் 14-ம் தேதி இந்திய ஒன்றிய அரசு கொரோனா தொற்றை தேசியப் பேரிடராக அறிவித்தது அதற்குப் பிறகு ஆக்ஸிஜன் தயாரிக்க 150 Pressure Swing Absorption ஆலைகளை உருவாக்க பல அறிவிப்பு செய்தது. ஆனால் அதில் முனைப்பாக செயல்படாமல் கோட்டைவிட்டது. 2020 டிசம்பர் மாதம் வரை ஆலைகளை உருவாக்கும் டெண்டர்களில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. 2021 ஜனவரி மாதம் இந்த திட்டம் PM CARES திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. மேலும் 12 ஆலைகள் அத்துடன் சேர்க்கப்பட்டன. 2021 ஜனவரி 5-ம் தேதி PMO இணையதளம் 162 ஆலைகளை அமைப்பதற்கு ரூ. 201.58 கோடி PM CARES நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தது.

PM CARES நிதியில்  உறுதி செய்யப்ட்ட 162 ஆலைகளில் இதுவரை 11 ஆக்ஸிஜன் ஆலைகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. இதில் ஐந்து மட்டும்தான் வேலை செய்கிறது என்று கடந்த ஏப்ரல் 18-ம் தேதி scroll இணையதளம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியான உடனேயே மொத்தம் 33 ஆலைகள் நிறுவப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் ட்வீட் செய்தது. ஆனால் அதில் எத்தனை வேலை செய்கிறது என்று குறிப்பிடப்படவில்லை.

scroll இணையதளம் நடத்திய விசாரணையில் PM CARES திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள Pressure Swing Absorption ஆலைகளை உருவாக்குவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவருகிறது, இந்த ஆலைகளை அமைப்பதற்கான மூன்று நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது.  Uttam Air Products, Airox Technologies and Absstem Technologies இந்த நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பல்வேறு அடுக்குகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை scroll இணையதளம் வெளிப்படுத்தியுள்ளது. 

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதிலும் மக்களின் உயிரைக் காப்பதிலும் கூட இந்த அரசு இதுபோன்று நடந்துள்ளதை கேள்விப்படும்போது பெரும் சோர்வும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. மக்களிடம் இருந்து நன்கொடையாக வாங்கப்பட்ட பணத்தை முறையாக பயன்படுத்தாமல் இதுபோனற மெத்தனத்தில் இருந்துகொண்டு மக்களின் உயிரை காவுவாங்குகிறது ஒன்றிய அரசு. கொரோனா பெறுந்தொற்று காலத்தில் மக்களின் மருத்துவ சேவையைக் கருத்தில் கொள்ளாமல் முன் அனுபவம் இல்லாத தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு மருத்துவ உபகரணங்களை தயாரிக்க டென்டர்விடும் இந்த மனநிலை ஆபத்தானது.

காசியாபாத் பகுதியில் கல்லூரி படிக்கும் சக்தி பாண்டே என்ற 18 வயது பெண் 2020 ஏப்ரல் மாதம் தான் சேர்த்துவைத்திருந்த 5100 ரூபாயை PM CARES நிதிக்கு கொடுத்தார். சரியாக ஒரு ஆண்டுக்கு பிறகு இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது அந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். மிகமோசமான மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது ஆக்சிஜன் இல்லாமல் அந்த பெண் அவதிப்பட்டதைப் பார்த்து அவரது தந்தை சைலேஷ் துடிதுடித்துப்போனார். தன் மகளை தூக்கிக்கொண்டு காசியாபாத் தெருக்களில் தனியார் மருத்துவமனையைத் தேடி அலைந்தார். பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு தங்கள் நன்பர்களின் உதவியுடன் இறுதியில் அந்த பெண் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைத்தது.  தேசத்தின் மீதான மதிப்போடும் உயிர்களின் மீதான அக்கறையுடன் அந்த பெண் கொடுத்த 5100 ரூபாய் என்ன ஆனது என்று பிரதமர் அந்த பெண்னுக்கு பதில் சொல்ல வேண்டுமல்லவா? அதை அவரிடம் யார் போய் சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *