மோடி அரசின் முதல் ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்ததன் காரணமாக விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதன் காரணமாக 2019 தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளுக்காக திட்டமிடப்பட்டது Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) எனும் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதித் திட்டம்.
சிறு – குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக வருடத்திற்கு ஆறாயிரம் ருபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்கிற இந்த திட்டம் 01.12.2018 முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் துவங்கப்பட்ட போது 14 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என்று பிரதமர் அறிவித்தார். இந்த திட்டத்தில்தான் தற்போது கோரோனா பெருந்தொற்று காலத்தில் நடைபெற்ற ஊழல் வெளிவந்துள்ளது. குத்தகை விவசாயிகளைக் கூட பயனாளிகளாக இணைக்க முடியாத ஒரு திட்டத்தில் மாணவர்களை இணைத்து பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது.
விவசாயிகள் அல்லாதாரை உறுப்பினராக இணைத்தல்
கொரோனா பெருந்தோற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில், நேரடியாக விவசாயிகள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று கூறியதைப் பயன்படுத்தி போலியாக விவசாயிகள் என்ற பெயரில் நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகளின் பட்டியலைக் கொண்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளை இணைத்துள்ளனர். அதேபோல் மாணவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அட்டைகளைப் பெற்று இத்திட்டத்தில் சேர்த்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஒருவர் சிறு – குறு விவசாயி என்பதற்கு சான்றாக கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த போலி உறுப்பினர்களில் ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு எண் மட்டும் பெற்றுக் கொண்டு சேர்த்திருப்பதன் மூலம் இது அதிகாரம் மட்டுமல்ல, அரசியல் செல்வாக்கோடு நடந்த ஊழல் என்பது நமக்கு தெரியவருகிறது.
அதிகாரிகளின் பங்களிப்பு
திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரியான இணை இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கடவுச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடவுச்சொல் வழியாகத்தான் பயனாளிகள் இறுதி செய்யப்பட முடியும். இதன் காரணமாக அந்த அதிகாரிகளின் பங்களிப்பு இல்லாமல் இதனை செய்ய முடியாது என்பது உறுதியாகிறது.
தனியார் கணினி மையங்களும் தரகர்களும்
சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கணினி மையத்தில் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் அரசு பயன்படுத்தும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, இந்த திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள் அந்த கணினி மையத்துக்கு சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை 75 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த 75 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகளை முடக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
13 மாவட்டங்களில் நடைபெற்றுள்ள ஊழல்
சேலம் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் அல்லாத 10 ஆயிரத்து 700 பேர் முறைகேடாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது. அது மட்டுமல்லாமல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் என பதிவு செய்து, அவர்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருப்பதும் தற்போது வெளிவந்துள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் கிசான் நிதி உதவித் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.
விழுப்புரத்தில் இதுவரை 19,330 வங்கிக் கணக்குகளில் இருந்து 6.26 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு மொத்தம் பதிமூன்று மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் 41 லட்சம் பேர் பதிவு செய்திருந்ததாகவும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஐந்து லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்து 46 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 5 லட்சம் பேர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். இதுவரை 2000 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருக்கலாம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டுகிறார்..
மானியங்களை நேரடியாக செலுத்துவதால் ஊழல் ஒழிந்துவிட்டதா?
கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு மானியங்களை ரத்து செய்து, நேரடியாக வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுகிறது. நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவதற்கான காரணமாக ஊழல்கள் இருக்காது என்று கூறப்பட்டது. ஆனால் போலி பயனாளிகளை உருவாக்கி நேரடியாக பணத்தை அனுப்பி 2000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது தெரியவந்திருப்பதால், இதுவரை சொல்லப்பட்டது ஒரு போலியான பிரச்சாரம் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊழலில் பாஜக பிரமுகர்கள்
இதுவரை ’ஆத்மா’ எனும் ஒப்பந்த அடிப்டையில் பணியில் இருந்த 81 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 34 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பல இடைத்தரகர்களும், பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்களும் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவினர் தமிழ்நாடு முழுவதுமே மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெற தங்களை தொடர்பு கொள்ளும்படி விளம்பரம் செய்திருந்தனர். அதன்படி தங்களுக்கு தெரிந்தவர்களை எல்லாம் விவசாயிகள் என்று இந்த திட்டத்தில் பதிவு செய்து, முதல் தவணைப் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியாக பணம் பெற வேண்டும் என்றால் நீங்கள் பாரதிய ஜனதாவில் இணைய வேண்டும் என்று பாரதிய கிசான் மஸ்தூர் யூனியன் எனும் அவர்களது விவசாய சங்கத்திற்கு ஆள் பிடிக்கும் திட்டமாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கமும், அதிகாரிகளை இடை நீக்கமும் செய்த அரசு இதுவரை தரகர்களாக செய்லபட்ட பாஜக பிரமுகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் உண்மையான விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சென்றாலும் பாஜகவினர் பரிந்துரை இல்லை என்றால் ஆவணங்கள் சரியாக இல்லை என்று அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சிறு – குறு விவசாயிகள் 65 லட்சம் பேர் இருப்பதாகவும், பி.எம் கிசான் திட்டத்தில் நடைபெறும் ஊழல்களை சரி செய்து, அவர்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன்வைக்கிறார்கள்.