உலக சுகதார மையம் உலக நாடுகளுக்கு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய முக்கியப் பணியாக ’பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை’ என்பதைத் தான் (’TEST, TEST, TEST’) முன் வைத்தது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை முறையாக, ஒருவரின் உடலில் நிகழ்ந்த தொடர் மாற்றங்களை கண்டறியும் பரிசோதனையை (PCR Test- Polymerase Chain Reaction Test) பரிந்துரைத்தது. உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைந்த அளவே கொரோனா தொற்றைக் கண்டறியும் PCR பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் மிகக் குறைந்த அளவிலான PCR பரிசோதனை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதன் காரணமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால், ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான தொடக்கநிலை சாத்தியத்தை கண்டறியும் யுக்தியாக ’உடலில் உருவாகியிருக்கும் எதிர்ப்பு ஆற்றல் பரிசோதனை (AtntiBody Test)’ பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிசோதனைக்காக விரைவு பரிசோதனைக் கருவிகள் (Rapid Test Kit) பயன்படுத்தப்படுகின்றன.
ரேபிட் கிட்கள் கொள்முதல் செய்த தமிழ்நாடு அரசு மற்றும் ICMR
இந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கைகளை (PCR பரிசோதனை அல்ல, AntiBody பரிசோதனை) அதிகரிக்க வேண்டிய அவசியத்தின் ஒரு பகுதியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரேர் மெட்டபாலிக்ஸ் (Rare Metabolics) என்ற நிறுவனத்திடமிருந்து விரைவு பரிசோதனை கருவியொன்று ரூ.600 என்ற வீதத்தில் 5 லட்சம் கருவிகள் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. அதேப்போன்று தமிழ்நாடு அரசும் கருவியொன்று ரூ. 600 என்ற வீதத்தில் 50,000 கருவிகளை ஷான் பையோடெக் (Shan Boitech) என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்திருந்தது.
வழக்கு தொடுத்த ரேர் மெட்டபாலிக்ஸ் நிறுவனம்
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் ’ஷான் பயோடெக்’ மற்றும் ’ரேர் மெட்ட்பாலிக்ஸ்’ ஆகிய இந்த நிறுவனங்களுமே ரேபிட் கிட்களை மேட்ரிக்ஸ் என்ற பெரு நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கின்றன. மேட்ரிக்ஸ் நிறுவனம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கருவிகளை வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தான் ரேர் மெட்டபாலிக்ஸ் நிறுவனம் மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக விநியோகர் தான் மட்டும்தான் என்றும், தான் இருக்கும் போது தமிழ்நாடு அரசுக்கு பரிசோதனை கருவிகளை விற்பனை செய்ய ஷான் பையோடெக் என்ற மற்றொரு நிறுவனத்திற்கு மேட்ரிக்ஸ் நிறுவனம் எப்படி ஒப்பந்தம் வழங்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
வழக்கின் விசாரணையின் போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதனைக் கருவிகளை மிக அதிக விலை கொடுத்து வாங்கி தவறிழைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்கியது அம்பலம்
மேட்ரிக்ஸ் நிறுவனத்தினால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விரைவு பரிசோதனை கருவியொன்றின் மதிப்பு ரூ.245 தான். கருவியொன்றை ரூ. 245க்கு இறக்குமதி செய்த மேட்ரிக்ஸ் நிறுவனம் அதனை ரூ. 420க்கு ரேர் மெட்டபாலிக்ஸ் நிறுவனத்துக்கு விற்றுள்ளது; அதனை ரேர் மெட்டபாலிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 600 விலைக் கொடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் ரூ, 600க்கு வாங்கப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவியின் இறக்குமதி விலை ரூ. 245 மட்டுமே. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் ரூ. 30 கோடிக்கு வாங்கப்பட்ட, 5 லட்சம் பரிசோதனைக் கருவிகளின் உண்மையான விலையின் மதிப்பு 12 கோடியே 25 லட்சம் ரூபாய் மட்டுமே.
விசாரணையின் போது தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றமானது பரிசோதனை கருவிகளுக்கான விலையாக இறக்குமதி மதிப்பை விட கூடுதலாக 61%, அதாவது 155 ரூபாயை லாபமாக நிர்ணயித்து ரூ.400-ஐ (ஜி.எஸ்.டி உட்பட) கருவியொன்றின் விலையாக நிர்ணயித்திருக்கிறது.
முறையான ஆராய்ச்சி செய்யாமல் வாங்கப்பட்ட கருவிகள்
கூடுதல் விலை கொடுத்து கருவிகளை கொள்முதல் செய்த பிரச்சனை ஒருபுறமிருக்க, வாங்கப்பட்ட கருவிகளின் பரிசோதனை முடிவுகள் பெரும்பாலும் தவறாக இருப்பதாக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் புகார் எழுந்திருக்கிறது. மேட்ரிக்ஸ் நிறுவனம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு வாங்கப்பட்ட கருவிகள் வோண்ட்ஃபோ எனும் சீன நிறுவனத்தினுடையது. இதன் காரனமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சம்பந்தப்பட்ட வோண்ட்ஃபோ நிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்த வேண்டாமென கூறியுள்ளது. வோண்ட்ஃபோ நிறுவனமோ, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தர பரிசோதனைக்குப் பின்னரே கருவிகள் வழங்கப்பட்டதாக கூறியிருப்பது மற்றுமொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவு பரிசோதனைக் கருவிகளின் தரம் உரிய மருத்துவ தொழில்நுட்ப அறிஞர்கள் குழுவினால் பரிசோதிக்கப்படவில்லை என இந்திய பொது சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தனியார் ஊடகமொன்றிடம் கூறியிருக்கிறார்கள்.
மீறப்பட்ட விதிமுறைகள்
பொதுவாக இதுபோன்ற மருத்துவ பரிசோதனைக் கருவிகளின் தரத்தினை ஆராய்கின்ற மருத்துவ சேவைக்கான பொது இயக்குநரகத்திடம் (Direct General of Health Services), வோண்ட்ஃபோ நிறுவனத்திடம் வாங்கப்பட்ட விரைவு பரிசோதனை கருவிகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கலந்தாலோசிக்கவில்லை என அறியப்படுகிறது. குறிப்பிட்ட நோய்த் தொற்று பரிசோதனை கருவிகளின் தரம் மருத்துவ சேவைக்கான பொது இயக்குநரகத்தின் தலைமையில் அமைக்கப்படும் தொழில்நுட்ப கண்காணிப்பு கூட்டுக் குழுவினால் (A technical Joint Monitoring Group) ஆராயப்படும். இத்தொழில்நுட்ப கண்காணிப்பு கூட்டுக் குழுவின் உறுப்பினர்களாக சமூகப் பரவல் நோய்களுக்கான இந்திய அரசின் உயர்மட்ட குழு, தேசிய நோய்த் தடுப்பு மையம் (National Centre for Disease Control), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences- AIIMS), அவசர மருத்துவ நிவாரண அதிகாரிகள் மற்றும் உலக சுகதார மையத்தின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்.
நிதி அயோக்கின் தவறான அணுகுமுறை
மரபுப்படி துறை சார்ந்த வல்லுநர்களான (சுகாதார) தொழில்நுட்பக் கண்காணிப்புக் கூட்டுக் குழுவை கலந்தாலோசிக்காமல், நிதி ஆயோக் உறுப்பினரின் தலைமையில் நியமிக்கப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கொரோனா பெருந்தொற்றுக்கான பணிக்குழு, தானே ஒரு குழுவை அமைத்து பரிசோதனைக் கருவிகள் குறித்து முடிவெடுத்திருப்பதாக தொழில்நுட்ப கண்காணிப்புக் கூட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். பிறநாடுகளில் விரைவு பரிசோதனைக் கருவிகள் (ரேபிட் கிட்ஸ்) பயன்படுத்தப்பட்டு கொரோனா தொற்றாளர்களை கண்டறிவதில் அவை பயனளிக்கவில்லை என்பதற்கான போதிய நேரடி சான்றுகள் இருந்தும் தேவையில்லாமல் ஏன் இவ்வளவு விரைவு பரிசோதனை கருவிகளை வாங்கி குவிக்கிறார்கள் என கேள்வியெழுப்புகிறார்கள்.
குறிப்பிட்ட விரைவு பரிசோதனைகள் கருவிகளை வாங்குவதில் மட்டுமல்லாது இதுப் போன்ற மற்ற விடயங்களிலும் (சுகாதார) தொழில்நுட்ப கண்காணிப்பு குழுவின் கருத்துக்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கொரோனா பெருந்தொற்றுக்கான பணிக்குழுவால் பொருட்படுத்தப்படவில்லை. மிக முக்கியமாக அறிகுறிகள் தென்படுவோரை (Symptomatic Persons) மட்டும் பரிசோதனை செய்வது போதிய பயனளிக்காது, உரிய அறிகுறி தென்படாதவர்களையும் (Asymptomatic Persons) பரிசோதிக்க வேண்டுமென்று மார்ச் முதல் வாரமே வழங்கப்பட்ட பரிந்துரையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் கொரோனா தொற்றுக்கான பணிக்குழு பொருட்படுத்த தவறியிருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை என கண்டுகொள்ளப்பட்டு அதனடிப்படையில் செயல்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது.
பெருந்தொற்றுக்கு எதிரான செயல்திட்டத்தில் அரசாங்கத்தின் கீழுள்ள அமைப்புகளின் ஒருங்கிணைப்பின்மையையும், பெருந்தொற்றுக்கு எதிராக தனக்கு கீழுள்ள அமைப்புகளை நிர்வகிப்பதில் அரசினுடைய அலட்சிப் போக்கையுமே இது காட்டுகிறது. கொரோனாவை எதிர்கொள்வதற்கான கொள்கை வகுப்பதில் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்விக்கு இதுவும் ஒர் உதாரணம்.
ஒரு பெருந்தொற்று பேரிடர் நிலவும் தீவிரமான காலக்கட்டத்தில் இந்திய மக்கள் பசி மற்றும் வருமானமின்மையால் கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அரசின் பல்வேறு விதமான புறக்கணிப்புகளுக்கு மத்தியில் இன்னும் அரசை மட்டுமே நம்பி இப்பெருந்தொற்றை கடக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு. ஆகையால் அரசு கைத்தட்டச் சொன்னால் தட்டுகிறார்கள்; விளக்கேற்றச் சொன்னால் ஏற்றுகிறார்கள். ஆனால் அரசோ கைத்தட்டச் சொல்லி, விளக்கேற்றச் சொல்லி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. தட்டப்படும் கைகள் உயர்த்தப்பட்டு முழக்கங்களாக மாறுகிற வரையில், ஏற்றுகின்ற விளக்குகள் தீப்பந்தங்களாக மாறுகிற வரையில் மட்டுமே இந்த அரசுகளால் வேடிக்கை பார்க்க முடியும் என்பதையே வரலாறு காட்டுகிறது. தேரா மன்னா செப்புவ துடையேன்!