இந்தியவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தினை தாண்டியிருப்பதாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் மயானங்களில் தகனம் செய்யப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை குறைவானது என்றும், 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எப்போதோ தாண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது.
டெல்லி, உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் மயானங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளை ஆய்வு செய்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட ஆய்வுகளைத் தொகுத்து The Quint செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், ஒரு நபர் கொரோனா அறிகுறிகளுடன் இறந்திருந்தாலோ அல்லது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்திருந்தாலோ எப்படியானாலும் கொரோனா மரணமாகத்தான் குறிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் இந்தியாவில் அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை. கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டெல்லி
டெல்லியின் மிகப்பெரிய தகன மைதானமான நிகம்போத் மலைத்தொடர் பகுதியில் இரவு, பகலாக தொடர்ச்சியாக புகை வெளிவந்துகொண்டே இருக்கிறது. மயானத்தில் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 15 என்ற அளவிலிருந்து 30 என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டதால் எரிப்பதற்கு இடமில்லாமல் உடல்கள் குவிக்கப்பட்டுள்ளன என்பதை என்.டி.டி.வி செய்தித் தொகுப்பு வெளிப்படுத்தியிருக்கிறது.
ஏப்ரல் மாதம் 18ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் 1938 பேர் இறந்திருப்பதாக டெல்லி அரசாங்கத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது. ஆனால் டெல்லியின் 26 மயானங்களின் கணக்கீடுகளை எடுத்து என்.டி.டி.வி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் 3,096 கொரோனா நோயாளிகளின் உடல்கள் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி 1158 பேரின் இறப்பு அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவு செய்யாமல் விடப்பட்டது தெரியவந்துள்ளது.
தெற்கு டெல்லியின் மயானத்தின் காண்ட்ராக்டர்களில் ஒருவர் என்.டி.டி.வி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திடீரென மிக அதிக அளவிலான உடல்கள் வந்துகொண்டிருப்பதால் எரிப்பதற்கு இடமின்றி, புதிதாக 100 தகன மேடைகளை அருகில் உள்ள பூங்காவில் உருவாக்குவதற்கு தனக்கு காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இரண்டாவது அலை துவங்குவதற்கு முன்பு நிகம்போத் மலைத்தொடர் மயானத்தில் உடல்களை எரிப்பதற்கு ஒரு நாளைக்கு 6000-8000 கிலோ வரையிலான மரக்கட்டைகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது 80000-90000 கிலோ வரை நாளொன்றுக்கு தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது. அப்படியென்றால் எத்தனை உடல்கள் எரிக்கப்படுகின்றன எனும் எண்ணிக்கை அச்சமூட்டுவதாய் இருக்கிறது.
பெங்களூர்
ஏப்ரல் 18 – 22 வரையிலான காலப்பகுதியில் பெங்களூரில் 527 கொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருப்பதாக கர்நாடகா அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் பெங்களூர் மாநகரத்தில் உள்ள 6 மயானங்களில் மேற்கொண்ட விசாரணையில் ஏப்ரல் 18 -22 வரை 860 உடல்கள் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்வ கணக்கில் பதிவு செய்யப்படாத 333 மரணங்களில் பலர் கொரோனா பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பே இறந்துவிட்டிருக்கின்றனர். இதில் 65 பேரின் பதிவு எண்கள் அடிப்படையில் அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகளை தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனத்தினர் விசாரித்த போது, அதில் 44 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்திருக்கிறது. எட்டு பேருக்கு நெகட்டிவ் என்றும், 13 பேருக்கு இன்னும் முடிவு வெளியாகாமலும் இருந்தது.
குஜராத்
டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரையில் குஜராத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் மட்டும் எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. குஜராத்தின் எஸ்.எஸ்.ஜி மருத்துவமனையில் 180 பேரும், GMERS மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் 115 பேரும் கொரோனா ICU வார்டுகளில் இறந்திருந்தனர்.
இந்த இரண்டு மருத்துவமனைகளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் இறந்திருக்கின்றனர். ஆனால் குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கீடு வடோதரா மாவட்டம் முழுவதிலுமிருந்து 300 பேர் மட்டுமே இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
போபால் நகரத்தில் உள்ள மயானங்கள் 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவு நிகழ்விற்குப் பிறகு எப்போது இவ்வளவு பரபரப்பாக இயங்கியதில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. ஏப்ரல் 1 -13 வரையிலான காலத்தில் 41 பேர் மட்டுமே இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவிக்கிறது. ஆனால் நியூயார்க் டைம்ஸ் செய்தி மேற்கொண்ட ஆய்வில், கொரோனாவால் இறந்தவர்களை எரிக்கக்கூடிய போபாலின் முக்கிய மயானங்களில் 1000 பேருக்கு மேல் எரிக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசம்
இந்தியா டுடே செய்தித் தொகுப்பு லக்னோவில் உள்ள பைகுந்த் தாம் மயானத்தில் 60 கொரோனா நோயாளிகளின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் லக்னோவில் 39 பேர் மட்டுமே இறந்ததாக அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19-24 வரையிலான காலத்தில் கான்பூர் நகர் மாவட்டத்தில் மட்டும் 66 பேர் இறந்ததாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் பைரோகாட் மயானத்தில் மட்டும் 406 உடல்களும், பக்வத்காட் மயானத்தில் 56 உடல்களும் எரிக்கப்பட்டுள்ளன என்று PTI அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19-ம் தேதி உத்திரப்பிரதேசத்தின் காசிதாபாத் மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே இறந்ததாக அரசு தெரிவித்தது. ஆனால் காசிதாபாத்தில் உள்ள மயானங்களில் குவிந்த உடல்களை எரிப்பதற்கு அங்கிருந்த பணியாளர்கள் வழக்கத்தை விட அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்ததை The Quint நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அம்பலப்படுத்தியுள்ளன. அங்கு உடல்களை எரிப்பதற்கு இறந்தவர்களின் உறவினர்கள் வரிசைகளில் காத்திருந்ததும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
லக்னோவில் மயானங்களிலிருந்து அணையாமல் தொடர்ந்து புகை வெளிவந்துகொண்டே இருந்ததையும் பல ஊடகங்கள் வெளிப்படுத்தின.
இப்படி பல்வேறு மாநிலங்களில் அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கும், மயானங்களில் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்பது இந்தியாவில் உண்மையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் எனும் அச்சத்தினை ஏற்படுத்துகிறது.