1) சிலிண்டர் 15 நாட்களில் 100 ரூபாய் விலையேற்றம்
2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு சிலிண்டர் விலை ரூ.734 என நிர்ணயிக்கப்பட்டது. பிப்ரவரியில் சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.147 அதிகரித்து ரூ.881-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து சிலிண்டர் விலை படிப்படியாகக் குறைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை ரூ.610 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் டிசம்பர் மாதத்துக்கான கேஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ம் தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. அந்தவகையில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்திருந்தது.
2) அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி
ஊரடங்கு தளர்வின் அடுத்தகட்டமாக திறந்த வெளியில் 50% வரை பங்கேற்பாளர்கள் பங்கேற்று அரசியல், விளையாட்டு, மதக் கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
3) அரையாண்டு தேர்வு ரத்து
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
4) பதிவை புதுப்பிக்காமல் விட்ட தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வேண்டும்
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. பதிவை புதுப்பிக்காமல் இருந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான ஒரு வழக்கில், பதிவைப் புதுப்பிக்கவும், அதன்பின் நிவாரணம் வழங்குவது குறித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட நலவாரியங்களைச் சேர்ந்த சுமார் 12 லட்சம் தொழிலாளர்களின் பதிவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பதிவைப் புதுப்பிக்கவும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
5) முருகன் விடுதலைக்கு எதிராக சதி
ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் மற்றும் நளினியை சந்தித்து பேசுவதற்கு முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி வந்தார். ஆனால் அவருக்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து புகழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிறைத்துறை ஊழலைக் கேட்க முயன்றதால் முருகனின் மீது பொய்யான காரணத்தைக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அவரது விடுதலையை தடுக்க முயல்கின்றனர். சிறையில் முருகன் துன்புறுத்தப்படுகிறார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவரைக் காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.
6) தமிழ்நாட்டில் கொரோனா
புதிதாக 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 359 போ், கோவையில் 117 போ், திருப்பூரில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 1,210 போ் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,79,291-ஆக அதிகரித்துள்ளது.
நேற்று10 போ் உயிரிழந்துள்ளனர்.
7) 7.5% இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த இந்த உள்ஒதுக்கீட்டை எதிா்த்து பூஜா என்பவர், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதனை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
8) கேரளா உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று
கேரளத்தில் உள்ளாட்சிமன்றத் தேர்தல் வாக்கு இன்று எண்ணப்படுகிறது. தேர்தல் நடந்த 6 மாநகராட்சிகளில் 3-ல் இடதுசாரி கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. எஞ்சிய 3 மாநகராட்சிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.