பள்ளித் தேர்வு

விவசாயிகளை ‘வன்முறை வெறியர்கள்’ என்று வினாத்தாளில் குறிப்பிட்ட சென்னை பள்ளிக்கு குவியும் கண்டனம்

சென்னையின் பிரபல DAV ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வின் போது ஆங்கிலம் கேள்வித் தாளில், விவசாயிகள் போராட்டத்தின் பேரணியை ’வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. 

அப்பள்ளியின் ஆங்கில வினாத்தாளின் 5 மதிப்பெண்ணுக்கான கடிதம் எழுதும் டாஸ்கிற்கு இப்படி ஒரு கேள்வியினை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் மாணவர்கள் ஒரு செய்தித்தாளின் எடிட்டருக்கு கடிதம் எழுதுவதைப் போல பதில் எழுத வேண்டும்.

அந்த கேள்வி பின்வருமாறு:

”விவசாய சட்டத்தை எதிர்த்துப் போராடும் போராட்டக்காரர்கள் குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியும், காவல்துறையினரைத் தாக்கியும் கொடூரமான வன்முறையில் ஈடுபட்டது மக்களிடையே கண்டனத்தையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளது. நமது தனிப்பட்ட தேவைகளையும், லாபத்தையும் காட்டிலும் நாட்டின் நலனே முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் வன்முறையில் ஈடுபடும் நபர்களைக் கண்டித்து உங்கள் நகரத்தில் வெளிவரும் நாளிதழின் ஆசியருக்கு கடிதம் எழுத வேண்டும். 

எந்த காரணமாக இருந்தாலும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது, தேசியக் கொடியை அவமதித்தது, காவல்துறையினரைத் தாக்கியது போன்ற சட்டவிரோத குற்றங்களை நியாயப்படுத்த முடியாது. வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்டு இப்படிப்பட்ட செயலில் ஈடுபடும் வன்முறை வெறியர்களை தடுப்பதற்கான உங்கள் வழிமுறைகளை பரிந்துரைக்கவும்.”

இதுதான் அந்த கேள்வி.

சமூக வலைதளங்களில் குவியும் கண்டனம்

விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 80 நாட்களுக்கும் மேலாக அமைதியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் தவறான நோக்கில் இந்த கேள்வித்தாள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவினரால் உருவாக்கப்பட்ட கேள்வித்தாளைப் போல இது அமைந்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவும் சூழலில், விசாரணை முடியும் முன்பே விவசாயிகள் போராட்டத்தினை வெளிப்புற சக்திகளின் தூண்டுதல் என கொச்சைப்படுத்துவது பள்ளி மாணவர்களிடையே பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகளின் அரசியலை திணிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. 

பாடகர் டி.எம்.கிருஷ்ணா

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். விவசாய சட்டங்கள் பிரச்சினையானது இன்னும் விவாதத்தில் இருக்கும்போதே வெளிப்புற சக்திகளால் தூண்டப்பட்ட வன்முறை வெறியர்கள் என்று கேள்வித்தாள் அமைக்கப்பட்டுள்ளதை அவர் சாடியுள்ளார். 

பத்திரிக்கையாளர் என்.ராம்

பத்திரிக்கையாளர் என்.ராம், ”இளையவர்களின் மனதில் விஷத்தைக் கலக்கும் விதமாக இப்பள்ளியில் யாரோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர் சொந்தமாக செய்கிறாரா அல்லது ஏதோ ஒரு மேலிடத்து உத்தரவின் பேரில் செய்கிறாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *