ராமநாதபுரம் பகுதியில் ஆகஸ்ட் 31-ம் தேதி அருண் பிரகாஷ் (23) என்பவர் மோட்டார் வாகனத்தில் வந்த ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் அருண் பிரகாஷுடன் இருந்த யோகேஸ்வரன் என்பவர் காயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் அருண் பிரகாஷை கொலை செய்தது இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பரப்ப ஆரம்பித்தனர்.
ராமநாதபுரம் பகுதியில் கள்ளர் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடியதற்காக அருண் பிரகாஷ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜக-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே செய்தி வெளியிடப்பட்டது. இந்த கொலை ஒரு பயங்கரவாதிகள் செயல் என்று சொல்லி, அருண் பிரகாஷின் ரத்தம் சொட்டுகிற உடலின் படம் பதிவிடப்பட்டது.
பாஜக தேசியச் செயலரான எச்.ராஜா, அருண் பிரகாஷ் சின்னக்கடை தெருவைச் சேர்ந்த சேட் (எ) லெப்ட் சேக் மற்றும் 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டு நேரடியாகவே இது மத ரீதியான தாக்குதல் என்றும், முஸ்லீம்கள்தான் கொன்றார்கள் என்றும் பதிவிட்டார்.
சமூக வலைதளங்களில் பாஜகவின் பரப்புரையாளராக அறியப்படும் மாரிதாஸ் என்பவர், இப்படுகொலைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ போன்ற இசுலாமிய அமைப்புகள் தான் காரணம் என்பதாக பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்கள் முழுவதும் இசுலாமியர்களுக்கு எதிரான ஏராளமான மீம்களும், பதிவுகளும் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் பரப்பப்பட்டன. இசுலாமிய மதவெறிக்கு எதிராக இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ச்சியாக அவர்கள் பரப்பியதன் காரணமாக, மத ரீதியான பதட்டங்கள் அதிகரித்தன.
ராமநாதபுரம் காவல்துறையின் விளக்கம்
இந்நிலையில் அந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வந்த ராமநாதபுரம் காவல்துறை இச்சம்பவம் குறித்து விளக்கத்தினை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. அதில் ராமநாதபுரம் வசந்தம் நகரில் நடந்த அருண்பிரகாஷ் கொலை தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம், இதில் மதச்சாயம் பூச சில நபர்கள் முயற்சிப்பதாகவும், இந்த குற்றவாளிகளில் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் பதிவிட்டது.
ராமநாதபுரம் எஸ்.பி யான வருண்குமார் ஐ.பி.எஸ், இக்கொலையில் மதப்பிரச்சினை எதுவும் இல்லை என்றும், காவல்துறை முறையான விசாரணை மேற்கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்யும் என்றும், வதந்திகளையும் பொய் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் நேரடியாக விளக்கத்தினை அளித்த காரணத்தினால் மத ரீதியான பதற்றம் உருவாகவிருந்த சூழல் தணிந்தது. பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தவறான செய்தியினை பரப்பி உருவாக்கிய பதட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மதக் கலவரம் உருவாகவிருந்த சூழலை நேரத்திற்கு சரியாகக் கையாண்ட ராமநாதபுரம் காவல்துறைக்கும், வருண்குமார் ஐ.பி.எஸ்-க்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருண்குமார் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை பூக்கடை மார்க்கெட் பகுதியில் பணியில் இருந்த கார்த்திக் ஐ.பி.எஸ் ராமநாதபுரத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
வருண்குமார் ஐ.பி.எஸ் எங்கு பணியமர்த்தப்பட உள்ளார் என்பது தெரிவிக்கப்படாமல் காத்திருப்பு பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் மதரீதியான பதற்றம் உருவாக இருந்த சூழலை சரியான நேரத்தில் சரியாகக் கையாண்ட வருண்குமார் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வருண்குமார் பணியிட மாற்றம் குறித்து எழும் கேள்விகளும், கண்டனங்களும்
மதரீதியாக வன்முறையை உருவாக்க முயன்ற பாஜகவின் திட்டம் பலிக்காமல் போனதால், அதற்கு தடையாக இருந்த வருண்குமார் ஐ.பி.எஸ் அதிமுக அரசினால் தண்டிக்கப்படுகிறாரா என்றும் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தனது சமூக ஊடக பக்கத்தில் காவல்துறை இயக்குனருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
- வருண்குமார் ஐ.பி.எஸ் பணிமாற்றம் செய்யப்பட்டது ஏன்?
- எச்.ராஜா ராமநாதபுரத்தில் நுழைவதை வருண் தடுத்தாரா?
- ஒரு சூழலை நேர்த்தியாக கையாண்ட எஸ்.பி-ஐ எதற்காக காத்திருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்?
- நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள் டி.ஜி.பி அவர்களே? மக்களுக்கா அல்லது முதுகெலும்பில்லாத அரசியல் எஜமானர்களுக்கா?
அருண்பிரகாஷ் கொலையில் மதரீதியான பின்புலங்கள் இல்லை என்று வருண்குமார் அளித்த விளக்கத்தினால் பாஜக தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும், டெல்லிக்கு வெளியே உள்ள பாஜக தலைவர் ஒருவர் தமிழ்நாடு அரசாங்கத்திடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தி நியூஸ் மினிட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வருண்குமார் ஐ.பி.எஸ் மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டை ஆள்வது அதிமுகவா? பாஜகவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். போதைப் பொருள் மாஃபியா கும்பல்களுக்கிடையிலான முன்பகையின் காரணமாக நடைபெற்ற இந்த கொலைக்கு வகுப்புவாத சாயம் பூச பாஜக தரப்பினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த காலங்களிலும் இதேபோல் ராமநாதபுரத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வகுப்பு வாத வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி?
எந்தவொரு குற்ற சம்பவத்தில் ஒரு இசுலாமியர் பெயர் இருந்தாலும் உடனடியாக அதனை மத ரீதியான குற்றமாக மாற்றுவதை எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்கள் பலரும் மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல் ஒரு குற்றச் செயலில் இசுலாமியர் ஒருவரின் பெயர் வந்துவிட்டால் அந்த குற்றச் செயலை “பயங்கரவாதம்” என்றும் “ஜிகாத்” என்றும் குறிப்பிட்டு இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக மத ரீதியான பதற்றத்தினை உருவாக்கும் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல்தான் கொரோனாவை இசுலாமிய பயங்கரவாதிகள் பரப்புகிறார்கள் என்று இசுலாமியர்களுக்கு எதிரான பரப்புரையினை சமூக வலைதளங்களில் மேற்கொண்டார்கள்.
இசுலாமியர்களுக்கு எதிரான இந்த வெறுப்புப் பரப்புரையினை மேற்கொள்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இத்தகைய வெறுப்பு பரப்புரைகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இப்போது வரையில் அருண் பிரகாஷ் கொலையினை முஸ்லீம் பயங்கரவாதிகள் செய்ததாக பரப்பிய எச்.ராஜா உள்ளிட்ட எவர் மீதும் வழக்கு பதியப்படவில்லை. ஆனால் மதச்சாயம் சாயம் பூச வேண்டாம் என தெரிவித்த காவல்துறை அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.
அப்படியென்றால் தமிழ்நாடு அரசும் மதக்கலவரத்தை உருவாக்க நினைக்கும் சக்திகளுக்கு துணைபோகிறதா என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.