பட்ஜெட் கூட்டத்தொடர்

தற்போது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயத்திற்கு ஆதரவான மசோதாக்கள் – பகுதி 1

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் அமர்வில் 20 மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் தனியார்மயத்திற்கு ஆதரவான மசோத்தாக்களை இங்கே காண்போம்.

1. இந்திய விமான நிலைய கட்டண ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா 2021 (The Airports Economic Regulatory Authority of India (Amendment) Bill, 2021)

இதுவரை ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகள் வந்து செல்லக்கூடிய விமான நிலையங்கள் பெரிய விமான நிலையங்கள்  (Major Airports) என அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள 24 விமான நிலையங்கள் இப்பெரிய விமான நிலைய வரையறைக்குள் வருகின்றன. 

இதுவரை இவ்விமான நிலையங்களின் பயன்பாட்டு கட்டணங்களை இந்திய விமானத் துறைக்கு உட்பட்ட இந்திய விமான நிலைய கட்டண ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்து வருகிறது. தற்போது இம்மசோதாவானது பெரிய விமான நிலையங்களுக்கான வரையறையை 15 லட்சம் பயணிகளுக்கும் மிக அதிகமாக மாற்றியமைக்கிறது. 

இதன்மூலம் இந்திய விமான நிலைய கட்டண ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் நிர்ணயிக்கும் பெரிய விமான நிலைய வரையறையில் உள்ள விமான நிலைய எண்ணிக்கை குறைக்கப்படும். மோடி அரசு விமானத் துறையை தனியார்மயமாக்கி வரும் சூழலில், விமான நிலைய பராமரிப்புத் தொழிலில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் கட்டண ஒழுங்குமுறைகள் இல்லாமல் மிக அதிக கட்டணம் வசூலிக்க இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் அதானி நிறுவனத்திற்கு பல்வேறு விதிமுறைகளை மீறி ஆறு விமான நிலையங்களுக்கான ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வாரணாசி, புவனேஷ்வர், இந்தூர், அம்ரித்ஷர், ராய்பூர் மற்றும் திருச்சி விமான நிலையங்களும் தனியார்வசமாக்கப்பட இருக்கின்றன. 

2. கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி (திட்டங்களுக்கு) நிதி வழங்குவதற்கான தேசிய வங்கி மசோதா,2021 (The National Bank for Financing Infrastructure and Development Bill, 2021)

கடந்த 22-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி (திட்டங்களுக்கு) நிதி வழங்குவதற்கான தேசிய வங்கி மசோதா-2021 ஆனது, இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்கென்று பிரேத்யமாக தேசிய வங்கி அமைப்பது தொடர்பானதாகும். இதனை வளர்ச்சி நிதி நிறுவனங்கள் (Developement Finance Institutions) என குறிப்பிடுகின்றனர்.

 தனியார் நிறுவனங்களும் வளர்ச்சி நிதி நிறுவனங்களாக பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனியார் நிதி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்; அரசு விரும்பும் பட்சத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலேயும் வருமான வரி விலக்கு நீட்டிக்கப்படும். 

குறிப்பிட்ட வளர்ச்சி நிதி நிறுவனங்கள் தணிக்கை, மேற்பார்வை என அரசின் எவ்வித கண்காணிப்பு நடைமுறைக்கும் உட்பட்டதாக இல்லை. எனவே, இம்மசோதா மீதான விவாதத்தின் போது, இம்மசோதாவினை பாராளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பி வைக்கக் கோரப்பட்டது; ஆனால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

3. தாது மற்றும் சுரங்க (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா,2021 (Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2021)

கொரோனா பொது ஊரடங்கு போது நிவாரணத் தொகுப்புகளை அறிவித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கூடவே பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் சில முக்கியத் துறைகளில் தனியார்மயத்திற்கு வழி வகுத்தார். அவற்றில் சுரங்கத் தொழிலில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பும் அடங்கும். 

அந்த அறிவிப்புக்கான சட்ட அங்கீகாரமே தாது மற்றும் சுரங்க (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா-2021. இச்சட்ட மசோதா மூலம் சுரங்கத் தொழிலில் தனியார் வணிகத்திற்கு இதுவரையிலிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதுடன், சுரங்கங்கள் மீதான் அரசின் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக மாநில அதிகாரத்திற்குட்பட்ட சுரங்கங்கள் மீதான மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கக்கூடிய அம்சங்கள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. 

கடந்த 15-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இம்மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கபப்ட்டுள்ளது.

படிக்க: தங்கம், வெள்ளி, நிலக்கரி போன்ற கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது பாஜக அரசு

இவை தவிர மேலும் சில மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை:

4. கப்பற் போக்குவரத்து சாதன மசோதா-2021(The Marine Aids to Navigation Bill, 2021)

கப்பற் போக்குவரத்து கண்காணிப்பு சாதனங்களை நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்துவதற்காக இச்சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே கையெழுத்திடப்பட்ட COMCASA, LEMOA மற்றும் BECA ஒப்பந்தங்கள் தொடர்பான அம்சங்களை செயல்படுத்துவதற்காக இச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது போல் தெரிகிறது. 

5. தீர்ப்பாய சீர்திருத்த மசோதா-2021( The Tribunals Reforms (Rationalisation and Conditions of Service) Bill, 2021)

இம்மசோதாவானது நடைமுறையிலுள்ள தீர்ப்பாய நடவடிக்கைகளில்  திருத்தங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தீர்ப்பாய தலைமை அலுவலருக்கான பதவிக்காலத்தை 4 ஆண்டுகளாக மாற்றியிருக்கிறது. 

6. பட்டியல் சாதிகள் குறித்து இந்திய அரசமைப்பு உத்தரவு (திருத்த) மசோதா-2021(The Constitution ( Schedule Castes) Order (Amendment) Bill)

இம்மசோதா, பள்ளர் சமூகத்தின் உட்பிரிவிலுள்ள 7 சாதிகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளராக அறிவித்துள்ளது. 

7. தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (திருத்தம்) மசோதா, 2021 (The National Institute of Pharmaceutical Education and Research (Amendment) Bill, 2021)

இம்மசோதா அகமதாபாத், கெளஹாத்தி, ஹஜிப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் ரேபரேலி பாராமெடிக்கல் கல்லூரிகளை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லூரிகளாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *