பிரதமர் வீட்டுவசதி திட்டம் ஊழல்

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் ஊழல்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் போலி வீட்டுக்கடன் கணக்குகளை உருவாக்கி DHFL நிறுவனம் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இம்மோசடியின் மூலம் பாஜக அரசின் சாதனைத் திட்டமாக சொல்லப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக DHFL நிறுவனத்தின் உரிமையாளர்களான கபில் வதவான், தீரஜ் வதவான் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

கபில் வதவான், தீரஜ் வதவான்

போலிக் கணக்குகளில் பணப்பரிமாற்றம்

வீட்டுக்கடன் வழங்கும் தனியார் நிறுவனமான DHFL, இரண்டு லட்சத்து அறுபதாயிரம் போலி வீட்டுக்கடன் கணக்குகள் மூலம் ரூ.14,046 கோடியைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதில் 88,651 போலி வீட்டுக்கடன் கணக்குகள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளர்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது ஆகும். மோசடி செய்த ரூ.14,046 கோடியில் ரூ.11,755.79 கோடியை, தனது செயல்படாத போலி நிறுவனக் கணக்குகளில் பணப்பரிமாற்றம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இவற்றில் பெரும்பாலான போலி கடன் கணக்குகளின் மூலம் குடிசை மாற்றுத் திட்ட மானியத் தொகையிலும் DHFL நிறுவனம் மோசடி செய்துள்ளது. 

முன்னரே மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான DHFL

DHFL நிறுவனமானது இதற்கு முன்னரே பல மோசடிகளில் ஈடுப்பட்டது கண்டறியப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.13000 கோடி கடன் பெற்று அதனை தனது 79 செயல்படாத போலி நிறுவனங்களுக்கு வழங்கி மோசடியில் ஈடுபட்டிருந்தது DHFL நிறுவனம்.

யெஸ் வங்கி திவாலானதன் பின்னணியில் DHFL

குறிப்பாக யெஸ் வங்கி திவாலாகிப் போனதற்கு காரணமான வாராக் கடன் பிரச்சினையில் DHFL நிறுவனத்திற்கும் முக்கியப் பங்குண்டு. யெஸ் வங்கியில் ரூ.4,450 கோடி கடன் பெற்ற DHFL நிறுவனம் அதனை திருப்பி செலுத்தாமல் யெஸ் வங்கியின் வாராக் கடனாக மாற்றியது.

அதை வாராக் கடனாக அறிவிக்கச் செய்து பயனடைந்ததற்காக DHFL நிறுவனமானது யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ரானா கபூரின் நிறுவனத்தில் ரூ. 600 கோடி முதலீடு செய்தது. 

யெஸ் வங்கியில் செலுத்தப்பட்ட மக்கள் பணத்தைப் பெற்று, அதனை தங்களது சுயலாபத்திற்காக  பயன்படுத்திக் கொண்டதாகக் கூறி ரானாகபூரும்,  DHFL நிறுவனத்தின் கபில் வதவானும் கைது செய்யப்பட்டனர். 

மின்வாரிய ஊழியர்களின் வைப்பு நிதியில் மோசடி

அதே போல DHFL நிறுவனம், உத்திரப்பிரதேச மின்வாரிய ஊழியர்களின் வைப்பு நிதியில் ரூ. 2,200 கோடி ஊழல் செய்தது கண்டறியப்பட்டது. 

பாஜகவும் DHFL-ம்

கடந்த ஆண்டு அமலாக்கத் துறை DHFL நிறுவனத்தின் கீழுள்ள செயல்படாத 79 நிறுவனங்கள் பணிப்பரிமாற்ற மோசடி செய்துள்ளதை கண்டறிந்த போதே, DHFL நிறுவனம் இப்படி பல்வேறு வழிகளிலும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்கு அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் பாஜகவுடன் கொண்டுள்ள உறவே காரணமென குற்றஞ்சாட்டி இருந்தனர். குறிப்பாக DHFL நிறுவனத்திடம் ரூ.10 கோடி நன்கொடையாகப் பெற்று, அந்நிறுவனம் பல்லாயிரம் கோடி மோசடி செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் மோடி அரசு ஊழல் செய்திருக்கிறது என கூறப்பட்டது. 

அதுபோலவே DHFL நிறுவனம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியதற்கு பாஜக அரசு துணை போயுள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது. 

பாஜக தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய அரசின் சாதனையாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைக் கூறிவரும் நிலையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டப் பயனாளரென்று ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட்ட பெண்ணொருவர், தான் இன்னும் கழிப்பறை வசதி கூட இல்லாத குடிசை வீட்டில் வசிப்பதாக கூறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் DHFLன் ஊழல் வெளிவந்துள்ள நிலையில் அது பாஜகவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *