“இந்தி தெரியாத நபர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறவும்” என்று மத்திய அமைச்சக செயலாளர் ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்தான பயிற்சிக் கூட்டம் தொடங்கியது. மூன்று நாள் பயிற்சி அமர்வு முதன்மை பயிற்சியாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் இறுதி நாளான வியாழக்கிழமை அன்று கலந்துகொண்ட மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா தனக்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது எனவும், ஆங்கிலம் தேவைப்படுபவர்கள் இக்கூட்டத்தில் இருந்து வெளியேறுமாறும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் பரவிய இச்செய்தியைத் தொடர்ந்து செயலாளர் ராஜேஷ் கொடேச்சா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சர்ச்சைக்குரியதாக தான் பேசியதாக வரும் வீடியோவில் மாறுபாடுகள் செய்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளதாகவும், மேலும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் சில விஷமிகள் உள்நுழைந்ததாகவும், இந்தியில் பேசுமாறு தொடர்ச்சியாக இடையூறு செய்ததாகவும் கூறினார்.
மொத்த வீடியோவும் பொதுத்தளத்தில் மக்களின் பார்வைக்கு போடப்பட்டு இருப்பதாகவும் அதில், தான் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கலந்து பேசி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டை முன்வைத்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், இக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 37 மருத்துவர்கள் கலந்து கொண்டதாகவும், தங்களுக்கு தொடக்கம் முதலே இந்தியில் கூறப்பட்ட தகவல்கள் புரியாததால் ஆங்கிலத்தில் உரையாற்றுமாறு தெரிவித்ததாகவும் கூறினர். ஆனால் அது சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளப்படாமல் கூட்டம் நடைபெற்றது என்றும், இறுதியில் ஹிந்தி தெரியாத நபர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறும் படியும் செயலாளர் கூறினார் என்றனர்.
யார் இந்த வைத்யா ராஜேஷ் கோடேச்சா?
இவர் ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேதா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர். தன்னை குஜராத்தி தொழில்முனைவோராக அறிமுகப்படுத்திக் கொள்பவர். அவரது முதல் வணிக முயற்சியான கிளினிக்கை 1988-ம் ஆண்டு நரேந்திர மோடி பாஜக பொதுச் செயலாளராக இருந்தபோது துவக்கி வைத்தார். 2015-ம் ஆண்டு அவருக்கு பாஜக- அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.
உலக ஆயுர்வேதா அறக்கட்டளையின் அறங்காவலராக இருப்பதாக அவரது பயோ டேட்டாவில் தெரிவித்துள்ளார். உலக ஆயுர்வேதா அறக்கட்டளை என்பது விஜ்னான பாரதி அமைப்பினால் துவங்கப்பட்டதாகும். விஜ்னான பாரதி என்பது ஆர்.எஸ்.எஸ்-சின் துணை அமைப்புகளில் ஒன்றாகும்.
இவர் 2017-ம் ஆண்டு ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல் ஒரு அமைச்சகத்தின் செயலாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் முக்கிய தலைவரான நானாஜி தேஷ்முக்குடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். நானாஜியை தனது வழிகாட்டியாக குறிப்பிடக் கூடியவர்.
தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பு
இந்தி தெரியாதவர்களை வெளியேற சொல்லிய இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆயுஷ் செயலாளர் மொழி வெறியுடன் மிரட்டல் விடுத்துள்ளார் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆளும் பாஜக அரசு, அதிகாரிகளின் மூலம் இந்தித் திணிப்பை அமல்படுத்த முயல்வது இதன் மூலம் வெளிப்படுவதாகவும் கூறியுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் மறுபடியும் நடக்காமல் இருக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் சார்பில் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தை இதுபோன்ற அமர்வுகளில் பயன்படுத்த அழுத்தம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியாவில் அரசியல் சாசனத்தில் ஏற்க்கபட்டுள்ள அத்தனை அட்டவணை மொழிகளையும் அலுவல் மொழியாக கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், “இது இந்திய அரசுதானே தவிர இந்தி அரசு இல்லை என்பதை மறக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்
கருத்து தெரிவித்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் “தங்களுக்கு இந்தி தெரியவில்லை, நீங்கள் இந்தியரா” என்று கேள்வி எழுப்பியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி-களாகிய கார்த்தி சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரும், இந்திய அரசு ஒற்றை மொழிக் கொள்கையை நோக்கி நகர்வதை கேள்வி எழுப்பியுள்ளனர்
ஆங்கில மொழி தெரியாதது பிரச்சனையில்லை, ஆனால் இந்தி தெரியாத நபர்களை வெளியேற சொன்ன ஆணவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கார்த்திக் சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு எம்பியான தாகூர் இது குறித்தான கேள்வியை வரும் பாராளுமன்ற அமர்வில் எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்எஸ்எஸ்-ன் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி கொள்கைக்கான நகர்வுகளா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.