பி.ஆர்.ஷெட்டி எனும் இந்திய தொழிலதிபர் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நெருக்கமானவர். இவர் 6.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வங்கிகளில் மோசடி செய்ததாக ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும் அமீரகத்தில் (UAE) உள்ள வங்கிக் கணக்குள் மற்றும் முதலீடுகளை முடக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
NMC ஹெல்த் நிறுவனத்தினால் பல வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள்
பி.ஆர் ஷெட்டி அமீரகத்தின் மிகப் பெரிய மருத்துவத்துறை நிறுவனமான NMC ஹெல்த்-ன் நிறுவனராக இருந்து வருகிறார். இந்த நிறுவனம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த நிறுவனத்தை கண்காணிக்கவும் பல்வேறு நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் ஷெட்டி இந்தியாவிற்கு தப்பி வந்துவிட்டார். 80க்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களில் இவரது குழுமம் ஏராளமான கடன்களை பெற்றிருந்திருக்கிறது.
ஓமன் HSBC வங்கியிலிருந்து 16 மில்லியன் டாலர், துபாய் இஸ்லாமிய வங்கியிலிருந்து 425 மில்லியன் டாலர், அபுதாபி இசுலாமிய வங்கியிலிருந்து 291.4 மில்லியன் டாலர் என மத்திய கிழக்கு நாடுகளின் பல வங்கிகளில் இந்த நிறுவனத்தின் பெயரில் கடன்கள் பெறப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உடனான தொடர்புகள்
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் தொடங்குவதற்கு முன்பாக பி.ஆர்.ஷெட்டி இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்- அரசியல் கட்சியான ஜனசங்கத்தின் சார்பாக கர்நாடகாவின் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது பாஜகவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் இந்த ஷெட்டிக்காக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க செய்தியாக வளைகுடா நாடுகளில் பார்க்கப்படுகிறது.
மேலும் 2016ம் ஆண்டு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நடத்திய தொழிலதிபர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர். இசுலாமிய வளைகுடா நாடுகளில் தனது வேலைத்திட்டத்தை முன்வைத்து NRI தொழிலதிபர்களை வைத்து நடத்தப்பட்ட கூட்டமாகும்.
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோடியை சந்தித்த ஷெட்டி இந்தியாவில் தனது மருத்துவ நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்களை தொடங்க விருப்பப்படுவதாக தெரிவித்திருந்தார். மோடியின் தலைமையிலான புதிய இந்தியாவில் 5 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளதாக ஷெட்டி தெரிவித்திருந்தார்.
காஷ்மீரில் மோடி அரசு தன்னிச்சையாக அரசியல் சாசன ஒப்பந்தத்திற்கு மாறாக பிரிவு 370-ஐ நீக்கி உத்தரவிட்ட போது, அரபு ஊடகம் ஒன்றுக்கு ஷெட்டி அளித்த நேர்காணலில், காஷ்மீரில் 3000 ஏக்கர் நிலத்தை வாங்கி திரைப்பட நகரம் கட்டவுள்ளதாக பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். காஷ்மீர் மக்களின் நிலங்களின் மீது காஷ்மீர் தேசிய இன மக்களைத் தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை, வேறு யாரும் அங்கு நிலத்தை வாங்க முடியாது என்று இருந்த அரசியல் சாசன ஒப்பந்தத்தை துப்பாக்கி முனையில் மோடி அரசு நீக்கியது ஷெட்டி போன்ற ஊழல் முதலாளிகள் லாபம் கொழிப்பதற்குத் தானா என்ற கேள்வியை இது எழுப்பச் செய்கிறது.
ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இசுலாமியர்கள் காரணம் என மதக் கலவரத்தை தூண்டி, சிறுபான்மையினரை ஒடுக்க முயன்றதற்காக பாஜக அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வளைகுடா நாடுகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருங்கிய தொழிலதிபர் ஷெட்டி ஊழல் செய்து விட்டு இந்தியாவிற்கு தப்பியிருப்பது பாஜக-விற்கு மேலும் சிக்கலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.