Rajnath Singh

சுயசார்பு இந்தியாவா? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகள்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆகஸ்ட் 9, 2020 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணுவத்திற்குப் பயன்படுத்தும் 101 வகையான ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் போன்றவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். டிசம்பர் 2020 முதல் துவங்கி டிசம்பர் 2025 வரையிலான 5 ஆண்டுகாலத்திற்கு இந்த உத்தரவு செல்லும் என்று அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ‘சுயசார்பு இந்தியா’ எனும் முழக்கத்திற்கு வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த உத்தரவு ஆயுத உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்கப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பீரங்கிகள், துப்பாக்கிகள், ரேடார்கள், சோனார் தொழில்நுட்பக் கருவிகள், போக்குவரத்து விமானங்கள், லைட் கோம்பாட் ஹெலிகாப்டர்கள் (Light Combat Helicopters) உள்ளிட்ட பல பாதுகாப்புத் தளவாடங்களை இந்த 101 தளவாடங்களின் பட்டியல் உள்ளடக்கியுள்ளது. அந்த பட்டியலுக்கான இணைப்பு.

இந்த 101 உபகரணங்களின் பட்டியலைக் காட்டி, பாஜக அரசானது பாதுகாப்பில் இந்தியாவை சுயசார்போடு தன்னிறைவு அடையச் செய்வதாக பெருமளவிலான செய்திகள் பேசப்பட்டு வருகிறது. ராஜ்நாத் சிங் பேசியுள்ள சுயசார்பு இந்தியா என்ற பதத்திலும், அவரது அறிவிப்பிலும் ஒரு மிகப்பெரிய முரண் இருக்கிறது.

1. உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு முதலீடுகள்

அதாவது, இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட இந்த 101 தளவாடங்களை இந்தியாவில் உள்ள உள்நாட்டு பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்யும். ஆனால் இந்திய நிறுவனங்கள் அவற்றை தனியாக சொந்தமாக உற்பத்தி செய்யவேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து, அவர்களின் முதலீட்டோடு இந்திய நிறுவனங்கள் ஆயுத உற்பத்தியினை மேற்கொள்ளலாம். வெளிநாட்டு கார்ப்பரேட் முதலீடுகள் இந்த 101 தளவாடங்களின் உற்பத்தியில் பல வழிகளில் அனுமதிக்கப்படும்போது, அது எப்படி சுயசார்பு உற்பத்தியாக இருக்க முடியும்?

2. 26% சதவீதத்திலிருந்து 74% சதவீதமாக உயர்ந்திருக்கும் அந்நிய முதலீடு

ஆண்டுதோறும் இந்தியா 100 பில்லியன் டாலர் (சுமார் ஏழரை லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கான ஆயுதங்களை ராணுவத்திற்கு கொள்முதல் செய்கிறது. எனவே 2014-ல் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இதுவரை பாதுகாப்புத் துறையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை ஆராய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. 

மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே முதலில் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவு என்பது 26% சதவீதத்திலிருந்து 49% சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு 100% வரை கூட அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த 49% சதவீதம் என்பது இந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது 74% சதவீதமாக இன்னும் உயர்த்தப்பட்டது. இந்தியாவின் ஆயுதத் தளவாட உற்பத்தியில் 74 சதவீதத்தினை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பது எப்படி சுயசார்பாக பார்க்க முடியும்?

3. அமெரிக்க நிறுவனத்திடம் வாங்கப்பட்ட 1,40,000 துப்பாக்கிகள்

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் Indian Small Arms System (Insas) எனும் துப்பாக்கி வகைகளை மாற்றி விட்டு, புதிய வகை துப்பாக்கிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. Insas என்பது 5.56 X 45 mm அளவுள்ள உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வகையாகும். இதற்குப் பதிலாக 1,40,000 மாற்று துப்பாக்கிகளை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இவற்றினை உற்பத்தி செய்யக் கூடிய திறன் இந்திய நிறுவனங்களுக்கே இருக்கும்போதிலும், அதற்கான ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் (பிப்ரவரி, 2020) கையளிக்கப்பட்டது. SIG SAUER எனும் 7.62X51 mm அளவுள்ள 70 ஆயிரம் துப்பாக்கிகளுக்கான ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டது. தற்போது கடந்த மாதம் (ஜூலை, 2020) மீண்டும் இன்னொரு 70,000 துப்பாக்கிகளுக்கான ஒப்பந்தமும் அமெரிக்க நிறுவனத்திற்கே அளிக்கப்பட்டது. இது இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறியுள்ளார்கள். 

உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கிகளை உள்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும்போது, எதற்காக இன்னும் வெளிநாடுகளிலிருந்து துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். இதுவும் ராஜ்நாத் சிங் அவர்கள் சொல்லக் கூடிய சுயசார்பு இந்தியா என்பதற்கு முரணாக இல்லையா

4. நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒப்பந்தம் புதிதாக உள்நாட்டு உற்பத்திக்கு வருமா?

மேலும் ராஜ்நாத் சிங் 101 ஆயுதங்களின் இறக்குமதியை நிறுத்துவதன் மூலம், 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான ஒப்பந்தங்கள் இந்தியாவின் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இன்னும் 6 அல்லது 7 வருடத்திற்குள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த 101 ஆயுத தளவாடங்களின் பட்டியலில் ஏற்கனவே இந்தியாவில் தயாரிப்பில் இருக்கிற மற்றும் ஆராய்ச்சியில் இருக்கிற உபகரணங்களின் பட்டியலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், பொதுத்துறை நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான 123 Tejas Light Combat Aircraft-களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. அப்படியென்றால் ராஜ்நாத் சிங் சொல்கிற அந்த 4 லட்சம் கோடி ரூபாயில், ஏற்கனவே இங்கு தயாரிக்கப்படும் 85,000 கோடி மதிப்புள்ள விமானங்களும் அடங்கும். இதேபோல் ஏற்கனவே உள்நாட்டில் தயாரிக்கப்படும் பல ஆயுதங்களின் பெயர்கள் அந்த 101 பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால் அந்த 4 லட்சம் கோடி எனும் மதிப்பீட்டில் உண்மையிலேயே இந்த புதிய அறிவிப்பால் எவ்வளவு பணம் புதியதாக உள்நாட்டு ஒப்பந்தத்திற்கு வரும் என்பது தெரியவில்லை.

5. ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா

மோடியின் ஆட்சியில் 2015 முதல் 2019 வரையிலான ஆண்டு காலத்தில் உலகத்திலேயே வெளிநாடுகளிலிருந்து அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்கிற இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. உலகத்தில் நடைபெறும் ஆயுத இறக்குமதியின் மொத்த பங்கில் 9.2% இந்தியாவில் தான் நடக்கிறது என்று Stockholm International Peace Research Institute (SIPRI) தெரிவித்துள்ளது. ஆயுத கொள்முதலுக்கு முற்றிலுமாக வெளிநாட்டு நிறுவனங்களை நம்பியுள்ள நாடாக இந்தியாவை மாற்றிய பிறகு, சுயசார்பு எனும் சொல் உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக உள்ளதா? 

ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தத்தினை பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்தின் கையிலிருந்து மாற்றிவிட்டு, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்து, அதில் பல சர்ச்சைகள் எழுந்த பிறகு, அந்த விமானங்களின் வருகையை திருவிழா போல ஒருபுறம் காட்டி மகிழ்ந்துவிட்டு, மறுபுறம் சுயசார்பு என பேசுவது பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கும், அவர்களின் பேச்சிற்கும் சம்மந்தம் இல்லாததாய் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *