தூங்கும் கட்சிகள்

நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!

தமிழகத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும், தங்களது கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு வேட்பாளர் தேர்வு என்று மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனல்பறக்கும் இந்த அரசியல் களத்தில் கடந்த காலங்களில் எங்கு இருந்தது என்று தெரியாத பல கட்சிகள், சாதி சங்கங்கள் போன்றவை பெரிய கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவு என்று தஙகளது லெட்டர் பேடுகளை தூசிதட்டி எடுத்து வருவார்கள். அதேபோல தேர்தலில் பங்கெடுப்பதற்கு மட்டும் தூக்கம் கலைந்து தேர்தல் நேரத்தில் ஆக்டிவாகும் சிலிப்பர் செல் கட்சிகள் என்று சிலவற்றை வகைப்படுத்தலாம். தமிழ்நாட்டில் மைய சிக்கல்களாக ஒட்டுமொத்த மக்களும் பல பிரச்சினைகளுக்காக போராடும்போது இவர்களை பெரிதாக வெளியில் எங்கும் காண முடியாது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தலில் மட்டும் கலந்துகொண்டு, அடுத்த தேர்தல் வரும்வரை காணாமல் போகும் ஐந்து கட்சிகளின் பட்டியல் இங்கே:  

5. நாட்டாமை சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி

இந்த பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பது நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி. 

திமுக-வில் ராஜ்யசபா உறுப்பினர் பதவி அனுபவித்துவிட்டு, அங்கிருந்து  அதிமுக-விற்கு சென்று, பின்னர் அங்கிருந்து வெளியேறி சமத்துவ மக்கள் கட்சியைத் துவங்கி, மீண்டும் யூ டர்ன் அடித்து அதிமுக உடன் கூட்டணி வைத்தார். 

2011 தேர்தலில் அனைத்து நாடார் அமைப்புகளும் சேர்ந்து உருவாக்கிய  பெருந்தலைவர் மக்கள் கட்சியை, துவங்கிய அன்றே உடைத்து அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி என்று இரண்டு சட்டமன்ற தொகுதிகளைப் பெற்று, அதன்மூலம் சட்டமன்றத்திற்கு சென்றார் சரத்குமார். 

அதன்பிறகு 2016 சட்டமன்றத் தேர்தல்வரை கட்சியையும், தொகுதியையும் மறந்துவிட்டு சினிமாவில் நடிக்கச் சென்றவர், 2016 சட்டமன்றத் தேர்தலின்போது திரும்பி வந்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் இரண்டு தொகுதிகளைக் கொடுத்த ஜெயலலிதா, 2016-ல் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்தார். அதுவும் வெற்றி வாய்ப்பிருந்த தென்காசியில் இல்லை, திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணணை எதிர்த்து நிற்கச் சொன்னார்.

வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட அவர் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வருவதற்கு முன், கட்சியில் இன்னொரு எம்.எல்.ஏ-வான எர்ணாவூர் நாராயணன் கட்சியில் பாதி பேரை அழைத்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் சென்றுவிட்டார். அந்த தேர்தலின் தோல்விக்குப் பிறகு, நடிகர் சங்கத் தேர்தலில் பிசியான சரத்குமார் கட்சியை பாஜக-வில் இணைக்கப் போவதாக அவ்வப்போது செய்திகளில் வருவார். தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியின் ரவி பச்சமுத்து-வுடன் சேர்ந்து போய் கமலஹாசனிடம் சென்று 40 தொகுதிகளில் வாங்கியிருக்கிறார்.

4. எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி

நான்காவது இடத்தில் எஸ்.ஆர்.எம் நிறுவனர் பச்சைமுத்து துவங்கிய இந்திய ஜனநாயகக் கட்சி இருக்கிறது.

பச்சமுத்து-வினால் ஏப்ரல் 29, 2010 இல் துவங்கப்பட்ட கட்சி 2011 தேர்தலில் சிவகாமி ஐ.ஏ.எஸ் இன் சமூக சமத்துவப் படை, ஜான் பாண்டியனின்  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அனைத்து தொகுதியிலும் கட்டுத்தொகை இழந்தது. அதன்பிற்கு நான்கு ஆண்டுகளாக எங்கிருந்தது என்று தெரியாமல் இருந்த கட்சி, நேரடியாக 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் ஒரு இடம் வாங்கி   பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

பின்னர் மீண்டும் இரண்டு ஆண்டுகள் தொழிலைப் பார்க்கச் சென்ற பச்சமுத்து 2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தாமரையில் நின்றபோது என்ன வாக்கு வாங்கியிருப்பார் என்று  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மூன்று தேர்தல்களில் டெபாசிட் வாங்காதவர், 2019 பாராளுமன்றத் தேர்தலில் உதயசூரியனில் நின்று பாராளுமன்றம் சென்றார். 

அதற்கு பின்னும் தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு பச்சமுத்து பங்கேற்றிருந்த திமுக கூட்டணி நடத்திய போராட்டங்களுக்குக் கூட பச்சமுத்து செல்லவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மகனை எம்.எல்.ஏ ஆக்குவதற்கு அறிவாலயத்தின் கதவைத் தட்டி திறக்காததால் கமலஹாசனை சந்திக்க அனுப்பிவிட்டார். 234 தொகுதிகளுக்கு எங்கிருந்து ஆள் தேடுவது என்று திணறிக் கொண்டிருந்த கமலஹாசனும், 40 தொகுதிகளைக் கொடுத்தார். அதில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்து விட்டு இன்னும் இருபது தொகுதிகளுக்கு வேட்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

3. பாபநாசம் பண்ணையாரின் த.மா.க

மூன்றாவது இடம் பிடித்திருப்பது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, ”வளமான தமிழகம் வலிமையான பாரதம்” என்ற முழக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் ஜி.கருப்பையா மூப்பனார். அவரது மறைவுக்கு பின் அவரது மகனான ஜி.கே.வாசன் கட்சியை காங்கிரசில் சேர்த்து 2004 மற்றும் 2009 ஆகிய இரண்டு பாராளுமன்ற அமைச்சரவைகளிலும் பதவியை அனுபவித்து விட்டு,  2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த உடன் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறி த.ம.கா-வை துவங்கினார். 

கட்சி துவங்கி முதல் மாநாட்டை மட்டும் நடத்திவிட்டு, நேரடியாக 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் சேர போயஸ் தோட்டத்திற்கு செல்லும் வழிமேல் விழிவைத்து காத்திருந்தார்.

234 தொகுதியிலும் ’இரட்டை இலை’ என்ற கனவில் இருந்த ஜெயலலிதா  போயஸ் தோட்டத்து கதவை அடைத்து விட, அதிமுக அணியில் இடமில்லை என்ற உடன் பீட்டர் அல்போன்ஸ் உட்பட பல தலைவர்கள் மீண்டும் காங்கிரசிற்கு ஓடினர். சிலர் மத்திய அரசில் இருக்கும் பாஜகவிற்கு தாவினர். எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றிருந்த வாசனுக்கு மக்கள் நலக் கூட்டணி வாழ்க்கை கொடுத்தது. 

அக்கூட்டணியிலும் அத்தனை தொகுதியிலும் டெபாசிட் இழந்த பிறகு, இன்னும் கட்சியிலிருந்து ஏராளமானோர் வெளியேறினர். பழனி எம்.பி கார்வேந்தன் பாஜகவிற்குத் தாவ, பின்னாலயே பாஜக கூட்டணிக்குச் சென்றார் ஜி.கே.வாசன். வேலூர் ஞானசேகரன் அமமுக-விற்குச் சென்றுவிட, 2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை ரெஸ்ட் எடுத்து விட்டு, பாஜக தயவில் அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியை வாங்கினார். சைக்கிள் சின்னம் கிடைக்காமல் ஆட்டோ சின்னத்தில் நின்று தோல்வியடைந்தார்.

அவ்வப்போது பாஜக-வில் கட்சியை இணைக்கப் போகிறார் என்று செய்திகளில் மட்டும் அடிபடும் வாசனின் பெயர், அதிமுக-வில் பாஜக-விற்கான கோட்டாவில் ராஜ்யசபா உறுப்பினர் பட்டியலில் வந்தது.  தான் கட்சி நடத்துவதற்கான இலக்கை அடைந்துவிட்ட திருப்தியில் இருந்த  வாசனை தற்போது  சட்ட மன்றத் தேரத்ல் வந்து தொந்தரவு செய்ததால்  மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர்ந்து தன் அப்பா காலத்து சைக்கிள் சின்னத்தை மீட்க 12 சீட் கேட்டார். நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்து 6 சீட் கொடுத்திருக்கிறது அதிமுக.

2. பிக் பாஸ் நாயகனின் மக்கள் நீதி மய்யம்

கட்சியை தமிழ்நாட்டில் நடத்துவதா, ட்விட்டரில் நடத்துவதா என்ற குழப்பதுடனேயே கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஜெயலலிதா, கருணாநிதி மரணத்திற்குப் பிறகு திடீரென்று, ”தமிழகத்தில் அரசியல் சரி இல்லை” என்று கண்டுபிடித்த கமலஹாசன், ஓய்வுபெற்ற நடிகர் நடிகைகள், உயர் அதிகாரிகள் மற்றும் சில தொழிலதிபர்களை இணைத்து கட்சி ஆரம்பித்து டிவிட்டரில் அவ்வப்போது  அரசியல் பேசிவந்தார். ஜல்லிகட்டு, நெடுவாசல் என்று எந்த போராட்டத்தையும் எட்டிப் பார்க்காதவர்  பண மதிப்பிழப்பை மட்டும் ஆதரித்தார். 2019 தேர்தலில் நேரடியாக களம் இறங்கியவர் அடுத்து பிக்பாஸ் நடத்தச் சென்று விட்டார். 

வெற்றிடம் இருக்கிறது என்று  டிவிட்டரில் எழுதிக் கொண்டிருப்பதன் மூலமே அதை நிரப்ப முயன்றவர். அவ்வப்போது திமுக-வை எதிர்ப்பதை மட்டும் ஒரு வேலையாக செய்து கொண்டிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் ஆளும் கட்சியின் அராஜகங்களையும் மக்கள் விரோதத் திட்டங்களையும் எதிர்த்து எந்த போராட்டங்களையும் நடத்தாமல் பிக் பாஸில் பிசியாக இருந்தவர். இப்பொழுது சட்டமன்றத் தேர்தலுக்கு டார்ச் லைட் அடித்து வேட்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார். 

1. அண்ணியாரின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்

தேர்தல் நேரத்தில் பேரம் பேசுவதற்கு மட்டுமே தூக்கத்திலிருந்து விழிக்கும் கட்சிகளில் தமிழ்நாட்டில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது தேமுதிக.

கோயம்பேட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்படுவதற்காக, தன் கல்யாண மண்டபத்தில் ஒரு சிறிய பகுதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும் , கள்ளக்குறிச்சியில் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் திருமணத்திற்கு சென்ற போது பாமகவினர் உடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளாலும் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் இது.

தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஒரு மாற்றுக் கட்சியாக வளரும் என்று நம்பிக்கை வைக்கப்பட்ட கட்சியான தேமுதிக 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை ’வறுமை ஒழிப்பு நாள்’ என்றெல்லாம் அறிவித்து ஆண்டுக்கு ஒரு முறை அன்று நலத்திட்ட உதவிகளை செய்வதை மட்டும் செய்து கொண்டிருந்தார்கள். 

கட்சி ஆரம்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டே, 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றியும் பெற்றார். 8.4%  வாக்குகளை வாங்கியது அதன்பின் 2009 நாடளுமன்றத் தேரதலில் தனித்து நின்று 10.3% வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்கு சதவிகிதத்தை வைத்து 2011 தேரதலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்களை வாங்கி 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்கட்சித் தலைவரானார்.  

எதிர்கட்சித் தலைவராக சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து நாக்கைக் கடித்து முறைத்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் அவர் கட்சி வெற்றிபெற்ற ராதாபுரம் சட்டமன்றத்திற்குள் நடந்தபோதும், அந்த போராட்டத்தில் எந்த பங்கும் ஆற்றவில்லை. 

மூன்று தமிழர் உயிர் காக்க, ஈழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாணவர் போராட்டம் அவர் கட்சி அலுவலகத்திற்கு எதிரில் நடந்தபோதும் எட்டிக் கூட பாரக்கதவர். முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ எதிர்ப்பு என்று அந்த காலக்கட்டம் தமிழக வாழ்வுரிமைக்கான மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்ற காலக்கட்டம். அதில் எதிலும் பங்காற்றாத தேமுதிக நேரடியாக 2014 நாடாளுமன்றத் தேரதலில் பாஜக கூட்டணி தலைமை தாங்கியது. 

14 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பின் தமிழ்நாட்டில் காவேரிக்கு மிகப்பெரிய போராட்டம் உட்பட அனைத்திலும் ஸ்லீப்பிங் மோடில் இருந்த தேமுதிக 2016 சட்டமன்றத் தேர்தலில் விழித்தது. 

திமுக, பாஜக, மநகூ என்று பல கூட்டணிகளில் பேரம் பேசி இறுதியாக  முதல்வர் வேட்பாளராக நேரடியாக உளுந்தூர்பேட்டையில் கட்டுத்தொகை இழந்தார். ஜெயலலிதா மரணத்திற்கு பின் தமிழகம் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. அனிதாவின் மரணத்தின் போது கூட கும்பகர்ண தூக்கத்தில் இருந்தது பிரமலதாவின் தேமுதிக. 

2019 நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணியில் படுதொல்வி அடைந்த பின் இரண்டு ஆண்டுகள் கழித்து கட்சி அலுவலகத்திற்கு ஒட்டடை அடித்து சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வால் கை கழுவப்பட்டு, மக்கள் நீதி மய்யமா அமமுக-வா என்று தனது பேரத்தை நிகழ்த்தி, இறுதியாக அமமுக-வில் 60 தொகுதிகளை வாங்கி இறங்குகிறார்கள்.

One Reply to “நடுவுல கொஞ்சம் கட்சியக் காணோம்! தேர்தலின் போது மட்டுமே ஆக்டிவ் ஆகும் 5 கட்சிகள்!”

  1. MNM was doing all the ground work, you should have seen the Covid support MNM was doing the Chief is very much active on addressing every issues for the last 3 years. unfortunate that madras review couldn’t see those. Protesting is never a solution but MNM was the frontier which took the Pollachi women harrasement into the public and why didn’t the Madras reiew forgot when KH himself visited Sathankulam custody death victims house, initiated and participated in grama sabas across state, sat with protestors on thoothukudi sterlite protest. and yes why ignoring the TTV lead AMMK which never accused harshly against the AIADMK government nor the BJP government in the central apart from celebrating the return of Accused no 2 of parampana Aghraharm case.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *