இந்த கட்டுரையை ஜூன் 18, 2020 அன்று Madras Radicals வெளியிட்டது. தற்போது விவசாயிகள் போராடி வருவதால், சூழலின் தேவை கருதி இதனை மீள் பதிப்பு செய்திருக்கிறோம்.
கடந்த ஜீன் 3-ம் தேதி விவசாய விளைப்பொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று அவசரச் சட்டங்கள் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ளது. ”ஒரே நாடு, ஒரே சந்தை” என்ற நோக்கில் விவசாய உற்பத்தி மற்றும் உணவு சந்தையை ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இந்த அவசர சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அரசின் கொரோனா கால நிவாரணப் பணிகளுடன் இச்சட்டங்களுக்கு தொடர்பில்லை என்ற போதும், கொரோனா அவசர காலத்தைக் காரணம் காட்டி இத்தகைய அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
விவசாய விளைபொருள் சந்தையை தனியார் பெருநிறுவனங்கள் நேரடியாக கட்டுப்படுத்துவதற்கு இச்சட்டங்கள் பயன்படக்கூடியதாக இருக்கும்.
மூன்று அவசர சட்டங்கள்
- ”ஒப்பந்த விவசாய சேவை மற்றும் விலை உத்தரவாதத்தில் விவசாயிகளுக்கான (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Ordinance)” எனும் அவசர சட்டத்தின் மூலம் ஒப்பந்த விவசாய முறையை (Contract Farming) ஊக்குவிக்கும் வகையில் சில ஒழுங்குமுறைகளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- விவசாய விளைபொருள் உற்பத்தியின் வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) (The Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Ordinance, 2020) எனும் அவசர சட்டமானது மாநிலங்களுக்கிடையேயான விவசாய விளைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒரே மாநிலத்திற்குள்ளாக இருதரப்புக்கு இடையேயான விவசாய விளைபொருள் வர்ததகத்தில் யார் வேண்டுமானாலும் விவசாயிகளிடம் நேரடியாக விளைபொருட்களை வாங்குவதற்கு வழிவகை செய்துள்ளது. இவ்வர்த்தகங்களுக்கு உரிமம் எதுவும் தேவையில்லை, PAN Card என்று -சொல்லப்படும் தனிநபர் (வருமான) அடையாள அட்டையிருந்தால் போதும். மேலும் இச்சட்டத்தின்படி இனி விவசாயிகளிடமிருந்து விவசாய விளைபொருட்களை வாங்குவோரிடத்தில் மாநிலங்கள் வரியோ, கட்டணமோ விதிக்க முடியாது.
- அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் Essential Commodities Act (ECA) ஏற்படுத்தப்பட்ட திருத்தத்தின் காரணமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் வகைகள், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள், வியாபாரிகள் தங்களுடைய சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவைப் பொறுத்து மேற்கூறிய உணவுப் பொருட்களை கிடப்பில் பதுக்கி வைப்பதற்கான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளது.
என்ன பயிர் செய்வது என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களே தீர்மானிக்கப் போகின்றன
மேற்கூறிய மூன்று அவசரச் சட்டங்களும் விவசாய விளைப்பொருள்களின் உற்பத்தியின் மீதும், உணவு சந்தையின் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துபவை; நடப்பிலுள்ள முறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியவை.
முதலாவதாக குறிப்பிட்டுள்ள விவசாய ஒப்பந்த விவசாயம் தொடர்பான அவசர சட்டமானது இனி வருங்கால விவசாய பயிர் உற்பத்தியை, பயிர் வகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்க வழி வகுக்கக்கூடியது. பல்வகைப் பயிர் உற்பத்தியை அழித்து சந்தைக்குத் தேவைப்படும், ‘இதுவே சந்தைக்கானது’ என தீர்மானிக்கப்படும் பயிரிடலை விவசாயிகள் மீது சுமத்தக் கூடியது. உணவுப் பயிர்களுக்கு பதிலாக பணப்பயிர்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அபாயமிருக்கிறது; உணவுப் பயிர் விளைச்சலைக் கட்டுப்படுத்தி உணவுச் சந்தையில் உணவுப் பொருட்களின் “தேவை அதிகரிக்கும்”; தேவையை அதிகமாக்குவதன் அடிப்படையில் உணவுத் தானியங்கள், பயிர்களுக்கு கார்பரேட் நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயிக்கும் ஆபத்தான போக்குடையது ஒப்பந்த விவசாய முறை.
விவசாயிகள் கார்ப்பரேட்டுகளால் சுரண்டப்படும் அபாயம்
விவசாயிகள் எதிர்கொள்ளும் அறுவடைக்கு முந்தைய, பிந்தைய செலவுகளை குறைப்பதற்கு ‘ஒப்பந்த விவசாயம்’ பயன்படும் என அரசு சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் பெரு நிறுவனங்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதற்கே இம்முறை வழியேற்படுத்திக் கொடுக்கும். தனியார் ஆலைகளை மையப்படுத்திய கரும்பு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் ஆலைகளிடம் கரும்பை விற்ற தங்கள் விற்பனைத் தொகைக்காக ஆண்டுதோறும் அலைக்கழிக்கப்படுவதைப் பார்க்கிறோம். இந்தியாவில் அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக மகாராஷ்டிரம் விளங்குவதற்கு தனியார் கரும்பு ஆலைகளே முக்கிய காரணமாக உள்ளன. இதுபோன்று ஒப்பந்த விவசாயத்தில் விவசாயிகளுக்கும், விவசாயிகளிடம் ஒப்பந்தம் மேற்கொள்வோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதற்கென உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.
இவ்வாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்கள் பயன்பாட்டுக்கான, சந்தைக்கான “உணவுப் பயிரை தீர்மானிக்க, உணவுப் பயிர் உற்பத்தியைக் கட்டுப்படுத்த” ஒப்பந்த விவசாய முறை பயன்படும் ஆபத்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை இல்லை
உற்பத்தி செய்த விளை பொருட்களை விவசாயிகள் யாரிடம் வேண்டுமானாலும் நேரடியாக விற்பனை செய்யவும், விவசாயிகளிடமிருந்து யார் வேண்டுமானாலும் நேரடியாக வாங்கிக் கொள்ளவும் வழிவகுக்கும் விவசாய விளைபொருள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) எனும் அவசரச் சட்டம், உணவுச் சந்தை மீதான அரசின் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக அழிக்கக் கூடியது.
விவசாயிகளுக்கு விற்பனை லாபம் ஈட்டித் தருவதற்கு இச்சட்டம் வழி வகுக்கும் என அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட சில விளைபயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, நாட்டின் நிகழ்கால, எதிர்கால உணவுத் தேவைக்காக அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் பொழுதே விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர். உற்பத்தி செலவின் அடிப்படையில் விளைபொருட்களுக்கான சந்தை விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் வாய்ப்பில்லாத நடைமுறையே இங்கு நிலவுகிறது.
நடைமுறையிலுள்ள குறை லாப, நட்ட விற்பனைத் தொகையளவே விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்குரிய அளவுகோலாக உள்ளது. அந்த விற்பனைத் தொகை அளவுகோலும் அரசின் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் விலையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. விவசாயிகளுடனான தனியார் வியாபாரிகளின், கார்ப்பரேட்டுகளின் நேரடியான வணிகத்தால் அரசு தற்போது நடைமுறையில் நிர்ணயித்திருக்கும் அளவுகோலும் பயனற்றதாகப் போய்விடும்.
தொடக்கத்தில் விவசாயிகளிடமிருந்து தனியார் வியாபாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுத்து விளைபொருட்களை வாங்கினாலும், நாளடைவில் இவைகளின் சந்தைப் போட்டியின் காரணமாக விவசாயிகள் வருமான இழப்புகளை மட்டுமே சந்திக்க நேரிடும். உணவு விளைபொருட்களின் சந்தை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத நிலையில், அரசு அந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் நிலையில், விவசாய விளைபொருட்களுக்கான அரசின் குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பு அளவுகோல்கள் விவசாயிகளின் விலை நிர்ணயிப்புக்கு பயன்தராது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் உற்பத்தி செலவு ஒன்றல்ல
மேலும் இந்திய ஒன்றியத்திலுள்ள மாநிலங்களின், ஒரே மாநிலத்தினுடைய வெவ்வேறு பகுதிகளின் நிலவியல் அமைப்பு, நீர்ப்பாசன வசதி, மனிதவள ஆற்றல் ஒன்று போல இருப்பதில்லை.
குறிப்பிட்ட விளைச்சலை உற்பத்தி செய்வதற்கு காவிரிப் படுகையின் ஆற்றோரமுள்ள விவசாயியைவிட காவிரிப் படுகையின் கடைமடை விவசாயி கூடுதல் உற்பத்தி செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதுபோல பெருநில விவசாயிகளின் உற்பத்தி செலவைவிட குறுநில விவசாயிகளின் உற்பத்தி செலவு அதிகம் மற்றும் உற்பத்தி செலவானது அவருடைய குடும்பத்தினரின் உடலுழைப்பையும் உள்ளடக்கியது.
இவர்களைப் போலல்லாமல் குத்தகை விவசாயி வழக்கமான உற்பத்தி செலவுகள் மட்டுமல்லாமல் உற்பத்தியின் ஒரு பகுதியையே உற்பத்தி செலவில் உள்ளடக்க வேண்டியிருக்கிறது.
இந்திய ஒன்றிய விவசாயத்தில் இப்படியான வெவ்வேறான, பல்வகையான உற்பத்தி சூழல் நிலவுகிற நிலையில், இவற்றில் குறைந்தளவு உற்பத்தி செலவு செய்து ஈட்டப்பட்ட மகசூலின் கொள்முதல் விலையை, அதனையும் விட கூடுதல் உற்பத்தி செலவு செய்து விளைவிக்கப்பட்ட மகசூலுக்கு, தனியார் வியாபாரிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் ”வாங்கும் விலை அளவுகோலாக” நிர்ணயிக்கும் ஆபத்துள்ளது.
சீர்குலைவுக்கு உள்ளாகும் மண்டி முறை
இடைத்தரகர்கள் மற்றும் பெரு முதலாளிகளின் இடையூறுகள் இல்லாமல் விவசாயிகள் தங்களின் விளைப்பொருள் உற்பத்தியை விவசாய விளைப்பொருள் சந்தைப்படுத்தல் வாரியத்தின் (APMC மண்டி முறை) மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரும் வருமான இழப்பிற்கு ஆட்படாமல் குறைந்தபட்ச லாபத்தை ஈட்ட முடிந்தது. விவசாய விளைபொருள் தேவை உடைய வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான விளைபொருட்களை அங்கு வாங்கிக் கொள்கின்றனர்.
வாங்கும் பொருளுக்கு அரசு விவசாயிகளுக்கு செலுத்திய மொத்த விலையில் 1% கூடுதல் கட்டணத்தை வியாபாரிகள் செலுத்துகின்றனர், ரேசன் கடை விநியோகம் போன்ற அரசினால் மக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு தானிய தேவையை மீறிய உபரியே வியாபாரிகளுக்கு அரசு விற்பனை செய்கிறது. மக்களின் குறைந்தபட்ச உணவுத் தேவைக்கு போக மிச்சமே சந்தை வியாபாரத்திற்கு!
மக்கள் அரசிடமிருந்து குறைபட்ச விலையில் உணவு உத்திரவாதத்தை பெறுவதால், மக்களின் குறைந்தபட்ச அடிப்படை உணவுத் தேவை அரசால் பூர்த்தி செய்யப்படுவதால், மக்கள் வெளிச் சந்தையை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாதிருக்கிறது; அல்லது கூடுதல் செலவு செய்ய வாய்ப்புள்ள வசதி படைத்தோருக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பின் அடிப்படையில் மட்டுமே வெளிச்சந்தை உணவு தானிய வணிகம் முன்னிறுத்தப்படுகிறது.
சந்தையை அரசு கட்டுப்படுத்துவதே, விலைவாசியையும் கட்டுக்குள் வைக்கும்
அரசிடமிருந்தே மக்களுக்கு தேவையான உணவு தாராளமாக கிடைத்துவிடும் பொழுது, சந்தையில் தனியார் வியாபாரிகளால், கார்பரேட்டுகளால் உணவு தானிய தேவையை அதிகரிக்க முடியாது; தேவையை அதிகரித்து விலையேற்றம் செய்ய முடியாது. அரசு உத்தரவாதப்படுத்திக் கொடுக்கும் மக்களுக்கான அடிப்படை, ஆதார உணவுத் தேவையானது, சந்தையில் உணவு தானியத்திற்கான வணிகத் தேவையை கட்டுப்படுத்துகிறது. சந்தையினுடைய உணவு தானிய விலையை கட்டுக்குள் வைக்கிறது. இத்தைகைய நடவடிக்கைகளின் மூலம் விவசாய விளைப்பொருட்களின் சந்தை வணிகத்தை அரசு கட்டுப்படுத்துகிறது.
யார் வேண்டுமானாலும் விவசாயிகளிடம் நேரடியாக விவசாய விளைபொருட்களை வாங்கிக் கொள்வதற்கு வழிவகுக்கும் புதிய அவசர சட்டம், விவசாய விளைபொருட்களை உற்பத்தியிடத்திலிருந்து சந்தைக்கு வந்தடைவதில் அரசு வகித்த ”மக்கள் தேவைக்குப் பிறகே சந்தை வணிகத் தேவை” என்ற ஒழுங்குமுறை பாத்திரத்தை நீக்கியிருக்கிறது. இனி உற்பத்தியிடத்திலிருந்து நேரடியாக சந்தைக்கு எனும் பொழுது சந்தை மட்டுமே மக்கள் உணவு தானியத்தை பெறுவதற்கு இருக்கிற ஒரே வழிமுறை. தனியார் வியாபாரிகளின், கார்பரேட்டுகளின் சந்தை வணிக அரசியல் “தேவையை அதிகரித்து உணவு தானியங்களின் விலையை அதிகரிக்கும்”.
உணவுப் பொருட்களின் சில்லறை வர்த்தகத்தில் கால் பதிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
மேற்குறிப்பிட்ட சட்டத்தின் மூலம் தனியார் வியாபாரிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் மொத்த விற்பனையை கைப்பற்றுவதைப் போலவே சில்லறை விற்பனையையும் கைப்பற்ற ஏதுவாகத்தான் அத்தியாவசிய பொருட்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலின் கீழுள்ள பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைப்பது சட்டப்படி குற்றமாகும். தற்போது அப்பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்புகள், எண்ணெய், எண்ணெய் வித்துகள், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவை நீக்கப்பட்டிருப்பதால் மொத்த வியாபாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவற்றை பதுக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
பதுக்கல்கள் மூலம் செயற்கை பற்றாக்குறையை உருவாக்க முடியும்
பரவலாக உற்பத்தி நடைபெறுகிற சமயத்தில் இவற்றை வாங்கி தங்களது கிடங்கில் பதுக்கி வைக்கும் தனியார் மொத்த வியாபாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவைகளுக்கான பற்றாக்குறை நிலவும் சமயங்களில் இத்தகைய அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்கும் சூழல் நிலவும். கார்ப்பரேட் நிறுவனங்களே செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கவும் முடியும். மொத்த விற்பனையைக் (WholeSale) கைப்பற்றியதன் அடிப்படையில் கார்ப்பரேட் நிறுவனங்களே மக்களிடம் நேரடியாக உணவுப் பொருட்களின் சில்லறை வணிகத்திலும் (Retail Business) ஈடுபடும் நீண்ட கால செயல்திட்டத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல இணையதள சில்லறை வர்த்தகத்தில் நுழைந்துள்ளன.
ஆன்லைன் மளிகை வியாபாரம்
இணையத்தின் மூலம் வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் பிக் பேஸ்கட், க்ரோபர்ஸ் போன்ற இணையதள சில்லறை விற்பனை நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த சில்லறை உணவுப் பொருள் சந்தையில் 0.2 சதவீதத்தை கைப்பற்றியிருக்கின்றன. இந்தியாவில் 20 லட்சம் பேர் தங்கள் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை இணையதள சில்லறை வணிக விற்பனைத் தளங்கள் மூலம் வாங்குகின்றனர். 2023-ம் ஆண்டு சில்லறை உணவுப் பொருள் சந்தையில் இணையதள சில்லறை விற்பனை நிறுவனங்களின் பங்கு 1.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த இணையதள வணிகத்தில் சில்லறை உணவுப் பொருள் விற்பனைக்கான முதலீடு மட்டும் 40 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது PayTM, Amazon, Flipkart, Jio Mart, Swiggy Store போன்றவை சில்லறை வணிகத்தில் கால் பதித்துள்ளன. கொரோனா ஊரடங்கு சமயத்தில் பல இணையதள வணிக சேவை நிறுவனங்கள் மளிகைப் பொருட்களையும் பயன்பாட்டாளர்களின் வீடுகளுக்கு சென்று கொடுப்பதை தொடங்கியுள்ளன.
இந்தியாவின் சில்லறை வணிகத்தை மையப்படுத்திதான் ஜியோ நிறுவனத்துடன் பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
படிக்க: இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ- பேஸ்புக் ஒப்பந்தம்
மாநில அரசுகளின் உரிமை பறிப்பு
விவசாயப் பொருட்களைப் பொறுத்தவரை அது மாநிலப் பட்டியலில் இருப்பது. 2014-ல் பொறுப்பேற்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்சியாக மாநிலங்களின் பட்டியலில் உள்ள விவசாயத் துறைகளில் கொள்கை மாற்றங்களை செய்து வருகிறது, கடந்த 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விவசாய உற்பத்தி மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் சட்டத்தின் (Agricultural Produce and Livestock Marketing (APLM) Act, 2017) மூலம் மாநிலங்கள் இணைய வணிகம் தொடர்பான கொள்கை முடிவெடுக்க தலையீட்டை ஏற்படுத்தியது.
2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்த விவசாய மற்றும் சேவைச் சட்டம் மாநிலங்களை ஒப்பந்த விவசாயம் தொடர்பான நிலைப்பாடுகளை எடுக்க நிர்பந்தப்படுத்தியது. தமிழ்நாடு அரசும் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் “ஒப்பந்த விவசாயச் சட்டத்தையும்” கொண்டு வந்தது.
இவ்வாறாக ஒன்றிய அரசு விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கை முடிவுகளை, சட்டங்களை மாநிலங்களை நிர்பந்தித்து உருவாக்கி வந்த நிலையில், கொரோனாவைக் காரணம் காட்டி தற்போது அவசரச் சட்டத்தின் மூலம் நேரடியாக உருவாக்கியிருக்கிறது.
இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் “’ஒரே நாடு ஒரே விவசாய சந்தை’ என விவசாயம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது” என கூறியுள்ளார். மேலும், ”இந்த அவசர சட்டங்களானது நடைமுறையிலுள்ள உணவு தானியக் கொள்முதல் மற்றும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு பொறுப்பேற்கும் மாநில அரசின் பொறுப்புகளை களையக்கூடியது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் உணவுக் கட்டமைப்பு என்னவாகும்?
தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வலிமையான உணவு தானியக் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று அவசரச் சட்டங்கள் மூலம் பஞ்சம், இயற்கைப் பேரிடர் மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான படிப்பினைகளின் அடிப்படைகளிலிருந்து ’குறைந்த விலையில் மக்களுக்கான அத்தியாவசிய உணவுத் தேவையை உத்திரவாதப்படுத்துதல்’ மற்றும் ‘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை உத்திரவாதப்படுத்தும்’ எனும் நோக்கத்தில் கட்டியெழுப்பப்பட்ட உணவு உற்பத்தி, கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான அரசின் கட்டமைப்புகளை முற்றிலுமாக சிதையும் வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது மோடி தலைமையிலான அரசு.
WTO ஒப்பந்தத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் விவசாயிகள்
உலக வர்த்தக கழகத்தின் வணிக வசதி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் அரசின் பொறுப்பை விலக்கிக் கொள்ளும் பல்வேறு சட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் கார்டுடன் வங்கிக் கணக்குகளை இணைத்ததன் மூலம் பயனாளருடைய உணவுக்கான மானியத்தைப் பொருளாக அல்லாமல் தொகையாக வங்கிக் கணக்கில் சேர்க்க முனைந்து வருகிறது. தற்போது விவசாயிகளுக்கான மின்சார மானியம் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கான ஒருவழிப் பாதையே ஒற்றைமயமாக்கல்
மாநில அரசுகளின் கீழ் விவசாயம், உணவுப் பாதுகாப்பு தொடர்பாக இருக்கக்கூடிய சட்ட உரிமைகளைப் பறித்து தன் கீழான ஓர் ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் ஒன்றிய அரசு கார்பரேட்/ தனியார் நிறுவனங்களுக்கு ‘விவசாய உற்பத்தி மற்றும் உணவுச் சந்தையை’ எளிய, ஒருவழிப் பாதையாக மாற்றியமைத்து தந்திருக்கிறது. நாட்டிற்கான உணவு உற்பத்தியிலும் தொழிற் சமூகத்திலும் பெரும்பான்மையாக இருக்கிற விவசாயிகளின் பாதுகாப்பில் அரசு மெற்கொள்ள வேண்டிய தனது பொறுப்பைக் கைகழுவி விட்டு, பேர வலிமையில்லாத பலவீனமான விவசாயியை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வணிகம் செய்துகொள்ளச் சொல்கிறது.
கார்ப்பரேட்டுகளின் வணிகப் பசிக்கு தீனியிடுவதற்கு வசதியில்லாத எளிய மக்களை பசித்த வயிறுகளோடு வாழ வழியமைத்துத் தந்திருக்கிறது. “வாடிய பயிர்களை கண்டபோது வாடிய” வள்ளலார், தாது வருட பஞ்சத்தில் பசியுடன் வாடிய மக்களை கண்டு பசித்தவர்களுக்கு உணவிடத் தொடங்கினார். அந்த அடுப்புதான் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது மக்களை பசியில் பஞ்சப் பராரிகளாக அலையவிட்ட அரசைப் பார்த்து “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக” என வள்ளலார் கடிந்தார் என்பது வரலாறு.
இதையும் படிக்க: WTO+மோடி அரசு; அவசர சட்டங்களால் ஆபத்தில் விவசாயிகள்