திமுக அமைச்சர்கள்

முதல் முறையாக அமைச்சராகும் 15 அமைச்சர்கள் – அறிமுகம்

1. மா.சுப்ரமணியம் – மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர்

மா.சுப்ரமணியம்
மா.சுப்ரமணியம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார். 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார். அப்பொழுது அவரது பணிகளுக்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்றவர்.

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான சுப்பிரமணியன் 1999-ல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

2) ஆர்.காந்தி –  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

ஆர்.காந்தி
ஆர்.காந்தி

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திமுகவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தவர். 1996-வது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். 2006-வது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 2016-வது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். நான்காவது முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்லும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

3) பி.கே.சேகர்பாபு – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

பி.கே.சேகர்பாபு
பி.கே.சேகர்பாபு

அதிமுகவின் அசைக்க முடியாத வடசென்னை மாவட்டச் செயலாளராக இருந்த பி.கே.சேகர்பாபு 2001 மற்றும் 2006 தேர்தல்களில் ஆர்.கே.நகரில் இருந்து அதிமுக சார்பாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2011-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 2011-ல் திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 2016 மற்றும் 2021-ல் துறைமுகம் சட்டமன்றத்தில் இருந்து தேர்வாகி இருக்கிறார். திமுகவின் அசைக்க முடியாத வடசென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பி.கே.சேகர்பாபுவிற்கு ஜெயலலிதா கூட அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. தற்பொழுது ஸ்டாலினால் திமுகவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

4) சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

சி.வி.கணேசன்
சி.வி.கணேசன்

திமுகவின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரான சி.வி.கணேசன் 1989-ல் முதல்முறையாக மங்களூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 1996-ல் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து திமுக சார்பாக நாடாளுமன்றம் சென்றவர். 2016-ல் திட்டக்குடியில் இருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார். அதே தொகுதியிலிருந்து இந்த முறை மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக செல்லும் சி.வி.கணேசனுக்கு முதல் முறையாக அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

5) எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

எஸ்.எஸ்.சிவசங்கர்
எஸ்.எஸ்.சிவசங்கர்

திமுகவின் அரியலூர் மாவட்டச் செயலாளரான இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர். 2006-ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2011-ம் ஆண்டு குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொழுது மீண்டும் மூன்றாவது முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் ஒரு எழுத்தாளரும் கூட. இவரது முகநூல எழுத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு “மக்களோடு நான்“ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளிவந்தது. ’அந்திமழை’ இதழில் விருந்தினர் பக்கத்தில் இடம்பெற்ற இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இவரின் இரண்டாவது நூலாக “சோழன் ராஜா ப்ராப்தி“ என்ற பெயரில் வெளியானது.

6) அன்பில் மகேஷ் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக திமுகவின் முன்னணித் தலைவராக இருக்கிறார்.

2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொழுது இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

7) மெய்யநாதன் – சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

மெய்யநாதன்
மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவர், இதற்கு முன்பு 2011 முதல் 2016 வரை ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தவர்.

8) சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர்

சக்கரபாணி
சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1996 முதல் ஆறாவது முறையாக தோல்வியை சந்திக்காமல் வெற்றிபெற்ற சக்கரபாணி, திமுகவின் சட்டமன்ற கொறடாவாக கடந்த காலங்களில் பணியாற்றியவர். திமுகவின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அவருக்கு முதல்முறையாக அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

9) மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரான மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011 முதல் 2016 வரை கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்தவர். இவர் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றில் முக்கியப் பங்காற்றியவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகள் வெட்டப்படுவதைக் கண்டித்தும், சூழலியல் குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருபவர்.

10) கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

கயல்விழி செல்வராஜ்
கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கயல்விழி செல்வராஜ் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகனை வெற்றி பெற்றதால், இவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.

11) மருத்துவர் மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

மருத்துவர் மதிவேந்தன்
மருத்துவர் மதிவேந்தன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் ஒரு அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த தனபால் சபாநாயகராக மாற்றப்பட்ட பிறகு, அமைச்சரவையில் அருந்ததிய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. 2016-ல் அமைந்த ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் அமைச்சரவையிலும் அருந்ததியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மருத்துவரான மதிவேந்தன் திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தில் இருந்து வந்தவர். முதல்முறையாக ராசிபுரத்தில் அமைச்சர் சரோஜாவை வெற்றி கண்டவர். தற்பொழுது சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12) செஞ்சி மஸ்தான் –  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

திமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் இருவரில் ஒருவரும், சிறுபான்மைப் பிரிவு தலைவருமான மஸ்தான் 2016-ம் ஆண்டு செஞ்சி தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டசபைக்குச் சென்றவர். இரண்டாவது முறை சட்டமன்ற உறுப்பினராக வந்தவுடன் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி வழங்கிய சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

13) ஆவடி நாசர் – பால்வளத்துறை அமைச்சர்

ஆவடி நாசர்
ஆவடி நாசர்

திமுகவின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான ஆவடி நாசர் முதல்முறையாக சட்டமன்றம் செல்கிறார். அமைச்சர் பாண்டியராஜனை வெற்றி பெற்றதால் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

14) பி.மூர்த்தி – வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர்

பி.மூர்த்தி
பி.மூர்த்தி

திமுகவின் மதுரை மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான பி.மூர்த்தி மூன்றாவது முறையாக மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். முதல் தேர்தலான 2011-ல் தோல்வி அடைந்தவர், 2016 மற்றும் 2021-ல் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு செல்கிறார்.

15) பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் – நிதியமைச்சர்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான தமிழ்வேல் பி.டி.ராஜன் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக அரசியலுக்கு வந்திருக்கும் பழனிவேல் தியாகராஜன் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் அவர்களின் மகன் ஆவார். தியாகராஜன் வேதிப் பொறியியலில் பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியில் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் முடித்து, முனைவர் பட்டத்தை நியூயார்க் பாப்லோ பல்கலைக்கழகத்திலும், அதன்பின் உலகப் புகழ்பெற்ற MIT Sloan School Of Management படித்தவர்.

2001-ல் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டு சேவை மேலாளராக – ஃபர்ம் ரிலேஷன்ஷிப் கடன் சேவையில் சேர்ந்தார். அவர் லேமன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் நிறுவனத்தை விட்டு விலகி, 2008-ம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார். அதன்பின் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில், குளோபல் கேபிடல் மார்க்கெட்ஸ் பிரிவில் பணியாற்றினார். ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்த நிலையில் 2014-ம் ஆண்டு அதைவிட்டு விலகி தமிழகத்திற்கு திரும்பி அரசியலில் ஈடுபடத் துவங்கினார். 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், தற்பொழுது இரண்டாவது முறையாகவும் சட்டமன்றம் செல்கிறார். தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *