இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது. 1785ம் ஆண்டு கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796ம் ஆண்டு மதராசு ஆய்வு மையத்தையும் உருவாக்கியது. பிரட்டிஸ் ஆட்சியின் நேரடிகட்டுப்பாட்டுக்கு வந்தபின் 1875ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறை நிறுவப்பட்டது. இதன் முதல் அறிவிப்பாளராக ஹென்றி பிரான்சிசு பிளான்போர்டு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 1889ம் ஆண்டு அப்போதையத் தலைநகராக இருந்த கொல்கத்தாவில் முதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின் 1905ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமையகம் சிம்லாவிற்கும் பின் 1928ம் ஆண்டு புனேவுக்கும் மாற்றப்பட்டது. இறுதியாக 1944ம் ஆண்டு இதன் தலைமையகம் புது தில்லிக்கு மாற்றப்பட்டது.

வில்லியம் பெட்ரீ
சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 225 ஆண்டுகள் பழமையானது. இது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் புதுச்சேரி மற்றும் இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளின் வானிலை சம்மந்தப்பட்ட செயற்பாடுகளை கவனித்து வருகிறது. ஐரோப்பாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வகம் என்ற பெருமையும் இந்த ஆய்வு மையத்திர்க்கு உண்டு. இதற்கான விதையை போட்டவர் வில்லியம் பெட்ரீ என்ற கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்.

வில்லியம் பெட்ரீ வானிலை ஆய்வில் தனக்கிருந்த அதீத ஆர்வத்தால் தான் வசித்த நுங்கம்பாக்கம் வீட்டில் சொந்த செலவில் 1787ம் ஆண்டு ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரங்களில் தொடர்ந்து அந்த ஆய்வு கூடத்தில் வானிலை குறித்து பல தகவள்களை சேகரித்தார். அதற்கு அவர் இரண்டு தொலைநோக்கிகள் இரண்டு வானியல் கடிகாரங்கள் மற்றும் ஒரு நட்சத்திரங்களின் இடங்களை கண்காணிக்கும் கருவியை பயன்படுத்தினார். இந்த கருவிகளை பயன்படுத்தி இந்திய பெருங்கடல் வழியாக மதராஸ் பட்டனத்தில் அமைந்துள்ள துறைமுகத்திற்கு வரும் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களுக்கு வழிகாட்டினார்.
மெட்ராஸ் அப்சர்வேட்டரி

வில்லியம் பெட்ரீ நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்றார் அப்போது தனது உபகரணங்களை உபயோகிக்க அரசுக்கு அனுமதி கொடுத்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர் மெட்ராஸ் திரும்பியபோது, ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய கிழக்கிந்திய அரசே ஒரு வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்கும் பொறுப்பை பெட்ரீயிடம் கொடுத்தது. அதன் பெயர் மெட்ராஸ் அப்சர்வேட்டரி (Madras Observatory). அந்த ஆய்வு மையத்தை 1792ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வகத்தை வடிவமைக்க மைக்கேல் டோப்பிங் ஆர்ச் என்ற வானிலை ஆய்வாளர் உதவினார். வானிலை ஆய்வுக்கு தேவையான பல்வேறு கருவிகளை அவர் தந்தார். அவர் நினைவாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் 15 அடி உயரமான கிரானைட் தூணில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில்தான் நட்சத்திரங்களை கண்காணிக்கும் தொலைநோக்கிக் கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டிருந்தது., இங்கு 1796ம் ஆண்டு முதல் வானியல் நிகழ்வுகள் குறித்து பதிவு செய்யும் வழக்கம் தொடங்கியது. இந்த பதிவு பணியை முதன் முதலில் செய்தவர் கோல்டிங்ஹாம் என்ற வானியல் ஆய்வாளர். 1840 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மணிநேரமும் வானிலை அவதானிப்பு வேலையை இந்த மையம் தொடங்கியது. 1875ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவப்பட்ட பின் தினசரி வானிலை அறிக்கைகளை இந்த மையம் வெளியிட துவங்கியது.

கொடைக்கானல் அப்சர்வேட்டரி
பிரிட்டாஷார் தென்னிந்திய பகுதியில் வேறு சில ஆய்வகங்களைத் நிறுவ முற்பட்டனர். இந்த மையத்தை மூடுவது பற்றி லண்டனில் விவாதிக்கப்பட்டது. ஆனால் மெட்ராஸ் அபசர்வேட்டரி வானிலை குறித்து பல்வேறு தகவள்கை சேகரித்து வைத்திருந்ததால் அதை பதிப்பிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் புதிய 20 அங்குல தொலைநோக்கி ஒன்றை கொடைக்கானல் மலையில் பெருத்தி கொடைக்கானல் அப்சர்வேட்டரி நிறுவப்பட்டது. அதன் பிறகு மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் பணிகள் அங்கு இடம்மாற்றம் செய்யப்பட்டது. அதனால் சிறிது காலம் சென்னை அப்சர்வேட்டரிக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. பின் 1945ம் ஆண்டு சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவிற்கான வானிலை அறிக்கைகளை இந்த மையம் தற்போது வெளியிட்டு வருகிறது. மழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பல்வேறு இற்கை சீற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துவரும் ஒரு நெடிய வரலாறை தன்னுள் கொண்டுள்ளது.
உதவிய நூல் : சென்னை மறுகண்டுபிடிப்பு : எஸ். முத்தையா