சூரிய ஒளி வைட்டமின் டி கொரோனா

சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் – ஆய்வு

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் ’வைட்டமின் டி’ முக்கியப் பங்காற்றுகிறது என்று ஆய்வு தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாஸ்டன் பல்கலைக்கழகதின் மருத்துவத் துறையால் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்விதழில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

நோயாளிகளின் இரத்தத்தில் சராசரியாக வைட்டமின்-D அளவு ஒரு மில்லி லிட்டருக்கு 30 நானோகிராம் என்ற அளவுக்கு இருக்க வேண்டும். 25 நானோ கிராமுக்குக் கீழே குறையும்போது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து நோயாளிகளுக்கு இறப்பு ஏற்படுகிற ஆபத்து நிகழ்கிறது.

இது குறித்து மருத்துவர் சேஷான் ஜோஷி கூறுகையில், ”ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் கொரோனா பெருந்தொற்றுக்கு  உள்ளானவர்களுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி உதவுவதை நிரூபித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் வைட்டமின் டி சத்தானது கீழ்வாதம் முதல் காசநோய் வரை பல நோய்களுக்கு பல்வேறு கட்டங்களில் பயன்பட்டுள்ளது என்றும், மேலும் நிமோனியா உள்ளிட்ட தோற்றுகளின் போதும் சிகிச்சையில் உதவியாக இருந்திருப்பதாகவும் ஜோஷி கூறியுள்ளார்.

அதேபோல கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை ’வைட்டமின் டி’ பாதுகாக்கும் என்று உறுதியாக சொல்வதற்கு முன் சீரான ஆய்வுகளை  மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது வந்ததுள்ள ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் மூலம் பரிசோதனை செய்யபட்டவை என்று கூறியுள்ளார்.

பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு 235 நோயாளிகளிடையே ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இவர்கள் எல்லோரும் 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள். இவர்களில் போதுமான அளவு ’வைட்டமின் டி’ உடையவர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது இந்த ஆய்வின்போது நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க தேசிய கல்வி நிறுவனத்தின் ஒவ்வாமை மற்றும் தொற்றுப் பிரிவுத் துறையின் தலைவர் அந்தோனி ஃபாசி கூறுகையில், ’வைட்டமின் டி’ குறைபாடு உள்ளவர்களை நோய்த் தொற்று விரைவில் தாக்கும் என்று கூறியுள்ளார்.

‘வைட்டமின் டி’யினை நாம் சூரிய ஒளியின் மூலம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியும். காலை 10.30 மணி முதல் 12 மணி வரையிலான வெயிலில் வைட்டமின்-டி அதிகமாகக் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிக குறைபாடு இருப்பவர்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படும்போது சரி செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. மீன், முட்டை, இறைச்சி, கொழுப்பு நீக்கப்படாத பால், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. இவற்றில் எதாவது ஒன்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அதிகமான அளவு ’வைட்டமின் டி’ பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *