கிராம்பு குடிநீர்

சிலிண்டர் இல்லாமலேயே சித்த மருத்துவத்தின் மூலம் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் காட்டியுள்ளோம் – நம்பிக்கை அளிக்கும் அரசு சித்த மருத்துவர்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையானது மிக வேகமாகப் பரவுவதுடன் தொற்றின் வீரியமும் தீவிரமாக இருக்கிறது. ஏராளமானோருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்கு ஆக்சிஜன் கிடைக்கும் என்று ஏராளாமானோர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி மகளிர் விடுதியில் அமைக்கப்பட்ட கொரோனாவுக்கான சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும் மருந்தினை பரிசோதித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். 90, 80 என்று ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கு ’கிராம்பு குடிநீர்’ எனும் மருந்தினை அளித்து ஆக்சிஜன் அளவு 95-னை தாண்டச் செய்திருக்கிறார்கள்.

கிராம்புக் குடிநீர் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பின்பும் எடுக்கப்பட்ட படங்கள் ஆக்சிஜன் அளவு உயர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

தற்போது கிராம்பு குடிநீரானது தமிழ்நாடு முழுதிலும் உள்ள சித்த மருத்துவ மையங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக உற்சாகத்துடன் கூறுகிறார் இம்மருந்தினை அறிமுகப்படுத்திய அவலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன். விழுப்புரம் மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாலா மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இந்த மருந்தினை செயல்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆக்சிஜன் கிடைக்க முடியாத பலருக்கு இம்மருந்து பெரிதும் உதவுவதாக தகவல் அறிந்து, Madras Review சார்பில் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். கொரோனா தொற்றில் சித்த மருத்துவ சிகிச்சை முறை எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என பல கேள்விகளை முன்வைத்து உரையாடினோம். 

சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்

கொரோனா இரண்டாம் அலையில் சிகிச்சை அளிப்பதற்கு சித்த மருத்துவ மையங்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அமைத்திருக்கிறது. நீங்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிசை அளிக்கிறீர்கள்? தீவிர தொற்று உள்ள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறீர்களா?

சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் மிதமான தொற்று உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாக்கம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கிராம்புக் குடிநீரைப் பயன்படுத்தி பலருக்கு ஆக்சிஜன் அளவில் முன்னேற்றம் ஏற்படுத்திக் காட்டினோம். அதனை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் எங்களை கிராம்பு குடிநீர் அளித்து சிகிச்சை அளிக்க அனுமதித்தனர். இந்த பொது மருத்துவமனைகளில் தற்போது தீவிர தொற்றால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. இதேபோன்று காய்ச்சல் மையங்களில் ஆக்சிஜன் குறைவாக உள்ளோருக்கும் இதனைக் கொடுத்து ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதை காட்டி வருகிறோம். இதன்பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு இச்சிகிச்சையை எடுத்துச் செல்வதற்கான அனுமதி கிடைக்கலாம். அப்படி கிடைக்கும்பட்சத்தில் பல முன்னேற்றங்களை செய்து காட்ட முடியும்.

மக்களிடம் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்திற்கான வரவேற்பு எப்படி உள்ளது?

தீவிர நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்க சற்று யோசிக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதா, அம்மருந்துகளால் சரியாகுமா என்று மக்கள் தயங்குவது உண்மைதான். சித்த மருத்துவ வல்லுநர்களை அழைத்து தீவிர தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது  குறித்து ஆலோசித்து, மருந்துகள் குறித்த விவாதத்தினை நடத்தினால் இன்னும் நிறைய சித்த மருந்துகளை வெளிக்கண்டுவந்து பயன்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சித்த மருத்துவத்தின் மூலம் சரிசெய்ய முடியும் என்று நாம் நிரூபித்துக் காட்டும்போது மக்கள் நிச்சயமாக சித்த மருத்துவத்திற்கு வந்து பயன்பெறுவார்கள்.

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தில் மருந்து என்றால் கபசுரக் குடிநீர் மட்டுமே பெரும்பாலும் மக்களுக்கு தெரிகிறது. இதனைத் தாண்டி கொரோனா சிகிச்சைக்கு வேறு என்ன மாதிரியான மருந்துகள் பயன் அளிக்கின்றன? 

பிரம்மானந்த பைரவம் மாத்திரை நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளதுதான். சிவனார் வேம்பு, மார்கழி செந்தூரம், கவுரி சிந்தாமணி செந்தூரம், கஸ்தூரி கருப்பு போன்ற பல மருந்துகளும் முக்கியமானவை. இவற்றுக்கு அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. சண்டமாருதம், வஜ்ஜிரகண்டி மாத்திரை முதலிய மருந்துகள் சிறப்பாக குணப்படுத்தக் கூடிய மருந்துகள். இன்னும் பல  உயிர் காக்கும் மருந்துகள் உள்ளன. ஆனால் இவற்றை எல்லாம் தீவிர சிகிச்சையில்  பயன்படுத்தி பரிசோதித்தால் தான் இதன் பலன்கள் தெரியவரும். இதற்கான ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.
(இந்த மருந்துகளை சித்த மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் யாரும் சொந்தமாக பயன்படுத்த வேண்டாம்) 

இது போன்ற பெருந்தொற்றுகளை தமிழர்கள்  எப்படி சித்த மருத்துவம் மூலம்  கையாண்டார்கள்?

நவீன மருத்துவம் வளர்ச்சியுறுவதற்கு முந்தைய காலகட்டத்தில், பிளேக், காலரா, மூளைக் காய்சசல் உள்ளிட்ட பெரும்  நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. ஊழி காலா மாத்திரை, கபாட மாத்திரை போன்ற மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய  பாரம்பரிய மருத்துவ முறைகளை மீட்டெடுப்பதன் மூலம், கொள்ளை நோய்களிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான முக்கியமான கருவியாக சித்த மருத்துவ முறை நிச்சயம் இருக்கும்.

சித்த மருத்துவம் அறிவியல் பூர்வமானது அல்ல நிரூபிக்கப்படாத மருத்துவமுறை என்று சில விமர்சனங்கள் எழுகிறது. சித்த மருத்துவ மையங்களில்  கொரோனா சிகிச்சையில் குணப்படுத்தப்படும் தகவல்கள் ஆவணப்படுத்தபடுகிறதா? என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது?


கடந்த ஆண்டே கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டு தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தாலும் மற்றும் ஒவ்வொரு சென்டர்களிலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டது. தற்போதும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த தகவல்களை எங்கள் துறைக்கு சமர்ப்பித்து வருகிறோம். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் வெளிவரும்.

அரசு சித்த மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்கிறதா?

தற்போது தமிழக அரசு சித்த மருத்துவத்தை ஆதரித்து முக்கியத்துவம் கொடுத்து விரிவுபடுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக சித்த மருத்துவ சிகிசை நல்ல பலனை கொடுக்கும், அதற்கான உரிய மரியாதை கிடைக்க அது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளை சித்த மருத்துவத்தில் கையாள்வதற்கு என்ன வழிகள் உள்ளன?

மூச்சுத்திணறலை குணப்படுத்தக் கூடிய சிறந்த மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளது. சுவாச குடோரி, வசம்பு மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதோடை மணப்பாகு போன்ற மருந்துகள் உள்ளன. பொதுவாக அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் போன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் சித்த மருத்துவத்தின் உள்ள மருந்துகள் சிறப்பான பலனை கொடுக்கின்றன. 

பொதுவாக வீடுகளில் சாதாரண மக்களுக்கு இவற்றைக் கொண்டு சேர்ப்பதில் உள்ள முதன்மையான சிக்கல் மூலப்பொருட்களின் விலைதான். சித்த மருந்துகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. எனவே மக்கள் விரும்பினாலும் அவற்றை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். உதாரணமாக ஆடாதொடா சிரப் 100 மி.லி விலை ரூபாய்150 ஆக இருக்கிறது. இதுவே 50 ரூபாய்க்கு கிடைக்குமானால் சாமானிய மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியும். மூலப்பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதன் மூலமாக விலையைக் குறைக்க முடியும்.

தீவிர மூச்சுத்திணறலின் போது பயன்படுத்தத் தேவையான ஆக்சிஜன் இருப்பு சித்த மருத்துவ மையங்களில் உள்ளதா?

அவசரத் தேவைக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் எங்கள் இணை இயக்குநராலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களாலும் வழங்கப்பட்டுள்ளது. அவசரத் தேவை ஏற்படும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

மிதமான தொற்றுடன் வீடுகளில் இருப்போர் ஆரம்ப கட்ட பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ள உங்கள் பரிந்துரைகள் என்ன? 

  • காலையில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

  • இஞ்சி, புதினா மற்றும் எலுமிச்சை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். இவற்றை பச்சையாக எடுத்துக் கொள்ளாமல் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுதலே நலம்.

  • துத்தநாக சத்து கொண்ட கொண்டைக்கடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • நெல்லிச்சாறு பருகலாம். 

  • காய்சசல் இருக்கும்போது மட்டும் பால் மற்றும் முட்டை சேர்க்க கூடாது. இது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். மற்ற நேரங்களில் இவற்றை சாப்பிடலாம்.

  • தூதுவளை, முசுமுசுக்கை, துளசி மற்றும் மிளகு சேர்த்து ரசம் வைத்து குடிப்பது சளியை வெளியேற்றும்.

  • இரவு உறங்குவதற்கு முன் பணங்கற்கண்டு, மிளகு சேர்ந்த பாலை பருகுவதன் மூலம் தொண்டை கரகரப்பு போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.

தொற்று ஏற்படாதவர்கள் வெளியில் செல்லும்போது கிராம்பு அல்லது வசம்பு  வாயில் போட்டு மெல்லலாம். இது கிருமி தொற்றைத் தடுக்க உதவும். வெளியில் சென்று திரும்பும்போது தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் வெற்றிலை, மிளகு, கிராம்பு சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இது ஆரம்ப நிலையில் தொற்றின் வீரியத்தைக் குறைக்கப் பயன்படும்.

சளி தவிர்த்து உடல்வலி, காய்ச்சல், தலைவலி இவை மூன்றும் கொரோனாவிற்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. கொரோனா உடலில் பரவியதற்குப் பின்னர் பசியின்மை, மலச்சிக்கல் போன்றவையும் ஏற்படுகிறது. ஆரம்ப கட்ட காய்ச்சலுக்கு நில வேம்பு குடிநீர் சிறந்தது. காலை மாலை மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். தலை வலி ஏற்பட்டால் தனியா, சோம்பு, அதிமதுரம் மற்றும் சர்க்கரை கொதிக்க வைத்து ஒரு மணி நேர இடைவெளியில்  மூன்று  முறை குடித்தால் தலைவலி குணமடையும். பசியின்மையை சரிசெய்வதற்கு பஞ்ச தீபாக்கினி சூரணம் என்று ஒரு சூரணம் இருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் போன்றவற்றை சம அளவு பொடித்து எடுத்து கற்கண்டுடன் சேர்க்கப்பட்ட சூரணம். இது பசியை அதிகப்படுத்தும். இதன் காரணமாக நல்ல உணவை எடுத்துக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் முடியும். 

ஆவி பிடிக்கும் முறை பற்றி விளக்குங்கள் 

நொச்சி இலையுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்தும் அல்லது யூகலிப்டஸ் இலையுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்தும் அல்லது துளசி, வேப்பிலை, நொச்சி இலை மூன்றுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்தும் ஆவி பிடிக்கலாம். இப்படி இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிப்பது மூக்கால் இழுத்து மூக்கால் மட்டுமே வெளியிட வேண்டும். வாய் வழியாக ஆவியை உள்ளிழுக்கக் கூடாது. மேலும் ஆவிபிடிக்கும்போது வாயை மிக அருகில் கொண்டுபோய் அதிக சூட்டோட்டு வைத்து பிடிக்கக் கூடாது. ஆவியை சுவாசிக்க முடிகிற இடைவெளியில் முகத்தை வைத்திருந்தாலே போதுமானது. உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை ஆன்ட்டிசெப்டிக்-ஆக செயல்படுவதுடன் உடல் சோர்வு மற்றும் உடல்வலி போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் அளிப்பவையாய் இருக்கின்றன.

நீங்கள் சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவ மையத்தில் ஆக்சிஜன் குறைந்தவர்களுக்கு கிராம்பு குடிநீர் வழங்கப்பட்டு நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு கூடுவதாக செய்திகள் வருகின்றன. அது பற்றி கூறுங்கள்.

படம் 1: கிராம்புக் குடிநீர் கொடுப்பதற்கு முன்பு ஆக்சிஜன் அளவு 91 ஆகவும், கொடுத்த பிறகு 95 ஆகவும் அதிகரிக்கிறது. படம் 2: 85 ஆக இருந்த ஆக்சிஜன் அளவு கிராம்புக் குடிநீர் வழங்கப்பட்ட பிறகு 97 ஆக அதிகரித்திருக்கிறது.

ஆக்சிஜன் அளவு 80 முதல் 92 வரை உள்ள நோயாளிகளுக்கு இதனைக் கொடுத்து முன்னேற்றம் ஏற்படுவதை உறுபடுத்தியிருக்கிறோம். அதன்பிறகு 70, 71 போன்ற ஆக்சிஜன் அளவு இருப்பவர்களுக்கும் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு கிராம்பு குடிநீர் கொடுக்கும்போது பத்து புள்ளிகள் அளவிற்கு ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. அதன் பிறகு மீண்டும் குறைவதும் அதிகரிப்பதுமாக இருக்கிறது. இப்படி இருந்து ஓரளவு 90 வரை கொண்டுவருவதற்கு இரண்டு, மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் அதன்பிறகு சில சமயங்களில் மீண்டும் குறைவதும் நடக்கிறது. ஆக்சிஜன் அளவு 70 என்ற நிலையில் உள்ள நோயாளிகளைக் கையாள்வது சவாலான ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் 80 முதல் 92 வரை உள்ள நோயாளிகளுக்கு இயல்பு நிலையைக் கொண்டுவந்துவிட முடிகிறது. 

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளியை பரிசோதிக்கும் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்

நான் முதலில் பெரும்பாக்கம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். முதலில் இந்த மருந்து குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாலா அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்றார். இதன் மூலம் விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்து இப்போதுதான் அளித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு மாத கால பயன்பாட்டிற்குப் பிறகு நல்ல முன்னேற்றம் இருக்கும்பட்சத்தில் இதனை முழுமையாக அமல்படுத்துவதற்கான வாய்ப்பிருக்கிறது என மருத்துவக் கல்லூரி டீன் தெரிவித்திருக்கிறார். 

தற்போது கிராம்பு குடிநீரை சேலம், நாமக்கல், தூத்துக்குடி, திருப்பத்தூர், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வார்டுகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். சித்த மருத்துவ இணை இயக்குநர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி கிராம்பு குடிநீரை முழுமையாக அனைத்து சித்த மருத்துவ மையங்களிலும் வழங்கிட ஏற்பாடு செய்யலாம் என்று கூறியிருக்கிறார். 

கிராம்பு குடிநீர் செய்முறை பற்றி விளக்குங்கள்

கிராம்பு -10 கிராம்
ஓமம் – 20 கிராம்
மஞ்சள் தூள் – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
இஞ்சி – 10 கிராம்
அதிமதுரம் -20 கிராம்
இலவங்கப்பட்டை

ஒரு வேளைக்கு 240 மி.லி நீருடன் மேற்கண்ட பொருட்களை கூட்டாக சேர்த்து 60 மி.லி ஆக வற்றும் வரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

மூச்சு விடுவதற்கு அதிக சிரமப்படுபவர்களாக இருந்தால் 10 நிமிடத்திற்கு ஒரு முறையாக இரண்டு முறை கொடுக்கலாம். இது  நுரையீரலில் கடினத்தன்மையுடைய சளியை கரைத்து வெளியேற்றும். மேலும் மூச்சுக் குழலை சீராக்கி இயல்பான சுவாசத்தினை மீள் கொண்டுவர உதவுகிறது. இயல்பாக இருப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை மூன்று நாட்கள் குடிக்க வேண்டும். 

இதில் சேர்க்கப்படும் பொருட்களால் சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். இது மிகவும் எளிமையான மருந்து அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் சொல்கிறார் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்.

நேர்காணல்: சுசீந்திரன் பன்னீர், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *