இக்கட்டுரையின் முதல் நான்கு பாகங்களை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 4
சமீபத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டில் கனவிற்காக ஏற்கனவே IRT சிகிச்சை எடுத்த நோயாளிகளில் சிறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நபர்களுக்கு ஏற்கனவே நினைவுகளிலிருந்து அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கனவுகள் மீண்டும் தொடர தொடங்கியிருப்பதாக கூறியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே தங்களுக்கு வரக்கூடிய கொடுங்கனவை சிகிச்சைகள் மேற்கொண்டு பெருமளவில் குறைந்தவர்கள் ஆவர். (சிகிச்சைக்கு பின் அவர்களின் கொடுங்கனவு வாரத்திற்கு ஒரு நாள் இரவிலோ அல்லது இரண்டு நாட்களிலோ மட்டுமே வருமளவில் குறைந்தவர்கள்). இவர்கள் அனைவரும் சொல்லியிருக்கும் பதில்களில் இந்த கொரோனா நோய் காலத்தில் குறைந்தபட்சம் மாதத்திற்கு 19 நாட்கள் அவர்கள் மீண்டும் கொடுங்கனவுகளை கண்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார்கள்.
லியோன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி ‘பெஞ்சமின் புடோயிஸ்’ (Benjamin Putois, a neuroscientist at the University of Lyon) (Wendy Leslie) மற்றும் அவரது இணை ஆசிரியர்களான ‘கரோலின் சியரோ’ (Caroline Sierro) மற்றும் ‘வெண்டி லெஸ்லி’ ஆகியோர் அவர்கள் சந்திக்கும் இந்த புதிய நெருக்கடியை பற்றி கூறும்போது “அதிகரித்து வரும் மக்களின் கனவு அதிர்வெண்கள் அவர்கள் மறந்த அதிர்ச்சிகரமான நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்துகிறது. அவர்களுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவைப்படுகிறது”. என்கின்றனர்.
உங்களுக்கு வரும் கனவுகளை மீண்டும் நினைவுபடுத்தி அவை எந்ததெந்த நினைவுகளை சேமித்துவைத்திருக்கின்றன அல்லது அழித்திருக்கின்றன என்பதை நினைவுபடுத்தி பாருங்கள். கனவுகள் ஆரோக்கியமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அவை உங்களின் உடல்நலத்தை பாதிக்க தொடங்கினால் நீங்கள் அவற்றை குறைப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நிபுணர்களின் உதவியை நாடலாம். உண்மையில் பெரும்பாலான மக்களுக்கு வரும் கேட்ட கனவுகள் கூட அவர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதால் அவை நன்மையையே செய்கின்றன என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமாகிறது.
கனவுகளால் கண்டுபிடிக்கப்பட்டவை
கனவுகளால் ஏதாவது பயன் இருக்கிறதா என்ற கேள்வியும் பலருக்கு எழலாம், உண்மையில் இந்த உலகத்தை மாற்றக்கூடிய சில கண்டுபிடிப்புகள் கூட கனவின் உதவியால் உருவாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டுபிடிப்பான ‘சார்பியல் கோட்பாடு’ (Theory of relativity)
புகழ்பெற்ற விஞ்ஞானியான ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’ (Albert Einstein) கண்டுபிடிப்பான ‘சார்பியல் கோட்பாடு’ (Theory of relativity) கனவின் தாக்கத்தால் உருவான ஒன்றுதான். கனவில் அவர் ஒரு மின்சார வேலியால் சூழப்பட்ட மாட்டுப்பண்ணை வழியாக நடந்து செல்வதாக கனவு காண்கிறார். அப்போது அங்கிருக்கும் மாடுகள் மின்சாரவேலியை நெருங்கியவுடன் மின்சாரத்தின் தாக்கத்தால் குதிப்பதாக காண்கிறார். அதே நேரத்தில் அவர் நின்றிருக்கும் இடத்திற்கு மறுமுனையில் நின்றிருக்கும் ஒரு விவசாயிக்கு மாடுகள் குதிக்கும் நிகழ்வு ஒரு ‘மெக்ஸிகோ அலைகள்’ போன்ற தொடர்நிகழ்வாக வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த நிகழ்வில் பார்க்கும் இருவருக்கும் அந்த ஒரே நிகழ்வு வெவேறு எண்ணங்களை உருவாக்குவதை கனவில் கண்டார். இந்த கனவே அவரின் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை உருவாக்க காரணமானது.
தனிம அட்டவணை
ரஷ்ய வேதியியலாளர் ‘டிமிட்ரி மெண்டலீவ்’ (Dmitri Mendeleev) 56 தனிமங்களை வகைப்படுத்தும் தன்னுடைய முயற்சியில் சோர்ந்து போனார். பின்பு கனவில் ஒரு அட்டவணையை பார்த்தார் அந்த அட்டவணையில் அனைத்து தனிமங்களும் அவற்றின் தேவைக்கேற்ப சரியான இடத்தில பொருந்தியிருந்தன. அவர் விழித்தெழுந்து உடனடியாக தான் கனவில் கண்டவற்றை நினைவுபடுத்தி ஒரு காகிதத்தில் எழுதினார். இதிலிருந்துதான் நாம் இன்று பயன்படுத்தும் தனிம அட்டவணை (The Periodic Table) தோன்றியது. இதை பற்றி குறிப்பிடும் மெண்டலீவ் தனது நாட்குறிப்பில் கனவில் கண்ட அட்டவணையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திருத்தம் தேவைப்பட்டது. அந்த அளவில் கனவில் கண்ட அட்டவணை மிகவும் சரியாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.
தையல் இயந்திரத்தின் ஊசி
வெட்டப்பட்ட துணிகளை ஒன்றாக இணைக்கும் ஒரு இயந்திரத்தை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ‘எலியாஸ் ஹோவ்’ (Elias Howe) ஊசியை எப்படி அதில் பொருத்துவது மேலும் அதில் எப்படி நூலை நுழைப்பது என்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்களால் களைத்துப்போயிருந்தார். முடிவற்ற குழப்பங்கள் அவரை மேலும் அயற்சிக்கு உள்ளாகின. அந்த நாட்களில் ஒருநாள் உறங்கும்போது கனவொன்றை கண்டார். அதில் காட்டுவாசிகள் சிலர் அவரை சுற்றி நடனமாடுவதாகவும் நரமாமிசம் சமைக்க அவர்கள் தயாராகி வருவதாகவும் கனவு கண்டார். கனவில் அவர்கள் ஈட்டிகளைஅசைத்து நடனமாடினார்கள். அந்த ஈட்டிகளுக்கு நுனியில் கூர்மையான ஒரு துளை இருந்தது. இந்த கனவில் வழிதெழுந்த அவர் அதுவரை முடிவுகாண இயலாத நிலையில் அவரை குழப்பத்திற்கு உள்ளாகிய ஊசியை கண்டறிந்தார். இப்படித்தான் நாம் இன்று பயன்படுத்தும் தையல் இயந்திரத்தின் ஊசியில் அதன் நுனிமுனையில் துளை வந்தது.
அணுவின் மாதிரி வரைபடம்
1922 ஆம் ஆண்டில் டேனிஷ் இயற்பியலாளர் ‘நீல்ஸ் போர்’ (Niels Bohr) அணுவின் மாதிரியைக் கருத்தில் உருவாக்கியதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவர் கண்டறிந்த அணுவின் மாதிரி வரைபடம் உண்மையில் அவர் கனவில் கண்ட ஒன்றுதான். கனவில் சூரியனைச் சுற்றியுள்ள கிரகங்கள் அவற்றிற்கான சுற்றுப்பாதையில் சுற்றிவருவதை கண்டார். அவர் இந்த கனவிலிருந்து திடீரென்று எழுந்தவர் சூரியனை சுற்றிவரும் கிரகங்களின் சுற்றுப்பாதையை கொண்டு அதேபோல் அணுவில் இருக்கக்கூடிய எலக்ட்ரான்களின் இயக்கத்தையும் கற்பனை செய்யலாம் என கருதியே அணுவின் மாதிரி வரைபடத்தை உருவாக்கினார். இதுவே அவருக்கு புகழையும், நோபல் பரிசினையும் பெற்று தந்தது.
பகுப்பாய்வு வடிவியல்
நவம்பர் 10, 1619 இல் ஜெர்மனியின் இராணுவ வீரர் ‘ரெனே டெஸ்கார்ட்ஸ்’ (René Descartes) மூன்று கனவுகளை கண்டார்.அந்த மூன்று கனவுகளும் ஒரே தொடர் வரிசையைக் கொண்டிருந்தன. இந்த கனவுகளே அவரது வாழ்க்கையின் போக்கையும் நமது நவீன உலகத்தையும் மாற்றின. அந்த கனவுகள் குறிப்பாக மூன்றாவது, கனவானது யதார்த்தத்தின் தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. இந்த கனவுகளிலிருந்து மனித அறிவின் உண்மையைக் கண்டறியத் தீர்மானித்த அவர் அடுத்த ஆண்டு கணிதத்தையும் தத்துவத்தையும் படிப்பதற்காக இராணுவத்திலிருந்து விலகினார். நீடித்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக பகுப்பாய்வு வடிவியல் (Analytical geometry) துறை என்ற தனித்த துறையை உருவாக்கினார். இவர் நவீன பகுத்தறிவுவாதத்தை நிறுவிய அறிஞராக கொண்டாடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரபணு மூலக்கூறுகளை ஒரு வரைபடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் வாட்சன் (James Watson) மற்றும் பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) இருவரும் அந்த முயற்சியில் ஏதும் முன்னேற்றம் இல்லாமல் இருந்தனர். அந்த நாட்களில் ஜேம்ஸ் தன்னுடைய கனவில் ஒரு சுழலும் படிக்கட்டை கண்டார். இந்த கனவிலிருந்துதான் மரபணு மூலக்கூறுகளை ஒரு சுழலும் கூம்புவடிவதில் அவற்றை எளிதாக வரைபடமாக்க இயலும் என கண்டறிந்தார்.
மேலே குறிப்பிட்ட கனவுகளால் கண்டறிந்த சில உன்னத அறிவியல் கண்டுபிடுப்புகள் மட்டுமல்லாமல் வேறு பல கண்டுபிடிப்புகளுக்கும், கலை உருவாக்கங்களுக்கும் நாம் காணும் கனவுகள் உதவியிருக்கின்றன. ‘பீட்டில்ஸ்’ (Beatles) இசை குழுவின் மிகவும் புகழ்பெற்ற Yesterday..என்ற பாடல், புகழ்பெற்ற எழுத்தாளர் ‘மேரி ஷெல்லி’ எழுதிய (Mary Shelley) Frankenstein நாவல், புகழ்பெற்ற கிடார் இசை கலைஞர் ‘கேத் ரிச்சர்ட்ஸ்’ (Keith Richards) இயற்றிய Satisfaction என்ற பாடலின் இசைக்கோவை, எழுத்தாளர் ‘ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்’ (Robert Louis Stevenson) எழுதிய புகழ் பெற்ற நாவல் ‘Strange Case of Dr Jekyll and Mr Hyde’, புகழ்பெற்ற பாடலாசிரியர் ‘சாமுவேல் டெய்லர் கோலிரிட்ஜ்’ (Samuel Taylor Coleridge) இயற்றிய ‘குப்லா கான்’ (Kubla Khan) பாடல், அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியர் ‘ஸ்டெப்னி மேயர்’ (Stephenie Meyer) எழுதி உலகப்புகழ்பெற்ற ‘Twilight’ நாவல், புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் ‘ஜேம்ஸ் கேமரூன்’ (James Cameron) இயக்கி புகழ்பெற்ற ‘தி டெர்மினேட்டர்’ (The Terminator) திரைப்படம் ஆகியவற்றிற்கான உந்துதல் அல்லது உருவாக்கம் கனவுகளால் உருவானவையே.
யார் ‘இந்த மனிதன்’?
கனவுகளை மேற்கொண்டு ஆராய துவங்கியபோது ஒரு சுவாரசியமான விடயம் வெளிவந்தது.
நிபுணர்கள் எல்லோரும் கனவுகளை ஆராய்ந்துகொண்டிருந்த போது , எல்லோருடைய கனவுகளையும் ஒருவன் வேட்டையாட துவங்கினான். யார் அவன்? எப்படி எல்லோருடைய கனவுகளிலும் வருகிறான்? எப்படி எல்லோருடைய வாழ்வின் முடிவுகளிலும் தலையிடுகிறான்? என்பதை பற்றி இன்றுவரை ஒரு தகவல்களும் இல்லை. வாருங்கள் இந்த சுவாரசியமான மர்மத்திற்குள் நுழைவோம்.
கனவுகளை பற்றிய இத்தனை மர்மங்களுக்கு மத்தியில் ஜனவரி 2006ல்தான் இந்த ஒரு விசித்திர மர்மம் கவனத்திற்கு வந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபலமான மனநல மருத்துவரை சந்தித்த நோயாளி ஒருவர் தனது கனவுகளில் ஒரு மனிதன் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வருவதாக கூறினார். கனவுகளில் பல்வேறு நேரங்களில் அந்த மனிதன் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவளுக்கு அறிவுரையை வழங்கியுள்ளார். ஆனால் அந்த மனிதனை அந்தப் பெண் தன் வாழ்க்கையில் ஒருபோதும் சந்தித்ததில்லை என்றும் கூறினார். அவர் கூறிய அடையாளங்களை கொண்டு அந்த மனிதனின் முகம் வரையப்பட்டது.
அடுத்து வந்த சில நாட்களில் அந்த நோயாளியின் விவரங்களில் மேற்கொண்டு எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படாததால் அந்த நோயாளியின் விவரங்கள் யாவும் அப்படியே கைவிடப்பட்டது. ஆனால் அந்த மனிதனை பற்றிய உருவப்படம் அவரின் மேஜையில் தொடர்ந்து இடம்பிடித்திருந்தது. சில நாட்கள் கழித்து மருத்துவரை பார்க்க வந்த மற்றொரு நோயாளி அந்த மனிதனின் முகத்தை மருத்துவரின் மேஜையில் கண்டு அந்த மனிதன் தனது கனவுகளில் அடிக்கடி கண்டதாகவும் ஆனால் இதுவரை அவரை நேரடியாக சந்தித்ததில்லை என்றும் யார் அவர் என்றும் மருத்துவரை கேட்டிருக்கிறார். இதில் ஏதோவொரு மர்மமிருப்பதை உணர்ந்த அந்த மனநல மருத்துவர் கனவுகளால் பாதிக்கப்பட்டு தன்னிடம் வரும் பல நோயாளிகளுக்கு எந்தவித முன்குறிப்புகளும் இல்லாமல் அந்த மனிதனின் படத்தை அனுப்புகிறார். அப்படி புகைப்படம் அனுப்பிய சில மாதங்களுக்குள், நான்கு நோயாளிகள் அந்த மனிதனை தங்கள் கனவுகளில் அடிக்கடி கண்டதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். அனைத்து நோயாளிகளும் குறிப்பிட்ட அவரை This Man என்று குறிப்பிடுகிறார்கள்.
ஜனவரி 2006 முதல் இன்று வரை லாஸ் ஏஞ்சல்ஸ், பெர்லின், சாவ் பாலோ, தெஹ்ரான், பெய்ஜிங், ரோம், பார்சிலோனா, ஸ்டாக்ஹோம், பாரிஸ், டெல்லி ,மாஸ்கோ போன்ற நகரங்களில் வாழும் குறைந்தது 2000 பேர் தங்கள் கனவுகளில் இந்த மனிதனைக் கண்டதாகக் கூறியுள்ளனர்.
இந்த மனிதனைப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட மக்களிடையே எந்தவிதமான உறவுகளும் பொதுவான பண்புகளும் தற்போது இல்லை. மேலும், இந்த மனிதனை அவர்களின் கனவுகளில் பார்த்த மக்களால் உருவப்படத்தின் மனிதனைப் போலவே எந்த உயிருள்ள மனிதனும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. நீங்களும் ஒருவேளை கண்டிருக்கலாம்? மர்மங்கள் எப்போதும் வெளியிலேயே மறைந்திருப்பதில்லை ஒருவேளை அது நம் கனவுகளில்கூட குடிகொண்டிருக்கலாம்.
இனிமேலும் கனவுகளை கண்டு அஞ்சாமல் அதை பற்றிய புரிதலுக்குள் நுழைவோம். ஒருவேளை அது வாழ்வின் திருப்பத்திற்கும் துணைபுரியலாம். ஏனெனில் அதன் வரலாறு அப்படியிருக்கிறது. நல் இரவு! நல் கனவு!!
முற்றும்!
– அருண்குமார் தங்கராஜ், Madras Review