இக்கட்டுரையின் முதல் மூன்று பாகங்களை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கலாம்.
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2
தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 3
சமீபத்திய ஆய்வுகள் காதல் உறவுகளின் நெருக்கத்திற்கும் பொதுவான கனவுகளின் உள்ளடக்கத்திற்கும் சில ஒற்றுமைகளை கண்டறிந்துள்ளன.
உறவுகள்
காதல் உணர்வில் நெருக்கமாக இருக்கக்கூடிய 61 மாணவர்களின் கனவுகளின் உள்ளடக்கத்தை பதிவு செய்ததில் ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு நெருக்கமான உறவுகளில் இணையர்களில் ஒருவர் காணும் கனவானது அவர்களின் உறவுகளை சார்ந்து நெருக்கமான பாதுகாப்பு உணர்வுகளை கனவுகளில் உணர்ந்திருக்கின்றனர்.
கனவுகளில் மரணம்
ஒரு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தற்கொலைக்கு முயன்ற நபர்களை கொண்டு அவர்களின் கனவுகள் தினமும் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் கண்ட கனவுகள் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் மூன்று பிரிவு நோயாளிகளின் கனவுகளுடன் ஒப்பிடப்பட்டன. அந்த மூன்று பிரிவு நோயாளிகள் கீழ்கண்ட வகைப்பாடுகளில் பிரிக்கப்பட்டனர்.1. மனச்சோர்வு மற்றும் தற்கொலை பற்றிய எண்ணங்கள் கொண்டவர்கள் 2. மனச்சோர்வு அடைந்தவர்கள் ( தற்கொலை எண்ணம் எழாதவர்கள்) 3. வன்முறை செயல்களை செய்தவர்கள் (தற்கொலை எண்ணம் எழாதவர்கள்). இந்த சோதனையில் தற்கொலைக்கு முயன்றவர்களும் , வன்முறையில் ஈடுபட்டவர்களும் கனவில் மரணம் மற்றும் வன்முறை நிறைந்த கனவுகளை அதிகம் கண்டறிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒருவரின் மனச்சோர்வு தீவிரமடைய தீவிரமடைய இத்தகைய கனவுகள் அவர்களுக்கு தொடர்ந்து வருவது கண்டறியப்பட்டது.
இடது மற்றும் வலது மூளை பக்கங்களின் பங்களிப்பு
மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்கள் கனவுகளின் உருவாக்கத்திற்கு வெவ்வேறு வழிகளில் பங்களிப்பதாகத் தெரிகிறது. ஒரு ஆய்வில் மூளையின் இடது அரைக்கோளம் கனவு தோற்றத்தை அளிப்பதாகவும், வலது அரைக்கோளம் கனவின் தெளிவு, உருவகம் மற்றும் செயல்படுத்தும் கால அளவை தீர்மானிப்பதாக தெரிவிக்கிறது. மேலும் 10 முதல் 17 வயதுடைய இளம்பருவத்தினரைப் பற்றிய ஆய்வில், இடது கை பழக்கவழக்கங்களை கொண்டவர்கள் தெளிவான கனவுகளை காண்பதற்கும் அவற்றை நினைவில் கொள்வதற்கும் மற்றவர்களைவிட அதிக வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டது.
கனவுகளை மறப்பது
மூளை செயல்பாட்டின் ஆய்வுகளில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு இரவும் 4 முதல் 6 முறை வரை கனவு காண்கிறார்கள்.ஆனால் பெரும்பான்மையோர் கனவில் கண்டதை மறந்துவிடுகிறார்கள் மிகச்சிலரே நினைவில் கொள்கிறார்கள்.ஒரு கனவு வந்த 5 நிமிடங்களுக்குப் பிறகு மக்கள் அதன் உள்ளடக்கத்தை 50% சதவீதத்தை மறந்துவிடுகிறார்கள், மேலும் 5 நிமிடங்களுக்குப் பிறகு அது 90% சதவீதமாக அதிகரிப்பதாக கூறப்படுகிறது. நாம் எழுந்திருக்கும் போது பெரும்பாலான கனவுகள் முற்றிலும் மறந்துவிடுகின்றன, ஆனால் கனவுகளை ஏன் நினைவில் கொள்ளமுடியவில்லை என்ற காரணம் கண்டறியப்படவில்லை. கனவு நினைவுகூரலை மேம்படுத்த கடிகார அலாரத்தின் உதவியில்லாமல் இயல்பாக எழுந்திருப்பது, கண்விழித்தவுடன் முடிந்தவரை கனவில் கவனம் செலுத்துவது, கனவைப் பற்றி முடிந்தவரை எழுதுவது, கனவுகளை பதிவு செய்வதை ஒரு வழக்கமாக மாற்றுவது போன்ற பழக்கவழக்கங்கள் உதவுகின்றன.
முதுமையின் தொடக்கத்திலிருந்தே கனவுகள் படிப்படியாக குறைகிறது அதே நேரத்தில் கனவுகளை நினைவுகூருவதும் கடினமாகிறது. இந்த நிகழ்வுகள் பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக நிகழ்கிறது. அதே நேரத்தில் கனவுகளின் உள்ளடக்கங்களுக்கும் பாலின வேறுபாடுகள் இருக்கின்றன.
பாலினம்: ஒரு ஆய்வில் 108 ஆண்களும் 110 பெண்களும் அவர்கள் கண்ட கனவுகளை பற்றிய விவரங்களை பகிர்ந்தனர். அதில் அவர்களின் கனவுகளில் கண்ட நட்பு உணர்வுகள், பாலியல் வேறுபாடுகள், ஆண் கதாபாத்திரங்கள், ஆயுதங்கள் அல்லது உள்ளடக்கத்தில் கனவில் வருபவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும், பெண்களின் கனவுகளில் ஆண்களைக் காட்டிலும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பல்வேறு இடங்களின் உட்புற அமைப்புகள் இடம்பெற்றன.
உறக்கமின்மை : உறக்கமின்மை நோயால் அவதியுறும் நோயாளிகளுக்கு அவர்களின் கனவு நினைவுகூறல் என்பது அதிகரிக்கிறது, மேலும் அவர்களின் கனவுகள் அவற்றின் நிலை ஆகியவை அவர்களின் மன அழுத்தத்தை பிரதிபலிக்கின்றன. போதைப்பொருள் உபயோகிப்பவர்கள் அவர்கள் காணும் கனவில் வினோதமான மற்றும் எதிர்மறையானகனவுகளை காண்கிறார்கள்.
யார் கனவு காண்கிறார்கள்?
எல்லோரும் கனவு காண்கிறார்கள், இருப்பினும் நம் கனவுகளை நினைவில் வைத்திருக்க முடியாது. வாழ்க்கையின் வெவ்வேறு காலங்களில் அல்லது வெவ்வேறு அனுபவங்களின் போது, நம் கனவுகள் மாறக்கூடும்.
சிறுவர்களின் கனவுகள்: ஒரு ஆய்வில் 9 வயதிலிருந்து 11 வயதுள்ள 103 சிறுவர் , சிறுமிகளை வைத்து அவர்களின் கனவுகளை பற்றி ஆராய்ந்தனர். அதில் ஆண் சிறுவர்களைவிட பெண் சிறுமிகளுக்கு பதட்டம் நிறைந்த கனவுகளை காண்கிறார்கள் எனவும் ஆனால் பெரும்பாலும் அவர்கள் கண்ட கனவுகளை மீண்டும் நினைவுகூற முடியவில்லை. பெண் சிறுமிகள் கண்ட கனவுகளின் உள்ளடக்கங்களில் யாரையாவது இழப்பது, சமூகத்தின் குழப்பமான நிலைகள், சிறிய விலங்குகள், கிழே விழுதல் , குடும்ப உறுப்பினர்கள், அடையாளம் காணயியலாத பெண்கள் ஆகிய உள்ளடக்கங்கள் வந்தன.
பெண்களின் கர்ப்பகாலத்தின் கனவுகள்
கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தும் கனவுகள் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் இருந்ததை விட ஏழாவது மாதத்தின் பிற்பகுதியிலிருந்து அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தின் கனவுகளில் அதன் உள்ளடக்கமாக கர்ப்பம், பிரசவம் மற்றும் கரு போன்றவை வெளிப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் கர்பிணிகளின் கனவுகளில் நோய்களை பற்றிய கூறுகள் மற்றவர்களை ஒப்பிடும்போது அதிகமாக இடம்பெற்றன.
நோயாளிகளை பராமரிப்பவர்களின் கனவுகள்
குடும்பத்தினருக்கோ அல்லது நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கு பெரும்பாலும் அந்த நோயுற்ற நபருடன் தொடர்புடைய கனவுகள் வருகின்றன.
அமெரிக்காவில் முதியோர் நல்வாழ்வு மையங்களில் நோயுற்றவர்களுடன் குறைந்தது ஒரு வருடம் பணியாற்றிய பராமரிப்பவர்களின் கனவுகளைத் தொடர்ந்த ஒரு ஆய்வில் பராமரிப்பாளர்களின் கனவுகளில் நோயாளிகள் தெளிவாக இருக்கிறார்கள்.அந்த கனவில் கனவில், பராமரிப்பாளர் நோயாளியுடன் தங்கள் வழக்கமான திறனுடன் தொடர்புகொண்டார், ஆனால் விரும்பியபடி முழுமையாக உதவ முடியாமல் போனதால் கனவுகளில் விரக்தியடையும் நிலை ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இறப்பு
துயரத்திலிருக்கும் மக்களுக்கு அவர்களின் துயரத்தை அடக்கும்விதமாக அவர்களுக்கு கனவுகள் அடிக்கடி வந்தன. இந்த கனவுகள் நெருக்கமானவர்கள் இறந்த முதல் ஆண்டில் அடிக்கடி அவர்களுக்கு வந்தன.
இது அவர்களின் கவலைகளையும் மனச்சோர்வினையும் குறித்தன. நெருங்கிய உறவினரையோ அல்லது நண்பரையோ இழந்து தவிக்கும் 278 நபர்களை கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில்
58% சதவிகிதத்தினர் இறந்த அன்புக்குரியவர்கள் வந்த கனவுகளை, மாறுபட்ட அளவிலான அதிர்வெண்களுடன் கண்டிருந்தனர். அப்படி பெரும்பாலானோர் கண்ட கனவுகள் இனிமையாகவோ அல்லது குழப்பமானதாகவோ இருந்தது இதில் சிலர் முற்றிலும் குழப்பமான கனவுகளை கண்டிருந்தனர்.
அவர்களின் கனவுகளின் கருப்பொருள்கள் இறந்தவர்களை பற்றிய இனிமையான கடந்தகால நினைவுகள் அல்லது அவர்களின் அனுபவங்கள், இறந்தவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அவரின் இறந்த நேரத்தின் நினைவுகள், இறந்தவர்கள் அமைதியாக, நிம்மதியாக தோன்றுவதாகவும் மேலும் இறந்த நபர் ஒரு செய்தியை தெரிவிக்க தொடர்புகொள்வது போலவும் அமைந்த கனவுகள் ஆகும்.
60% சதவிகிதத்தினர் தங்கள் கனவுகளில் இறந்துபோன நெருக்கமானவர்களின் இறந்த முறைகளை கனவாக கண்டதாக கூறியிருந்தனர்.
கனவுகள் வண்ணத்தில் வருமா ?
கனவுகளில் வண்ணங்கள் வருகிறதா என்பது பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற 30 வயதுக்குள்ளவர்களில் 80% சதவிகிதம் பேர் தாங்கள் வண்ண கனவுகளை கண்டிருப்பதாக கூறினார். அதே வேளையில் 60 வயதுக்குட்பட்டவர்களில் வண்ண கனவு கண்டிருந்ததாக 20% சதவிகிதம் நபர்களே தெரிவித்திருந்தனர்.
வண்ணத்தில் கனவு காணும் 20, 30 மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 1993 முதல் 2009 வரை அதிகரித்தது. முன்பு சொன்ன ஆய்வில் கண்டறிந்த தலைமுறை வேறுபாட்டிற்கு இப்போது வீடுகள்தோறும் நிறைந்திருக்கும் வண்ண தொலைக்காட்சிகள் கூட காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் யூகித்தனர்.
கேள்விகள் மற்றும் கனவு நாட்குறிப்புகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில்
இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு கருப்பு, வெள்ளை கனவுகள் அதிகமாக வருவதை பதிவு செய்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கதாக வயதானவர்கள் தங்களின் வண்ண கனவுகள் மற்றும் கருப்பு, வெள்ளை கனவுகள் இரண்டும் சமமாகவும் தெளிவானவையாகவும் இருந்ததாக தெரிவித்தனர். இதில் பங்கேற்ற இளைஞர்கள் தாங்கள் கண்ட கருப்பு, வெள்ளை கனவுகள் ஏழ்மையான வாழ்க்கைதரத்தை பிரதிபலித்ததாக கூறியிருந்தனர்.
கனவுகளால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா?
சில கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவிப்பதாகத் தோன்றலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இது சாத்தியமாக இருக்கக்கூடும் என்றாலும் அதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகின்றனர். இந்தவகை கனவுகளுக்கு பெரும்பாலும் தற்செயலாகவும், தவறான நினைவுகளை அல்லது அறியப்பட்ட தகவல்களை ஒன்றாக இணைக்கும் மனதின் மயக்கமான செயல் கூட காரணமாக இருக்கலாம் என்கின்றனர்.
மக்கள் தங்கள் உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள் பற்றி மேலும் அறிய கனவுகள் உதவக்கூடும். கனவுகளில் தோன்றும் படங்கள் மற்றும் சின்னங்கள் ஆகியவை ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட குறிப்பிட்ட அர்த்தங்களையும் இணைப்புகளையும் கொண்டிருக்கலாம்
போதைமருந்து உபயோகிப்பதிலிருந்து மீண்டவர்களின் கனவுகள்
இது பற்றிய ஆய்வில் டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவுகளில் ‘கோகோயின்’ போதைப்பொருளை பயன்படுத்தி அதிலிருந்து மீண்டவர்களின் கனவுகளை ஆராய்ந்தனர்.
இதில் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீண்டவர்களில் ஏறக்குறைய 90% சதவிகித நபர்கள் முதல் மாதத்தில் போதைப்பொருள் தொடர்பான கனவுகளை கண்டதாக தெரிவித்தனர். இதில் அவர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருளே கனவுகளின் உள்ளடக்கமாக வந்திருந்தது.
ஏறக்குறைய 61 சதவிகிதத்தினர் 6 மாதங்களுக்குப் பிறகு போதைப்பொருள் தொடர்பான கனவுகளைக் கொண்டிருந்தனர். முக்கியமாக அவர்களின் கனவுகளின் உள்ளடக்கத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்துவது அல்லது மறுப்பது போன்ற கனவுகளை கண்டிருந்தனர்.
பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்த மாற்றுதிறனாளிகளின் கனவுகள்
கண் பார்வை உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது முழுமையான பார்வை திறன் இழந்தவர்களுக்கு வரக்கூடிய காட்சி கனவுகளின் பதிவுகள் குறைவாகவே இருக்கின்றன.
பிறவியிலிருந்து பார்வைத்திறன் இழந்தவர்கள் செவிப்புலன் திறனான (Auditory) சத்தங்களை கொண்ட கனவுகளையும், தொடுஉணர்ச்சி(Tactile) கொண்ட கனவுகளையும், சுவை (Gustatory) மற்றும் முகர்வுதிறன் (Olfactory) ஆகிய மாற்று உணர்ச்சிகளை கொண்ட கனவு கூறுகளையும் தெரிவித்தனர்.
பார்வை திறன் இழப்பானது உணர்ச்சி மற்றும் கருப்பொருள்களை உள்ளடக்கமாக கொண்ட கனவுகளை பாதிக்கவில்லை.
இதர மாற்று திறனாளிகளின் கனவுகள்
ஒரு ஆய்வு வேறுசில மாற்று திறனாளிகள் 14 பேரின் கனவு நாட்குறிப்புகளை ஆராய்ந்தது.இதில் நான்கு பேர் பாராப்லீஜியா (Paraplegia) எனப்படும் வாதநோயால் உடம்பின் கீழ்ப்பகுதி செயலிழந்தவர்கள், மேலும் 10 பேர் கேட்கவோ பேசவோஇயலாத மாற்று திறனாளிகள்.
காது கேளாத மாற்று திறனாளிகள் : முழுமையான உடல்திறன் கொண்ட 36 நபர்களுடன் ஒப்பிடும்போது, காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் கனவு அறிக்கைகளில் 80% சதவிகித கனவானது அவர்களின் குறைபாட்டைக் குறிக்கவில்லை. இவர்களில் பலர் தங்கள் கனவுகளில் பேசினர் அதே வேளையில் மற்றவர்கள் பேசும் மொழியைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்ததாக தெரிவித்தனர்.
பாராப்லீஜியா (Paraplegia): இதேபோல் பிறப்பிலிருந்தே இடுப்பிற்கு கீழ் உடல் செயலிந்தவர்களின் கனவு அறிக்கைகளில் அவர்கள் பெரும்பாலும் தங்கள் கனவுகளில் நடந்தும், ஓடி கொண்டிருந்தும் மற்றும் நீந்திக் கொண்டிருந்தும் இருந்ததை பதிவு செய்தனர். உணமையில் இதுவரை அந்த செயல்களில் எதையொன்றையுமே அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஆய்வில், முதுகெலும்பு காயம் காரணமாக பராப்லீஜியாவுடன் பிறந்தவர்கள் அல்லது அதன்பின் அந்த நிலைக்கு ஆளான 15 பேரின் கனவு அறிக்கைகளை பார்ப்போம். இவர்களில்
பாராப்லீஜியா கொண்ட 14 பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் கனவுகள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்கியதை காட்டியதாக அவர்களின் கனவு அறிக்கைகள் தெரிவித்தன.
மனிதர்களின் மூளையானது மரபணு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட திறனை கொண்டிருக்கிறது. அவை வாழ்க்கையை பிரதிபலிக்கும் அனுபவங்களை உருவாக்குகின்றன. இதில் முழுமையாக செயல்படும் கால்கள் மற்றும் புலன்கள் அடங்கும். கேட்காமல் அல்லது நகர முடியாமல் பிறந்தவர்கள் கனவுகளில் மூளையின் இந்த பகுதிகள் செயல்படும்போது அவர்கள் விழித்திருக்கும்போது செய்ய முடியாத பணிகளைப் பற்றி கனவு காண்கிறார்கள்.
ஒரு மருத்துவ உளவியலாளராக டேவிஸ் அதிர்ச்சியிலிருந்து தப்பியவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார். அவர்களில் ராணுவ வீரர்கள், சேவை ஊழியர்கள், குழந்தைகள் போன்ற பல்வேறு வகையினரும் அடக்கம். இவர்களுக்கு வெளிப்படுத்துதல், இறுக்கத்தை தளர்த்துதல் மற்றும் எழுத்துக்களில் அவற்றை விவரித்தல் போன்றவற்றை ஒருங்கிணைத்து தரப்படும் சிகிச்சையான (Exposure, Relaxation, and Rescription Therapy -ERRT)
பயன்படுத்துகிறார். சின்ஹட்ட சிகிச்சையில் நோயாளி அவர்களின் கொடுங்கனவை நினைவுகூர்ந்தபடியே எழுதுகிறார் (வெளிப்படுத்துதல் – இது குறிப்பாக கொடுங்கனவுகளை பற்றி கவலை கொண்டவர்களுக்கு க நன்றாக பலனளிக்கிறது) அல்லது ஒரு புதிய முடிவை கொண்ட (மறுசீரமைப்பு) அவர்களின் கனவை எழுதுகிறார்கள்.
இந்த கனவுகளின் மறுசீரமைப்பு சிகிச்சையில் நோயாளி அவர்கள் விரும்பும் புதிய முடிவை அவர்கள் கண்ட கனவில் இணைக்கத் தொடங்குவதில்லை, அதற்கு பதிலாக ” மறுசீரமைப்பு முறையில் என்ன நடக்கிறது என்றால் இப்போது அவர்களின் கொடுங்கனவு நினைவினால் வெளியேறுகிறது அல்லது அவர்களிடம் இன்னும் சிறிது இருக்கலாம். ஆனால் இதன்பின் அது அவ்வளவு சக்திவாய்ந்ததாகவோ அல்லது தெளிவற்றதாகவோ நீடிப்பதில்லை. மேலும் இதன்பின் தூக்கத்தில் அதன் அதிர்வெண்ணில் குறைந்து விலகிச் செல்கிறது.இது இரவில் உறக்கத்தில் மூளையானது மீண்டும் மீண்டும் நினைவுகளில் புதுப்பிப்பதற்கு முன் நாமே வேலைசெய்து அதன் அவசியத்தை குறைப்பது போன்றது. அந்த நாளின் உறக்கத்திற்கு முன் அவற்றை எழுத்தில் விவரித்து நினைவுகூர்வதன் மூலம் அதை மூளையானது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் பணியிலிருந்து சிறிது சிறிதாக விலகி செல்கிறது.
கனவுகளை ஒரு முக்கிய பிரச்சினையின் அறிகுறியாகக் கருதுவதன் முக்கியத்துவத்தை டேவிஸ் புரிந்துகொள்கிறார். “பல வருடங்களுக்கு முன்புவரை எங்கள் துறையில் கனவுகளை ‘அதீத மன அழுத்தக் கோளாறின்’ (Post-Traumatic Stress Disorder- PTSD) அறிகுறியாக கருதினோம் ” என்கிறார். இப்போது பல சிக்கல்களின் மூலகாரணமாக கனவுகளை கருதுவதில் ஒரு மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் முதலில் கனவுகளை சரிசெய்தால், நடக்கும் மற்ற விடயங்களான மனச்சோர்வு, அழுத்தம் போன்றவற்றை நீங்கள் சரிசெய்யலாம்.
எதிர்கால பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறியாக கனவுகளை பார்ப்பது முக்கியம். உணர்ச்சிபூர்வமான கனவுகள் சில நேரங்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வுக்குப் பிறகு இரவிலும், சில நேரங்களில் ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பிறகும் நிகழ்கின்றன. கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான ‘பென்னி லூயிஸ்’ (Penny Lewis, Professor of psychology at Cardiff University) மற்றும் அவரது சகாக்களும் அன்றாட நினைவுகளை நிகழ்ந்த உடனேயே சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம் , ஆனால் ஆழ்ந்த, தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கென்று வரும்போது அதுபற்றிய “கனவில் பின்னடைவு” உள்ளது என்று கூறுகின்றனர்.
தெளிவான கனவு காண்பதன் மூலம் தங்களுக்கு வரும் மோசமான கனவுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை நாள்பட்ட கொடுங்கனவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்பித்தல் மூலம் அவர்களின் அதிர்வெண் குறைவது கண்டறியப்பட்டது. இந்த வகை சிகிச்சையில் மற்றொரு வகை ‘உருவக ஒத்திகை பயிற்சி’ (Imagery Rehearsal Therapy -IRT) ஆகும். தற்போது இந்த பயிற்சி அளிக்கப்பட்ட சிறிய குழுக்களில் இது வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறது, இருப்பினும் இந்த குறிப்பிட்ட ஆய்வில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இது போன்ற ஆய்வுகள் பெரும்பாலும் இயற்கைக்கு மாறானவை. எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த சிகிச்சைகள் நோயாளிகள் இரவு முழுவதும் விழித்திருக்காமல் தூங்குவதை உறுதி செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால் அவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு அவர்களின் மூளைக்கு ஓய்வு தேவைப்படுகிறது அந்த ஓய்வு இயற்கையானதாக இருக்கவேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக கனவுகளுக்கான காரணம் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் ஆகிவற்றை மேம்படுத்தக்கூடிய நவீன வழிமுறைகள்நன்கு மேம்பட்டிருக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி நாடுகள் எல்லாம் ஊரடங்கினை மேற்கொள்ள தொடங்கியதால் கொடுங்கனவிற்கான சிகிச்சைகளும் புதிய புதிய சவால்களை நாள்தோறும் சந்திக்கின்றன.
தொடரும்…
அடுத்த பாகம் விரைவில் வெளிவரும்.
– அருண்குமார் தங்கராஜ், Madras Review