கொரோனா கனவுகள்

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 2

இக்கட்டுரையின் முதல் பாகத்தை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.

தாழப் பறந்திடும் மேகம் 3 – பெருந்தொற்று காலத்தில் பேரச்சம் தரும் கனவுகள் உண்மை என்ன? – பாகம் 1

கனவுகளின் செயல்பாடுகள்

இதுவரை கண்டறிந்த சான்றுகள் மற்றும் புதிய ஆராய்ச்சி முறைகளிலிருந்து  கனவு காண்பது பின்வரும் செயல்பாடுகளுக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்துள்ளனர்:

 • உறக்கத்தில் உடம்பு ஓய்வுற்றிருக்கும் அகநிலையில் (Offline) அதன் மறு செயலாக்கத்தில் பங்குவகிக்கிறது. இதில் மூளையானது கற்றல் மற்றும் நினைவகத்தின் பணிகளை ஒருங்கிணைக்கிறது. மேலும் விழிப்பு வரக்கூடிய நிலையில் அதற்கான கூறுகளை ஏற்படுத்தி நினைவுகளை பதிவு செய்கிறது
 • எதிர்காலத்தில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு தயாராகிறது.
 • நிஜ வாழ்க்கை அனுபவங்களை அறிவாற்றலால் உருவகப்படுத்துகிறது. கனவு காணுதல் என்பது  உடம்பில் விழித்திருக்கும் இயல்புநிலை வலையமைப்பின் துணை அமைப்பாகும். பகல் கனவு காணும்போது மனதின் ஒரு பகுதியாக கனவு செயல்படுகிறது.
 • அறிவாற்றல் திறன்களை வளர்க்க உதவுகிறது
 • தன்னுணர்வற்ற நிலையில் மனதின் செயல்பாட்டை ஒரு மனவியல் பகுப்பாய்வு முறையில் பிரதிபலிக்கிறது
 • தனித்துவமான உணர்வுநிலையில் நிகழ்காலத்தின் அனுபவம், கடந்த காலத்தை செயலாக்குதல் மற்றும் எதிர்காலத்திற்கான தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நிலை.
 • கனவில் நிகழும் தன்முனைப்பில் (Ego) மிகப்பெரிய, முரண்பாடான அல்லது மிகவும் சிக்கலான கருத்துக்களை ஒன்றிணைக்கக்கூடிய ஒரு உளவியல் தளம். விழித்திருக்கும்போது மனஅமைதியற்ற  கருத்துக்களுக்கு உளவியல் சமநிலையையும் மற்றும் சமநிலையின் தேவையையும் நிறைவேற்றும் நிலை நாம் காணும் கனவுகள்.

மக்களுக்கு அவர்கள் காணும் கெட்டகனவுகள் கூட அவர்களுக்கு வாழ்வை பற்றியதான விழிப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தவகை  ‘நினைவிற்காக உறங்குதல்’ ‘மறப்பதற்காக உறங்குதல்’ போன்ற ‘கண்கள் அலைவுறும் நேரத்தில்’ காணும் கனவுகள் உணர்ச்சி ரீதியான நம்  நினைவுகளை வலுப்படுத்துகிறது, மேலும் அவற்றைப் பாதுகாப்பாக சேமித்தும் வைக்கிறது. எதிர்காலத்தில் அதே போன்ற நிகழ்வுகள் நிகழும் பட்சத்தில் அதற்கான உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. உதாரணமாக உங்கள் மேலதிகாரி உங்களை கடிந்துகொள்ளும் சூழ்நிலையை நீங்கள் எதிர்கொண்டு, அந்த நிகழ்வு உங்கள் கனவாக வந்தால் அடுத்த முறை உங்கள் உயரதிகாரியை நேரில் காணும்போது முன்பு எதிர்கொண்ட சூழ்நிலையின் கடுமையான உணர்ச்சிகள் உங்களிடம் குறைந்தே காணப்படும்.

கனவுகளைப் பற்றி புரிந்துகொள்ள நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம். ஏனெனில் அவற்றைப் பற்றி ஒரு ஆய்வகத்தில் படிப்பது கடினம். ஆனால் நவீன தொழில்நுட்பமும் புதிய ஆராய்ச்சி நுட்பங்களும் கனவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவுகின்றன. (‘விழிகள் அலைவுறும் நேரம்’ இனி இக்கட்டுரையில் அதன் ஆங்கில சுருக்கமான REM என்று குறிக்கப்படும்)

உறக்கத்தின் நிலைகள்

நமது உறக்கத்தின் சுழற்சியில் ஐந்து நிலைகள் இருக்கின்றன :

நிலை 1:

லேசான தூக்கம், மெதுவாக கண்களின் இயக்கம் மற்றும் தசை செயல்பாடு குறைகிறது. இந்த நிலை நமது முழு உறக்க நிலைகளில் 4 முதல் 5 சதவீத நேரங்களை எடுத்துக்கொள்கிறது.

நிலை 2:

கண்களின் இயக்கம் நின்று மூளையின் அலைகள் மெதுவாக மாறுகிறது, அவ்வப்போது ‘உறக்க சுழல்கள்’ (Sleep spindles) எனப்படும் விரைவான அலைகள் முகிழ்கின்றன. இந்த நிலை முழு உறக்க நிலைகளில் 45 முதல் 55 சதவீதம் வரை நிகழ்கின்றன.

நிலை 3:

டெல்டா அலைகள் எனப்படும் மிக மெதுவான மூளை அலைகள் தோன்றத் தொடங்குகின்றன. அவை சிறிய, வேகமான அலைகளுடன் குறுக்கிடுகின்றன. இது முழு  உறக்கத்தில் 4 முதல் 6 சதவீதம் வரை நிகழ்கின்றன.

நிலை 4:

இந்த நிலையில் மூளை டெல்டா அலைகளை தனிப்பட்ட வகையில் பிரத்தியேகமாக உருவாக்குகிறது. 3 மற்றும் 4 நிலைகளில் ஒருவரை எழுப்புவது கடினம். இந்த இரு நிலைகளும் ஒன்றாக இணைந்ததே “ஆழ்ந்த உறக்கம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் கண் அசைவு அல்லது தசை செயல்பாடு முற்றிலுமாக இருக்காது. ஆழ்ந்த உறக்கநிலையில் இருக்கும் ஒருவரை உறக்கத்திலிருந்து எழுப்பினால் அவர் உடனடியாக இயல்பு நிலைக்கு திருப்புதல் கடினம். அவர்கள் இயல்புநிலைக்கு திரும்ப சில நொடிகளாகிறது. இந்த நிலை முழு உறக்கத்தில் 12 முதல் 15 சதவீதம் வரை நிகழ்கிறது.

நிலை 5:

இந்த நிலை ‘கண்கள் அலைவுறும் இயக்க’ நிலை (REM) என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் சுவாசம் மிகவும் விரைவாகவும், ஒழுங்கற்றதாகவும், மேலோட்டமாகவும் மாறும், கண்கள் பல்வேறு திசைகளில் வேகமாகச் செல்கின்றன, மற்றும் மூட்டு தசைகள் தற்காலிகமாக முடங்கிப் போகின்றன. இதய துடிப்பு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, ஆண்களுக்கு ஆண்குறியில் விறைப்பு ஏற்படுகிறது . REM உறக்கத்திலிருந்து ஒருவர் விழித்தெழும்போது பெரும்பாலும் வினோதமான மற்றும் ஒழுங்கற்ற  கதைகளை விவரிக்கிறார்கள். இந்த கதைகளே நாம் காணும் கனவுகளாகும். இந்த நிலை நம் முழு உறக்க நேரத்தில் 20 முதல் 25 சதவிகித நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.

மனித மூளையின் இரு முக்கிய பகுதிகள் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) மற்றும் அமிக்டாலா (Amygdala) ஆகும். இந்த இரண்டு பகுதிகளும் நாம் கனவு காணும் நேரத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. ஹிப்போகாம்பஸ் நினைவுகளை வகைப்படுத்தி அவற்றை சேமிக்கிறது. அமிக்டாலா உணர்ச்சிகளுக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டு அவை அதற்கான தொடர்புகளுடன் இணைக்கப்படுகின்றன. உறக்கத்தின் REM கட்டத்தின் போது தெளிவான, உணர்ச்சிமிகுந்த மற்றும் மறக்க இயலாத நினைவுகளை சேமித்து அவை ஒவ்வொன்றும் அவற்றிற்கிணையான உணர்வுகளுடன் இணைக்கப்படுகின்றன. எளிதாக சொல்வதானால் நினைவில் கொள்ளவேண்டிய ஒவ்வொரு நினைவுகளுக்கும் குறிச்சொற்கள் இடப்படுகின்றன. அழிக்கப்பட வேண்டிய நினைவுகள் அதன் முந்தைய குறிச்சொற்கள் கிழிக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. இந்த செயல்கள் அனைத்தும் நமது தூக்க உளவியலில் நிகழும் உணர்ச்சி குறிச்சொல்லை எடுப்பதற்காக நிகழ்கின்றது.

கனவுகள்

கனவுகள் என்பது ஒரு உலகளாவிய மனிதஇனத்தின் அனுபவமாகும். இது உறக்கத்தின் போது உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி நிகழ்வுகளால் உருவாக்கப்படும் ‘நனவின் போலச்செய்தல்’ என்று விவரிக்கப்படலாம்.

தெளிவான கனவுகள் (Lucid dreams)

தெளிவான கனவுகள் என்பது கனவு காண்பவர், தான் காண்பது கனவுதான் என்பதை உணரும் வகையில் வெளிப்படும் கனவுகள் ஆகும். இந்த கனவுகளை சில சமயம் அவர்கள் தாங்கள் விரும்பும் வகையில் கட்டுபடுத்தலாம். ஒவ்வொரு தெளிவான கனவுகளுக்குமிடையே அதன் மீதான கட்டுப்பாட்டின் அளவென்பது சீரற்று இருக்கலாம். வழக்கமாக காணும் கனவுகளுக்கிடையே, சில சமயம் தாங்கள் காண்பது கனவு என்பதை உணரும் வகையில் இந்த வகை கனவுகள் உருவாகக்கூடும். சிலர் இத்தகைய கனவுகளை தொடர்பற்ற வகையில் நினைவு கூறுகிறார்கள். இன்னும் சிலரோ இத்தகைய கனவுகளின் மீது அவர்கள் விரும்பும் வகையில் அதன் கட்டுப்பாட்டை அதிகரிக்க இயலும் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

கொடுங்கனவுகள்

கொடுங்கனவுகள் என்பவை துன்பகரமான கனவுகளாகும். இது கனவு காண்பவருக்கு பல குழப்பமான உணர்ச்சிகளை உணர வைக்கின்றன. மேலும் பயம் மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்துகின்றன.

அனைத்து வயதினருக்கும் இக்கனவுகள் ஏற்படலாம், இதன் காரணங்கள் பின்வருமாறு:

 • மன அழுத்தம்
 • பயம்
 • அதிர்ச்சி
 • உணர்ச்சி சிக்கல்கள்
 • உடல் நலமின்மை
 • சிலவகை மருந்துகளின் உபயோகம்.

உண்மையில் ஒரு கெட்ட கனவானது மூளையின் ஒரு பகுதியை அதைப்போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது நாம் பயம்கொள்வதற்கு அல்லது அதை எதிர்கொள்வதற்கு நம்மை தயார் செய்கின்றது. மக்களில் நிறைய பேர் கொடுங்கனவுகள் அவர்களுக்கு வரும்போது மிக பயம் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கனவில் குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒத்த புகைப்படங்களை பின்னர் அவர்கள் காணும்போது அவர்களின் உணர்ச்சி மையம் மிகக் குறைவாகவே செயலாற்றியது கண்டறியப்பட்டது. எப்படியாயினும் துன்பம் தரக்கூடிய புகைப்படங்களை காண்பதற்கும் , மேலதிகாரியை எளிதாக எதிர் கொள்வதற்கும் அந்த கனவுகள் ஒருவழியில் அவர்களை தயார்படுத்தியிருக்கிறது என்பது தெரியவருகிறது.

இந்த REM பகுதி நேரத்தை மூளையின் முக்கிய பகுதியான அமிக்டாலாவரவிற்கும் நாட்களில் முந்தைய நாளின் அதேபோன்ற உணர்ச்சிமிகு சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் மூளையை மீண்டும் மறுகட்டமைக்கவும் பயன்படுத்திக்கொள்கிறது. முந்தைய நாளின் உணர்ச்சிகளை ஒரே இரவில்  ஒருசேர குவித்து உணர்ச்சிமிகு குவியலாக மாற்றுவதென்பது அடுத்தநாள் காலையில் மீண்டும் அவற்றை புதிதாக தொடங்க நம்மை அனுமதிக்கிறது. இதை பற்றிய மேலதிக ஆய்வுகளில் அழுத்தம் மிகுந்த பணிகளை செய்யும் பணியாளர்களுக்கு தினமும் காலையில் அழுத்தைதை கட்டுப்படுத்த உதவும் ‘கார்டிசோல்’ (Cortisol) ஹார்மோன் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.  இது அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளை பணிகள்  தொடங்கும் காலை நேரத்திலேயே அதை சமாளிக்கும் ஹார்மோன் அதிகரித்திருப்பதால் அவர்கள் அன்றைய நாளின் சூழலை விரைவாகவே கடக்க இயலும். இந்த ‘கார்டிசோல்’ ஹார்மோன் சுரப்பு உற்பத்தி செய்யப்படும்போது அந்த நேரத்தின் மன அழுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய அமிக்டாலா உதவுகிறது.

தூக்கத்தின் REM நிலையில் மூளையானது குறை அதிர்வெண்களுடன் கூடிய மெல்லிய தீட்டா அலைகளை (Low-frequency, slow Theta waves) ஹிப்போகாம்பஸ்,அமிக்டாலா மற்றும் நியோகார்டெக்ஸில் பகுதிகளில் உருவாக்குகிறது. நாம் விழித்திருக்கும் போதும் தீட்டா அலைகளை உருவாக்குகிறோம். ஆனால் தீட்டா அலைகளின் உருவாக்கம் என்பது REM உறக்க நிலையின் தனித்த சிறப்பியல்பு. எலிகளில் மேற்கொண்ட ஆய்வில் அழுத்தம் மிகுந்த வேலையை செய்த எலிகள் விரும்பத்தகாத வேலையை செய்ததன் காரணமாக அடுத்துவந்த இரவின் உறக்கமானது அதிக  REM பகுதிகளை கொண்டதாகவும், REM உறக்க நிலை பகுதியில் வழக்கத்தைவிட அவற்றின் தீட்டா அலைகளில் உயர்வுகள் காணப்பட்டன.

பாரிஸில் இருக்கும் École Normale Supérieure உயிரியல் நிறுவனத்தின் நரம்பியல் விஞ்ஞானியான ‘டேனீலா போபா’ (Daniela Popa) எலிகளில் செய்த இந்த ஆய்வில் கனவுகளில் உணர்ச்சிகரமான நிகழ்வுகளைச் செயலாக்குவதில் ஈடுபட்டுள்ள அதே மூளைப்பகுதிகளே மீண்டும் மீண்டும் தூண்டப்படுகின்றன என அறியமுடிந்தது. எலிகளுக்கு அதே அழுத்தத்துடன் தொடர்ந்து பணிகள் வழங்கப்பட்டிருந்தால் REM உறக்க நிலையிலும் மற்றும் தீட்டா அலைகள் உருவாக்க செயல்பாட்டிலும் அவை நீண்டகால நினைவுகளையும் மற்றும் மோசமான நினைவுகளையும் நினைவுகளில் சேமித்துவைக்கும் செயலாக்கத்தில் ஈடுபட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆனால் எலிகளில் உணர்ச்சிவசப்படாத நினைவக சேமிப்பிடத்தைத் தேடுவது சிக்கலானது என்று போபா சுட்டிக்காட்டினாலும் அவைகள் என்ன நினைக்கின்றன என்பதை அறிவதும் கடினம் என்கிறார்.

விளக்கங்கள்

நாம் உறங்கச்செல்வதற்கு முன்பு நம் மனதில் ஏற்படக்கூடிய சில சலனங்கள் வரக்கூடிய கனவுகளின் உள்ளடங்களை பாதிக்கிறது. இவை கனவுகளுக்கிடையே முற்றிலும் சீரற்ற வகையில் காட்சியாகின்றன.  

எடுத்துக்காட்டாக, தேர்வு நேரத்தில் மாணவர்கள் நிச்சயமாக தேர்வுகளைப் பற்றி கனவு காணலாம். நெருக்கமாக இருப்பவர்களைக் கனவு காணலாம். வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய பணியின் ஏதாவதொரு கூறுகளை கனவாக காணலாம். இந்த ‘சூழ்நிலையை கவனித்தல்’ என்பது நாம் உறக்கத்தில் அன்றைய நாளிலிருந்து உருவாகும் கூறுகள் போன்றவற்றை கனவு போன்றவற்றை அதன் உருவங்களில் மீண்டும் வெளிப்படுத்துகின்றன.

கனவுகளின் சிறப்பியல்புகள்

கனவுகளை ஆய்வறிக்கைகளில், கனவுகளில் வரும் ‘சிறப்பான கூறு’களை கனவு காண்பவர் அவற்றை எவ்வாறு அடையாளம் காட்டுகிறார் என்பதை பதிவு செய்துள்ளன. இதில் ஏறத்தாழ 320 நபர்களின் கனவுகள்  ஆய்வு செய்யப்பட்டன.

 • 48% சதவிகித கதாபாத்திரங்கள் கனவு காண்பவருக்குத் தெரிந்த ஒரு நபரைக் குறிக்கின்றன.
 • 35% சதவிகித கதாபாத்திரங்கள் அவற்றின் சமூகப் பாத்திரத்தால் (எடுத்துக்காட்டாக,வாகன ஓட்டுநர்,காவல்துறையினர்,வியாபாரிகள்) அடையாளம் காணப்பட்டனர். அப்படியில்லையெனில் அவர்கள் கனவு காண்பவருடனான உறவு மற்றும் நட்பில் இருபவர்களாகவும் இருந்தனர் (நண்பர்,உறவினர்  போன்றவர்கள்).
 • 16% சதவீதம் மேற்சொன்ன எதிலும் வகைப்படுத்த இயலாதவையாக இருந்தன.

நினைவுகூரப்பட்ட கனவுகளில் வந்தவர்கள்

 • 32% சதவீதம் நபர்கள் தோற்றத்தால் அடையாளம் காணப்பட்டனர்
 • 21% சதவிகிதம் நபர்கள் அவர்களின் நடத்தை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
 • 45% சதவீதம் நபர்கள் முகத்தால் அடையாளம் காணப்பட்டனர்
 • 44% சதவிகிதம் நபர்கள் ‘வெறுமனே தெரிந்தவர்கள்’  (அதாவது எப்போதோ அல்லது அடிக்கடியோ உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடியவர்கள். ஆனால் அவர்களுடன் உங்களுக்கு எந்தவித அறிமுகமோ அல்லது தொடர்போ இருப்பதில்லை அல்லது அதிக தொடர்பு இருப்பதில்லை. எ.கா தபால்காரர், நாளிதழ் போடும் சிறுவன், பூவிற்கும் பெண், தினசரி கடக்ககூடிய குடியிருப்பின் காவலாளி போன்றவர்கள்)   என்ற வகையில் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் பெயரிடப்பட்ட மற்றும் பொதுவான வகைகளில் 14% சதவீதத்தில் கனவின் வினோதக் கூறுகள் பதிவாகியுள்ளன. மற்றொரு ஆய்வு கனவு உணர்ச்சிக்கும் கனவு பாத்திர அடையாளத்திற்கும் இடையிலான உறவை ஆராய்ந்தது.

கனவில் ஏற்படும் பாசமும் மகிழ்ச்சியுமான உணர்ச்சிகள் அவர்களுக்கு ஏற்கனவே பொதுவாக அறியப்பட்ட கதாபாத்திரங்களுடன் தொடர்புடையவையாக இருந்தன. மேலும் இந்த உணர்ச்சி பண்புக்கூறுகள் விழித்திருக்கும் நிலைக்கு முரணாக உறக்கத்தில் இருக்கும்போது கூட அவற்றை சரியாக அடையாளம் காண பயன்படுத்தப்பட்டன.

தொடரும்…!

அடுத்த பாகம் விரைவில் வெளிவரும்.

– அருண்குமார் தங்கராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *