இருளர்கள்

ஜெய்பீம் திரைப்படம் காட்டிய மறக்கடிக்கப்பட்ட இருளர் மக்களின் தஞ்சாவூர் மாத்திரை – சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்

ஜெய் பீம் திரைப்படம் இருளர் சமுதாய மக்களிடையே நடக்கும் கொடுமையை தோலுரித்துக் காட்டியுள்ளது. பாம்புகளைப் பற்றி முழுவதும் அறிந்த மனிதர்கள் (Tamil herpetologist) இருளர்கள். அவர்களை நாம் சென்று பார்ப்பதோ, நமது சித்த மருத்துவ கல்லூரிகளுக்கு அழைத்து கௌரவப்படுத்தாமல் இருப்பதோ நாம் செய்து கொண்டிருக்கும் அவமானகரமான செயல்.

வருடத்திற்கு 10,000 பேர் பாம்பு கடியால் தமிழகத்தில் இறக்கின்றனர். ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் நாம் அமைதியாக இருக்கின்றோம். ஜெய் பீம் திரைப்படத்தில் பாம்புக் கடிக்கு 16 மூலிகைகளைக் குறிப்பிடும் காட்சி உள்ளது.

அக்காட்சியில் கூறப்பட்டுள்ள மூலிகைகளாவன.

  • ஆகாசகருடன்
  • நவ கொஞ்சி
  • காட்டு விராலி
  • நிலவேம்பு
  • எட்டி
  • வெள்ளை எருக்கன்
  • குன்றிமணி
  • காட்டுசீரகம்
  • தும்பை

முதலிய மூலிகையின் இலை, வேர், பட்டை முதலியவற்றை நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி பயன்படுத்தப்படுகிறது.

பாம்பு கடித்தவருக்கு நிலவேம்பின் கசப்பு சுவை தெரியவில்லை என்றால் விஷம் தலைக்கு ஏறி உள்ளது என்றும், அவர்களுக்கு சிகிச்சை பார்த்துத் தர வேண்டும் என்று அந்த படத்தில் கூறப்பட்டுள்ளது. இருளர் மக்கள் பாம்புக்கடிக்கு பயன்படுத்திய முக்கியமான தஞ்சாவூர் மாத்திரையும் அப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட தஞ்சாவூர் மாத்திரையின் வரலாற்றையும், அம்மாத்திரை குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளையும் விரிவாகப் பார்ப்போம்.

பாம்பை கையில் வைத்திருக்கும் இருளர் பெண்கள்

தஞ்சாவூர் மாத்திரையும் நிலவேம்புக் குடிநீரும்

நவீன மருத்துவ அறிஞர்கள் சித்த மருந்துகள் மீது வைக்கும் முதல் குற்றச்சாட்டே அவை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டதா? மக்கள் அனைவரும் பயன்படுத்த ஏதுவான பாதுகாப்பானவைகளா? பக்க விளைவுகள் உண்டா? என்பவை தான். இவை தொலைக்காட்சி விவாதங்களிலும் சரி, பொது மன்றத்திலும் சரி நவீன மருத்துவர்கள் சித்த மருத்துவர்கள் மீது தொடுக்கும் போர்க்கணைகள்.

மக்கள் நாயகனாக தமிழக அரசு ஆதரவுடன் டெங்கு, சிக்குன்குனியா போன்ற உயிர்கொல்லி நோய்களால் மக்கள் அவதிப்பட்டபோது ஆபத்பாந்தவனாக செயலாற்றிய நிலவேம்புக் குடிநீரும் விதி விலக்கல்ல.

வெகுஜன மக்களுக்கு பயன்படும் நிலவேம்பு குடிநீர் போன்றே பல இலட்சக்கணக்கான சித்த மருந்துகள் இன்னும் வெளி உலக வெளிச்சத்துக்கு வராமல் உள்ளன. ஆங்கில மருத்துவம் செயலிழந்த நிலையில் தனி ஒருவனாக பல லட்சம் மக்கள் உயிரினைக் காத்த நிலவேம்பு குடிநீர் தர நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து பொது மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்கான பணிகளும் மத்திய மாநில அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று நிலவேம்பு குடிநீருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் சற்றே ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் பகுதியில் பாம்புக் கடி மற்றும் நாய்க்கடி போன்றவற்றிற்கு பெயர் பெற்ற சித்த மருந்தான தஞ்சாவூர் மாத்திரைக்கும் (Tanjore Pill ) ஏற்பட்டது.

பாம்பு கடிக்கு சிகிச்சையான ”ஆன்டி வெனாம்” ஊசி கண்டுபிடிக்கப்படாத அந்த காலக்கட்டத்தில் (18ம் நூற்றாண்டு) பல உயிர்களைக் காத்த வெகுஜன சித்த மருந்து இந்த தஞ்சாவூர் மாத்திரை. பாம்பு கடிக்கு மட்டுமின்றி நாய் கடிக்கும் அதில் முக்கிய குறிகுணமான ஹைட்ரோபோபியா குறிகுணத்திற்க்கும் சிறந்த மருந்தாக வழங்கி வந்தது வரலாறு.

தஞ்சாவூர் மாத்திரை (Tanjore Pill) வரலாறு

இருளர் பழங்குடியினர்

ஆங்கில கிறித்துவ மிஷினரி இந்தியாவில் கோலோச்சிய காலம். கிறித்துவ சபை பணிக்காக 1778 தஞ்சாவூரில் பணியாற்றிய பாதிரியார் Fredrik Schwartz அனைவரும் அறிந்தவர். இரண்டாம் சரபோஜி மன்னரின் பாதுகாவலராக செயல்பட்டு அவர் மன்னார் பொறுப்பேற்க மூலகாரணம் இவரே.

தஞ்சாவூர் பகுதியில் சித்த மருத்துவ பணியாற்றிய ஒரு சித்த வைத்தியரின் மூலம் தஞ்சாவூர் மாத்திரை (Tanjore Pill ) பற்றி பாதிரியார் அறிந்து கொண்டு அப்போதைய கிழக்கிந்திய கம்பேனியில் தஞ்சாவூரில் மருத்துவராக பணியாற்றிய மருத்துவர் தாமஸ் ஸ்டரேஞ்சு (Dr.Thomaz Strange) அவர்களை சித்த வைத்தியரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். தஞ்சாவூர் மாத்திரையின் (Tanjore Pills ) பயன் குறித்து மூவரிடையே நடைபெற்ற விவாதத்தின் முடிவில் தஞ்சாவூர் மாத்திரையின் சிறப்புகள் குறித்தும் அதன் வெகுஜன பயன்பாடு அவசியம் குறித்தும் ஆவணப்படுத்த பரிந்துரை செய்து அப்போதைய சென்னை மாகாண கவர்னருக்கு Mr.Archibaldu Campell, பாதிரியார் Fredrik Schwartz அஞ்சல் எழுதுகிறார். மருத்துவர் தாமஸ் ஸ்டரேஞ்சு (Dr.Thomaz Strange) தன் பங்கிற்கு சென்னை ஆங்கில கம்பெனி மருத்துவர் குழு மூலம் ஆராயுமாறும் கடிதத்தை கவர்னருக்கு எழுதுகின்றார்.

இவர்கள் இருவரின் கடிதத்தைக் கண்ட சென்னை மாகாண கவர்னரும், தஞ்சாவூர் மாத்திரையின் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறும் அதன் நம்பகத் தன்மை குறித்த ஆராய்ச்சி முடிவுகளை அனுப்பி வைப்பதாக பதில் எழுதினார். தஞ்சாவூர் மாத்திரை பெறப்பட்ட பிறகு தன் மாதிரிகளை மெட்ராஸ் ஹாஸ்பிடல் போர்டுக்கு (MHB) அனுப்பி வைக்கிறார். அங்கு மருத்துவர் டுபின் (Dr.William Duffin ) தலைமையில் குழு உருவாக்கப்பட்டு ஆய்வுப் பணி தொடங்கியது. அக்குழுவினருக்கு ஆய்வு முடிவுகள் மிகவும் வியப்பை அளிக்கிறது. இக்குழு தஞ்சாவூர் மாத்திரையை பாம்புக்கடி மற்றும் நாய்கடிக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்து கவர்னருக்கு அறிக்கை சமர்பிக்கிறது.

முதல் கட்ட ஆய்விற்குப் பிறகு மெட்ராஸ் ஹாஸ்பிடல் போர்டு (MHB) பயன்படுத்த அனுமதி அளித்து பரிந்துரை செய்தது. கவர்னர் அவர்களும் தஞ்சாவூர் மாத்திரை ஆங்கில கம்பெனியின் அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்க உத்தரவு பிறப்பித்தார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு சித்த மருந்து ஆங்கில கம்பெனியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெகுசன பயன்பாட்டிற்கு அரசாணை பிறப்பித்து பயன்படுத்தப்பட்டது என்ற பெருமை தஞ்சாவூர் மாத்திரைக்கு கிடைத்தது.

பாதுகாப்பில்லை என சொல்லி மறுக்கப்பட்ட தஞ்சாவூர் மாத்திரை

இக்குழுவில் இடம் பெற்றிருந்த சில மருத்துவர்களுக்கு தஞ்சாவூர் மாத்திரையில் கலந்த மருந்து சரக்குகளான வெள்ளை பாடாணம், பாதரசம் மற்றும் நீர்விஷம் போன்றவற்றின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஐயம் இருந்தது. இதற்கிடையே சென்னை மருத்துவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் (Dr.James Anderson) என்பவர் மாத்திரையில் கலந்துள்ள சரக்குகள் நஞ்சுத் தன்மை உள்ளவை. அவை பாதுகாப்பு அற்றவை என வாதாடுகிறார். இதற்கு மருத்துவர் டுபின்(Dr.William Duffin) அவர்கள் நடைமுறையில் பாதுகாப்புக் கேடு இல்லாததால் இதனை தொடரலாம் என பதில் கடிதம் எழுதுகிறார்.

மருத்துவர் டுபினுக்குப்(Dr.William Duffin) பிறகு ஆங்கிலக் கிழக்கிந்திய மருத்துவரான மருத்துவர் பேட்ரிக் ருஸல் (Dr.Patrick Russel) தஞ்சாவூர் மாத்திரை பற்றி தன ஆய்வு சமர்பிக்கிறார். நஞ்சியல் துறை அறிஞரான இவரும் தஞ்சாவூர் மாத்திரை குறித்து ஆய்வு செய்து லண்டனுக்கு அனுப்புகிறார். இந்தியாவில் நஞ்சு பாம்புகள் பற்றியும் அவற்றின் சிகிச்சை பற்றியும் ஆய்வு செய்த மருத்துவர் பேட்ரிக் ருஸல் (Dr.Patrick Russel) அவர்களும் தஞ்சாவூர் மாத்திரை சிறந்த பலன் அளித்தாலும் அதன் சரக்குகளின் பாதுகாப்பு உறுதி செய்த பின் பொது மக்களுக்கு அளிக்கலாம் என்று கூறி தஞ்சாவூர் மாத்திரையின் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனை நவீன நஞ்சியலின் தந்தை எனப்படும் ஓரிபில்லா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் பிறகு தஞ்சாவூர் மாத்திரை பற்றி பல ஐரோப்பிய அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இருந்தாலும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு அவர்களால் ஆய்வு முடிவை அளிக்க இயலவில்லை. அதன் பிறகும் தஞ்சாவூர் மாத்திரை வைத்தியர்களால் பயிற்சி செய்யப்பட்டது வரலாறு.

திறன்மிக்க பயன் இருந்தும், பாதுகாப்பு காரணங்களால் வெகுசன மருந்தாக பயன்படுத்தப்பட வேண்டிய தஞ்சாவூர் மாத்திரை பாதுகாப்பு காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

இன்றைய தடுப்பூசிகளின் முன்னோடி சித்த மருத்துவம்

கி.பி. 1545-ல் தென் தமிழகத்தில் பெரியம்மை வராமல் தடுக்க, பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களின் கட்டியிலிருந்து ஊசியில் குத்தி, நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு நோய் வராமல் தடுக்கும் வழக்கம் ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை தற்காலத் தடுப்பூசி முறை பிறக்க வழிவகுத்தது என்றால் மிகையாகாது.

தஞ்சாவூர் மாத்திரைக்காக சித்த மருத்துவருக்கு 6 லட்சம் பரிசு வழங்கிய அன்றைய கவர்னர்

டாக்டா ஸ்டிரேஞ்ச் மற்றும் டேனிஷ் மிஷனரியைச் சேர்ந்த பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் பாதிரியார் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் சித்த மருந்தான ‘விட மாத்திரை என்கிற தஞ்சாவூர் மாத்திரையை, தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு பரம்பரை வைத்தியர் வழங்கி வந்தது 1788-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாம்புக்கடி, வெறிநாய்கடி, யானைக்கால் நோய்க்கு நன்கு பயன் தருகிறது என்று அப்போதைய சென்னை மாநில கவர்னர், ராணுவ மருத்துவக் குழுத் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் ஆண்ட்ரூசனிடம் கூறி, அதன் பயன்பாட்டை உறுதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாத்திரை என்ற சித்த மருந்தைப் பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் நோயாளிகளுக்கு வழங்கி நன்கு குணமானாதால், சம்பந்தப்பட்ட பரம்பரை வைத்தியருக்கு 200 பகோடா பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது என்று 1788-ல் மெட்ராஸ் கூரியர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு பகோடா என்பது இன்றைய 3360 ரூபாய்க்கு சமம். அப்படியானால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத் தொகையின் இன்றைய மதிப்பு ரூ.6,72,000.

2015 வரை வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை

பொதுவாக அக்காலச் சித்த மருத்துவர்கள் மருந்து செய்முறையை வெளியிடுவதில்லை. அதேநேரம், தஞ்சாவூர் மாத்திரைக்குப் பெருமளவு பணம் பரிசாகத் தரப்பட்டதால், மக்கள் உயிரைக் காக்கும் பொருட்டு அதன் செய்முறையை பரம்பரை வைத்தியர் விளக்கினார் அதுவே அந்த மாத்திரை தடை செய்யப்படுவதற்கு காரணமாகிவிட்டது.

தஞ்சாவூர் மாத்திரை நல்ல முறையில் குணமளித்தாலும், அதிலிருந்த வெள்ளைப் பாடாணம் என்ற வெள்ளை ஆர்செனிக்கை ஆங்கில மருத்துவர்கள் அறிந்தனர். ஆர்செனிக் நஞ்சாகக் கருதப்பட்டதால் இந்திய பாம்பியலின் தந்தை பேட்ரிக் ரஸ்ஸஸ், அந்த மாத்திரையையே தடை செய்துவிட்டார். அதேநேரம், வெறிநாய்க்கடி நோய் பாதித்த நோயாளிகளுக்கு 2015 வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாம்புக்கடி, வெறிநாய்க்கடி, யானைக்கால் போன்றவற்றால் ஏற்படும் இறப்பை தஞ்சாவூர் மாத்திரையால் தடுக்க முடிந்தது. அதைப் பரவலாக்க வேண்டும் என்ற டாக்டர் ஸ்டிரேஞ்ச் மற்றும் பிரெட்ரிக் ஸ்வாட்ஸ் ஆகியோரின் முயற்சி 250 ஆண்டுகளாக மக்களை காத்திருக்கிறது. எனவே பாம்புக்கடி மற்றும் வெறிநாய்க் கடி நோய் என்ற சவாலான இரண்டு நோய்களுக்கு மீண்டும் ஆய்வுகளை முடுக்கிவிட்டு தஞ்சாவூர் மாத்திரையை மேம்படுத்திக் கண்டுபிடித்தால், தமிழ் மருத்துவத்துக்கு உயரிய விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள்,

– சித்த மருத்துவர்  D. பாலசுப்ரமணியன்  MD siddha

மருத்துவர் பாலசுப்ரமணியன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சித்த மருந்துகளின் மூலம் அரசின் கொரோனா தடுப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *