சரோஜா குமார்

விவசாயமும் சந்தைப்படுத்துதலும் – சரோஜா குமார்

இப்போது விவசாயிகளுக்கு நிறைய இணையவழிக் கலந்துரையாடல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதற்கு முன்பும் விவசாயிகளுக்கு நிறைய பயிற்சிகளை நம் அரசு வேளாண் துறைகள் சார்பில் ஏற்பாடு செய்கிறார்கள்.

அவை எல்லாம் விவசாயிகள் எப்படி விவசாயம் செய்ய வேண்டும், எப்படி குறைந்த செலவில் அதிக மகசூல் எடுப்பது, ஏக்கருக்கு எத்தனை டன்கள் எடுக்கலாம், அதற்குத் துணை செய்ய புதிதாக வந்துள்ள டெக்னாலஜி என்னென்ன, புதிதாக வந்துள்ள விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், அவைகளுக்கு என்னென்ன மானியங்கள் உள்ளன, அவற்றை எப்படிப் பெறுவது, ஏற்றுமதி செய்வதற்கு தேவையான சான்றிதழ்கள், அவற்றை எப்படிப் பெறுவது என்று வழிகாட்டு நெறிமுறைகள்….. இப்படி விவசாயிகளுக்கு ஏராளமான அறிவுரைகள், நன்று.

ஆனால் விவசாயிகள் விளைவித்த பின்னர் அதை எப்படி சந்தைப்படுத்துவது என்று மிகவும் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. எந்த வழிகாட்டுதலும் இன்றி அவர்கள் நன்றாகவே விவசாயம் செய்வார்கள். அதைப் பற்றிய அத்தனை அறிவும் இயல்பாகவே அவர்களுக்கு உண்டு.

விவசாயிகள் தோல்வியுறுவது சந்தைப்படுத்துதலில் தான்.

இப்போது விவசாயிகளாக நம்மை நாம் சில கேள்விகள் கேட்டுக் கொண்டு விடை தேடுவோம். ஆறு மாதங்கள் அல்லது ஒரு ஆண்டு என்று உற்பத்திக்கு செலவு செய்யும் நாம் மதிப்புக் கூட்டவும் சந்தைப்படுத்தவும் எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு? 

“நேரம் இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது. 

ஒரு பொருளை உற்பத்தி செய்யும் முன்பு, அந்தப் பொருளை யாருக்கு  விற்பனை செய்யப் போகிறோம்? எவ்வளவு விலை வைக்கப் போகிறோம்? இந்தப் பொருளுக்கான சந்தை எது என்று எந்த முன்னேற்பாடும் இன்றிக் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக நான் ஏதோ ஒன்று எனக்குத் தெரிந்ததைச் செய்வேன், அதற்கான விலை வேண்டும் என்று கேட்டால் கிடைக்காது. 

பெருநிறுவனங்கள் என்ன செய்கின்றன? உற்பத்தி செய்யும் முன்பே சந்தையைப் பிடிக்கத் தொடங்கி விடுகின்றன. அதற்காகவே அவர்கள் நிறைய நேரமும் பெரும் பொருளும் செலவு செய்கிறார்கள். தேவையற்ற பொருட்களைக் கூட சந்தையில் கொண்டு போய் வெற்றிகரமாக விற்பனை செய்ய அவர்களால் முடிகிறது. ஆனால் இது இல்லாவிட்டால் செத்து விடுவோம் என்ற நிலையில் கூட நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை சரியான விலையில் சரியான ஆட்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியவில்லை என்றால் இதில் ஏதோவொரு தவறு இருக்கிறதுதானே!  

ஒரு எடுத்துக்காட்டு:

1970 களுக்கு முன்பு நாம் நம்முடைய கறுப்பு நிறத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் வாழ்ந்தோம். அல்லது கவலைப்பட்டாலும் நாம் அதை மாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கான தேவையும் நமக்கு இல்லை. ஆனால் அப்போது சந்தையில் முதன் முதலாக “ஃபேர் அண்ட் லவ்லி” என்ற பெயரில் இந்தியச் சந்தையில் நுழைந்த சிகப்பழகு க்ரீம் எத்தனை வெற்றி பெற்றது? அதற்கு என்ன காரணம்? அதை இந்திய மக்களிடம், கிராமங்களில் கூட கொண்டு போய்ச் சேர்க்க அவர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அதற்கு பின்னரும் ஏராளமான அழகு சாதன பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும் அப்படி ஒன்றும் நம்முடைய இயற்கை நிறம் மாறிவிடவில்லை. ஆனால் அந்தச் சந்தை வெற்றிகரமாகவே உள்ளது. நம்முடைய பணம் போய்க் கொண்டேதான் இருக்கிறது. தற்சார்பு பேசுபவர்கள் கூட அழகு என்ற ஒரு விடயத்தில் சமரசம் செய்வதில்லை. இப்படி எத்தனையோ பொருட்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 

பெரு நிறுவனங்கள் இதைச் செய்வது சாத்தியம், நம்மால் முடியுமா என்ற கேள்வி வருவது இயற்கை தான். ஆனால் நாம் சந்தைப்படுத்தச் செய்த முயற்சிகள், அதற்காக நாம் செலவழித்த பணம் மற்றும் நேரம் என்ன? நான் வீட்டில் மூட்டைகள் வைத்திருப்பேன், அல்லது தரகு மண்டி முகவர் சொல்லும் விலைக்கு விற்பது என்பதுதான் விவசாயிகள் நிலைப்பாடு. 

சில நிமிடங்கள் சிந்தித்து எல்லா தொழிலும் போல விவசாயத்தை உற்பத்தி சார்ந்த ஒரு தொழிலாகப் பார்த்தால்  சந்தைப் படுத்துதல் அனைவருக்கும் எளிதாகும். புனிதப் படுத்தினால் தற்சார்புடன் விளைவித்துக் கொண்டு வாழலாம். அது அவரவர் விருப்பம்.  

விவசாயத்தை இத்தனை புனிதப்படுத்தும் நாம் மலம் அள்ளும் வேலை செய்வோரைப் பற்றி என்ன சிந்திக்கிறோம்? இன்னும் இதைவிடத் துன்பமான, மக்கள் வெறுத்து ஒதுக்குகின்ற, ஆபத்து நிறைந்த  தொழில்களை எவ்வளவோ பேர் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆனால் யாரும் புனிதப் படுத்துவதில்லை. 

சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு விவசாயி ஒரு நாளில் எட்டு மணி நேரம் உழைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மணி நேரம் உற்பத்தியில் ஈடுபடலாம். இரண்டு மணி நேரம் அறுவடை மற்றும் மதிப்புக் கூட்டலில் கட்டாயம் ஈடுபட வேண்டும். பிறகு உள்ள நான்கு மணி நேரம் சந்தைப் படுத்த மட்டுமே செலவழிக்க வேண்டும். 

இதையே மாதக் கணக்கில் அல்லது ஆண்டுக் கணக்கில் பிரித்துக் கொள்ளலாம். ஒரு உளுந்து விவசாயி மூன்று மாதம் உளுந்து உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொண்டால் மொத்தம் பதினைந்து அல்லது இருபது நாட்கள் காட்டில் வேலை செய்ய வேண்டி இருக்கலாம். முப்பது நாட்கள் என்று வைத்துக் கொண்டாலும் மீதியுள்ள அறுபது நாட்கள் உளுந்துக் காட்டில் வேலை இல்லை. வேறு வேலைகள் பார்க்கலாம். 

அறுவடை முடிந்ததும் அடுத்த பட்டம் வரும் வரை மதிப்புக் கூட்ட அல்லது நேரடியாக சந்தைப் படுத்த அவர் என்ன முயற்சிகள் எடுக்கிறார் என்று பார்த்தால் பதில் இல்லை. 

மேலும் ஒரே பயிர் உற்பத்தியில் ஈடுபடாமல், நம் பகுதியில் விளையக்கூடிய உண்ணத் தகுந்த பல பொருட்களைக் கலந்து விளைவித்தால் விற்பனை இன்னும் எளிதாகும். 

– சரோஜா குமார்

(சரோஜா குமார் அவர்கள் கரூரில் இயற்கை வேளாண்மை, உணவுக்காடு வளர்ப்பு என பலவற்றை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து முருங்கையிலிருந்து எண்ணெய், பொடி என பலவற்றையும் தயாரிக்கும் பயிற்சி போன்றவற்றை அளித்து வருகிறார்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *