ஈரான் மற்றும் சீனாவுக்கு இடையே 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடைய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ‘பொருளாதார மற்றும் (ராணுவ) பாதுகாப்பு ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் என்று இந்த ஒப்பந்தத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திடுவதன் மூலம் சீனாவும், ஈரானும் இணைந்து அமெரிக்காவிற்கு எதிராக தங்கள் உறவை வலுப்படுத்துகின்றன.
கடந்த 2016-ம் ஆண்டில் சீன அதிபர் ஜின் பிங் தனது ஈரான் பயணத்தின் போது இத்தகைய ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிபருடன் அப்போதே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அது பலகாலமாக பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் ஆட்சியாளர்களால் சீனா-வுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஈரான் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை; விரைவில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க-சீன வர்த்தக பனிப்போர்
கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையேயான வர்த்தக பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. கொரோனாவை ‘சீன வைரசாக’ கட்டமைத்து பிரச்சாரம் செய்தது அமெரிக்கா; உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அதற்கான தனது நிதி பங்களிப்பை மறுத்தது.
மறுபுறம் சீனாவோ, அதனது புவிசார் அரசியல் நலனுக்கான பிராந்திய நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. கொரோனாவுக்கான மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதன் மூலம் பப்புவா நியுகெனியா, ஃபிஜி தீவு மற்றும் சாலமன் தீவு போன்ற பசுபிக் பிராந்திய நாடுகளில் அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது; ஆப்ரிக்காவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துகிறது.
அந்த வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள ஈரானுடன் தற்போது சீனா ’பொருளாதார மற்றும் (ராணுவ) பாதுகாப்பு’ ஒப்பந்தம் கையெழுத்திடுவது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் உடையதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க-ஈரான் மோதல்
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான அரபு நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் தலையீட்டை ஈரான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அமெரிக்காவிற்கு எதிரான அணு ஆயுத சோதனை நடத்தியதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஈரானுடன் வர்த்தக உறவைக் கொண்டிருந்ததால், அந்நிறுவனங்களுக்கான சர்வதேச வங்கிக் கடன்கள் மறுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்தது.
தொடர்ந்து அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே அசாதரண சூழல் நிலவிய நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈரான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவமானது இரு நாட்டுக்குமிடையே போர் சூழும் நிலையை உருவாக்கியது.
கொரோனா பெருந்தொற்று உலகெங்கும் பரவிய நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான போர்சூழல் போக்கு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF) ஈரானுக்கு வழங்க இருந்த கடனுதவியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.
பொது எதிரிக்கு எதிராக கைகோர்க்கும் சீனா-ஈரான்
இந்நிலையில்தான் தங்களின் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக சீனாவும், ஈரானும் கைகோர்க்க உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானின் தொலை தொடர்பு, உட்கட்டமைப்பு, சாலை, ரயில்வே துறை மற்றும் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்யும். ஈரானோ, அடுத்த 25 ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும்.
பொருளாதாரத் தடை மூலம் ஈரானின் பொருளாதாரத்தை அமெரிக்கா முடக்கிய நிலையில் இந்த ஒப்பந்தம் ஈரானிற்கு மிக அவசியமானதாகும். இதுபற்றி கருத்து கூறிய ஈரானின் மூத்த பத்திரிக்கையாளர் பெர்ரிதோன் மஜ்லெஸி, ”ஈரானுக்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. சீனாவைத் தவிர. எதுவாகயிருந்தாலும் பரவாயில்லை, பொருளாதாரத் தடை நீங்கும் வரை சீனாவுடனான ஒப்பந்தமே ஈரானிற்கு இருக்கக்கூடிய சிறந்த வழி” என குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தின் ராணுவ முக்கியத்துவம்
பொருளாதார மூதலீடுகளை தவிர்த்து இரு நாடுகளுக்கு இடையே ’பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுதல், எல்லை தாண்டும் குற்றங்கள், போதைப் பொருள் மற்றும் ஆள் கடத்தலைத் தடுப்பது’ போன்ற ராணுவ உறவுத் தொடர்பான அம்சங்களும் இந்த ஒப்பந்ததில் இடம்பெறுகின்றன. இந்த ஒப்பந்ததின் மூலம் ராணுவ ரீதியான கூட்டுப் பயிற்சி, ராணுவ ரகசியங்களை பகிர்ந்து கொள்ளுதல், ஆயுத உற்பத்தி மேம்பாட்டிற்கான கூட்டு ஆராய்ச்சி ஆகியவற்றில் சீனா மற்றும் ஈரான் ஈடுபடும்.
மிக முக்கியமாக ஈரான் பிராந்தியத்தில் சீனா ராணுவ ரீதியாக கால்பதிக்க இந்த ஒப்பந்தம் உதவும். தொலை தொடர்பு முதலீடுகள் மூலம், சீனா தனது பெய்தோ (Beidou) 5G ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை ஈரானில் அமைக்க உள்ளது. இதன் மூலம் சீனா அரபு நாடுகளை, பெர்சிய வளைகுட கடற்பிராந்தியங்களை வேவு பார்க்க முடியும்.
அமெரிக்காவின் நகர்வுகளுக்கு எதிராக சீனாவின் தந்திரங்கள்
ஈரானுக்கு அச்சுறுத்தலாக பெர்சிய வளைகுடா (Persian Gulf) கடற்பாதையில் அமெரிக்கா சார்பு நேட்டோ படைகளும், சீனாவிற்கு அருகிலுள்ள தென் சீன கடற்பகுதியில் ஜப்பான்-அமெரிக்க கூட்டுப்படைகளும் உலவுகின்றன. இந்த நிலையில் சீனா-ஈரான் ராணுவ கூட்டுறவு அமெரிக்காவின் ராணுவ மேலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் ஈரானின் வடமேற்குப் பகுதியான அபந்தானிலுள்ள(Abandon) மகு (Maku)பகுதியில், சீனா தடையில்லா வர்த்தக மையத்தினை (Free Trade Zone) அமைத்திட உள்ளது. இப்பகுதியில் பாயும் ஷத் அல் அராப் ஆறு (Shat Al Arab) இம்மையத்தினை பெர்சிய வளைகுடாவுடனும், கோஷேம் தீவு வளைகுடாவுடனும் இணைக்கக்கூடியது. ஓமன் கடலின் கடற்கரையில் இரு துறைமுக வசதிகளை சீனா பயன்படுத்த உள்ளது. அவற்றில் ஒன்றான ஜாஸ்க் (Jask) துறைமுகம் பெர்சிய வளைகுடாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மஷ் நீரிணைப் பகுதியின் (Straits Of Hormuz) அருகிலே அமைந்துள்ளது.
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பஹ்ரைனை தலைமையகமாக கொண்டு நிலை கொண்டிருப்பதன் மூலம்தான் உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மஷ் நீரிணைப் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் தற்போது சீனா அதே ஹார்மஷ் நீரிணைக்கு அருகிலேயே நிலை கொள்வதன் மூலம் அமெரிக்க கப்பற்படையின் ஆதிக்கத்தை நேரடியாக எதிர்கொள்ளும்.
சீனாவின் முத்துமாலை மற்றும் OBOR திட்டம்
சீனா தனது முத்துமாலை திட்டத்தின் கீழ் தென் சீன கடற்பகுதியில் தொடங்கி சூயஸ் கால்வாய் வரையுள்ள துறைமுகங்களில் தனது இருப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகம், பாகிஸ்தானின் கெளதார் துறைமுகம், ஆப்ரிக்க முனையில் ஜிபோவ்டி (Djibouti) துறைமுகம் உள்ளிட்டவற்றில் சீனா நிலைக் கொண்டுள்ளது. தற்போது அதன் தொடர்ச்சியாக ஈரான் துறைமுகங்களிலும் சீனா உள் நுழைந்துள்ளது.
சீனாவின் ”ஒரே மண்டலம் ஒரே பாதை” (One Belt One Road) எனும் வணிகப் பாதைத் திட்டம் சீனாவை ஐரோப்பிய நாடுகளுடன் வணிக ரீதியாக இணைக்கக் கூடியது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் இந்த யூரேசிய (Euresia) திட்டத்திற்கு ஈரானுடனான சீன உறவு வலு சேர்ப்பதாக இருக்கும்.
இந்தியாவின் நிலை
உலக கடற் பிராந்தியத்தில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவிற்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
தெற்காசிய பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்க, இந்திய, ஜப்பான் கடற்படைகள் ராணுவ கூட்டுறவைக் கொண்டுள்ளன. அமெரிக்காவுடனான இந்தியாவின் COMCASA (Communications Compatibility and Security Agreement) ஒப்பந்தம் இந்தியாவின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது.
தற்போது இந்தியாவுடனான தனது ராணுவ உறவை வலுப்படுத்திக்கொள்வதற்காக அமெரிக்கா, இந்தியாவினை சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பதற்குத் தூண்டுகிறது. சீன முதலீடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள், அமெரிக்க முதலீடுகளை பெரிய அளவில் அனுமதிக்கின்றனர்.
தேவை சுயசார்பு வெளியுறவுக் கொள்கை
அமெரிக்க சார்பாக நின்று, சீனாவுடன் மோதல் போக்கையே சீனாவுடனான வெளியுறவுக் கொள்கையாக இந்தியா கடைபிடிக்கிறது. இதன் விளைவுதான் தற்போதைய இந்திய- சீன எல்லை பிரச்சனையின் ஒரு வடிவமாக வந்து நிற்கிறது. அதிகரிக்கும் சீன- அமெரிக்க வல்லரசியல் போட்டி இந்தியாவிற்கு குறிப்பாக உலக கடற் போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பை கொண்டுள்ள தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். அமெரிக்க-சீன மோதலில் இந்திய வெளியுறவுக் கொள்கையினை அடகு வைத்து விடாமல் உண்மையிலேயே சுயசார்பு இந்தியாவாக தனித்த வெளியுறவுக் கொள்கையுடன் இயங்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருக்கிறது.
இந்திய வெளியுறவுக் கொள்கை வல்லரசுகளுக்கிடையிலான மோதலின் அடிப்படையில் முடிவு செய்யப்படாமல், மக்களின் நலனுக்காக உருவாக்கி எடுக்கப்பட வேண்டும். இதுதான் இன்றைய தேவை.