டெக்சாஸ் பனிப்பொழிவு

என்ன நிகழ்கிறது அமெரிக்காவின் காலநிலையில்? காலநிலை மாற்றத்தின் சாட்சியங்கள் டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியா!

அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலநிலை மாற்றமானது உலகெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணமாக ஓக்லஹோமா (Oklahoma) நகரம் இந்த வாரம் -14 ° F வெப்பநிலையைக் கண்டிருக்கிறது. இது 1899 ஆம் ஆண்டில் அந்நகரம் ஒரு மாகாணமாக மாறுவதற்கு முன்பு நிலவிய காலநிலை என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகக் குறைந்த வெப்பநிலையை எட்டும் அமெரிக்க நகரங்கள்

டெக்சாஸ்(Texas), டல்லாஸ் (Dallas) -2° F ஆகவும், தென்கிழக்கு ஹூஸ்டன் (Houston) மற்றும் சான் அன்டோனியோ (San Antonio) முறையே 13 ° F மற்றும் 12 ° F ஆகவும் குறைந்தது. அமெரிக்காவின் பல நகரங்கள் இந்த வாரம் குறைந்த வெப்பநிலையை எட்டும் என்று காலநிலை வல்லுநர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

டெக்சாசில் 4.2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

செவ்வாய்க்கிழமை (16/02/2021) காலை டெக்சாஸில் மட்டும் 4.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் உறைபனி குளிர்நிலையில் மிகக்கொடிய துயரங்களை சந்தித்திருக்கின்றனர். இது இன்னும் நீடிக்கின்றது. சொல்லப்போனால் டெக்சாஸ் மக்கள் ஒருவேளை குளிர் அதிமாக நிலவும் ஐஸ்லாந்தில் இப்போது இருப்பானார்கள் என்றால் அது அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஏனெனில் எப்போதும் குளிர்நிலவும் ஐஸ்லாந்து காலநிலையைவிட டெக்சாஸ் அதிக உறைநிலை காலநிலையை சந்தித்து வருகிறது. 

ஆர்க்டிக் கடலில் உருவாகிய வெப்பக்காற்று

இந்த காலநிலை மாற்றங்களுக்கு காரணமாக “குளிர்மண்டல காற்று அலைகளில் வழக்கத்தைவிட அதிகளவில் அதன் அலைகள் வேகமாகவும் தீவிரமாகவும் இயங்குகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகியிருப்பதனால் பனி இல்லாத ஆர்க்டிக் கடலில் உருவாகிய வெப்பக்காற்று அலைகள் அதன் தீவிரப் போக்கின் காரணமாக தெற்கு நோக்கி செல்கிறது” என்று வானிலை ஆய்வாளர் கிறிஸ் குளோனிங்கர்( Chris Gloninger) கூறியிருக்கிறார். 

புவியின் இரு துருவங்களிலும் பனிப்பாறைகள் உருகுவதன் விளைவு

புவியின் இரு துருவங்களில் பனிப்பாறைகள் மிகவேகமாக உருகி வருகின்றன. எனவேதான் அலாஸ்கா மற்றும் ஐஸ்லாந்து போன்ற இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளன. இது தற்போது உறைபனி காலநிலை நிலவும்  டெக்சாஸ், லூசியானா அல்லது ஓக்லஹோமா போன்ற இடங்களை விட வெப்பமானது என்றால் அதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.

காலநிலை மாற்றம் ஏற்படுத்திய மின்தடை

கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம்  மற்றும் அருகிலுள்ள பிற மாநிலங்களில் ஏற்பட்ட மின்தடை குறித்து நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அந்த செய்தியைப் அறியவில்லை எனில் காலநிலை பற்றிய மிக முக்கிய செய்திகள் எதுவும் உங்களை வந்தடையவில்லை என்பது பொருள். ஏனெனில் டெக்ஸாஸ் மாநில வரலாற்றில் இத்தகைய மிக மோசமான நிலைமை இதுவரை நிகழ்ந்ததில்லை. வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத உறைநிலைக்குக் கீழ் சென்ற குளிர்நிலை இது. அதே வேளையில் இந்த குளிர்நிலையை எதிர்கொள்ள மக்களுக்கான மின்சாரத் தேவை என்பது மிக அதிக அளவில் தேவைப்படுகிறது. 

ஆனால் அத்தகைய பெரிய அளவிலான மின்சார வழங்கலை மக்களுக்கு அளிக்க இயலாததால் வேறு வழியில்லாமல் டெக்சாஸில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரத்தை நிறுத்தியது. இப்போதுவரை மின்சாரம் இல்லாமல் மக்கள் கடுந்துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

கடந்த வருடம் கலிபோர்னியாவில் வெப்ப அலைகளால் ஏற்பட்ட மின்தடை

டெக்ஸாசில் ஏற்பட்டுள்ள மின்தடையானது அங்கு இதுவரை வழங்கிய மின்சாரத்தை விட அதிக தேவையை எதிர்கொண்டிருப்பதால் வேறு வழியில்லாமல் முழுவதுமான மின்தடையை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் கடைசியாக இதேபோன்ற மின்தடை தலைப்புச் செய்திகளாக ஆகஸ்ட் 2020-ல் ஏற்பட்டது. அப்போது கலிபோர்னியா மாகாணத்தில் நிலவிய கடும்வெப்ப அலைகள் போன்ற வெப்பநிலை ஏற்பட்டபோது தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மாநிலத்தின் பகுதிகளுக்கு சுழற்சி முறையிலான மின்சார விநியோகம் செயல்படுத்தப்பட்டது.

டெக்சாஸ் மின்தடைக்கும், கலிபோர்னியா மின்தடைக்குமான ஒற்றுமை, வேற்றுமைகள்

டெக்சாஸில் நடந்து வரும் மின்தடைகள் மற்றும் கடந்த கோடையில் கலிபோர்னியாவில் நிகழ்ந்த மின்தடைகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. ஏனெனில் இரண்டு மின்தடைகளும் இயற்கையின் மாறுபாடுகளால் ஏற்பட்டவை. அதேவேளையில் இரண்டும் மாறுபட்ட காலநிலையில் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு நிகழ்வுகளிலில் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமிருக்கின்றன. அதை முழுமையாக புரிந்துகொண்டால் மாறிவரும் காலநிலைகளுக்கு ஏற்ப நேரிடும் இத்தகைய இடர்பாடுகளை கடக்க இயலும்.

வெறுமனே ஒப்புநோக்கினால் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் மின்தடைகள் ஒத்தவை. ஆனால் நீங்கள் ஆழமாகப் பார்க்கும்போது வேறுபாடானவை. முதலில் ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

ஒற்றுமை # 1: தீவிரமான காலநிலையே மின்சார விநியோகத்தை நிறுத்தியது .

டெக்சாஸ் மற்றும் கலிஃபோர்னியாவில் மின்தடைகள் இரண்டும் தீவிரமான காலநிலைகளால் ஏற்பட்டவை. அவை மின்விநியோகத்தை வழங்கக்கூடிய மின்அளவை மீறின. அப்படி விநியோகிக்க முடிந்தால் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டமைப்புகளும் முற்றிலும் சேதமடையக்கூடிய அளவிற்கு அதன் தீவிரத்தன்மை இருந்தது. டெக்சாஸில் இந்த உறைபனி வெப்பநிலையானது தெற்கு அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு அங்கு திடீரென ஏற்பட்ட பனிக்கட்டிகள் நிறைந்த ஆர்க்டிக் பகுதியை ஒத்த காலநிலை மாற்றம் காரணமானது என்றால், கலிஃபோர்னியாவிலோ இது மேற்கு அமெரிக்காவின் பெரும்பகுதியில் பல நாட்கள் நிலவிய கடும் வெப்ப அலைகளால் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் வெப்பநிலையும் அதன் வரலாற்றில் அதுவரை நிலவியிராத கடும் வெப்பநிலையாகும்.

காலநிலை மாற்றம் இந்த இரண்டு செயலிழப்புகளுக்கும் வழிவகுத்த தீவிரகாலநிலை மாற்றங்களை உலகெங்கும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் இப்போது இருக்கின்றன. இனிவரும் காலங்களில் ஒரு இடத்தில் நிலவும் தீவிர வெப்பநிலை திடீரென்று அதிபயங்கர உறைநிலைக்கும் செல்லக்கூடும். எனவே இப்போது விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் மற்றும் தீவிர குளிர்நிகழ்வுகளுக்கு இடையிலான தொடர்பையும் ஆய்வு செய்கின்றனர். இந்த இரு நிகழ்வுகளுக்கும் உலகெங்கும் இருக்கக்கூடிய மின்சார வழங்கல்களின் கட்டமைப்பு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

ஒற்றுமை # 2: புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் குறைகூற முடியாது

டெக்சாஸிலிருந்து வெளிவந்த முதல் அறிக்கைகளைப் படித்தபோது ஏற்பட்ட மின்தடைக்கு உறைந்த காற்றாலைகளை குற்றம் சாட்டியது. ஆனால் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி  நிறுவனங்களின் தொழில் நலன்களால் இத்தகைய தவறான தகவல் பரப்பப்பட்டது உறுதியானது. உறைந்த காற்றாலைகள் முதன்மைக் காரணம் அல்ல என்ற செய்தி இறுதியில்தான் வெளிவந்தது. 

புதுப்பிக்கத்தக்க திறன் கொண்ட நிறுவங்களிலிருந்து வழங்கப்பட்ட மின்சாரத்தை ஏற்காமல் அவை கணிசமான அளவு கட்டுப்படுத்தப்பட்டதுதான் டெக்சாஸில் மின்தடைக்கு பங்களித்த மிகப்பெரிய காரணி. மேலும் எதிர்பாராத விதமாக மின்உற்பத்தி நிலையங்கள் தங்கள் இயக்கத்தை முற்றிலும் கைவிட்டன. இந்த மின்தடை ஏற்பட்டதற்கு மிகப்பெரிய குற்றவாளி பெட்ரோலிய பொருள்கள் மற்றும் புதைபடிவ எரிபொருள்களை முதன்மை எரிபொருளாக கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களே ஆகும்.

ஆகஸ்ட் 2020-ல் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மின் செயலிழப்புகளுக்கும் இதேவிதத்தில்தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்களின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது கலிஃபோர்னியாவில் செயல்பட புதுப்பிக்கதக்க ஆற்றல் நிறுவனங்கள் இதுபோன்ற அவதூறுகளுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. முடிவில், கலிஃபோர்னியா மின்தடைகளுக்கு மற்றும் செயலிழப்புகளுக்கு ஆதாரப்பூர்வமான பகுப்பாய்வு மூன்று முக்கிய காரணிகளைக் கூறியது. அவை,

1. மிகவும் அதிகவெப்பநிலை நிலவிய காலநிலை 

2. பழமையான நம்பகத்தன்மையற்ற திட்டமிடல் 

3. தவறான முறையில் இயங்கிய ஆற்றல் சந்தைகள். இதன்பின்னேதான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள் ஒருபோதும் செயலிழப்புக்கு காரணமல்ல என்பது தெரியவந்தது.

வேறுபாடு # 1: டெக்சாஸில் ஏற்பட்ட மின்தடைதான் மிகவும் மோசமானது.

டெக்சாஸில் சுழற்சி முறையிலான  மின்தடைகள் திங்கள்கிழமை (08/02/2021) அதிகாலை 1:25 மணிக்குத் தொடங்கின. ஆனால் பின்வந்த நாட்களில் ஏற்பட்ட நிரந்தர மின்தடைகளுக்கு பின்தான் வெளியுலக பார்வைக்கு வந்தது. டெக்சாஸில் உள்ள மின்விநியோக நிறுவனங்கள் மின்வழங்களில் 10,000 மெகாவாட் அளவிற்கு  (சில நேரங்களில் 16,500 மெகாவாட் வரை) மின்சாரத்தைக் குறைக்க அறிவுறுத்தின. இதன்பின் ஆபத்தான குளிர்உறைபனி காலநிலையின் நடுவில் நீண்ட நேரத்திற்கு லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (13/02/2021) உறைபனி காலநிலை நிலவிய போது டெக்சாஸ் மாநிலத்தின் மின்சாரத் தேவை அதன் வரலாற்றில் இல்லாதவாறு 69,000 மெகாவாட்டாக உயர்ந்திருக்கிறது. தற்போது மின்சார விநியோக நிறுவனங்கள் மாகாணத்தின் பெரும்பகுதிக்கு மின்சார வழங்கல்களின் அளவைக் குறைத்து வருகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த சுழற்சி முறையிலான மற்றும் நிரந்தர மின்தடைகள் பலநாட்கள் நீடிப்பது அங்கு மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கலிஃபோர்னியாவைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் ஏற்பட்ட மின்தடையானது டெக்சாஸ் மாகாணத்தை ஒப்பிடும்போது கால அளவிலும், மின்சாரத்தின் அளவிலும் குறுகிய அளவிலேயே இருந்திருக்கின்றது. அங்கு ஆகஸ்ட் 14-ம் தேதி கலிஃபோர்னியாவின் மின்வழங்கல் நிறுவனங்கள் இரண்டு மணிநேரங்களுக்கு மட்டுமே 500 மெகாவாட் அளவிலேயே மின்சாரத்தைக் குறைத்திருக்கின்றன. அதன்பின் ஆகஸ்ட் 15 அன்று அதே 500 மெகாவாட் அளவில் 20 நிமிடங்களுக்கு மின்விநியோகத்தைக் குறைத்திருக்கின்றன.

ஒப்பீட்டை இன்னும் வெளிப்படையாகச் செய்தோமானால் டெக்சாஸ் மின்விநியோக அமைப்பு கலிஃபோர்னியாவை விட 20-30 மடங்கு மின்சாரத் தேவையைக் குறைத்திருக்கிறது. மேலும் இது பல நாட்களாக நீடித்து வருகிறது. தெளிவாக கலிபோர்னியாவின் மின்தடை பெரிய விஷயமல்ல என்று எண்ணும் அதேநேரத்தில் (குறுகிய மின்தடை கூட சில தொழில்களுக்கு ஆபத்தானது.) அதற்கு பதிலாக நாம் இந்த ஒப்பீட்டை ஏன் செய்கிறோம் என்றால் 2020 கலிபோர்னியாவில் நடந்த மின்தடை  அப்போது மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை ஒப்புநோக்கினால் டெக்ஸாஸின் பல நாட்களாக நீடிக்கும் பேரழிவு அளவைக் கணக்கிட மற்றும் அதை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை.

வேறுபாடு # 2: டெக்சாஸின் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் பெரிய அளவில் தோல்வியடைந்துள்ளன.

டெக்சாஸில் செயலிழக்கவைக்க கட்டாயப்படுத்தப்பட்ட பல மின் உற்பத்தி நிலையங்களின் செய்தி அறிக்கைகளைபார்த்தபோது அவை பொய்யானதாக இருக்கக்கூடும் என்றே பலர் நினைத்தனர். ஆனால் அது உண்மை என்றே பின்னால் வெளிவந்த அறிக்கைகள் கூறுகின்றன.

அப்போதிருந்து நிலைமை சற்று மேம்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை (17/02/2021) காலை 9 மணியளவில், நீடித்த குளிர்ந்த காலநிலை காரணமாக 46,000 மெகாவாட் மின்சாரம் தடை செய்யவது அவசியமானது. டெக்சாஸ் மின்விநியோக நிறுவனங்களின்  கூற்றுப்படி, சுமார் 28,000 மெகாவாட் வெப்ப உற்பத்தி, மற்ற 18,000 மெகாவாட் காற்று மற்றும் சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 2020,ஆகஸ்ட் 14 அன்று கலிபோர்னியாவின் உச்சபட்ச மின்சாரதேவை என்பது கிட்டத்தட்ட 47,000 மெகாவாட்  மட்டுமே ஆகும்.

டெக்சாஸில் செயலிழந்த பெரும்பாலான மின்சார உற்பத்தி நிறுவனங்களானவை அனல்மின் உற்பத்தி நிலையங்களும் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் மின்உற்பத்தி நிலையங்களுமே ஆகும். ஏனெனில் அவை இயங்கத் தேவையான இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள் குளிர்ந்த காலநிலையால் இயங்கவில்லை. 

மேலும் டெக்சாஸ் மாகாண மக்களும், தங்கள் வீடுகளை வெப்பமாக்க வழக்கத்தை விட அதிக எரிவாயுவைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது பல டெக்சாஸ் எரிவாயு ஆலைகளில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டது. மேலும் உறைபனி குளிர்காலநிலை நீண்டநாட்களுக்கு தொடர்வதால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிவாயுவில் மிகுந்த தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றன.

இரண்டும் மின்தடைகளும் மாறுபட்ட ஒன்று

ஆகஸ்ட் 2020 இல் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மின்தடை முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அப்போது கலிஃபோர்னியாவில் 2000 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையங்கள் செயலிழந்து இருந்தன, மேலும்  மின்சாரத் தேவையும் அதே அளவிற்கே மின்விநியோக நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவோ குறைவாகவோ இருந்தன.

ஆனால் டெக்ஸாஸிலோ உறைபனி காலநிலை காரணமாக டெக்சாஸின் இயற்கை எரிவாயு அமைப்பு மற்றும் அதன் மின் உற்பத்தி நிலையங்கள் இதற்கு முன்னில்லாத அளவில் தோல்வியடைந்துள்ளன. எரிவாயு வழங்கும் விநியோக அமைப்பிற்கும் மற்றும் எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களுக்கும் இடையேயான  தோல்வியானது திடீரென்று அதிகரித்த மின்சார தேவையுடன் இணைந்து டெக்சாஸின் வரலாற்றில் பதிவாகக்கூடிய மின்தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

கலிஃபோர்னியாவில் ஆகஸ்ட் 2020 மின்சாரக் கட்டமைப்பு செயலிழப்புகளுக்குப் பிறகு, கலிஃபோர்னியா மாகாண கட்டுப்பாட்டாளர்கள் எரிசக்தி சந்தை விதிகள் மற்றும் விநியோகத்தின் நம்பகத்தன்மை மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை மாற்றியமைத்திருக்கின்றனர். குறிப்பாக, கலிபோர்னியாவை 100% புதுப்பிக்கத்தக்க மின்சார விநியோகத்திற்கு மாற்றுவதால் அதன் விநியோக கட்டமைப்பில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மாற்றங்களைச் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாபத்தை மட்டுமே நம்பியுள்ள டெக்சாஸ் மின் விநியோக நிறுவனங்கள்

டெக்சாஸ் மாகாணம் வித்தியாசமாக செயல்படுகிறது. அதன் மின்விநியோகத்தை உறுதிப்படுத்த அங்குள்ள மின்சார விநியோக நிறுவனங்களிடம் திட்டம் எதுவும் இல்லை. அவை மின்விநியோகத்தின் லாப நோக்கத்தை மட்டுமே நம்புகின்றன. மின்சாரம் பற்றாக்குறையாகவும் மற்றும் உபயோகிக்கும் மின்சாரத்தின் விலை உயரும் போதும் அந்த நிறுவனங்களின் ​​முதலீட்டாளர்கள் அதன் அமைப்பில் உற்பத்தியைச் அதிகப்படுத்தவே ஊக்கமளிப்பார்கள். அதேசமயம் மின்உற்பத்தி நிலைய உரிமையாளர்கள் தங்கள் ஆலைகள் லாபத்தில் இயங்குவதையே உறுதி செய்வார்கள், இதனால் அவர்களால் அதிக பணம் லாபமாக ஈட்டமுடியும். ஆனால் இப்போது காலநிலை அவர்களின் இந்த லாப நோக்கத்தில் எப்படி விளையாடியிருக்கிறது  என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. டெக்ஸாஸில் மின் விநியோக கட்டமைப்பு ம் முழுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது என்பதே உண்மை.

மாற்றப்பட வேண்டிய மின் விநியோகக் கட்டமைப்பு

இதில் அறியப்படவேண்டிய செய்தியானது கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் இரண்டிலும் உள்ள மின்விநியோகக் கட்டமைப்புகள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளன. மேலும் அந்த பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நாம் அதன் கட்டமைப்புகளை மாற்றாவிடில் அவை காலப்போக்கில் தீவிரமான பாதிப்புகளுக்கு உள்ளாகிவிடும். வெப்பஅலைகள், குளிர்நிகழ்வுகள், சூறாவளிகள் மற்றும்  காட்டுத்தீ வரையான இயற்கை பாதிப்புகளுக்கு ஏற்ப கட்டமைப்புகளை ஏற்படுத்தி அதை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது. மின்சார விநியோகக் கட்டமைப்புகள் உமிழ்வைக் குறைப்பதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு ஏற்பவும் உருவாக்க வேண்டும்.

 பல ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தை மறுத்து வந்த அதே நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட இன்னும் பல தடைகள் உள்ளன. முன்பில்லாத வகையில் பேரழிவை உருவாகும் வானிலை நிகழ்வுகள் மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையில் ஏற்படுத்தும் தாக்கத்தை எல்லோரும் தெளிவாக உணர முடியும் என்பதால் இப்போது அதை மறுக்க யாருக்கும் எண்ணமில்லை. இந்த மனிதகுலம் நீண்டகாலம் இடர்பாடுகளின்றி செல்ல வேண்டும் எனில் காலநிலை மாற்றத்தில் அனைவருக்கும் பொறுப்புண்டு என்பதை உணரவேண்டும். அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *