ரூவாண்டாவில் நடந்த டூட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தில் தேடப்பட்டு வந்த பெலிசைன் கபூகா (Felicien Kabuga) கடந்த மே16ந் தேதி பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டதையடுத்து, மே 19ந் தேதி பிரான்ஸ் நீதிமன்ற விசாரணைக்கு முன் நிறுத்தப்பட்டார். விரைவில் சர்வேதச குற்றவியல் நீதி பொறியமைவிடம் கபூகா ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் 1994-ம் ஆண்டு டுட்சி இன மக்களுக்கெதிரான மிகப் பெரும் இனஅழிப்பு படுகொலை நடந்தது. ஹூடு இன ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் ராணுவத்தினர் மற்றும் ஹூடு இனவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் 8 லட்சம் டுட்சியினரையும், மிதவாத ஹூடுக்களையும் படுகொலை செய்தனர். 20-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய இனப்படுகொலை பேரவலமாக ருவாண்டா இனப்படுகொலை அமைந்தது.
இப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் 1994-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 2009 வரையிலும் ருவாண்டா-டுட்சி இனஅழிப்பு வழக்குகளை விசாரித்த தீர்ப்பாயம், வழக்குகளின் விசாரணை அடிப்படையில் இனப்படுகொலை குற்றவாளிகளை அறிவித்தது. இத்தீர்ப்பாய விசாரணையில் ருவாண்டா இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளியாக கபூகா அறிவிக்கப்பட்டிருந்தார்.
ருவாண்டாவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்த கபூகா, ஹூடு இனத்தைச் சேர்ந்தவர். அதிகாரவர்க்கதினருடன் நெருக்கமாயிருந்த கபூகா, அன்றைய அதிபர் ஜீவேனல் ஹப்யரிமனவின் (Juvenal Habyarimana) மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
டுட்சி இன மக்களுக்கு எதிரான இனஅழிப்பு படுகொலைக்கான நிதி ஆதாரங்களை உருவாக்கித் தந்ததில் இவரின் பங்கு முக்கியமானது.
ருவாண்டா இனப்படுகொலை விசாரணை தீர்ப்பாயத்தில் இந்த நபர் மீதான குற்றச்சாட்டுகள்
* ‘மில்லி காலின்ஸ்’ என்ற வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை நிறுவி அதன் மூலம் சாமானிய ஹூடு இன மக்களிடம் டுட்சிகளுக்கு எதிரான இனவாதத்தை பரப்பியது,
* தன் நிறுவனத்தின் மூலம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 லட்சம் பெரிய பட்டாக் கத்திகளை ஹூடு இனவாதிகளுக்கு வழங்கி டுட்சி இன அழிப்புக்கான ஆயுதங்களை வழங்கியது
* அவைகளுக்கான போக்குவரத்தை அமைத்துத் தந்தது, நிதி வழங்கியது போன்றவை ஆகும்.
கபூகா மீதான டுட்சிகளுக்கு எதிரான இனஅழிப்பு தொடர்பான பல்வேறு குற்றங்கள் விசாரிக்கப்பட்டு ருவாண்டா இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் பல்வேறு நாடுகளில் 23 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடித்துத் தருபவருக்கு, அவரது தலைக்கு, 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தான் கடந்த மே16-ம் தேதி அவர் பிரான்சில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ருவாண்டா இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பட்ட நீதிகளில் மிக முக்கியமானதாக கபூகாவின் கைது பார்க்கப்படுகிறது. ருவாண்டா தலைநகர் கிகாயிலுள்ள இனப்படுகொலை குற்றவாளிகளின் தேடப்படும் பட்டியலை கவனித்து வரும் அலுவலகம், தன் பட்டியலிலிருந்து கபூகாவின் பெயரை நீக்கும் விதமாக ‘நீக்கக் குறி’ இட்டிருக்கிறது.
2009-ல் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலையின் 11ம் ஆண்டு நினைவை உலகத் தமிழர்கள் அனுசரித்துள்ள வேளையில், ருவாண்டாவின் டுட்சி இனப்படுகொலையின் குற்றவாளி ஒருவர் இனப்படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது, தமிழினப்படுகொலைக்கான தமிழர்களினுடைய நீதி கேட்புப் போராட்டத்திற்கு ‘தூர வெளிச்சமாக’ அமைந்திருக்கிறது.