ஆஸ்திரேலியா-ஆர்.எஸ்.எஸ்

புவிசார் அரசியலுக்கான முகவராக மாறுகிறதா ஆர்.எஸ்.எஸ்?

கடந்த மாதம் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் (ஆஸ்திரேலிய தூதுவர் போன்றவர்) பேரி ஓ ஃபரேல் (Barry O’Farrel), ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருப்பது சர்ச்சயை எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலிய செனேட் சபையில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டு, அவர் பதவி விலக வேண்டுமென விவாதமாகியுள்ளது. 

ஆஸ்திரேலிய உயர் ஆணையரின் சந்திப்பு

கடந்த மாதம் 15-ம் தேதி ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பேரி ஓ ஃபரேல், நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குச் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார். ஆர்.எஸ்.எஸ் தலைவருடனான தனது சந்திப்பு குறித்து ட்வீட்டரில்,”கொரோனா பெருந்தொற்று நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பாகப் பணியாற்றியது. ஆர்.எஸ்.எஸ்-சின் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து இந்திய மக்களை கொரோனா பெருந்தொற்றிலிருந்து காத்த அதன் செயல்பாட்டைப் பற்றி கேட்டறிந்தேன்” என பதிவிட்டிருந்தார்.

ஆஸ்திரேலிய செனேட் சபையில் எழுந்திருக்கும் எதிர்ப்பு

இந்நிலையில் இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரின் ‘ஆர்.எஸ்.எஸ்’ சந்திப்பு ஆஸ்திரேலிய செனேட் சபையில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இச்சந்திப்பு பற்றி ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஜெனேட் ரைஸ், “உலகிலுள்ள ஆஸ்திரேலிய உயர் ஆணையர்கள் உலக நாடுகளில் ஆஸ்திரேலியாவிற்கான நன் மதிப்பை ஏற்படுத்த வேண்டியவர்கள். (அப்படியிருக்க) இந்துத்துவ-பாசிச அமைப்பும், மனித உரிமைக்கு அவமரியாதை செய்யக்கூடியதுமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்திற்கு, இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய ஆணையர் சென்றிருப்பது ஆஸ்திரேலியாவின் நன்மதிப்பிற்கு எதிரானதாகும்; இது வெட்கக் கேடானதாகும். எனவே இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பேரி ஓ ஃபரேல் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்” என ஆஸ்திரேலிய செனேட் சபையில் குரலெழுப்பியுள்ளார். 

இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரை பதவி விலகக் கோரிய  குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினரான ஜெனேட் ரைஸ், ஆஸ்திரேலிய பசுமையினர் (Australia’s The Greens) அமைப்பைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலிய பசுமையினர் அமைப்பு, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் அமைக்கப்படும் அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. 

ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரிச் சுரங்கத்திற்கான எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அதானி நிறுவனம் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத் திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சூழலியலை இச்சுரங்கத் திட்டம் பாதிக்குமென்பதால், இத்திட்டத்திற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் சமீபத்திய ஆஸ்திரேலிய-இந்திய கிரிக்கெட் தொடர் போட்டியில் ‘குறிப்பிட்ட நிலக்கரிச் சுரங்க திட்டத்திற்கான மூலதனத்திற்காக அதானிக்கு SBI வங்கி கடன் கொடுக்கக் கூடாதென்ற’ பாதகை ஏந்தி போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர்.

அதானியும் ஆர்.எஸ்.எஸ்-சும்

இந்நிலையில் அதானி நிலக்கரி சுரங்கத் திட்டம் தொடர்பாகவும், அது சார்ந்த அரசியல் தொடர்பாகவுமே இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையரின் ஆர்.எஸ்.எஸ் சந்திப்பு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-சின் வழிகாட்டுதலில் நடைபெறும் மோடி அரசு, தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்தே அதானியின் வணிகத்திற்காக பல்வேறு வகையிலும் உதவி வருகிறது. 

அதானி நிறுவனத்தின் அதிபர் கெளதம் அதானி மோடியின் நண்பராவார். ஆஸ்திரேலிய-நிலக்கரி திட்டமும், மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் வாயிலாகவே அதானிக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. கடந்த ஆறாண்டு மோடி ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு பல மடங்காக உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது. 

கார்ப்பரேட்+அரசு+பாசிச இயக்கம் கூட்டணி

‘பெருமுதலாளி+(பன்னாட்டு/ உள்நாட்டு)அரசு+பாசிச அமைப்பு’ என்பதான கூட்டு உறவின் வெளிப்பாடாகவே மேற்கூறிய நிகழ்வுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களும், ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படுகிறது. விவசாய சட்டங்கள், சுற்றுச்சுழல் சட்டம், மின்சார சட்டம், தொழிலாளர் சட்டம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படுபவை. 

இச்சட்டத் திருத்தங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியவை. மக்களின் அடிப்படை சமூக-பொருளாதார பிரச்சனைகள் மக்களிடையே பேசுபொருளாக இருக்க வேண்டியவைகளை பின்னுக்குத் தள்ளி, பாசிச அரசியல் தொடர்பான பிரச்சனைகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் முன்னகர்த்துகின்றன. 

தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிச அமைப்புகளால் இஸ்லாமிய வெறுப்பரசியல் பன்னாட்டு பெருமுதலாளிகளின் மூலதனத்திற்காக வளர்த்தெடுக்கப்படுகின்றன. 

தெற்காசியாவில் பாசிச அமைப்புகளும், கார்ப்பரேட்டுகளும்

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ், ரோஹிங்கிய இஸ்லாமியர்களின் இனப்படுகொலையில் முக்கியப் பங்காற்றிய மியான்மாரின் 969 இயக்கம், இலங்கைத் தீவில் தமிழினப்படுகொலைக்கான காரணமான சிங்கள பெளத்த பேரினவாத கருத்தைக் கொண்டுள்ள பொதுபல சேனா ஆகியவை  தெற்காசியாவில் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் நோக்கில் ஒருங்கமைவுடன் செயல்படுகின்றன. 

ரோஹிங்கிய இன அழிப்பானது மியான்மாரில் சீன மேலாதிக்கத்தைக் குலைத்து அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அரசியல் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டது. தமிழினப்படுகொலை புவிசார் அரசியலின் தொடர்ச்சியாக, கொழும்புவில் ஈஸ்டர் அன்று நடந்த தேவாலய குண்டுவெடிப்பும் ‘இஸ்லாமிய வெறுப்பு அரசியலின் உள்நோக்கம்’ கொண்டு நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலங்கைத் தீவில் அதன் பின்னர் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை தீவுக்கு அகதிகளாக வந்த ரோஹிங்கியர்களை இலங்கையில் அனுமதிக்கக் கூடாது என ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதி முகாம்களை முற்றுகையிட்டு சிங்கள பெளத்த பேரினவாத அமைப்புகள் போராட்டம் நடத்தின. 

இப்படியாக இந்த பாசிச அமைப்புகள் வல்லாதிக்க அரசுகளின், பன்னாட்டு/ உள்நாட்டு பெருமுதலாளிகளின் நலனுக்காக குறிப்பிட்ட மக்கள் தொகுப்பிற்கு எதிரான வெறுப்பரசியலை முன்னெடுக்கின்றன. இப்பாசிச அமைப்புகளின் அரசியலினால் இயற்றப்படும் பெரு முதலாளிகளிகளுக்கான ஆதரவு நடவடிக்கைகள், பாசிச கருத்து மையப்படுத்தும் பெரும்பான்மைவாதத்தைச் சேர்ந்த மக்கள் தொகுப்பிற்கும் எதிராக உள்ளது. 

இந்துக்களின் பெயரில் இந்துத்துவ பாசிசத்தை வளர்த்தெடுக்கும் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் நடக்கும் பாஜக ஆட்சி, வெகுமக்களை பாதிக்கின்ற, பெருமுதலாளிகளுக்கு ஆதரவான சட்டத்திருத்தங்களை நிறைவேற்றுகிறது. பாஜக அரசு நிறைவேற்றும் மேற்கூறிய சட்டத்திருத்தங்களால் பாதிக்கப்படுவது இந்துக்களும் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *