அமெரிக்கா - ஈராக்

அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கப் போகும் ஈராக்

அரபு நாடுகளில் அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியது போன்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ஈராக் தெரிவித்துள்ளது. மிகக் குறிப்பாக, தங்களது நாட்டில் பெருகும் புற்றுநோய்களுக்கு அமெரிக்கா பயன்படுத்திய கதிரியக்கத் தனிம ஆயுதங்களும் ஒரு காரணமென்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கை தொடுக்கப் போவதாக ஈராக் குறிப்பிட்டுள்ளது.

ஈராக் வெளியுறவுத் துறை பாராளுமன்றக் குழு ஆலோசகர் பேட்டி

அரபு ஊடகமொன்றிற்கு பேட்டியளித்த ஈராக் வெளியுறவுத் துறை பாராளுமன்றக் குழுவின் ஆலோசகர் ஹத்தீஃப் அல் ரிக்காபி, சுவீடன் மற்றும் ஜெர்மன் சர்வதேச நீதிமன்றங்களில் தடைசெய்யப்பட்ட யுரேனிய ஆயுதங்கள் பயன்படுத்திய குற்றங்கள் உள்ளிட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பான வழக்கை ஈராக் தொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், இத்தகைய சர்வதேச குற்றங்கள் மீதான பொறுப்பேற்றலை அமெரிக்கா தவிர்த்துவிட முடியாதென்றும், காலங்கடத்தாமல் மிக விரைவில் அமெரிக்காவிற்கு எதிரான வழக்கைத் தொடுக்கப் போகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் கழிவுகளால் அதிகரிக்கும் புற்றுநோய் விகிதம்

சதாம் உசேனுக்கு எதிரான போர் என்ற பெயரில் எண்ணெய் அரசியலுக்காக ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. ஈராக் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளின் மீதான அமெரிக்காவின் நேரடியான மற்றும் மறைமுகமான போர் தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாக அரேபிய பிராந்தியத்தில் கதிரியக்க ஆபத்து நிறைந்த ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட நச்சு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈராக்கில், தான் பயன்படுத்திய தடை செயப்பட்ட ஆயுதங்களின் டன் கணக்கிலான யுரேனியம் உள்ளிட்ட நச்சுக் கழிவுகளை அமெரிக்கா விட்டுச் சென்றுள்ளது. இவை ஈராக்கில் புற்றுநோய் பெருகுவதற்கான காரணமாக உள்ளன.

ஈராக்கில் புற்றுநோய் வயப்பட்டவர்களின் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈராக் மீதான அமெரிக்காவின் 1991-ம் ஆண்டின் பெர்சிய வளைகுடா போருக்கு முன்னர், ஈராக் மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 40 பேர் என்ற புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் குறியீட்டு அளவானது, போருக்குப் பின்னரான 1995 காலக்கட்டத்தில் ஒரு லட்சம் பேரில் 800 பேர் என்ற அளவுக்கு உயர்ந்தது; பின்னர் 2003-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த காலக்கட்டத்திற்குப் பிறகான 2005ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஈராக்கில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் குறியீட்டு அளவானது, ஒரு லட்சம் பேரில் 1600 பேர் என்று உயர்ந்துள்ளது.

1991-ம் ஆண்டைய பெர்சிய வளைகுடா போரின் போது குறைந்தது 230 டன்கள் யுரேனிய நச்சு ஆயுதங்களையும், 2003-ம் ஆண்டின் போரின் போது குறைந்தது 2000 டன்கள் யுரேனிய நச்சு ஆயுதங்களையும் ஈராக் மீது அமெரிக்கா பயன்படுத்தியதாக ஐ.நா கணக்கிட்டிருக்கிறது. இந்தளவிலான நச்சு ஆயுதங்களின் கழிவுகள், ஈராக்கில் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன.

அதிகரிக்கும் உடல்நல சிக்கல்கள்

இதன் காரணமாக புற்றுநோய் மட்டுமல்லாது பெண்களுக்கு கருக்கலைதல்கள், குறைப் பிரசவங்கள், குறைப்பாடுடைய குழந்தை பிறப்புகள் போன்றவையும் ஈராக்கில் அதிகரித்துள்ளன. நுரையீரல், கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகளும், நோய் எதிர்ப்பு மண்டலங்கள் முற்றிலுமாக குலைந்துப் போகக்கூடிய வித்தியாசமான நோய்களுக்கு ஈராக்கியர்கள் ஆளாகியுள்ளனர். ஈராக்கின் முந்தைய தலைமுறையினருக்கு இல்லாத பல்வேறு புதுவகையான நோய்களின் பெருக்கம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய் அதிகரிப்புகளுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததில், போர்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட நச்சு ஆயுதங்களின் கழிவுகளே இவைகளுக்கான காரணமென்று கண்டடையப்பட்டுள்ளது.

போரின் போது அதிகமான தாக்குதலுக்குள்ளான ஈராக்கின் நகரங்களான பாக்தாத், பஸ்ரா மற்றும் ஃபலூஜா நகரங்களின் குழந்தை பிறப்பு குறைபாடுகளின் விகிதமானது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் குழந்தை பிறப்பு குறைபாடுகளின் விகிதத்தைவிட 14 சதவீதம் அதிகமாக உள்ளது.

இப்படியான பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் நச்சு ஆயுதங்களின் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக அமெரிக்கா பொறுப்பெடுக்காமல் உள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்கா மீது ஈராக் வழக்கு தொடுக்கப் போகிறது.

எண்ணெய் வளத்திற்காக குறிவைக்கப்படும் அரபு மக்கள்

இன்றைய உலகின் மிகப் பெரிய வல்லரசாக அமெரிக்கா சொல்லப்பட்டாலும், அது மட்டுமே இதுவரை அணுகுண்டு வீசிய நாடு. அணு ஆயுத உற்பத்தியின் ஊற்றுக்கண்ணான அமெரிக்கா, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல்வேறு நாடுகளில் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தும் கொடூரமான போர்களின் மூலமே தனது மேலாதிக்க நிலையை தக்க வைத்து வருகிறது. 2015-ம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கி சிரியாவிலும், ஏமனிலும் அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட நச்சு ஆயுதங்கள் அப்பாவி மக்களை பலியிடுகின்றன. அவ்வகை நச்சு ஆயுதங்களின் பாதிப்புகள் போர்க் காலக்கட்டத்தோடு முடிவுறுவதில்லை. பல்வேறு தலைமுறைகள் கடந்தும் அவை மனித குலத்தை குலைக்கப் போகின்றன. அமெரிக்காவின் எண்ணெய் அரசியலுக்காக அரேபிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சூறையாடலில் ஒரு பகுதியளவு பாதிப்பே ஈராக்கில் நிகழ்ந்திருக்கும் மேற்கூறிய பாதிப்புகள். அதுவே இவ்வளவு கொடும் பாதிப்பாக உள்ளது.

இன்று அமெரிக்காவின் போர் மேகங்கள் இந்தோ- பசுபிக் கடற் பிராந்தியத்தையும், தென்- கிழக்கு ஆசிய பிராந்தியத்தையும் சூழ்ந்துள்ளது; அதனது மையமாக இந்தியா உள்ளது. புவிசார் முக்கியத்துவம் வாய்ந்த தமிழர்களின் கடற்பரப்பிலும் இப்படியான நச்சு ஆயுதக் குவிப்பும், அதன் கழிவுகளின் தேக்கமும் நிகழலாம். எச்சரிக்கை கொள்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *