பாலச்சந்திரன்

2009ல் தோற்ற சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது – முன்னாள் ஐ.நா அதிகாரிகள் இணைந்து கோரிக்கை

தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் தொடரும் வன்முறைகளுக்கு உடனடியாக நீதி பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என முன்னாள் ஐநா அதிகாரிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முன்னாள் மனித உரிமை ஆணையர்கள் நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், மேரி ராபின்சன், இலங்கை குறித்த ஐ.நா உள்ளக விசாரணைக் குழுவின் சார்லஸ் பெட்ரி, மார்சுகி தரூஸ்மன், யாஸ்மின் சூகா, ஸ்டீவ் ராட்னர், ஜான் எல்லியாசன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு:

தமிழருக்கான நீதியில் எந்த முன்னேற்றமும் இல்லை

“ஐநா மனித உரிமை உயர் ஆணையரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இலங்கை குறித்தான அறிக்கையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வுகளில் இலங்கையானது நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான நடவடிக்கைகளில் எந்தவித முன்னேற்றமும் இன்றி பின்தங்கியிருக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பதவிகள்

இறுதிக்கட்ட போரில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிங்கள ராணுவ அதிகாரிகளைப் பணியமர்த்துவது மற்றும் பதவி உயர்வு வழங்கி வருவதன் மூலம் அரசின் சிவில் நடவடிக்கைகளை இலங்கை அரசு ராணுவமயப்படுத்தி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மறுபுறமோ சுதந்திரமான நீதியமைப்பு, மனித உரிமை ஆணையங்கள் போன்ற அரசியலமைப்பு பாதுகாப்பு நிறுவனங்களை அழிக்கின்ற வேலையை செய்கிறது. 

கடுமையாக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டம்

பெரும்பான்மைவாத வன்முறை கருத்துக்கள் மூலம் தமிழர்களும், இஸ்லாமியர்களும் குறிவைக்கப்படுகின்றனர். (தமிழ்) மக்கள் கண்காணிப்பிற்குள்ளாகவே வாழ நேரிடுகிறது. ஒராண்டில் நீக்குவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக பயங்கரவாத தடைச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜனநாயக வெளி மறுக்கப்படுகிறது. 

முந்தைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது போன்ற தமிழர்களுக்கு எதிரான சித்ரவதை, துன்புறுத்தல்கள், கடத்தல்கள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற மனித உரிமை மீறல்களைத் தாண்டி, மேற்குறிப்பிட்ட இலங்கை அரசின் போக்குகள் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் மீதான கூடுதல் கவனத்தைக் கோருகின்றன. 

சர்வதேச சமூகம் மீண்டும் தோற்கக் கூடாது

நவநீதம் பிள்ளை, செய்த் அல் ஹூசைன், சார்லஸ் பெட்ரி, யாஸ்மின் சூகா, மார்சுகி தரூஸ்மன்

மனித உரிமை உயர் ஆணையரின் அறிக்கை இலங்கையில் அதனது முன்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாராட்டிக் கொண்டுள்ளது. ஆனால் 2009-ல் (இலங்கையில் நடந்த பேரவலத்தைத் தடுப்பதில்) சர்வதேச சமூகம் தோற்றுவிட்டது. அதிலிருந்து நமது முன்தடுப்பு நடவடிக்கை குறித்து சிலவற்றை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். நாம் மீண்டும் தோற்கக் கூடாது. எனவே முன் தடுப்பு நடவடிக்கை என்பதனை நாம் மேம்படுத்தி, விரிவுப்படுத்த வேண்டும். 

சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மனித உரிமை நிறுவனங்களின் முன்தடுப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவதற்கு சுமையாக உள்ளன. ஆனால் அவை பிரச்சனைகளின் வேர்களைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்குரிய அழுத்தத்தை தரக்கூடியவையாக இருக்க வேண்டும்; அதனை நிறைவேற்றுவதற்குரிய அர்ப்பணிப்பு வேண்டும்.  2015 மனித உரிமை ஆணைய அமர்வில் இடைநிலை தீர்வு நடவடிக்கைகளாக முன்வைக்கப்பட்டு இலங்கை ஏற்றுக் கொண்டதும் அவற்றில் அடங்கியிருக்கிறது. 

தீர்வை அளிக்கும் அரசியல் விருப்பம் இல்லை

இலங்கையின் முந்தைய அரசு இடைநிலை தீர்வு நடவடிக்கைகளில் பின்தங்கியிருந்தது மட்டுமல்லாமல், அதற்கான விருப்பம் கொண்டிருக்கவில்லை. காணாமல் போனோர் குறித்த தனி அலுவலகம் அமைத்தல் போன்ற சில நடவடிக்கைகள் மட்டுமே குறிப்பிடும்படியாக உள்ளன. ஆனால், உத்திரவாதம் கொடுக்கப்பட்ட சர்வதேச சட்ட விதிகளைக் கொண்டு இயங்கும் நீதிமன்றம் மற்றும் உண்மை (அறியும்) ஆணையம் போன்றவை நிறுவப்படவில்லை. 

தற்போதைய இலங்கை அரசு 2015-ல் ஏற்றுக்கொண்ட எந்த பொறுப்புக் கூறலையும் பொருட்படுத்தாதது மட்டுமன்றி, இலங்கை அரசானது எவ்வித மனித உரிமை மீறல், போர்க் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என கூறுகிறது. 

புதிய குழுவை மீண்டும் அமைப்பது நகைப்புக்கு உள்ளாகிவிடும்

மனித உரிமை உயர் ஆணையரின் அறிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு கூடிய மனித உரிமை ஆணையக் கூட்டமானது, இலங்கையின் மனித உரிமைக் குற்றங்களை விசாரிப்பதற்கான புதிய குழுவை அமைத்துள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையே இன்னும் முடிக்கப்படாமல் தொடருகின்ற நிலையில், முந்தைய குழு கண்டறிந்தவற்றை பரிசோதிப்பதற்காகவும், அதனுடைய பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காகவும் புதிய குழு அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நடவடிக்கையானது இலங்கை அரசுக்கு நகைப்புக்குரியதாகவும், நீண்ட நாட்களாக நீதி மறுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் (தமிழர்களின்) நீதி உரிமையை அவமரியாதை செய்யக் கூடியதாகும்.  

சர்வதேச நீதிப் பொறிமுறையை ஆதரிக்கிறோம்

இலங்கையில் நிலவும் அரசியல் சூழலானது அந்நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்கே அந்நாட்டினுடைய நீதியமைப்பு உரிய நீதி பெற்றுத்தர இயலாத நிலையை உருவாக்கியிருக்கிறது. எனவே ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் கூறியபடி ஐ.நா-வின் உறுப்பு நாடுகள் இணைந்து சர்வதேச மற்றும் எல்லைகள் கடந்த நீதியமைப்பு முறை மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் நீதி பெறுவதை நாங்களும் ஆதரிக்கிறோம்.

மேலும்,'(சர்வதேச குற்றங்களில் ஈடுப்பட்ட இலங்கையின்) சர்வதேச குற்றவாளிகளுக்கு சர்வதேச தடை விதிப்பது மற்றும் இதற்கான ஐநாவின் சிறப்பு பிரதிநிதியைக் கொண்டு கண்காணிப்பது’ என்ற ஐ.நா மனித உரிமை உயர் ஆணையரின் பரிந்துரையை நாங்களும் ஆதரிக்கிறோம்.

இறுதியாக ஐ.நா மனித உரிமை ஆணையர் அமைக்கக் கோரியுள்ள இலங்கையின் குற்றத் தடயங்களை சேகரித்து மற்றும் பாதுகாக்கும் பிரேத்யேக பொறிமுறை மற்றும் அது குறித்த சர்வதேச பொறுப்பை ஆராயும் சுயாதீன அமைப்பு ஆகியவற்றில் எங்களையும் இணைத்துக் கொள்கிறோம். 

இலங்கைத் தீவில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இலங்கை அரசு தற்போது கடைப்பிடித்துவரும் அதனது மூர்க்கத்தனமான கொள்கைகளை கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம். அதேபோல் எதிர்க் கட்சியினரை, மனித உரிமை அமைப்புகளை, சிவில் சமூக அமைப்புகளை அச்சுறுத்துவதற்காக இலங்கை அரசு பயன்படுத்தி வரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இல்லையெனில் இவை எதிர்காலத்தில் பிரச்சனைகளுக்கும், மனித உரிமை பறிப்புக்கும் வழிவகுக்கும். “

இக்கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளவர்கள்

1. ஜூவான் மேனுவல் சந்டோஸ், முன்னாள் கொலம்பிய அதிபர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்

2. ஜான் எல்லியாஸன், ஐ.நா துணைப் பொது செயலாளர் (2012-2016)

3. அடேமா டெங், இனப்படுகொலைகளை முன் தடுப்பதற்கான பொது செயலாளரின் சிறப்பு ஆலோசகர் (2012-2020)

4. சார்லஸ் பெட்ரி, முன்னாள் ஐநா துனைப் பொது செயலாளர், ஐ நா பொது செயலாளரின் இலங்கைக்கான ஐ நாவின் உள்ளக விசாரணைக் குழு (2012)

5. மேரி ராபின்சன், முன்னாள் அயர்லாந்து அதிபர், முன்னாள் ஐ நா மனித உரிமை உயர் ஆணையர் (1997-2002)

6. லூயிஸ் ஆர்பர், முன்னாள் ஐ நா மனித உரிமை உயர் ஆணையர் (2004-2008)

7. நவநீதம் பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை உயர் ஆணையர் (2008-2014)

8. செய்த் ராத் அல் ஹூசைன், முன்னாள் ஐநா மனித உரிமை உயர் ஆணையர் (2014-2018)

ஐநா சிறப்பு பிரதிநிதிகள்

9. பிலிப் அல்ஸ்டன், சட்டத்திற்கு புறம்பான கைது மற்றும் தண்டனை குறித்த முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி (2004-2010)

10. பேப்லோ டி கிரிஃப், உண்மை, நீதி, இழப்பீடு தொடர்பான முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி

11. கிரிஸ்டோஃப் ஹெய்ன்ஸ், சட்டத்திற்கு புறம்பான கைது மற்றும் தண்டனை குறித்த முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி (2010-2016)

12. பென் எம்மர்ஸன், மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திர பாதுகாப்பு, ஊக்குவிப்பிற்கான முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி

13. டேவிட் கயே, அடிப்படை சுதந்திர மற்றும் கருத்துரிமைக்கான முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி

14. மைனா கியாய், சுதந்திரமாக கூடுவதற்கு மற்றும் அமைப்பு அமைப்பதற்கான உரிமை பற்றிய முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி

15. கே மெக்டொக்கால், சிறும்பான்மையினர் விவகாரத்திற்கான முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி

16. ஜூவான் இ மெண்டிஸ், வன்முறை, குரூரங்கள், மனித தன்மையற்ற குற்றங்கள் தொடர்பான முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி (2010-2016)

17. மேன்பிரட் நோவாக், வன்முறை, குரூரங்கள், மனித தன்மையற்ற குற்றங்கள் தொடர்பான முன்னாள் ஐநா சிறப்பு பிரதிநிதி (2004-2010)

இலங்கை தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அமைத்த நிபுனர் குழு

18. மார்சுகி தரூஸ்மன்

19. யாஸ்மின் சூகா

20. ஸ்டீவன் ராட்னர்

முழுமையான ஆங்கில அறிக்கையைப் படிக்க கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *