75 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் ஆகஸ்ட் 6, 1945 அன்று சரியாக காலை 8:15 மணியளவில், ஜப்பானின் ஹிரோசிமா நகரத்தின் மீது அமெரிக்க ராணுவம் அணுகுண்டுகளை வீசியது. அந்த அணுகுண்டிற்கு “Little Boy” என்று பெயரிடப்பட்டிருந்தது. அடுத்த மூன்றாவது நாள் ஆகஸ்ட் 9, 1945 அன்று காலை 11:02 மணிக்கு நாகசாகி நகரத்தின் மீது, அணுகுண்டு வீசப்பட்டது. அந்த குண்டிற்கு “Fatman” என்று பெயரிடப்பட்டிருந்தது.
அதுவரை அப்படி ஒரு நேரடி அழிப்பினை வரலாறு சந்தித்ததில்லை. இரு நகரங்களும் முற்றிலுமாக தரைமட்டமானது. பெரும்பாலான மக்கள் சாம்பலானார்கள். நகரத்திலிருந்து நீண்ட தொலைவிற்கு கதிரியக்கம் பரவ ஆரம்பித்தது. 70,000க்கும் மேற்பட்டோர் உடனடியாக இறந்தார்கள். 1945-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 1,40,000 பேர் வரை இறந்தார்கள்.
பல வருடங்களுக்கு கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏராளமான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளாகி இறந்து போனார்கள். அடுத்த தலைமுறையில் பிறக்கும் குழந்தைகளும் கதிரியக்கத்தின் விளைவினால் உடல் பாதிப்புகளுடன் பிறந்தன.
இரண்டாம் உலகப் போர் இந்த அணுகுண்டு வீச்சுகளுடன் முடிவுக்கு வந்தது. ஜப்பான் சரணடைந்தது. ஆனால் உலகப் போரைக் குறித்து ஆய்வு செய்பவர்கள் இந்த அணுகுண்டு வீச்சு உலகப் போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நிகழ்த்தப்பட்டதில்லை என்பதை தெரிவிக்கிறார்கள். ஜப்பான் படைகள் தோல்வியை நோக்கி நெருங்குவதை முன்பே கணித்து விட்டதாகவும், உலகத்தில் அமெரிக்கா தான் இனி மிகப்பெரிய வல்லரசு சக்தி என்பதைக் உணர்த்துவதற்காகவே அணுகுண்டுகளை வீசியதாக தெரிவிக்கிறார்கள். மேலும் மான்ஹேட்டன் திட்டத்தின் கீழ் அமெரிக்கா உருவாக்கிய அணுகுண்டுகளை சோதனை செய்து பார்க்கும் களமாகப் பயன்படுத்தி ஹிரோசிமா, நாகசாகி நகர மக்களைக் கொன்றதாகவும் சொல்கிறார்கள்.
அமெரிக்கா நிகழ்த்திய இந்த பெரும்படுகொலையின் படங்கள் இன்றும் பார்ப்பவர் மனதை உலுக்கும் வண்ணம் இருக்கின்றன. அமெரிக்காவின் இந்த அணு வல்லரசு கோட்பாட்டை எதிர்த்து உலகம் முழுதும் இருக்கும் சமூக ஆர்வலர்கள் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்தினை துவங்கினார்கள். இப்பிரச்சாரம் இன்றுவரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஹிரோசிமா, நாகசாகி பேரழிப்பின் சில முக்கிய படங்களை இங்கு அளிக்கிறோம்
புகை மண்டலம் சூழ்ந்த ஹிரோசிமா நகரம்
ஹிரோசிமா நகரின் மையத்திலிருந்து செப்டம்பர் 1945-ல் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஹிரோசிமாவில் உள்ள மருத்துவ டெண்ட் ஒன்றில் சிகிச்சைக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்கள்
அணுகுண்டு வீசப்பட்ட பிறகு நாகசாகி நகரத்தின் காட்சி
நாகசாகி நகரத்தின் மீது Fatman அணுகுண்டு வீசப்பட்ட போது எழும்பிய புகை
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு ஹிரோசிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர். அக்டோபர் 2, 1945 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்
நாகசாகியின் மீது வீசப்பட்ட Fatman அணுகுண்டு வீசப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்
கதிரியக்கத்தின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி முகம் முற்றிலுமாக வெந்து போன நிலையில் ரெட்கிராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்.
ஹிரோசிமாவின் ஆரம்பப் பள்ளி ஒன்று தற்காலிக முதலுதவிக் கூடமாக மாற்றப்பட்ட நிலையில்
கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்தவரை கைவண்டியில் வைத்து ஹிரோசிமா ரெட்கிராஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெண்
நாகசாகியில் அணுகுண்டு வெடித்த 15 நிமிடத்திற்குப் பிறகு சூழ்ந்துள்ள புகை மண்டலம். நாகசாகி அணுகுண்டு அருங்காட்சியகத்தில் இந்த புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
சிதைந்து கிடக்கும் நாகசாகி நகரம். ஆகஸ்ட் 10, 1945 மதியம் 2 மணிக்கு எடுக்கப்பட்டது.
பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்றில் சிதறிக் கிடக்கும் மனித எலும்புகள். 1945 செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது.
நாகசாகியில் காயமடைந்த குழந்தையை தன் கையில் தூக்கிக் கொண்டு மருத்துவரைத் தேடிக்கொண்டிருக்கும் நபர்.
இறந்து கிடக்கும் குதிரை ஒன்றின் புகைப்படம் – நாகசாகி
ஹிரோசிமாவிலுள்ள ஜப்பான் ராணுவ தளத்தின் காட்சி, ஆகஸ்ட் 7, 1945
ஹிரோசிமா மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்
குண்டு வெடிப்பிற்குப் பிறகு காயத்துடன் நடந்து செல்லும் தாயும், மகளும் – நாகசாகி
நாகசாகி மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை
ஜப்பானின் படைகள் சரணடைந்தது குறித்தான அறிவிப்பு வானொலியில் ஒலிபரப்பாவதைக் கேட்க ஒசாகா நகரத்தில் குழுமியுள்ள மக்கள் – ஆகஸ்ட் 15, 1945
ஹிரோசிமாவின் மீது வீசப்பட்ட Little Boy அணுகுண்டு
குண்டு வீசப்பட்ட போது, ஹிரோசிமாவின் காவல்நிலையம் ஒன்றில் அதிர்ச்சியில் நின்று போன கடிகாரம்