மியான்மாரில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில், போராட்டக்காரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாண்டலேவில் சனிக்கிழமை நடந்த தொடர் போராட்டத்தில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
குற்றச்சாட்டை மறுத்துள்ள தேர்தல் ஆணையம்
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்த்தி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெற்ற ஆங்சாங் சூகியின் ஜனநாயக லீக் கட்சியின் வெற்றி, மோசடி நடத்தி பெறப்பட்ட வெற்றியெனக் கூறி ஜனநாயக விரோதமாக ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது; ஆனால் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை
ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து ராணுவத்தால், ஆங்சாங் சூகி உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; அடுத்த ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டங்களும், கோரிக்கைகளும்
இதற்கெதிராக மியான்மாரின் எதிர்கட்சியினர், ஜனநாயகவாதிகள், மாணவர்கள் உள்ளிட்ட ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரானோர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். “மீண்டும் தேர்தல் முறை ஜனநாயக ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்; தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயகக் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்; ஆங்சாங் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; ஆட்சி அதிகாரத்தில் ராணுவத்தை பங்கேற்கச் செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்” என்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்து போராடி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான இளம்பெண்
இப்போராட்டத்தினை ராணுவம் தண்ணீர் பீரங்கிகள், புகைக் குண்டுகள், துப்பாக்கிச் சூடு என வன்முறை மூலம் எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த வெள்ளிக்கிழமை நைப்பியட்டோவில் நடந்த போராட்டத்தைக் கலைக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மியா த்வ்வேட் த்வ்வேட் கைங் (Mya Thwate Thwate Khaing) என்ற இளம்பெண் முதல் பலியாகியுள்ளார்.

ராணுவத்தின் இத்துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், பலியான இளம் பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் மியான்மாரின் முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் கூட்டம் நடத்தினர்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்
இந்நிலையில் நேற்று, சனிக்கிழமை மாண்டலேவில் நடந்த போராட்டத்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இருவர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். பலியான ஒருவரில் லின் கைங் என்ற ஊடகவியலாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத் தொடர்பு தடை செய்யப்பட்டுள்ளது.
ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து உலக நாடுகள் பலவும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் மியான்மாருடனான தொடர்பை துண்டித்துள்ளனர்.