QUAD

வேகமெடுக்கிறது இந்தோ-பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல்; QUAD தலைவர்களின் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன?

(இந்தோ – பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாற்தரப்புக் கூட்டு நாடுகளின் உச்சத் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுஹா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

‘தடையற்ற மற்றும் திறந்த இந்தோ பசுபிக் கடற் பிராந்தியத்தை’ கட்டமைப்பது தொடர்பாக இந்நாடுகளின் உச்சத் தலைவர்களிடையே பேசப்பட்டது. 

அமெரிக்காவானது சீனாவை எதிர்கொள்ளும் திட்டமாக QUAD

அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக பனிப்போரில் இந்தோ- பசுபிக் கடற் பிராந்தியம் முக்கிய அம்சமாக உள்ளது. சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தில் முக்கிய அம்சமாக உள்ள இக்கடற் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் முயற்சியே ‘இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய நாற்தரப்புக் கூட்டணி’. 

QUAD திட்டங்கள்

சரக்குப் போக்குவரத்தில் எதிர்கொள்ளும் இடர்களை கையாளும் வகையிலான ஏற்றுமதி- இறக்குமதி சங்கிலித் தொடரமைப்பு (Resilient supply chain), கடற் போக்குவரத்து பாதுகாப்பு (Maritime Security), கப்பற் படைத்தளக் கூட்டுறவு ஆகியவை இக்கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகும். 

கடந்த கால நிகழ்வுகள்

கடந்த அக்டோபர் மாதம் இக்கூட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையே நடந்த சந்திப்புக்குப் பிறகு, இந்தோ- பசுபிக் கடற்பிராந்தியம் தொடர்பில் இந்நாடுகளின் புவிசார் அரசியல் செயல்பாடுகள் தீவிரமடைந்தது. தொடர்ந்து இந்திய – மலபார் கடற்பரப்பில் இக்கூட்டு நாடுகளின் போர்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுப்பட்டன. 

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வேகமெடுத்துள்ள கூட்டணி

அமெரிக்காவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்தோ- பசுபிக் நாற்தரப்புக் கூட்டணி நடவடிக்கைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளதையே நேற்றைய இக்கூட்டணி நாடுகளின் உச்சத் தலைவர்களுடைய கூட்டம் உணர்த்துகிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அவர் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுடனான முதல் கூட்டம் இதுவே ஆகும். இதிலிருந்து ‘இந்தோ- பசுபிக் கடற் பிராந்திய அரசியலுக்கு’ அமெரிக்கா கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறியலாம். 

ஜோ பைடன் பேசியது

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜோ பைடன்,” தடையற்ற மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் கடற்பிராந்திய நடவடிக்கைக்கு நாற்தரப்புக் கூட்டு நாடுகளுக்கு இருக்கக்கூடிய பொதுவான சவால்களை எதிர்கொள்ள இந்நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும்” என குறிப்பிட்டார். மேலும் அவர்,”இக்கூட்டணி நாடுகள் மற்றும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்திலுள்ள இக்கூட்டணியின் நட்பு நாடுகளுடன் அமெரிக்க இணைந்து செயலாற்ற உறுதி பூண்டுள்ளதாகவும்” தெரிவித்தார். 

நரேந்திர மோடி கருத்து

இச்சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,” எங்களது ‘(இந்திய பெருங்கடற்) பிராந்திய நாடுகள் அனைத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான திட்டம்- சாகர் திட்டத்துடன் (SAGAR – Security and Growth for All in the Region)’ இணைத்து தடையற்ற மற்றும் திறந்த இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய நடவடிக்கைக்கு இந்தியா பங்காற்றும்’ என  குறிப்பிட்டுள்ளார். 

தடுப்பூசி-அரசியல் தந்திரம்?

மேலும் இக்கூட்டத்தின் போது, இந்தியாவை மையமாக வைத்து, இந்தோ- பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் இந்தியாவிற்கு உதவும் எனவும் பேசப்பட்டுள்ளது.

நாடுகளுக்கிடையேயான கொரோனா தடுப்பு உதவிகள், கொரோனா தடுப்பூசி நன்கொடை உதவிகள் அரசியல் உறவுகளுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பூசி-அரசியல் தந்திரம் (Vaccine Diplomacy) என அடையாளப்படுத்துகின்றனர்.  

அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கடற் பிராந்திய அரசியல் நலனுக்கு இந்திய தடுப்பூசி அரசியல் தந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் பயணங்கள்

கடந்த மாதத்தில் இந்திய பெருங்கடற் பிராந்திய நாடுகளான மாலத்தீவு மற்றும் மொரிஷியஸிற்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாடுகளுடன் கடற் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அரசியல் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டதுடன், அந்ந நாடுகளுக்கு ஒரு லட்சம் பேருக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கினார்; அதுபோலவே இம்மாத வங்கதேச பயணத்தின் போதும் இந்தியா சார்பில் வங்கதேசத்திற்கு  தடுப்பூசி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


படிக்க: மொரீஷியஸ் நாட்டுடனான இந்தியாவின் ஒப்பந்தமும், அமெரிக்க-சீன பனிபோரின் களமாக மாறும் இந்தோ-பசுபிக் பிராந்தியமும்

படிக்க: மாலத்தீவுடன் இந்தியா போடும் கப்பற்படைத் தள ஒப்பந்தம்!


அடுத்து நடைபெற உள்ள பாதுகாப்பு செயலர்கள் கூட்டம்

நாற்தரப்புக் கூட்டணி நாடுகளின் இக்கூட்டத்தையடுத்து, அடுத்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாய்ட் ஆஸ்டின் இந்தியா வருகிறார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சந்தித்து அவருடன் இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளார். 

இதுபற்றி அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் பாதுகாப்பு துணை செயலாளர் டேவிட் எஃப் ஹெல்வே, “இவ்விருவரும் ராணுவத் தகவல் பரிமாற்றம், பிராந்திய பாதுகாப்பு கூட்டுறவு, இராணுவ தளவாட வர்த்தகம் உள்ளிட்ட இருநாடுகளின் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளனர்” என தெரிவித்திருக்கிறார்.  

இந்தோ- பசுபிக் பிராந்திய நாற்தரப்புக் கூட்டு நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் பசுபிக் கடற் பிராந்தியத்திலும், இந்தியா மட்டுமே இந்திய பெருங்கடல்/ வங்காள விரிகுடா ஆகிய இந்தோ கடற் பிராந்தியத்திலும் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவானது அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய அரசியலுக்கான இயங்குத் தளமாக முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *