டெல்லியை திணற வைக்கும் விவசாயிகள் போராட்டம் இன்றைய அப்டேட்ஸ்
விவசாய விரோத சட்டங்களைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை மட்டுமே முன்னிறுத்தி நேற்று (3/12/2020) ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், விவசாயிகள் மூன்று சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையில் இருந்து விலகாமல் உறுதியாக இருந்தனர். விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதில் ஒன்றிய அரசு தவறும்பட்சத்தில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மீண்டும் விவசாயிகள் சங்க தலைவர்களை சந்திக்க வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான அரசு பேச்சுவார்த்தை குழு ஒப்புக்கொண்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் இன்றோடு 9ஆம் நாளாக தொடர்கிறது. இப்போராட்டத்திற்கு பல மாநிலங்களிலுள்ள விவசாய அமைப்புகளிடம் மட்டுமன்றி பல்வேறு மாணவர் அமைப்புகள் தொழிலாளர் அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. இச்சூழலில் இன்று நடைபெற்ற முக்கிய செய்திகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை நடந்துள்ளவை:
- “வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டபடவில்லை ”என்று பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் PTI -ல் தெரிவித்தார்.மேலும் அவர் “மூன்று சட்டங்களில் திருத்தங்களைச் செய்யவே அரசாங்கம் விரும்புகிறது, ஆனால் நாங்கள் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம்”. “அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டம் தொடரும்” எனவும் அவர் தெரிவித்தார்.
- ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சரானா ஹர்சிம்ரத் கவுர் பாதல் “ஒன்றிய அரசு அகங்காரத்தோடு நிற்காமல் விவசாயிகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” என்ன தெரிவித்ததாக ‘NDTV’ செய்தி வெளியிட்டது.
- மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி கூறுகையில் விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்தை மண்டியிட வைத்துள்ளது என்றும், பாஜக மக்களின் ஆற்றலை கண்டு அஞ்சுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.”அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எந்தவொரு தளத்தையும் அனுமதிக்காதது அவர்களின் பதட்டத்தையும், தோல்வியையும் எல்லா முனைகளிலும் காட்டுகிறது” எனவும் தெரிவித்தார்.
- விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் திங்கள்கிழமை முதல் உத்திரப்பிரதேசத்தில் ‘விவசாய பேரணி’ நடத்த இருப்பதாக சமாஜ்வாடி கட்சி தெரிவித்துள்ளதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு உள்ளது.
- விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக நாவலாசிரியர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங் தனது சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளார் என ‘ANI’ தெரிவித்துள்ளது.மேலும் அவர் “விவசாயிகளிடம், அரசு இரக்கமின்றி நடந்துகொள்வதும், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதையும் பார்க்கும்போது வருத்தமளிக்கிறது” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
- “இந்த குளிர்கால கடுங் குளிரிலும், பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசாங்கத்தை வியர்க்க வைத்துள்ளனர்” என்று சிவசேனா கட்சியின் நாளேடான சமனாவில் வெளியிடப்பட்ட தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக பாஜக அரசு பயன்படுத்தும் சிபிஐ, வருமான வரி, அமலாக்கத்துறை ஆகிய அரசாங்கத்தின் ஆயுதங்களை இந்த முறை பயன்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
- டெல்லியில் போராடும் விவசாயிகள் தொடர்பாக “காலிஸ்தானி” மற்றும் “தேச விரோதி” போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பத்திரிகையாளர் மன்றம் (Editors Guild of India) ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்கியது.
- டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் போராடி வரும் விவசாய தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். முன்னர் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளின் உரிமைகளை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைத்துவிட்டதென குற்றம்சாட்டியதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருந்தது.
- வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ஒரு நாள் முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை நடக்க இருக்கும் அரசுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைதாத் காசிப்பூர் (டெல்லி) – காஜியாபாத் (துணை) எல்லையில் தெரிவித்ததாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டது.
டிசம்பர் 5 ஆம் தேதி, பிரதமர் மோடியின் உருவ பொம்மை நாடு முழுவதும் எரிக்கப்படும் என பாரதிய கிசான் யூனியன் சங்க பொதுச் செயலாளர் எச்.எஸ். லகோவால் தெரிவித்துள்ளதாக ‘ANI’ செய்தி வெளியிட்டது.