ஒரு அமைதியான மாலை வேளையில் நகரமயம் எட்டாத ஒரு விவசாய கிராமத்தில் தனது குடிசையிலிருந்து சற்று தொலைவில், வழக்கத்துக்கு மாறாக ஒரு புது இடத்தில் விளையாடச் சென்றது லாவோசின் ஒரு குழந்தை. விளையாடச் சென்ற தனது குழந்தை இறகுப் பந்து என நினைத்து கையில் எடுத்த குண்டு வெடித்து இறந்து போன செய்தி கேட்ட தாயை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? தனியாக அல்லாமல் குழுவாக இறந்துபோன குழந்தைகளைப் பெற்றெடுத்த ஊரின் இறுக்கத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
வியட்னாம் போரைப் பற்றி நாம் அனைவரும் படித்திருப்போம். பல படங்கள் பார்த்திருப்போம். அமெரிக்க வான்வழி தாக்குதல்களை வாழை மரங்களுக்கு இடையிலிருந்து அந்த மக்கள் எதிர்கொண்டதை அறிந்திருப்போம். ஆனால் அந்த நாட்டுக்கு அருகிலேயே உள்ள லாவோஸ் என்ற சின்னஞ்சிறிய தேசத்தில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ நடத்திய போரை அதிகம் பேர் அறிந்திருக்கமாட்டோம்.
லாவோசில் தூவப்பட்ட 26 கோடி கொத்துக் குண்டுகள்
இன்று உலகின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை, நிலத்தில் ரசாயன உரத்தை தூவுவது போல டன் கணக்கில் தூவியது அமெரிக்கா. உண்மையிலேயே கணக்கு வழக்கு இல்லாமல் தாங்கள் தயாரித்த பெரும் பகுதி கொத்துக் குண்டுகளை லாவோஸ் நாட்டு நிலத்தின் மீது தூவினார்கள். 1964 முதல் 1973 வரை கிட்டதட்ட 260 மில்லியன் (26 கோடி/ 20 லட்சம் டன் எடை) குண்டுகள் போடப்பட்டதாக அமெரிக்க நாட்டு ஊடகங்களே செய்தி படித்தன.
கொத்துக் குண்டு என்றால் என்ன?
கொத்து குண்டுகள் தமிழீழத்தின் மீது வீசப்பட்ட போதுதான் நம்மில் பலர் அதன் கொடூரத்தை முதன் முதலில் அறிந்திருப்போம். இந்த கொத்துக் குண்டுகள் கொடூரமான வரலாறு கொண்டவை. அதன் மனிதகுல விரோதத் தன்மை என்னவென்றால் அந்த குண்டு நிலத்தில் விழுந்து பல நூறு குண்டுகளாக சிதறும். பின்பு ஒவ்வொன்றும் தனிதனியாக வெடிக்கும். ஐந்து கிரிக்கெட் மைதானத்தின் அளவில் இருந்து பல ஹெக்டேர் வரை சிதறி பரவி வெடிக்கக் கூடிய கொத்துக் குண்டுகளை அமெரிக்கா தயாரித்து வைத்துள்ளது.
அப்படி சிதறி விழும் அனைத்து குண்டுகளும் உடனடியாக வெடிக்காது. 2-40 % குண்டுகள் மண்ணுக்குள் சென்று வெடிக்காமல் தங்கி விடும். பின்பு அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். போர் முடிந்து வெடிக்கும் இந்த குண்டுகளால் முழுக்க முழுக்க சாதாரண குடிமக்களே பலியாகிறார்கள். அதில் 66% குழந்தைகள் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
இன்னும் வெடிக்கக் காத்திருக்கும் 8 கோடி குண்டுகள்
இன்றைய நாளில் கூட லாவோஸ் நாட்டில் 50 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கொத்துக் குண்டுகளில் 8 கோடி குண்டுகள் அதன் ஊரகப் பகுதிகளில் அந்த நாட்டு மக்களை காவு வாங்க மண்ணுக்கு அடியிலும் மேலுமாக காத்துக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. 1974 லிருந்து 2020 வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லாவோசில் கொத்துக் குண்டுகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள். இன்றும் அந்த நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு குழு இரும்பு கருவிகளைக் கொண்டு ஒரு நாள் முழுக்க உழைத்து 15-20 குண்டுகளை அகற்றிகொண்டுதான் உள்ளது.
போர் முடிந்த பிறகு பாதிக்கபட்ட நாடுகள் இதை அகற்றமுடியாமல் உலகம் முழுவதும் தடுமாறுகின்றன. சிரியா, லெபனான், லாவோஸ், வியட்னாம் என பல நாடுகள் தங்கள் பள்ளி குழந்தைகளுக்கு பொம்மைகளுக்கும் குண்டுகளுக்கும் வித்தியாசம் சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
உக்ரைனில் கொத்துக் குண்டுகளை பயன்படுத்த ஊக்குவிக்கும் அமெரிக்கா
அந்த வரிசையில் இன்று அமெரிக்காவின் கொத்துக் குண்டுகள் உக்ரைன் நாட்டிலும் பயன்படுத்த செலன்ஸ்கி அரசை அமெரிக்கா ஊக்குவித்துள்ளது. ஜூலை 7 அன்று வெளியான பென்டகன் செய்தி குறிப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது.
ரசியாவுக்கு எதிரான போரில் பல நூறு கோடி டாலர்களை உக்ரைனுக்கு நேட்டோ அரசுகள் கொடுத்துள்ளது போலவே ஆயுதங்களையும் கொடுத்துள்ளது.
உக்ரைன்- ரசியா போர் என்பது நேட்டோவுக்கும் ரசியாவுக்குமான போர் என்பதை நாம் விளக்க சொல்லி வேண்டியதில்லை. நேட்டோ விரிவாக்கம் என்பது ரசியாவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் போக்கு என்றும், இதை உறுதியாக ரசியா எதிர்க்கும் என்றும் தெரிந்தே உக்ரனை நேடோவில் இணைப்பதாகக் கூறி போரில் இறக்கிவிட்டுள்ளது அமெரிக்கா. இன்று அதன் ஆயுத உதவியின் ஒரு பகுதியாக கொத்து குண்டுகளை அளிப்பதாகவும், இதை உக்ரைனின் 1000 கி.மீ கொண்ட ரசிய எல்லையில் பயன்படுத்துமாறும் அமெரிக்கா கூறியுள்ளது.
நேட்டோவுக்காக நாட்டைப் பற்றி கவலைப்படாத செலன்ஸ்கி
500 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் ஒரு வேளை ரசியா நாளை தோற்று வெளியேறினாலும் உக்ரைன் மண்ணில்தானே இந்த குண்டுகள் வெடிப்பதற்காக உறங்கிக் கொண்டிருக்கும்? அதைப்பற்றியெல்லாம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தனது முந்தைய காலங்களைப் போலவே பச்சை திரைக்கு முன்னால் பேசி நடித்துக் கொண்டிருக்கிறார். பேச்சுவார்த்தை மூலம் எளிதாக தவிர்த்திருக்க வேண்டிய போரை நேட்டோவின் விரிவாதிக்கத்தின் பொருட்டு மேலும் மேலும் ஆழப்படுத்தி புதைகுழியில் புதைந்து கொண்டே போகிறது உக்ரைன்.
அமெரிக்காவின் வல்லாதிக்க போக்கிற்கு இரையாக இன்னொரு லாவோசாகவோ, சிரியாவாகவோ உக்ரைன் நம் கண் முன்னால் மாறிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும், அதன் தலைமையிலான நேட்டோவும் உலகை போர்கள் நிறைந்த துயர நிலமாக மாற்றி வைத்திருக்கின்றன. உக்ரைன் இன்றைய அதனது போர்க்களம். அமெரிக்காவின் விரிவாதிக்கப் போக்கை எதிர்த்து போர் இல்லாத உலகத்தை கட்டியெழுப்புவதே உலக மானுடத்தின் அவசியமாக இருக்கிறது!